விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு
சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்
பொதுவாக ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடிக்கும்போது அந்த ஆசிரியர் கூற உத்தேசித்தது எது என்பது பற்றிய தெளிவான சித்திரம் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பான “பின் நவீனத்துவவாதியின் மனைவி” தொகுப்பை வாசித்து முடித்தபோது அம்மாதிரியான ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை.
சுரேஷ்குமார இந்திரஜித் தனது கதைக்கருவாக வாழ்வின் எதிர்பாராத தன்மையை, அதன் அபத்தத்தை எடுத்துக் கொள்கிறார் எனக் கூறலாம். முற்றுப்புள்ளி, மறைந்து திரியும் கிழவன், கால்பந்தும் அவளும், ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண் போன்ற கதைகள் பிரத்யேகமான வாழ்வைக் கூறுகின்றன. இந்தக் கதைகளை வாசிக்கும் எவரும் இது, தன் வாழ்வில் நடந்ததென்றோ நடக்க வாய்ப்பிருக்கிறது என்றோ எண்ணமுடியாது. அதற்காக எவர் வாழ்விலும் நடக்கவே முடியாத மிகை கற்பனையும் இல்லை.
கால்பந்தும் அவளும் கதையின் நாயகியைப் போல கால்பந்தின் மீது மோகம் கொண்ட, அதற்காக தன் வாழ்வையே அளிக்கும் யாரையும் சந்திக்காத போதும், அவளைப் போன்று காரணமில்லாத பற்றிற்காக தன் வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள் நம் நினைவுக்கு வருகிறார்கள். இதுதான் இக்கதையின் வெற்றி. இவரின் பெரும்பாலான கதைகள் இதுபோன்ற மனிதர்களையே காட்டுகின்றன.
பெரும்பாலான கதாசிரியர்கள் வாசகனை கதைக்குள் கொண்டு வருவதற்கும், கதைக்குள்ளேயே தக்கவைப்பதற்கும் பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால், சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளை எவ்வித உணர்சியுமின்றி கூறுகிறார். வாசிப்பவர்களையும் கதையோடு ஒன்றவிடாமல் சற்று தள்ளியே நிறுத்திவைத்து மேடை நாடகக் காட்சிபோல கதையை நிகழ்த்துகிறார். இந்த தள்ளி நிற்பதன் வாயிலாக, கூறப்படும் கதையின் விரிவையும் அபத்தத்தையும் வாசகனால் உணரமுடிகிறது.
கணவன் மனைவி, மனைவிகள், தோழிகள் போன்ற கதைகளில் பெண்களின் அக உலகின் அல்லாடல்களை கச்சிதமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார். கணவன் மனைவி கதையில் மாற்று மனைவியாகவே இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் உடன் வாழ்ந்தவர் இறப்பதற்காக காத்திருக்கும் ரோசாப்பூவின் எதிர்பார்ப்பை எந்தக் கேள்வியுமில்லாமல் வாசகனையும் ஏற்கவைக்கிறார். மனைவிகள் கதையில் பெண்களின் பல்வேறு விதமான, ஒன்றுக்கொன்று முரண்போலத் தோன்றும் அகத் தோற்றங்களை, இப்படித்தான் இருக்கிறது என வாசிப்பவரையும் ஒப்புக் கொள்ளவைக்கிறார். தோழிகள் கதையின் பெண்கள், பல ஆண்டுகளாக அத்தனை நட்பாக, நெருக்கமாக இருப்பதாக பாவனை செய்தாலும், அவர்களின் உள்ளம், அடுத்தவரைக் கொல்லும் அளவிற்கு கொள்ளும் கசப்பினை யதார்த்தமாக கூறிச்செல்கிறார். இதை வாசித்தபின், சாலைகளில் சிரித்தபடி செல்லும் தோழிகளைக் காணும்போதெல்லாம் அவர்களின் விழிகளை நோக்கத் தோன்றுகிறது. ஆசிரியரின் உணர்ச்சிகளின்றி இந்தக் கதைகள் கூறப்படுவதால்தான் அந்த உணர்வை வாசிப்பவனால் உணரமுடிகிறது எனத் தோன்றுகிறது.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் பல கதைகள் தற்செயல்களின் புதிர்த்தன்மையையும் அதனால் வாழ்வின்மேலான உயிர்ப்பையும் காட்டுகின்றன. “ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்” கதையில் நீண்ட பயணத்தின் நடுவே இளைப்பாறும் இடத்தில் பல வருடங்களுக்கு முன் பழகிய பெண்ணை தற்செயலாகப் பார்க்கும் கதை. முதலில் உங்கள் மூலமெ குழந்தையை பெற்றுக்கொள்ள நினைத்தேன் , முடியவில்ல என்று கூறிவிட்டு, கடைசியில் காரில் அமர்ந்து ஆங்கிலப் புத்தகம் படிக்கும் அந்தப் பெண் உங்களில் ஒருவரின் மகள் எனக் கூறுகிறாள். அவள் கூறியதில் எந்தப் பகுதி உண்மையானது என்று வாசகனையும் சேர்த்து திகைக்கவைக்கும் புதிரோடு முடிகிறது கதை.
நடன மங்கை கதை எளிதான கருவைக் கொண்ட கதை. அதை நல்ல கதையாக ஆக்குவது அதன் முடிவைக் கூறும் கூறல் முறைதான். எத்தனை விதமான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை ஒரே பத்தியை திரும்பத் திரும்ப எழுதிக் காட்டுகிறார். பார்க்கும் போது அறியும் ஒரு சாத்தியத்திற்காக பிற அத்தனை சாத்தியங்களையும் இழக்க விரும்பாமல், அத்தனையையும் மனதில் உயிர்ப்புடன் வைத்திருக்கவென அவளைக் காணாமல் செல்வதாக கதை முடிகிறது . வாசிப்பவரின் மனதிலும் அந்த அத்தனை சாத்தியங்களும் உயிர்ப்புடன் நீடிக்கின்றன.
காலத்தின் அலமாரி மற்றும் எலும்புகள் கதைகள் புனைவான சர்வாதிகாரியை காட்டுகின்றன. வரலாறுகள் எப்படியெல்லாம் திரிக்கப்படக் கூடும் அல்லது திரிக்கப்பட்டிருக்கும் என்ற அச்சத்தை மனதில் விமைக்கிறது எலும்புகள் கதை. அனைத்து சர்வாதிகாரிகளுக்கும் பொருத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள இக்கதை கற்பனை போன்ற பாவனை காட்டினாலும் இதுவும் யதார்த்தக் கதைதான்.
தற்செயலாக நடந்தது என்ற பதத்தை எப்போதாவது பயன்படுத்துவோம். ஆனால் பல தற்செயல்கள் ஒரே நாளில் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை “புதிர் வழிப் பயணம்” என்ற கதையில் காட்டியுள்ளார். அடுத்தவர் வாழ்வில் நடக்கும் தற்செயல்கள், இப்படியும் நடக்குமா என்ற வியப்பை நமக்கு ஏற்படுத்துகின்றன. ஆனால் நமக்கே நடக்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த நாள் முழுதும் தற்செயல்களின் ஆட்டத்தை நம்பகத் தன்மையுடன் விரிவாகக் காட்டிய இந்தக் கதை “சாலையில் லாரிகளும் பேருந்துகளும் கார்களுமாக ஒளியை பாய்ச்சியபடி ஓடிக் கொண்டிருந்தன” என்று முடிகிறது. வாசிக்கும் நாம், இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற பதட்டத்துடன் அந்த புதிர் விலகாத பயணத்தை மனதிற்குள் தொடர்வோம்.
சுரேஷ்குமார இந்திரஜித் புறக் காட்சிகளையோ, அக உணர்ச்சிகளையோ அதிகமாக காட்டுவதில்லை. இது இவரின் பலவீனம் போல மேலோட்டமாகத் தோன்றினாலும் இதை திட்டமிட்டே செய்கிறார் எனத் தோன்றுகிறது. இவ்வாறு இவற்றை காட்டாமல் அடக்கி வாசித்து, இருளான நாடக மேடையில் நடிப்பவர்கள் மேல் மட்டும் ஒளி பாய்ச்சுவது போல, இவர் எதனைக் காட்ட விரும்புகிறாரோ அதன் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். வாசகனும் புறக்காட்சிகளில் மனதை சிதறவிடாமல் ஆசிரியர் உத்தேசித்தபடி நடிகர்களின் நடிப்பை மட்டும் கூர்ந்து பார்ப்பதென கதையின் அத்தனை சாத்தியங்களையும் காண்கிறான். இதுவே இவருடைய கதை கூறல் முறையின் சிறப்பம்சமாகக் கருதலாம்.
புதிர்த்தன்மையுள்ள கதைகள் எழுதுவது ஒருபுறமிருக்க, எந்தவொரு ஒரு வகைமைக்குள்ளும் அடக்கிவிட முடியாதபடி எழுதும் இந்தப் புதிரான எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவது மிக மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெரும் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு என் வாழ்த்துகள்
சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்
கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -10
விஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -9
விஷ்ணுபுரம் விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-8
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-5
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-4
விஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-3
விஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-2
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்