அன்புள்ள ஜெ
நீங்கள் நாய்களைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நாய்களை வளர்க்கவும் செய்கிறீர்கள். நாய்களை ஊரின் ஒரு பகுதியாகவே பார்க்கிறீர்கள். ஆனால் யானைகளை கோயில்களிலும் வீடுகளிலும் வளர்க்கக்கூடாது என்று சொல்கிறீர்கள்.
என் பார்வை என்னவென்றால் எந்த ஒரு மிருகத்தையும் வளர்க்கக்கூடாது என்பதுதான். செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்பது நம் அகங்காரத்துக்காக அவற்றை துன்புறுத்துவதுதான் என்பதுதான் என் எண்ணம். அவற்றை அடிமையாக்கி நம் இஷ்டப்படி ஆட்டிவைக்கிறோம். இது தப்பு. மிருகங்களை வீடுகளில் வளர்ப்பதை தடைசெய்யவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். எனக்கு மிருகங்கள்மேல் எந்த ஆர்வமும் இல்லை.
உண்மையில் விலங்குகள்மேல் ஆர்வம் கொண்டவர்கள் அதைவிட்டுவிட்டு மனிதர்களை நேசிக்க ஆரம்பிக்கலாம். மனிதனை நேசிக்கத் தெரியாதவர்களே செல்லப்பிராணிகளை நேசிக்கிறார்கள்.
கே.ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,
இந்த விவாதம் முன்பே நடந்துவருகிறது. நான் பதில்களும் போட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். என் தளம் மிகப்பெரிதாகிவிட்டது. தேடித்தான் கண்டடையவேண்டும்.
நான் நாய் ஆர்வலன். நாயை வளர்ப்பவன். நாயுடன் வாழ விரும்புபவன். நாய் இல்லாத மானுடவாழ்க்கை குறையுடையது என நினைப்பவன். நாய் இல்லாத மானுடப்பண்பாடே இருக்கமுடியாது என்று நினைப்பவன்
இந்தக் கருத்தை மறுத்து உங்கள் தரப்பை ஆவேசமாக முன்வைத்த ஒரு நண்பரிடம் கேட்டேன். “பால் சாப்பிடுவீங்களா?”
அவர் நான் கேட்பதை புரிந்துகொண்டு “ஆமா, ஆனால் பசு பால் தருது. அது அம்மா.அதை வளக்கலாம்” என்றார்
“அதாவது குட்டிக்கு உரிய பாலைக் கறந்து நீங்க குடிக்கலாம். அது தப்பில்லை. அதுக்காக பசுவை தொழுவத்திலே ராப்பகலா கட்டிப்போட்டு வளக்கலாம். மூக்கணாங்கயிறு போடலாம். உலர்ந்த புல்லை தீனியா போடலாம். இல்லையா?”
அவர் “ஆனால் பால் மனுஷனுக்குத்தேவை. குழந்தைகளுக்கு பால் தேவை” என்றார்
“அதாவது மனுஷன் தன் உடலுக்கான தேவைக்காக விலங்குகளை வளக்கலாம். ஆனால் ஆத்மாவுக்கான தேவைக்காக வளக்கக்கூடாது. அப்டித்தானே?”
அவர் அதன்மேலும் வாதிட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக எதையும் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் நம்மிடமில்லை. வாதிடுவது நமக்குநாமே தெளிவாக்கிக்கொள்ளத்தான் என்று எண்ணியே நான் வாதிடுவது வழக்கம்.
நாய்களை வளர்க்கக்கூடாது என்பவர்கள் யானையை கோயிலில் வளர்க்கக்கூடாது என்று நான் சொன்னால் அது மதத்துக்கு எதிரான சொல் என்று சீற்றம் கொள்வதைக் காண்கிறேன்.
நாய்கள் வனவிலங்குகள் அல்ல. ஆனால் யானைகள் வனவிலங்குகள். இத்தனை ஆண்டுகள் மனிதனுடன் இருந்தும் மானுடநாகரீகத்துக்காக யானை உடலாலும் உள்ளத்தாலும் பரிணாமம் அடையவில்லை. அது இன்னும் ஊருக்குள் ஒரு காடென்றே நிலைகொள்கிறது. அதை நாம் அடக்கி ஒடுக்கியே வைக்கவேண்டியிருக்கிறது. வளர்ப்புயானை எப்போதுமே துயருற்றும் சலித்தும் இருக்கிறது. காட்டில் அது தன்னியல்பான மகிழ்ச்சியுடன் இருக்கிறது. இதை நான் உறுதியாக அறிவேன்
ஆனால் நாய் அப்படி அல்ல. நாய் நம்முடனேயே இயல்பாக இருக்கிறது. இயல்பாகவே நான்கு மனிதர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் நாய் வந்து அமர விரும்புகிறது. உணவுக்காக அல்ல, நடுவே படுத்து அது தூங்குவதைக் காணலாம். தெரிந்த நாய் என்று அல்ல, தெரியாத தெருநாய்கூட நாம் பேசிக்கொண்டிருந்தால் அருகே வந்து படுத்துக்கொள்ளும்.
இன்றைக்கு முப்பதாயிரமாண்டுகளுக்கு முன்பு மனிதனால் ஓநாய், காட்டுச்செந்நாய் வகைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வளர்க்கப்பட்டது நாய். [நல்ல படம் ஒன்று உள்ளது. ஆல்ஃபா. பாருங்கள்.
நாயின் குடல் அதன் மூதாதையான ஊனுண்ணியின் குடல் அல்ல. நாயின்குடல் அமிலம் குறைவானது. மாவுப்பொருளைச் செரித்துக்கொள்ளும்படி தகவமைவு கொண்டது. ஆகவேதான் அது சோறு சாப்பிட்டு வாழ்கிறது. காட்டில்வாழும் செந்நாய்க்கு சோறுபோட்டால் ஒருவாரம்கூட உயிர்வாழாது
நாயின் உடலின் இயல்புகள், உள்ளத்தின் இயல்புகள் எல்லாமே மனிதனை அண்டி வாழ்ந்து பரிணாமம் அடைந்தவை. ஆகவே அது இன்று மனிதப்பண்பாட்டின் ஒரு பகுதிதான். அதனால் ஊரில்தான் வாழமுடியும். அது காட்டுக்குப் பழகினால்கூட முழுக்காட்டுவிலங்காக ஆகிவிடுவதில்லை. பெரும்பாலான நாயினங்கள் அழியநேரிடும்
நாயை மனிதன் வேட்டைத்துணைவனாக உருவாக்கினான். வழிகாட்டியாக காவலனாக மேய்ப்பனாகப் பழக்கினான். ஆரம்பகாலத்தில் முழுக்கமுழுக்க வேட்டையை நம்பியே வாழ்ந்த மனிதன் நாயின் உதவியால்தான் தாக்குப்பிடித்தான். நாய் இல்லையேல் மானுடன் பூமியில் இப்படி தங்கிவாழ்ந்து வளர்ந்து பெருகியிருக்கமுடியாது. இந்தப்பூமியிலுள்ள மானுடநாகரீகம் நாயும் மனிதனும் சேர்ந்து உருவாக்கியது.
ஆகவே நாயை காட்டுவிலங்காக முத்திரைகுத்தி கைவிடுவதென்பது ஒருவகை அநீதி. மானுடநாகரீகத்தின் படைப்பாளிகளில் ஓர் உயிரை தேவை முடிந்தது என அழியவிடுவதுதான் அது.அத்தகைய பேச்சுக்களில் இருப்பது மானுடப் பண்பாட்டுப் பரிணாமத்தை அறியாத சுரணையின்மை, அல்லது ஒருவகையான சிமிழ்வாழ்க்கையின் சிறுமை.
நாய் இன்று ஏன் தேவைப்படுகிறது? நாய் நம்முடன் சேர்ந்து பரிணாமம் அடைந்தது என்றேன். அது இத்தனை ஆண்டுகளில் ஒரு மாபெரும் குறியீடாக, படிமமாக ஆகிவிட்டிருக்கிறது. அதனுடன் நம் ஆழுள்ளம் கொள்ளும் உறவு மிகநுட்பமானது. நாயை நம் ஆழுள்ளம் எப்படி தொட்டு அறிகிறது என நாயுடன் பழகியவர்களுக்கே தெரியும். நாய் நம் கனவில் வருவதுபோல எந்த விலங்கும் வருவதில்லை. சொல்லப்போனால் நெருக்கமான உறவினர்களேகூட நாய் அளவுக்கு நம் கனவில் வருவதில்லை.
நாய் நம் கைகளில் குழந்தையாக வந்து வளர்ந்து முழு வாழ்க்கைக்காலத்திலும் நம்முடன் இருக்கிறது. நாம் அதனுடன் எப்படியோ உரையாடிக்கொண்டே இருக்கிறோம். அதன் அருகமைவை உணர்ந்துகொண்டே இருக்கிறோம்.ஆகவே அது அளிக்கும் துணையும், மகிழ்ச்சியும் மிகமிக ஆழமானவை
நாய் மனிதனுடன் கொண்டுள்ள உறவு வெறுமே சோறுபோடுவதனால் பின்னால் வருவது அல்ல, அத்தகைய கூற்றை நாயை கொஞ்சம் அறிந்த எவரும் அருவருப்புடனேயே பார்ப்பார்கள். பிறந்து சிலநாட்களே ஆன நாய்கூட மனிதனை அடையாளம் காணும். தன்னைவிட பெரிய எந்த உயிரைக்கண்டாலும் ஓடியொளியும் இயல்பை உயிரிலேயே கொண்டுவரும் சின்னஞ்சிறு நாய்க்குட்டிகூட கண்திறக்காத வயதிலேயே மூக்கால் மனிதனை அருகே உணர்ந்ததும் அன்புடன் முனகியபடி வாலை ஆட்டிக்கொண்டு, மென்மையான மூக்கை கூர்ந்து நீட்டியபடி, அவன் பின்னால் வரும். அவனை தொடரமுயலும். அவன் தனக்கு பாதுகாப்பு, அவன் தன்னை பேணுவான் என எதிர்பார்க்கும். நாய் மானுடப்பண்பாட்டுடன் சேர்ந்து வளர்ந்து உருவாக்கிக்கொண்ட உள்ளுணர்வு அது.
நாய் வளர்ப்பவர்கள் அறிவார்கள், நாய் நம்மை நோக்கிக்கொண்டே இருக்கிறது. அதன் கண்களிலும் உடலிலும் நம் மீதுள்ள பேரன்பு நிறைந்திருக்கிறது. நாம் கொஞ்சம் உளச்சோர்வடைந்திருந்தால் அதை நம் குடும்பத்திலேயே முதலில் அறிவது நாய்தான். நாய் அந்த உளச்சோர்வை நீக்கி நம்மை ஊக்கப்படுத்த என்னென்ன செய்யும் என்பதை நாய் வளர்ப்போர் அறிவார்கள்.
நான் வளர்த்த நாய்கள் என்னருகே இருந்து நீங்காதவை. மூக்கால் தொட்டுக்கொண்டும், வாலாட்டிக்கொண்டும், விதவிதமாக விளையாட்டு காட்டிக்கொண்டும் இருக்கும். வெண்முரசு எழுதிய நாட்களில் என் அத்தனை உளக்கொந்தளிப்புகளுக்கும் துணையாக இப்புவியில் உடனிருந்தவை என் செல்ல நாய்கள் மட்டும்தான். நான் பிறவிச்சுழல் உண்டு என அறிந்தவன். என் நாய்களும் நானும் கொண்டுள்ள உறவு இங்கே இப்படி முடிந்துவிடக்கூடியதல்ல.
என்ன சொன்னீர்கள், மனிதனின் அன்பை உணராதவர்கள் நாயின் அன்பை நாடுகிறார்களா? இந்த அசட்டு வரி அவ்வப்போது காதில் விழுகிறது. நாயின் மேல் வெறுப்புகொண்டவர்கள் எல்லாம் மானுட அன்பால் கசிந்தபடியா இருக்கிறார்கள்? மாறாக, இளமையில் செல்லப்பிராணிகளுடன் வளரும் குழந்தைகளே கனிவை, நட்புணர்வை, நெகிழ்வைக் கற்றுக்கொள்கின்றன. இன்னொரு உயிர்மேல் கனிவடையும் உள்ளமே மனிதர்களையும் அறிகிறது
அத்துடன் ஒன்று உண்டு, நாய் அல்லது இன்னொரு உயிர் மனிதனைவிட எவ்வகையில் குறைவு? ஏன், மனிதன் என்ன புனிதப்பிராணியா? விலங்குகளை வெறுத்து மனிதனை நேசிக்கும் ஒருவன் இருந்தால் அவன் உண்மையில் நேசிக்கத்தெரிந்தவன்தானா? நான் என்னைப்போன்ற உயிரினத்தை மட்டுமே விரும்புவேன் என்பவன் மெல்லமெல்ல என் சாதி, என் மதம்,என் உறவு என்று சென்று என் குடும்பம் என்றுதான் சென்று நிற்பான்.
நாய்க்கும் மனிதனுக்குமான உறவு வரலாற்றில் நிகழ்ந்த ஓர் அற்புதம். நம் மூதாதையர் நமக்களித்த பரிசு. நம்மை விரும்பும் ஓர் உயிர், தானாக அந்த அன்பிலிருந்து அதனால் வெளியேறவே முடியாது. நம்முடன் அது மொழியால் உரையாடுவதில்லை, நேரடியாக ஆழுள்ளத்தால் உரையாடுகிறது. மானுடப் பண்பாட்டுவரலாற்றில் இப்படி ஓர் அரியது நிகழ்ந்திருக்கிறது, அதை மானுடன் ஏன் துறக்கவேண்டும்?
மகத்தான குறியீடாகவே நாய் எல்லா பண்பாடுகளிலும் உள்ளது. நீங்கள் தலைக்கொள்ளும் வேதத்தையே நான்கு நாய்களாக உருவகம் செய்திருக்கிறார்கள். பிறவிபிறவியென விடாமல் பின்தொடர்வது, ஒருபோதும் கைவிடாதது என்னும் பொருளில்.
சில மதங்களில் நாய் விலக்கப்பட்டுள்ளது. இந்துமதப்பிரிவின் சில ஆசாரமான வழிபாட்டுமுறைகளில் நாய் எதிர்மறைப் பண்புகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. அது ஊனுண்ணி என்பதனால். உண்மையில் நாயை ஒதுக்கவேண்டும் என்று எழும் ‘விலங்குமேல் கருணைகொண்ட’ ‘இயற்கை அபிமானம்கொண்ட’ குரல்களின் ஆதாரம் அந்த ஆசாரவாதம்தான். ஓர் ஆசாரவாதி தன் ஆசாரங்களை கடைக்கொள்ளலாம், அது அவருடைய வழிமுறை. அதை பொதுக்கொள்கையாக முன்வைப்பது அறிவுடைமை அல்ல.
நவீன ஆன்மிகப்புரிதல் கொண்டவர்களுக்கு நாய் விலங்குகளிலேயே முக்கியமானது. இப்புடவியில் உயிர்க்குலங்கள் நிறைந்திருக்கின்றன. மனிதன் ஒரு துளி. அந்தத் தன்னுணர்வை அடைய உயிர்க்குலங்களுடனான ஆழ்ந்த உறவு, நுட்பமான உரையாடல் இன்றியமையாதது. பறவைகள் முதல் அனைத்து உயிர்களுடனும் அந்த உரையாடல் நிகழவேண்டும்.
ஆனால் நம்முடன் உறவாடும் விலங்குகள், பறவைகள் மிகக் குறைவு. பறவைகளில் காகம் நம்மை அறிவது, கொஞ்சம் தன் உலகை நமக்கு திறந்து காட்டுவது. விலங்குகளில் பசுக்கள்,எருமைகள்,பன்றிகள் நம்மை தங்கள் உலகுக்குள் அனுமதிப்பவை. ஆனால் விலங்குலகுக்குள் நாம் உள்நுழைய திறந்த மிகப்பெரிய வாசலென்பது நாய்தான். நாயை அறிந்தவர் அதன் அகத்தையே சென்று தொட்டுவிடமுடியும். நாய் நம்மை அழைக்கிறது, தன்னுடன் வருக என்று.
விலங்குலகு இன்னொரு பெருவெளி. சிந்தையற்ற,எண்ணங்களற்ற ஊழ்கநிலையே உள்ளமென்றான ஒன்று. உள்ளுணர்வுகளால் நெய்யப்பட்ட ஒரு பரப்பு. அங்கே தன்னிலை என்பது உயிரின் திகழ்வே ஒழிய ஆணவக்குவியம் அல்ல. அங்கே புலனறிதல்களை அகப்பெருக்கு மறைப்பதில்லை. அங்குள்ள அன்பு தூயது. பசியும் காமமும் வன்முறையும்கூட தூயதே.அதை அறிவதென்பது ஒரு மாபெரும் தன்னறிதல்.
நாம் நம்மை பத்தாயிரமாண்டுப் பண்பாட்டால் தொகுத்து வரையறைசெய்து, அவ்வரையறையை இரும்புக்கூடென அணிந்துகொண்டிருக்கிறோம். அதைக் கடந்து சென்று நாம் எதுவோ அதுவாக, தூயவிலங்காக ,ஆவதற்கான ஒருவழிமுறை விலங்குலகை அறிவது. அதற்குள் செல்ல நாய் ஓர் அரசப்பெரும்பாதை.
நாயினூடாகச் சென்று விலங்குலகை, உயிர்க்குலங்களின் தொகையை அணுகுபவர் அடையும் ஆன்மிகநிலை ஒன்று உண்டு. அதை அவர் தர்க்கபூர்வமாக உணராமலிருக்கலாம், சொல்லத்தெரியாமலிருக்கலாம், ஆனால் அவர் அதை உணர்வதனால்தான் மீளமீள அதைநோக்கிச் செல்கிறார்.
அது மானுடநிலை என்னும் பெருஞ்சிறையில் இருந்து நாம் வெளியேறுவது. உயிர்ப்பெருக்கின் ஒரு துளி என ஒரு பெருநிலையை அடைவது. ‘ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்’ என்று சொல்வது எளிது. அறியும்- உணரும் ஒரு நிலை உண்டு. அதை அடைவதற்கான வழிகளில் ஒன்று நாயுடனிருத்தல்.
ஜெ
[படத்தில் இருப்பது ஈரட்டியில் அறிமுகமாகி உடனிருந்த பெயரறியாத அன்னை நாய்]
அய்யா!
ஆல்ஃபா -கடிதங்கள்
ஹீரோ
இருநாய்கள்
மை நேம் இஸ் பாண்ட்
மிருகவதை என்னும் போலித்தனம்