நோயும் மழையும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நோய்க்காலப் பயணம் விசித்திரமான ஓர் உணர்வை ஏற்படுத்தியது. வழக்கமாக நீங்கள் செல்லும் எல்லா பயணங்களுடனும் மானசீகமாக பயணம்செயவது என் வழக்கம். ஆனால் இந்தப்பயணத்தில் நான் மானசீகமாக கலந்துகொள்ளவில்லை. அடைபட்டுக்கிடந்து அதற்கே மனசு பழகிவிட்டது என நினைக்கிறேன்.

ஒரு பெரிய சோர்வு. ஆனால் பயணக்கட்டுரைகளை வாசித்தபோது எனக்கு அழுகை வந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறை படித்துக்கொண்டிருந்தேன். அந்த மழையும் காடும் குளிரும் எல்லாம் அன்னியமாக ஆகிவிட்டிருந்தன.நான் அங்கே இல்லை. நான் வழக்கம்போல இந்த அப்பார்ட்மெண்டில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்திருக்கிறேன். ஆனால் வழக்கமான உற்சாகமில்லாமல் இருக்கிறேன். அழுதுகொண்டிருக்கிறேன்.

இங்கே இருப்பது சாவுக்கு சமானமானது. ஆனால் வேறுவழியில்லை. கொஞ்சம்கொஞ்சமாக சாவதுதான் இது. கல்லுக்குள் தேரை என்பார்கள். நீங்கள் எழுதியதாக ஞாபகம்.தேரையின் முட்டை நீர்வழியாக பாறையின் இடுக்குக்குள் போய்விடும். அங்கே அந்த தவளை பிறந்து அந்த பிளவுக்கு ஏற்ப சப்பையாக உடல் அமைந்து அங்கேயே அசைவில்லாமல் இருந்து வாழ்ந்து சாகும். அங்கே வரும் எறும்புகளும் சிறு உயிர்களும் உணவு. அதேபோல வாழ்க்கை ஆகிவிட்டிருக்கிறது.

ராம்பிரசாத்

அன்புள்ள ஜெ

நீங்கள் பயணம்செய்ய ஆரம்பித்தீர்கள் என்று தெரிந்ததுமே பதற்றமாக இருந்தது. நோய்க்காலம். ஆனால் ’வாழ்க்கை என்பது பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரிய ஒன்று அல்ல’ என்று எழுதிய நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றும் தோன்றியது. Live dangerously என்று சொல்லப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் restlessness இல்லை. உடலால் அலைந்து மனசால் அலைபாயாமல் நிலைகொண்டிருக்கிறீர்கள். எல்லா கட்டுரைகளிலும் அந்த தியான நிலை எப்படியோ கைகூடிவிடுகிறது.அதுதான் உங்களை பயணம்செய்யவைக்கிறது என்று நினைக்கிறேன்

ஆர்.சிவக்குமார்

அன்புள்ள ஜெ

பயணக்கட்டுரை அழகானது. ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் அடையும் அனுபவங்கள் இருபாற்பட்டவையாக இருக்கின்றன. புறவயமான ஓர் அனுபவம். அதில் தகவல்கள் உள்ளன. காட்சிப்பதிவுகளும் நிறைய உள்ளன. எல்லாம் துல்லியமானவை. கூடவே ஓர் அகவயமான அனுபவத்தையும் அடைந்துகொண்டிருக்கிறீர்கள். அதையும் மொழியில் பதிவுசெய்கிறீர்கள். நண்பர்கள்சூழ இருக்கையில் அடையும் தனிமை. அலைதலில் அடையும் நிலைபெற்ற தன்மை.

படங்களில் அது வெளிப்படுகிறது. குறிப்பாக கடைசிக் கட்டுரைக்குப்பின்னால் உள்ள படம். மேகம் அசைவற்றிருக்கிறது. கீழே நீரில் அது அலைகொண்டிருக்கிறது

ஜே.ராகவ்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

மழைப்பயணம் வாசித்தேன். இதுவரை நீங்கள் சென்ற மழைப்பயணங்களில் இது வேறுபட்டது. ஊரே அஞ்சிக்கிடக்கும்போது பயணம்செய்கிறீர்கள். மழை என்பது உற்சாகம் மட்டுமல்ல நோயாகவும் இருக்கலாம் என்ற நிலையிலும் பயணம். இத்தனை நண்பர்கள் துணிந்து உங்களுடன் வந்திருப்பதும் ஆச்சரியமானதுதான்.

நான்கு கட்டுரைகளுமே ஆழமானவை. பயணத்தின் மனநிலைகளைச் சொல்லும் அதே விசையில் தொல்பொருள் கலைச்சின்னமாக ஆவது எப்படி, தொல்லியல்தடங்களில் மனிதர்கள் உணரும் ஆழ்ந்த நிலை என்ன என்பதையும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

மூன்றுகட்டுரைகளுமே பயணக்குறிப்புகள் என்பதைக் கடந்து ஒருவகையான தியான அனுபவமாக உள்ளன. அதிலும் சாவிலிருந்து சாவுவரையிலான அந்தக் கட்டமைப்பு மனதை என்னவோ செய்தது

செந்தில்குமார்

நோய்க்காலமும் மழைக்காலமும்-4

நோய்க்காலமும் மழைக்காலமும்-3

நோய்க்காலமும் மழைக்காலமும்-2

நோய்க்காலமும் மழைக்காலமும்-1

முந்தைய கட்டுரைஎழுத்தின் புதிர் – கா.சிவா
அடுத்த கட்டுரைமணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்- 5