அன்புள்ள ஜெ
மணிரத்தினம் சந்திப்பை ஆவலாக எதிர்பார்த்தேன். சந்திப்புகளில் பேட்டிகளில் ஆர்வம் காட்டாத அந்தக்கலைஞர் எப்படி இதை எதிர்கொள்ள இருக்கிறார். பங்கேற்பாளர்கள் எப்படி இதை பயன்படுத்திக் கொள்ளப்போகின்றனர் என்பது ஆர்வத்தை தூண்டியது.
காமன்மேன்களைவிட இலக்கியவாதிகள் அறிவிலிகளாக இருக்கிறார் என சமீபத்தில் சாரு சொன்னார். அது உண்மைதான் என அடுத்தடுத்து சில எழுத்தாளர்கள் அவருக்கு பதிலடி (?) கொடுப்பதாக நினைத்து தமது மொண்ணைத்தன்மையை நிரூபித்தனர். அனைத்தையுமே திமுக சார்பு பிரச்சனையாக மாற்றி, திமுக சார்பு ஊடகங்களில் வாய்ப்புத்தேடும் இவர்களைவிட ஒரு சராசரி மனிதன் எவ்வளவோ மேல்.
மணிரத்தினம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் யாராவது இப்படிப்பட்ட அசடுகள் கலந்து கொண்டு 50 ஆண்டு (??) கலைஞர் ஆட்சியை இருவர் படம் சரியாக சித்தரிக்கவில்லையே , என்பதுபோல கேட்டுவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது;
இதைத்தடுக்கும் பொருட்டு நீங்களே முன்னின்று நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்வீர்கள் என எதிர்பார்த்தேன்.ஆச்சர்யப்படுத்தும் விதமாக நீங்கள் இல்லாமலேயே ( கடைசியில்தான் இணைந்தீர்கள் ) வெகு சிறப்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. கேள்விகள் வித்தியாசமான கோணத்தில் , மணிரத்திரனத்துக்கு ஆர்வமூட்டும் அளவில் இருந்தன
வெகு இயல்பாக ஆழமாகப் பேசினார். ஒருவரது வாழ்க்கையை ஆவணப்படுத்துவதல்ல நோக்கம் , எசன்ஸ்தான் எனக்குத் தேவை , மிதுன் சக்கரவர்த்தி கேரக்டர் இல்லையேல் குரு படம் இல்லை , தளபதி படத்தில் நிகழ்விடம் தெளிவாக காட்டப்படாததன் தாத்பர்யம் , திரை மொழி என பலவற்றைப்பேசினார்
.ரஜினி கமலுடன் மீண்டும் இணைவீர்களா , இளையராஜாவுடன் என்ன பிரச்சனை என்பது போன்ற கேள்விகளை சந்தித்துள்ள அவருக்கும் இந்நிகழ்வு நல்ல அனுபவமாக இருந்திருக்கும்
இலக்கிய போர்வையில் நடமாடும் அரசியல்வாதிகளைப் பாரத்து நம்பிக்கை இழக்கும் சூழலில் இப்படி ஓர் ஆரோக்கியமான, அறிவார்ந்த இளைஞர் படையைப் பார்ப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள ஜெ
மணி ரத்னம் உரையாடல் ஒரு நல்ல நிகழ்வு. நான் இதைப்பற்றி ஒரு சின்ன சங்கடம் கொண்டிருந்தேன். சினிமாக்காரர்கள் எதற்கு அறிவியக்கத்தில் என்ற எண்ணம்தான். ஏனென்றால் இங்கே எல்லாருமே சினிமாமோகத்துடன் இருக்கிறார்கள். எல்லாருக்குமே சினிமாக்காரர்கள்தான் ஆதர்சம். விஷ்ணுபுரம் வட்டமும் இதைச் செய்யவேண்டுமா என்ற எண்ணம்தான்
ஆனால் நிகழ்ச்சியைப் பார்த்தபோது அந்த எண்ணம் மாறியது. ஒரு முன்னுதாரணமாக அமையவேண்டிய நிகழ்வு. வழக்கமான கேள்விகள் இல்லை. சினிமாவம்பு சுத்தமாக இல்லை. அரசியல்வம்பும் இல்லை. மணி ரத்னம் சென்ற நாற்பதாண்டுக்காலமாக சினிமாவில் இயங்குபவர். இந்திய அளவில் அங்கீகாரம் உடையவர். அவருக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இடையே ஓர் உரையாடல் உண்டு. அதைப்பற்றியே எல்லா கேள்விகளும் அமைந்தன
சுருக்கமாகச் சொன்னால் தமிழ்ச்சமூகத்தை மணி ரத்னம் எப்படி define செய்கிறார் மணிரத்னத்தை தமிழ்ச்சமூகம் எப்படி design செய்கிறது என்பதுதான் இன்றைக்கு அறிவுச்சூழலில் நாம் விவாதிக்கவேண்டிய விஷயம். அந்த விவாதம்தான் வெவ்வேறுகோணங்களில் நடந்தது. பாராட்டத்தக்க விஷயம் இது
ஜே.சுந்தரராமன்
அன்புள்ள ஜெ
மணி ரத்னம் உரையாடல் சிறப்பாக இருந்தது. பரத்வாஜ் ரங்கனின் நூலில் மணி ரத்னம் மிகவிரிவாக பேசியிருக்கிறார். ஏறத்தாழ எல்லாவற்றையுமே சொல்லியிருக்கிறார். அதற்குப்பிறகும் எப்படி பேசமுடியும், என்ன மிச்சமிருக்கும் என்ற எண்ணம் இருந்தது. முக்கியமான பல கேள்விகள் தன்னியல்பாக எழுந்து வந்தன. ஆச்சரியமாக மணி ரத்னமும் விரிவாக பதில் சொன்னார். சமாளிக்க முயலவில்லை. நழுவவும் இல்லை. ஆத்மார்த்தமாக பதில் சொன்னார். அவருடைய கெரியரிலேயே இந்த உரையாடல் ஒரு முக்கியமான வெளிப்பாடாக இருக்குமென நினைக்கிறேன்
வெற்றிவேல் மாணிக்கம்
அன்புள்ள ஜெ
மணி ரத்னம் பேட்டி நன்றாக இருந்தது. அவ்வப்போது வந்த தொழில்நுட்பத் தாமதம் ஒரு எரிச்சலை அளித்தது. பலபேர் அவர்களின் பெயர்கள் கூறப்படும்போது ஆன்லைனில் இருக்க தடுமாறினார்கள். இதற்குக் காரணம் பெயர்களை திடுதிப்பென்று அழைத்தது. அடுத்து எவர் அழைக்கப்படுவார்கள் என்று திரு ராஜகோபாலன் முன்னரே எவருக்காவது அறிவித்து அவர்கள் சம்பந்தப்பட்டவரிடம் சொல்லி அவர்கள் தயாராக இருந்திருந்தால் இந்த சிக்கலை தவிர்த்திருக்கலாம்.
அதோடு பலர் கேள்விகளை முழுமையாக கேட்காமல் பொதுவான கேள்விகளாக கேட்டுவிட்டார்கள்.ரொம்பக்குறிப்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குத்தான் மதிப்பு அதிகம். இந்தசினிமாவில் இப்படி ஒன்று இருக்கிறது என்ற ஒரு குறிப்புடன் கேள்விகள் இருக்கவேண்டும்
ஆனாலும் பல கேள்விகள் முக்கியமனாவை. இங்கே மட்டுமல்ல உலகம் முழுக்கவேகூட சினிமாதான் ஆண், பெண் அடையாலங்களை நிர்ணயம் செய்கிறது. யார் ஆண்மை கொண்டவன் எவர் பெண்மைகொண்டவர் என்றெல்லம சினிமா சொல்கிறது. ஹீரோ ஹீரோயின் என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. எல்லாருமே மனசுக்குள் ஹீரோ ஹீரோயின்தான். அதை எப்படி சினிமா வரையறுக்கிறது, ஒரு சினிமாக்காரர் அதை எப்படி வரையறுக்கிறார் என்பது மிக முக்கியமான கேள்வி. அதைச்சுற்றி பல கேள்விகள் இருந்தன. அனோஜன் பாலகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் அதைக் கேட்டார். கிருஷ்ணனும் அதைக் கேட்டார். இன்னும் கொஞ்சம் அந்த விவாதம் இருந்திருக்கலாம்
என்.மகாலிங்கம்
மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்
முந்தைய நிகழ்வுகள்
அ முத்துலிங்கம் உரையாடல்
நாஞ்சில் நாடன் உரையாடல்
தியடோர் பாஸ்கரன் உரையாடல்