அன்புள்ள ஜெ
மணி ரத்னம் உரையாடல் எதிர்பார்த்ததுபோலவே இல்லை. அவர் வழக்கமாக அதிகமாகப் பேசமாட்டார், ஒற்றைவரி பதில்களைச் சொல்வார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அப்படித்தான் பகடி ஓடிக்கொண்டிருந்தது. அவருடைய டிவி பேச்சுக்களெல்லாமே அந்த தன்மைகொண்டவைதான். ஆனால் இந்த உரையாடலில் அவர் போகப்போக மிகமிக ஈஸியாகிக்கொண்டே போனார். பல கேள்விகளுக்கு மிக விரிவாகவே பதில் சொன்னார். அவருடைய எண்ணங்கள் எந்தெந்த திசையில் செல்கினன என்ற ஒரு முழுமையான சித்திரத்தை அடையமுடிந்தது.
குறிப்பாக “இன்றைக்கு எல்லா ஷாட்டுமே நல்ல ஷாட்தான்” என்று அவர் சொன்னது ஒரு முக்கியமான வரி. அவரைப்போன்றவர்கள் கிளாஸிக் பட அழகியல் கொண்டவர்கள். சரியான ஃப்ரேமுக்காக மெனக்கெடுபவர்கள். அவர்களின் உலகை நவீனத் தொழில்நுட்பம் கடந்து வந்துவிட்டது என்பதை காணலாம். [மணி ரத்னத்தின் ஒரு செல்ஃபி கூட பொதுவெளியில் இல்லை. அவர் செல்ஃபி எடுப்பதே இல்லை என நினைக்கிறேன்] இனி செல்ஃபி கூட ஒரு ஷாட் ஆக மாறக்கூடும். அந்த வகையான மாற்றங்களின் வழியாக சினிமா செல்லும் போது கதை என்ற நெரேட்டிவை மட்டும் விடவே கூடாது என்று அவர் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதுமட்டும் ஏன் மாறாமலிருக்கவேண்டும் என்பது ஒரு புதிய கேள்விதான். அதற்கு அவர் என்ன சொல்வார் என்று அறிய ஆசை
எம்.கிருஷ்ணராஜ்
அன்புள்ள ஜெ
மணி ரத்னம் உரையாடல் இயல்பாக இருந்தது. அவரைப்போன்ற ஒருவர் என்னென்ன பதில்களைச் சொல்வார் என்று நாம் நினைக்கிறோமோ அந்த பதில்கள் இல்லை. அவர் பேட்டிமுழுக்க காட்சியழகு முக்கியம் அல்ல, கதையும் நாடகீயத்தருணங்களும்தான் முக்கியம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கலைப்படங்கள் என்பவற்றை அவர் ஏற்றுக்கொள்ளாமலைருந்தது அவற்றில் கதை என்ற அம்சம் குறைவாக இருந்தது என்பதனால்தான் என நினைக்கிறேன்.
இங்கே கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அணுகுவதில் ஒரு மூர்க்கமான முறை உள்ளது. அவர்கள் தாங்கள் சொல்லும் அரசியலை சொல்லாவிட்டால் இனம் மொழி கட்சி சாதி என்று எதையாவது அவர்க்ள் மேல் போட்டு, அவர்களை முத்திரைகுத்தி, ஒற்றைப்படையாக வரையறைசெய்து, வசைபாடுவது. இந்த மூர்க்கமான அணுகுமுறைபோல கலையை அறிவதற்கு பெரிய தடை வேறு இல்லை.
இந்த அரைவேக்காட்டு மூடர்கள் மிகுதியாகக் கூச்சலிடுபவர்கள். இவர்கள் வலதுசாரியும் உண்டு இடதுசாரியும் உண்டு. இதுபோக இங்கே மிஞ்சுபவர்கள் கொஞ்சபேர்தான். இந்த சிறுவட்டம்தான் இங்கே கலையையும் இலக்கியத்தையும் ஆராயவேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சிறுவட்டம் இந்த விஷ்ணுபுரம். ஆகவேதான் மணி ரத்னம் இங்கே வசதியானவராகவும், இயல்பானவராகவும் உணர்கிறார். சகஜமாக வெளிப்படுகிறார்
பொதுவாக இந்தவகையான உரையாடல்களில் சட்டென்று சீண்டும் குரல் வரும். எளிமையான முத்திரைகள் வரும். அது அந்த ஆளுமையை டிஃபென்ஸிவ் ஆக்கிவிடும். அதன் பின் அவரால் எதையுமே புதிதாகச் சொல்லமுடியாது. ஜாக்ரதையாகப் பேசிக்கொண்டிருப்பார். அந்த ஆபத்து நிகழவில்லை
எல்லா கலைஞர்களும் தெளிவுடன் இருப்பதில்லை. சொல்லப்போனால் ரொம்ப தெளிவாக அரசியலும் சமூகவியலும் பேச ஆரம்பிக்கும்போது அவர்களின் கிரியேட்டிவிட்டி இல்லாமலாகிவிட்டிருப்பதையே காண்கிறோம். கலைஞர்கள் குழப்பத்திலும் இருநிலையிலும் இருப்பார்கள். தேடிச்சென்றுகொண்டும் இருப்பார்கள். அதிலும் சினிமா என்பது ஒரு விசித்திரமான கலை. அது பிரைவேட் ஆர்ட் அல்ல. அது ஒரு சோஷியல் ஆர்ட். அங்கே கலைஞனும் அவன் ஆடியன்சும் சேர்ந்து செயல்படுகிறார்கள். ஆகவே குழப்பங்கள்தான் தொடர்ச்சியாக வெளிப்படும்
மணி ரத்னத்தின் குழப்பங்களும் சிக்கல்களும் இந்தப்பேட்டியில் வெளிப்பட்டன. அவருக்கு ஐடியாலஜி, மாரல் மேல் ஈர்ப்பு இருக்கிறது. மரபுமேல் ஆழத்தில் ஒரு பிடிமானம் இருக்கிறது. ஆனால் முதலாளித்துவ அமைப்பு பொருளியலின் சந்தைப்பொருளியல் ஆகியவற்றின் மீதும் ஈர்ப்பு இருக்கிறது. இரண்டு இடங்களிலும் அவர் நின்று தடுமாறுவதையே மௌனராகம் முதல் ஓகே கண்மணி வரை பார்க்கிறோம்
அதைப்பற்றிய கேள்விகளுக்கும் அவர் அந்தக்குழப்பத்தையே பதிலாக தந்தார். மரபு ஏன் படங்களில் இருக்கிறது என்றால் அது இங்கே உள்ளது என்கிறார். ஏன் புதியவை தேவை என்றால் அதுதான் வந்துகொண்டிருக்கிறது என்கிறார். இந்தவகையான கிரியேட்டிவான குழப்பங்கள் வெளிப்படுவதற்குத்தான் உரையாடல் தேவை. தெளிவாக யோசித்துவைத்த பதில்களைச் சொல்வதற்காக அல்ல. ஒருவரை நாம் முத்திரைகுத்தி அடையாளப்படுத்தி முரட்டுத்தனமாக அணுகினால் அவர் தன்னை வெளிப்படுத்துவதில்லை. அவருடைய கலையும் நம் கண்ணிலிருந்து மறைந்துவிடும். சினிமா வேறு அரசியல்துண்டுப்பிரசுரம் வேறு என்று நம் ஆட்களுக்கு நாம் சொல்லவேண்டியிருக்கிறது
இந்த குழப்பமும் தடுமாற்றமும் வெளிப்பட்டமையால்தான் இந்த உரையாடலை மிகமுக்கியமான ஒரு வெளிப்பாடு என நான் நினைக்கிறேன்
கே.எம். அருண்
அன்புள்ள ஜெ
மணி ரத்னம் பேட்டி அருமை. பல கேள்விகள் வெவ்வேறு திசையிலிருந்து வந்தன. முக்கியமாக இனி தியேட்டரை ஒட்டி உருவான சினிமாவின் ஃபார்ம் மாறிவிடுமா என்ற கேள்வி. சினிமாவே நாவலாக ஆகமுடியுமா? சீரியல்கள் நாவல்கள் அல்ல. அவை தொடர்கதைகள். ஆனால் ஓட்டிடியில் ஒரு 12 மணிநேர சினிமா இருந்தால், அதை பக்கவாட்டிலெல்லாம் போய் பார்க்க முடிந்தால் அது காட்சிவடிவ நாவல்தான். அது உருவாகக்கூடும், விரைவிலேயே என்றுதான் மணிரத்னம் இந்தப்பேட்டியிலே சொன்னார். எல்லாருமே சினிமா சின்னதாக ஆகு
ம் என்கிறார்கள். எனக்கென்னவோ பெரிதாகவே ஆகுமென நினைக்கத் தோன்றுகிறது
எஸ்.ஆர்.குமரவேல்
மணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்-3
மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2
மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்
முந்தைய நிகழ்வுகள்
அ முத்துலிங்கம் உரையாடல்
நாஞ்சில் நாடன் உரையாடல்
தியடோர் பாஸ்கரன் உரையாடல்