சாக்ரட்டீஸ்,ராஜாஜி,ஈவெரா- பாடபேதங்கள்

நானறிந்த ராஜாஜி

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்கப் புத்தகம் பற்றி கடிதம் எழுதலாமென்று எண்ணினேன். வழக்கம்போல எழுத உள்ளெழும் தணல் தோன்றவேயில்லை. ஆனால் பாடபேதம் என்பதன் பெருவடிவை உணர்நது கொள்ள முடிந்தது.

சிலம்புச் செல்வர் டாக்டர் மா பொ சிவஞானம் அவர்கள் எழுதிய நானறிந்த ராஜாஜி என்ற நூல் தந்த பாடபேதத்தையும் வரலாற்றின் நகைமுரணையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.ஈரட்டியில் நீங்கள் படித்து ம.பொ.சி.தன் நினைவில் தோன்றியதை சரியான தொகுப்பில்லாமல் வெறுமனே கூறிச் செல்வது போல அமைந்திருக்கிறது என்ற கருத்தை முன்வைத்த அதே புத்தகம்.

நீங்கள் சொல்லியதை போலவே பல முக்கியமான நிகழ்வுகள் எந்த வகையிலும் முக்கியத்துவம் பெறாது இந்த நூலில் கூறப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகம் எழுதப்பட்டு நீண்ட காலம் கழித்து இன்று இதைப் படித்துப் பார்க்கும் பொழுது சாக்ரடீசினுடைய நூலை முதல் முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி என்று எளிதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவு முக்கியமான செய்தி இது..வேறு நாடுகளில் இருக்கக்கூடிய அறிஞர்களுடைய கருத்தை நம் நாட்டில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்களில் ஒன்று தான் சாக்ரடீஸைப் பற்றிய புத்தகம்.

இந்தப் புத்தகத்தை எழுதிய ராஜாஜி அன்று காந்தியை ஆசிரமத்தை தொடங்கி, காந்திய வழியை பின்பற்றக்கூடிய நபராக இருந்த காரணத்தால், தன் குருவின் கொள்கையை இங்கு பரப்ப தகுதியான நபர் என்று கருதி சாக்ரடீஸைப் பற்றிய நூலை எழுதி இருக்கிறார்..முழுக்க காந்தியக் கொள்கையை பரப்ப உருவாக்கப்பட்டது அந்த நூல்.

“ராஜாஜி தனது நூலில் சாக்ரடீஸ் வரலாறு முழுவதையும் கூறவில்லை. நீதிமன்றத்தில் அவர் தண்டனை பெறுவதற்கு காரணமாக இருந்த சொற்பொழிவில் மூன்று பகுதிகளையும் நீதிமன்றத்தில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தையும் மரண தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது கிருதர் என்ற தம் நண்பரோடு அவர் நிகழ்த்திய உரையாடலையும் தொகுத்து கொடுத்திருக்கிறார்.”

என்றே மா.பொ.சியால் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

முழுக்க காந்திய வழிமுறைகளை விளக்கும் வகையாக சாக்ரடிஸினுடைய வாழ்க்கையை அமைதியான வழியில் செயல்படக்கூடிய, ஆன்ம அறிவை தேடக்கூடிய நபராக எழுதி இருக்கிறார் ராஜாஜி .அதை அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய திருவிகவின் வார்த்தைகளால் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த நூலான சத்யாகிரக விஜயத்தைப் படிக்காவிட்டாலும் கூட..

காந்திய வழிமுறைகளை விளக்க அமைதியுடன் கூடிய ஆன்மிகத் தேடலுடன் கூடிய ஞானியாக நினைத்து தமிழகத்திற்கு மொழிபெயர்த்து கொண்டுவரப்பட்ட சாக்ரடீஸ் திராவிட இயக்கத்தால் முழுக்க அனைத்தையும் எதிர்த்த நாத்திகவாதியாக மாற்றப்பட்டார். பாடபேதம்.

குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்த செயல் அதற்குரிய விளைவைக் கொடுப்பதுபோல் ஆரம்பித்து பின் அதற்கு எதிரானதாக திரும்பி அது நீண்ட காலம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி மீண்டும் திசைதிரும்புவது என்பது வரலாற்றின் நகைமுரண்.சாக்ரடிஸுக்கு தமிழகத்தில் நடந்ததை வரிசைப்படுத்தினால்-

1.இராஜாஜி. காந்தியக் கொள்கைகளை விளக்க சாக்ரடீஸை ஸோக்ரதர் என மொழிபெயர்த்து தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். கிரேக்கத்தில் இருந்த இந்தியத் தாக்கம் கொண்ட ஞானி என. கிரிட்டோ கிருதர் ஆகிறார்

2.தமிழகத்தில் அவர் பெயர் பரவுகிறது.அவரைப் படித்தவர்கள் சாக்ரடீஸைப் பற்றிய தகவல்களைத் தேடுகின்றனர்.இராஜாஜியும் திருவிகவும் சாக்ரடீஸிடமிருந்ததை ஆன்மத் தேடல் என உணர்ந்தனர்.கடவுள் மறுப்பாளர்களான திராவிடர்கள் நாத்திகவாதமாக உணர்ந்தனர். பாடபேதம்.

3.சாக்ரடீஸ் நாத்திகவாத தர்கக ஞானியாக மாற்றம் பெறுகிறார்.

4.ஈவெரா தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை  ‘யுனெஸ்கோ மன்றம்’ மூலமாகப் பெறுகிறார்.

5.பள்ளிப்பாடப் புத்தகத்தில் ஈவெரா யுனெஸ்கோ விருது பெற்றவர் எனப் பதியப்படுகிறது.

6.திராவிட எதிர்ப்பாளர் ஒருவர் அந்த விருதின் மீது சந்தேகப்பட்டு தகவலைச் சரிபார்க்க யுனெஸ்கோ அந்த விருதைத் தரவில்லை எனத் தெரிகிறது.அது உள்ளுர் விருதென்பதும் பாடபேதத்தால் உலக விருதாக மாறிவிட்டது என்பதும் தெரிகிறது.

இதுதான் தமிழகவரலாற்றில் சாக்ரடீஸ் காரணமாக நடந்த பாடபேத்துடன் கூடிய நகைமுரண்.

அந்தியூர் மணி

வரலாற்றின் நகைமுரணையும் அறிஞர்கள் கூறியவைகளின் பாடபேதத்தையும் நினைத்து பார்க்கையில் நகைப்புதான் மிஞ்சுகிறது.

எழுத்தில் எழுதப்பட்டது பாடபேதத்தால் எப்படி மாறிவிட்டது எனப் பார்த்துவிட்டேன்.அதன் நகைமுரணையும். இனி எந்த நூலைப் படித்தாலும் இதன் பாடபேதம் எதுவாக இருக்குமென்றும் அதன் விளைவுகள் எப்படி மாறலாம் என்பதையும் எண்ணியே தீருவேன்.அதனால் என்னால் இனிப் படிக்கும் அனைத்தையும் பாடபேதத்தாடும் நகைமுரணோடும் விரிவாக்கிப் பார்க்க முடியுமென்றே தோன்றுகிறது.

பாடபேதம் – ருசியானதுதான். வரலாற்றின் நகைமுரணும் கூட..

அந்தியூர் மணி.

 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

முந்தைய கட்டுரைதிசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள்- கடிதங்கள்