வெண்முரசு வினாக்கள்-9

கர்ணன்  சல்லியன் உறவு கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது. இதை எப்படி உருவாக்கினீர்கள்

சேகர்

அன்புள்ள சேகர்

கர்ணன் சல்லியன் உறவு வெண்முரசில் உள்ளபடி மகாபாரதத்தில் இல்லை.  மகாபாரதம் விதைகளின் தொகுப்பு. பல்லாயிரம் வருடங்களாக இந்தியாவில் அந்த விதைகளை முளைக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கர்ணனுடன் சல்லியனுக்கான உறவு என்பது மகாபாரதத்தில் மிகத்தெளிவற்றதாக உள்ளது சல்லியன் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக மகாபாரதத்தில் வரவில்லை.

சல்யனைப்பற்றி நிறையவே மகாபாரதத்தில் இருந்து வெட்டப்பட்டுவிட்டதா என்பது பலரால் சுட்டிக்காட்டப்படும் ஐயம். ஏனென்றால் சல்லிய பர்வம் என ஒரு பகுதியே இருந்தும்கூட முன்னர் சல்யன் விரிவாகச் சொல்லப்படவில்லை. சல்யனின் கதாபாத்திரத்தன்மையும் குழப்பம் மிக்கது. சல்யன் பாண்டவர்களுடன் சேர வந்து வழியில் துரியோதனனைச் சந்தித்து கௌரவருடன் சென்றுவிடுகிறார். அதற்கான காரணங்கள் சொல்லப்படவில்லை

கர்ணனுக்கும் சல்லியனுக்கும் என்ன விரோதம் கர்ணனை சாவு வரை கொண்டு செல்ல சல்லியனைத் தூண்டிய உணர்வுக்ள் என்ன? சல்யன் பெருவில்லவனாக இருந்தாலும் மகாபாரதத்தில் உண்மையில் ஆற்றிய பங்களிப்புதான் என்ன என்பதற்கெல்லாம் மகாபாரதத்தில் விளக்கங்கள் இல்லை. அவ்விளக்கமாக நான் அளித்தது அவ்வுறவு.

ஆனால் மகாபாரதத்தை பொறுத்தவரையில் நீங்கள் எதை கற்பனை செய்தாலும் அதை ஏற்கனவே அதை எவரோ எங்கோ கற்பனை செய்திருப்பார்கள். கர்ணன் சல்லியன் உறவு பற்றி இந்தியாவின் நிகழ்த்துகலைகளில், கதகளியில் ஏறத்தாழ இதே வகையான சித்தரிப்பு முன்னரே உள்ளது

ஜெ

வெண்முரசின் நிலசித்தரிப்புகளில் உங்கள் பயணங்களின் பெரும் பங்களிப்பு தெரிகிறது. நீங்கள் சென்றிராத இடங்களை கற்பனை வழியாக விரித்துக்கொள்கிறீர்களா அல்லது அதற்கென வேறு நூல்களை வாசித்து அறிகிறீர்களா? பலுசிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகள் உட்பட பலவற்றையும், தேவல் எனப்படுகிற தேவபாலபுரம் வரை பல பகுதிகளின் குறிப்புகள்.. இது போன்ற சென்றிராத இடங்களுக்குமான  குறிப்புகளுக்கு எவ்விதமான உழைப்பு தேவைப்படுகிறது?

உதாரணமாக மூலத்தானநகரியில் உள்ள ஒரு சூரியக் கோவில் குறித்து எழுதியிருப்பீர்கள். இது ஒரு புனைவாக இருக்கலாம் என்று எண்ணியிருந்தேன்அனால் அங்கு இன்றைய பாகிஸ்தானின் முல்தானில்  ஒரு சூரியக் கோவில் இருந்தது என்று பின்னர் வாசித்து அறிந்தேன்.

சுபஸ்ரீ

அன்புள்ள சுபா,

வெண்முரசின் நிலச்சித்தரிப்புகளை உருவாக்குவதற்காக அந்த கனவு எழுந்த காலம் முதல் தொடர்ச்சியாக இருபத்தைந்தாண்டுகள் நான் இந்திய நிலவிரில் பயணங்களை செய்திருக்கிறேன். மகாபாரதம் நிகழ்ந்த பல்வேறு ஊர்களுக்கு நேரில் சென்றிருக்கிறேன். சில இடங்களை ஒரு புதுவாசகன் கற்பனையில் சென்றடைய முடியாது. உதாரணமாக வட இந்தியாவில் மழைக்காலம் என்பது ஜுன் ஜூலையில் அங்கே டிசம்பரில் புழுதி பறக்கும். ஆனால் டிசம்பரில் மழை பெறும் இமயப்பகுதிகள் பல உண்டு. அர்ஜுனன் சென்றதாக சொல்லப்படும் ஜோஷி மட் அருகே இருக்கும் பர்ஜன்ய பதம் ஓர் உதாரணம்.

இந்தியாவில் பாலைவனங்கள் உண்டு. பனிபடு நெடுவரைகள் உண்டு. வெண்முரசை படிப்பவர்கள் விதர்ப்பிணியாகிய ருக்மிணி தனது நாட்டில் இருக்கும் ஒரு கோட்டையிலிருந்து பனிபடு நெடுவரைகளை பார்த்தாள் என்று வருகிறது என்பதை கவனித்திருப்பார்கள். மேலோட்டமாக மட்டுமே இந்திய நிலக்காட்சியை அறிந்திருக்கும் ஒருவர் அல்லது நூல்கள் வழியாக அறிந்திருக்கும் ஒருவர் அது எப்படி இயல்வது என்று திகைக்கலாம். ஆனால் விசாகப்பட்டினம் அருகே பண்டைய விதர்ப்பத்தின் எல்லைக்குள் வரும் மலையொன்றில் ஆண்டில் குளிர்காலத்தில்  உறைபனி படிவதுண்டு. தொலைவில் அது தெரிவதும் உண்டு.

பெரும்பாலான இடங்களை  நேரில் சென்று பார்த்தேன் என்பதனால் என் படைப்பில் ஒரு துல்லியத்தன்மை உண்டு.ஆனால் அது புறவயமாக யோசித்து அமைப்பதும் அல்ல. சில நிலப்பகுதிகளை மாற்றிக்கொண்டுமிருக்கிறேன். ஏன் மாறுகிறது என எனக்குச் சொல்லத்தெரியவில்லை. அவை அப்படியே கிடக்கட்டும் என்றே விட்டுவிட்டேன். அவற்றுக்கு என் கனவுள்ளம் சார்ந்து ஏதாவது பொருளிருக்கலாம்.

பாகிஸ்தானின் நிலப்பரப்பு  என்பது ஏறத்தாழ ராஜஸ்தான் மற்றும் கட்சின் எல்லை வரைக்கும் இருக்கும் நிலப்பரப்புதான். அதற்கும் மேல் இருக்கும் பாலைவனத்தை எழுதும் பொருட்டு நமீபியா சென்று பாலைவனத்தை நுணுகி அறிந்துவந்தேன். இமயமலைகளில் பல முறை பயணம் செய்திருக்கிறேன். வடகிழக்கு எல்லைகளில் வெண்முரசு சொல்லும் ஏரிகள், மூங்கில்காடுகள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நேரில் சென்றால் கிடைக்கும் சித்திரம் கனவுக்குள் சென்று வெண்முரசில் மீள்கிறது.

உண்மைதான், நூல்களையும் வரைபடங்களையும் பயன்படுத்தியிருக்கிறேன். கூகிள்புக்ஸ் தொகுதி என்பது ஒரு பெரிய அறிவுக்களஞ்சியம் பண்டைய ஊர்கள் தொன்மங்கள் ஆகியவை பற்றி நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஆய்வு நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் தேடி எடுப்பதும் மிக எளிது. ஆகவே தேவபால புரத்தை பற்றியோ மூலஸ்தானம் எனும் முல்தான் பற்றியோ அந்நூல்களிலிருந்து தகவல்கள் எடுத்திருக்கிறேன்.

ஆனால் நூல்களைக்கொண்டு மட்டும் நிலக்காட்சிகளை உருவாக்கிவிட முடியாது. நேரில் சென்றாக வேண்டும் .இன்று நாகார்ஜுன கொண்டா என்று அழைக்கப்படும் பகுதி முன்பு விஜயபுரி என்று அழைக்கப்பட்டது. அந்நகரம் இன்று நாகார்ஜுன சாகர் அணைக்குள் இருக்கிறது. அப்பகுதிக்கு செல்லும் இளநாகனின் பார்வையை அதன் அருகே இருக்கும் பல பகுதிகளுக்கு சென்ற ஒருவரால் தான் எழுத முடியும். அங்குள்ள மலைகள் அடுக்கடுகாக அமைந்தவை. அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களைப் போலிருக்கும் சில பாறை உச்சிகள். அதை வர்ணிக்க ஒருவர் நேரில்  பார்த்தாகவேண்டும். பயணமின்றி வெண்முரசு எழுத  முடியாது.

மகாபாரதம் என்னும் பெரும் பிரதியில் பாரதம் என்னும் நிலப்பிரதியில் ஒரே சமயம் இருபத்தைந்து ஆண்டுகள் அலைந்ததின் சான்றுகளை ஒருவர் வெண்முரசில் பார்க்க முடியும்.

ஜெ

வெண்முரசு- வினாக்கள்-6

வெண்முரசு- வினாக்கள்-5

வெண்முரசு- வினாக்கள்-4

வெண்முரசு- வினாக்கள்-3

வெண்முரசு வினாக்கள்-2

வெண்முரசு- வினாக்கள்-1

முந்தைய கட்டுரைசென்றவரும் நினைப்பவரும்
அடுத்த கட்டுரைஎழுத்தின் புதிர் – கா.சிவா