நிழலெழுத்து

அன்புள்ள ஜெ.,

சில நாட்களுக்கு முன் நாளிதழில் ஒரு ‘∴பேமஸ் பிசினெஸ்மேன்’ (தமிழில் சொன்னால் பெயர் வெளியே தெரிந்து விடும்) குறித்த கட்டுரை ஒன்றில் இவர் ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்றிருந்தது. இந்த நூல்கள் யாருக்காக, யாரால் எழுதப்படுகின்றன? ஆரோக்கியமான தழுவல் போக ‘கோஸ்ட் ரைட்டிங்’ கே சினிமாவில் நிறைய உண்டு என்று கேள்விப்படுகிறேன். சிவனார் மண்டபத்தில் எழுதிக் கொடுத்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ போல தீவிர இலக்கியத்தில் இருக்க வாய்ப்புண்டா? ‘கோஸ்ட் ரைட்டிங்’ இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திர பூமி’ யில் ஊடாட்டமாக வந்து செல்லும். நீங்கள் வளர்ந்து வந்த காலங்களில் உங்களுக்கு இத்தகைய ‘வாய்ப்பு’கள் வந்திருக்கிறதா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன்

நிழலெழுத்தாளர் அல்லது நிழலெழுத்து என்பது மேலைநாடுகளில் ஒரு எதிர்மறைச் சொல்லாட்சியாக இருந்து இன்று ஏற்கத்தக்க ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. அந்த மாற்றம் தமிழிலும் நிகழ்வது நல்லது. தேவையானதும்கூட

அமெரிக்காவில் அந்த மாற்றம் எப்படி நடைபெற்றது? 1950 கள் வரையிலும்கூட நூலாசிரியர் என்பது ஒரு தனித்த தகுதிகொண்ட தொழில். ஓர் ஆளுமை அவர். அவரைத்தவிர பிறர் நூல்களை எழுதுவதில்லை.

1950களில் பல்வேறு தளங்களைச் சேர்ந்த எழுத்துக்களுக்கான தேவை அமெரிக்காவில் உருவானது. அவற்றை ஒட்டுமொத்தமாக ‘பயனுறு எழுத்து’ என்றார்கள். வெவ்வேறு தொழில்களங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் அறிதல்களைப் பற்றி எழுதுவது அது

அவ்வகை எழுத்துக்குச் சில முக்கியத்துவங்கள் உண்டு. அவற்றை எழுதுபவர்கள் அந்தந்த களங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். அனுபவத்தால் மட்டுமே பெறும் அறிதல்கள் கொண்டவர்கள். அவர்கள் எழுதும்போது அந்த பதிவுகளும் அறிதல்களும் பொதுவெளிக்கு வருகின்றன. அடுத்த தலைமுறைக்கு அவை பெரும் வழிகாட்டிகள்.

மானுட இயல்பே தானறிந்ததை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் செல்வதுதான். பல துறைசார் அறிவுகள் அந்த தளங்களில் சென்றுசேரும் புதியவர்களுக்கு அத்துறையின் மூதாதையரால் நேரடியாக அளிக்கப்பட்டன. அவை நூல்வடிவமாகும்போது மேலும் பொதுவாக ஆகின்றன. அந்த அறிவு அடைவது எளிதாகிறது, புறவயமாக தொகுக்கப்படுகிறது. விளைவாக மிகப்பெரிய செல்வத்தொகையாக அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கிறது

ஆனால் அந்தத் துறைநிபுணர்கள் எழுதத்தெரிந்தவர்களாக இருந்தாகவேண்டும். இல்லையேல் அவர்கள் தங்கள் ஞானத்தை நூலாக ஆக்கமுடியாது. அது மிகமிக அரிதாகவே இயல்வது. ஒரு துறையில் தன்னை முழுதளிப்பவரே அங்கே சாதனையாளராக முடியும். அவர் எழுத்தில் தேர்ச்சி பெறமுடியாமல் போவதே இயல்பானது

இந்நிலையில்தான் நிழலெழுத்து உருவாகிறது. அந்த துறைநிபுணரின் அனுபவங்களையும் அறிதல்களையும் கேட்டு தொகுத்துக்கொண்டு எழுதத்தெரிந்த எழுத்தாளர் ஒருவர் அவற்றை நூலாக்குவது அது. அது வெற்றிகரமான ஒரு வழிமுறையாக உள்ளது.

அந்த எழுத்தாளர் அதை தன்பெயரிலேயே வெளியிடலாமா? கூடாது, ஏனென்றால் அந்நூலின் மொழி- கட்டமைப்பு மட்டுமே அவருடையது. அவர் அதன் உள்ளடக்கத்துக்குப் பொறுப்பு அல்ல. அந்த துறைநிபுணரின் நூலாக வெளிவந்தாலொழிய அந்நூலுக்கு மதிப்பும் இல்லை. வாசகர்களுடன் பேசவேண்டியவர் அந்நிபுணர்தான். அவருக்கு மொழியை அளிப்பது மட்டுமே எழுத்தாளரின் பணி. ஆகவே அவருடைய நூல் அல்ல அது

இணைஆசிரியராக அந்த எழுத்தாளர் தன் பெயரைச் சேர்க்கலாமே என்பது இன்னொரு கேள்வி. சேர்க்கலாம்தான். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. அந்த எழுத்தாளர் மேலும் பலநூல்களை தன்  பெயரில் எழுதியிருப்பார். அந்த நூல்களின் வரிசையில் இந்நூல் வந்துவிடலாகாது. அந்நூல்களின் தொடர்ச்சியாக இந்நூல் வாசிக்கப்படலாகாது. அது தவறான புரிதல்களை உருவாக்கலாம்.

ஓர் ஆசிரியனின் அத்தனை நூல்களும் சேர்ந்து ஒற்றைப் பிரதியாக ஆகின்றன. அது அவன் ஆளுமையுடன் இணைந்தது. நிழலெழுத்தாக ஓர் ஆசிரியர் எழுதுவது அவருடைய ஆளுமையின் வெளிப்பாடு அல்ல, அது அவருடைய தனித்தன்மைகொண்ட textuality உடையதும் அல்ல. ஆகவே அவர் பெயர் தவிர்க்கப்படுவதே நல்லது

ஆகவே வேறுவழியில்லை, நிழலெழுத்து வந்தேயாகவேண்டும். அது இல்லாவிட்டால் ஒரு சூழலில் பயனுறு எழுத்து உருவாகவில்லை என்றுதான் கருதவேண்டும்.ஒரு சமூகம் தன்னைத்தானே பதிவுசெய்துகொள்வதில் தவறிவிட்டது என்றே பொருள். தன் சமூகத்தின் சாதனையாளர்களை அடுத்த தலைமுறைக்கு அது கொண்டுசெல்லவில்லை என்றே அதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

நிழலெழுத்து இல்லாமல் அச்சாதனையாளர்களே தன்னம்பிக்கையுடனோ தன்னம்பிக்கை இல்லாமலோ தட்டிமுட்டி எழுதும் நூல்கள் தமிழில் நிறையவே உள்ளன. அவற்றை வாசிக்கவே முடியாது. நடைமுறையில் அவை பயனற்றவை.

திறனற்ற எழுத்தாளர்கள் நிழலெழுத்தாளர்களாகச் செயல்பட்டு எழுதிய நூல்கள்கூட பயனற்றவையே. தமிழில் அவையெல்லாம் உப்புசப்பற்ற நடையும் மேலோட்டமான செய்திகளும்கொண்டு வெளிறிய ஆக்கங்களாக, எவராலும் பொருட்படுத்தப்படாதவையாக வெளிவந்து நூலகங்களில் கிடக்கின்றன. அந்தத் திறனாளர் ஒருவகையில் ஏமாற்றப்படுகிறார், இன்னொருவகையில் சிறுமைசெய்யப்படுகிறார்

சிறந்த எழுத்தாளர் நிழலெழுத்தாளராக நின்று எழுதிய முதன்மைத் திறனாளர் ஒருவரின் தன்வெளிப்பாடுதான் அத்த்தளத்தில் பெரும்படைப்பை உருவாக்கமுடியும்.எண்ணிப்பாருங்கள், சுந்தர ராமசாமி நிழலெழுத்தாளராக அமைந்து ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வெளிவந்திருந்தால் எத்தனை மகத்தானதாக இருந்திருக்கும் அது. ஜி.டி.நாயிடுவின் மேதமையையும் கிறுக்கையும் அற்புதமாக சு.ரா எழுதியிருப்பார். ஜி.டி,நாயிடுவின் உலகம் அவருடைய தன்வெளிப்பாட்டால் அன்றி எவராலும் எழுதப் படவும் முடியாதது.

ஓர் எழுத்தாளர் இன்னொருவரின் வாழ்க்கைவரலாற்றை எழுதுகிறார் என்றால் அது அவ்வெழுத்தாளர் பெயரில்தான் வெளியாகவேண்டும். எனேன்றால் அதிலுள்ள பார்வையும்,மதிப்பீடும் அந்த நூலாசிரியருடையவை. வாழ்க்கைவரலாற்றுக்குரியவர் அவருடைய பேசுபொருள் மட்டுமே. எனக்கு இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் எண்ணம் இருந்தது. தரவுகளைச் சேகரித்து தருவதாக அலெக்ஸ் சொல்லியிருந்தார். ஓரளவு தொடங்கினோம். அலெக்ஸின் இறப்பால் அது நடக்கவில்லை.

தமிழில் போற்றிப்பாடல்கள் இல்லாமல் தரவுகளால் ஓரு வாழ்க்கைச்சித்திரத்தை உருவாக்கும் தரமான வாழ்க்கைவரலாறுகள் இல்லை. தமிழின் புகழ்பெற்ற ஆளுமைகளுக்குக் கூட அப்படி ஒரு வாழ்க்கைவரலாறு எழுதப்படவில்லை.

ஆனால் ஓர் எழுத்தாளன் இன்னொருவருக்காக புனைவை எழுதுவது பிழை. ஏனென்றால் புனைவில் செயல்படுவது மொழி மட்டுமல்ல, ஆழுள்ளம். ஆழுள்ளம் அந்த ஆசிரியனுக்கே உரியது. அதை இன்னொருவருக்காக அவன் அளிக்கலாகாது. அது சொந்தக்குழவியை விற்பதுபோல பிழையானது

இன்றுகூட அப்படி வாழ்க்கையை எழுதியாகவேண்டிய பலர் உள்ளனர். தொழிலதிபர்கள், அரசியல்தலைவர்கள். அவர்கள் சற்று முயற்சி எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை பதிவுசெய்யலாம். நூலாக்கலாம்

அதோடு, அந்த துறை இன்று எழுத்தாளர்களுக்கு கௌரவமான ஊதியம் அளிப்பதாகவும் அமையும். எழுத்தாளர்களுக்கு இன்று காப்புரிமைத் தொகை என பெரிதாக ஏதுமில்லை. எழுத்தை நம்பி வாழமுடியவில்லை. இந்த துறையில் ஒரு மரியாதையான தொகை அவர்களுக்கு வழங்கப்படுமென்றால் அது அவர்களுக்கு நல்ல வருமானமாக ஆகும். அவர்கள் எதை சிறப்புறச் செய்ய முடியுமோ அதைச் செய்து பொருளீட்டுவது வேறெந்த தொழிலைச் செய்வதைவிடவும் அவர்களுக்கு உகந்ததும் கௌரவமானதும் ஆகும்.

தமிழின் சிறந்த இளமெழுத்தாளர்கள் முக்கியமான நிழலெழுத்துக்களை உருவாக்கினால் வெவ்வேறு துறைகளிலிருந்து வாசிக்கத்தக்க நூல்கள் இங்கே வெளிவரும். எண்ணிப்பாருங்கள்; ஆர்.நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன் அல்லது டி.வி.எஸ் வேணு ஸ்ரீனிவாசன், ராம்ராஜ் காட்டன் அதிபர் போன்றவர்களின் வாழ்க்கை அப்படி தரமான நூல்களாக வெளிவந்தால் தமிழ் அறிவுலகுக்கு அது எத்தனை பெரிய கொடை என்று.

உண்மையில் அது தமிழ்ப்புனைவுலகையே கூட மாற்றியமைக்கும். நம் புனைவுலகு இன்று இத்தனை சூம்பியிருப்பதற்கான காரணங்களில் ஒன்று நமக்கு வெவ்வேறு வாழ்க்கைச்சூழல்களை சார்ந்த நல்ல நூல்கள் இல்லை என்பது. நம்மால் வேறுவேறு களங்களில் கற்பனையால் சென்று வாழ மொழியினூடாக வாய்ப்பே இல்லை என்பது. அக்குறை நீங்கலாம்.

சரி, நான் நிழலெழுத்தை எழுதுவேனா? கண்டிப்பாக எழுதுவேன். எழுதினால் அது ஒரு கிளாசிக் ஆகவும் கருதப்படும். அதற்குரிய ஆளுமையாக இருக்கவேண்டும். நான் அதற்குரிய ஊதியத்தையும் அடையவேண்டும்.

உண்மையில் நான் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் வாழ்க்கைவரலாற்றை எழுத பெரிதும் விரும்பினேன். அது ஒரு மகத்தான வாழ்க்கை, எல்லா வகையிலும். நான் எழுத விழைந்தது ஊதியத்திற்காக  அல்ல, நான் கேட்டிருந்தால் எழுதாமலேயே அந்த ஊதியத்தை அவர் அளித்திருப்பார். அந்த நெருக்கம் அவருடன் இருந்தது. நான் இதழ்நடத்த அவர் கேட்டபோதெல்லாம் அளித்திருக்கிறார். விஷ்ணுபுரம் நாவலை பெரிய எண்ணிக்கையில் வாங்கியிருக்கிறார். நான் விரும்பியது அவருடைய விரிந்த வாழ்க்கைப்புலத்தை, தமிழ்ப்பண்பாடு சார்ந்த அவருடைய தனித்தன்மையான பார்வைகளை பதிவுசெய்ய. அப்படி பலர் இன்றும் உள்ளனர்.

இன்று நிழலெழுத்து சார்ந்து நம் சூழலில் ஒரு சங்கடம் உள்ளது. அது ஒரு பிழை என எழுதவிழையும் சாதனையாளரும் அது தகுதிக்குறைவானது என எழுத்தாளர்களும் நினைக்கின்றனர். அந்த சங்கடம் சென்ற யுகத்தைச் சார்ந்தது.பழைய பாணி எழுத்தாளர்களால் முன்வைக்கப்படுவது. காலாவதியாகிவிட்ட ஒன்று.

வேறெந்த தொழிலைச் செய்வதைவிடவும் எழுத்தைச் செய்வது கௌரவமானது என எழுத்தாளர் உணரவேண்டும். வேறெந்த தொழிலும் எழுத்தாளனின் எழுத்துவாழ்க்கையை பாதிப்பது, அவனுடைய அகவாழ்வை குலைப்பதுதான். எழுத்து எதுவானாலும் அவன் தன்னை கூர்தீட்டிக்கொள்வதாகவே அமையும். பொருளியல்ரீதியாக கவலையற்றிருப்பது எந்த எழுத்தாளனுக்கு பெருந்திறனை அளிப்பது- உலக இலக்கியத்தின் மேதைகள் அவ்வாறுதான் எழுதினர்

நேர்த்தியாக எழுதப்பட்ட நூல், எந்த தளத்தைச் சேர்ந்ததானாலும், மொழிக்கும் பண்பாட்டுக்கும் கொடைதான். ஆர்தர் மில்லர், நார்மன் மெய்லர் உட்பட மேலைநாட்டு முதன்மை படைப்பாளிகளெல்லாருமே நிழலெழுத்தை எழுதியவர்களே

இங்குள்ள சங்கடமான சூழல் காரணமாக எழுத்தாளர் ஒருவரை அதன்பொருட்டு அணுக எழுதவிழைவோர் தயங்குகிறார்கள். ஆகவே அவர்களை அணுகுபவர்களை அமர்த்திக்கொள்கிறார்கள், அவர்கள் பெரும்பாலும் அவர்கள் இரண்டாம்நிலையினர். விளைவாக அது இரண்டாம்நிலை எழுத்தாக வெளிப்படுகிறது

வேறெந்த தொழிலைப் போலவே இதிலும் எழுதமுனைபவர்கள் அந்த எழுத்தை நிகழ்த்தத் தகுதியான முதன்மை எழுத்தாளரை அணுகி ,உரிய ஊதியம்பேசி வழங்கி ,தொழில்முறையாக சிறந்த நூலை உருவாக்கும் சூழல் இங்கே அமையவேண்டும். அதற்கு இன்றிருக்கும் சங்கடங்கள் களையப்படவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅம்பை