மணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்-3

மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள் -1
மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ

சினிமா பற்றிய உரையாடல்களிலே நான் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. சினிமா என்றைக்குமே ஓர் உரையாடலாகத்தான் உருவாகும். சினிமாவை ஒரு தவம்போல ரசிகர்களைப் பற்றி கவலையே படாமல் எடுக்கமுடியாது. ஏனென்றால் அது அடிப்படையில் ஒரு பெர்ஃபார்மிங் ஆர்ட்.

எங்கெல்லாம் கலைப்படம் உருவாகியதோ அங்கெல்லாம் கலைப்படத்துக்கான ஒரு அறிவார்ந்த வட்டம் அதற்கு முன்னால் உருவானது. எந்தெந்த கருக்கள் பேசப்பட்டனவோ அவையெல்லாம் அந்தச் சூழலிலே பொதுவாக பேசப்பட்டு ஆழமாக விவாதிக்கப்பட்டவை. சினிமா அறிவுச்சூழலுக்கு react செய்கிறது. அது எல்லாநிலையிலும் ஒரு வெகுஜனக்கலை. முதலீடு தேவையான கலை. ஆகவே அது இலக்கியம் தத்துவம் போன்றவற்றுக்குப் பின்னால்தான் வரும்.

ஐரோப்பாவில் போர் பற்றிய விவாதங்கள் மிகுதி, ஆகவே போர்ப்படங்கள் மிகுதி. அவர்களின் தொன்மையான வரலாறு பற்றிய விவாதங்கள் இப்போது மிகவும் குறைவு. மதம் பற்றிய விவாதம் எழுபதுகளிலேயே ஏறத்தாழ முடிந்துவிட்டது. ஆகவே அங்கே பேசப்படும் விஷயங்களை தொடர்ச்சியாக சினிமா வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது

நம் சூழலில் கலைப்படம் வரவேண்டுமென்றால் நாம் சினிமாக்கலை பற்றிய தெளிவை அடையவேண்டும். நம் ரசிகர்கள் தயாராகவேண்டும். நாம் விவாதிக்கும் விஷயங்களுடன் சினிமாவும் விவாதிக்கவேண்டும். அத்தகைய விவாதங்கள் இங்கே இல்லை. இங்கே விவாதம் என்று நிகழ்பவை நடைமுறை அரசியலில் உள்ள வம்புகளைக் கொண்டுவந்து சினிமாமேல் போடுவது, வெளிநாட்டுப்படங்களை மேலெழுந்தவாரியாக பார்த்துவிட்டு எதையாவது சொல்வது இரண்டும்தான்.

இங்கே ஐரோப்பிய சினிமாவைப் பார்த்துவிட்டு பேசிக்கொண்டிருப்பதே நடக்கிறது. அது ஒரு அசட்டுத்தனம்தான். இவர்கள் ஐரோப்பிய சினிமாவையும் சரியாகப் பார்ப்பதில்லை. அந்த சினிமாக்கள் பேசும் தத்துவம்- சோஷியாலஜிக்கல் பிரச்சினைகள் எதையும் தெரிந்துகொள்ளாமல் அந்தப்படங்களை மட்டுமே பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது பயனற்ற ஒரு அறிவுச்செயல்பாடு மட்டும்தான்

இங்கே உருவாகி வரும் படம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் விவாதங்களில் இருந்து எழுந்தது. அந்த விவாதங்களை அந்தப்படங்களை முன்வைத்து நடத்தும்போதுதான் சினிமாவுக்கும் அறிவுலகுக்குமான ஊடாட்டம் நிகழ்கிறது. அதுதான் மேலும் மேலும் நல்ல படங்கள் உருவாவதற்கான வழியாக அமையும்.

அப்படிப்பட்ட ஓர் உரையாடலாக அமைந்தது மணி ரத்னத்துடனான வாசகர்களின் சந்திப்பு. அவருடைய படங்களில் பேசப்பட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி இயல்பாக வாசகர்கள் விவாதித்தனர். போற்றலும் தூற்றலும் இல்லாத தெளிவான ஆராய்ச்சியாக இருந்தது. மணி ரத்னத்துக்கே பலகோணங்களில் அவர் படைப்புக்கள் பார்க்கப்பட்டது தெரிந்திருக்கும். சினிமாவுக்கு இன்றைக்கு இந்தவகையான அணுகுமுறைதான் தேவை.

எஸ்.ஆர்.ராஜசேகர்

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் படங்களைப் பற்றிய உரையாடல் ஆழமானதாகவும் அதேசமயம் இயல்பானதுமாகவும் இருந்தது. நம் சூழலில் ஒரு இலக்கியவாசகர் சினிமா பற்றி என்னென்ன கேட்கமுடியும் என்று நாம் நினைப்போமோ எல்லாமே கேட்கப்பட்டது. எதிர்பாராத பல கேள்விகள் இருந்தன. இலக்கியச் சூழலில் உள்ள சந்தேகங்களும் இருந்தன.

பொதுவாக இலக்கியச்சூழலில் தொழில்நுட்பத்தைப் பற்றிய ஒரு சந்தேகம் உண்டு. இது உலகம் முழுக்க உண்டு. நூறாண்டுகளாக இருக்கிறது. சினிமா வந்தபோதே அதை ஷா போன்றவர்கள் நிராகரித்தது அது தொழில்நுட்பம் மேலோங்கியது என்பதனால்தான். கேட்கப்பட்ட கேள்விகளில் 4 கேள்விகள் திரும்பத்திரும்ப தொழில்நுட்பத்தை எதிர்மறையாகக் கண்டு கேட்கப்பட்ட கேள்விகள்.

உலகசினிமாவின் மேதைகள் பலருக்கும் தொழில்நுட்பம் மேல் இந்த aversion இருந்தது. நீண்டகாலம் colour correction செய்யப்பட்ட படங்களை ஒளிப்பதிவுப் போட்டிக்கு தேர்வுசெய்யாமலிருந்தனர். இது சினிமாவுக்கும் அறிவுஜீவிகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய முரண்பாடு. மணி ரத்னம் டெக்னாலஜி பக்கம் நிற்கிறார் என்று தெரிந்தது.

ஆர்.கணேஷ்

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் பேட்டி சுவாரசியமானது. பொதுவாக இதுவரை தமிழில் அவரிடம் கேட்கப்படாத பல கேள்விகள் இருந்தன. கிராஃபிக்ஸ் பற்றிய ஒரு கேள்வி முக்கியமானது. சினிமா அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதா? அதற்கு மணி ரத்னம் செயற்கையான பிரம்மாண்டத்தை உருவாக்க கிராஃபிக்ஸை பயன்படுத்தக்கூடாது, உண்மையை காட்டவே அதை பயன்படுத்தவேண்டும் என்றார். அது நடக்காத காரியம். சினிமா என்றைக்குமே ரியாலிட்டியை காட்டாது. ஃபேண்டசியைத்தான் காட்டும். நம்பகத்தன்மை இல்லாமலாவது டாக்குமெண்டரிகளுக்குத்தான்

ஜெய்கணேஷ் ஆனந்த்

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் உரையாடல் இயல்பாக அவருடைய பல தளங்களைத் தொட்டுத்தொட்டுச் சென்றது. வாசகர்கள் பல தளங்களைச் சேர்ந்தவர்கள். ஆகவே கேள்விகள் பல இடங்களிலிருந்து வந்தன. ஒப்புநோக்க பெண்கள் நிறைய கேள்விகள் கேட்டனர். பொதுவாக சினிமா விவாதங்களில் ரசிக மனநிலை இல்லாமல் பெண்கள் நிறைய விவாதிப்பது மிகக்குறைவு. அந்தவகையில் பெண்கள் கேட்ட எல்லா கேள்விகளுமே முக்கியமானவையாக இருந்தன. இன்றைய சினிமா பெண்களை காட்டுவதில் இருந்து மணி ரத்னம் எப்படி வேறுபடுகிறார், பெண்களின் வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதியை மட்டுமே காட்டுகிறாரா எல்லாம் முக்கியமான கேள்விகள்

ஆர்.ராஜேந்திரன்

முந்தைய நிகழ்வுகள்

அ முத்துலிங்கம் உரையாடல்

நாஞ்சில் நாடன் உரையாடல்

தியடோர் பாஸ்கரன் உரையாடல்

முந்தைய கட்டுரைமரபிலக்கியம் உரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநோய்க்காலமும் மழைக்காலமும்-4