நோய்க்காலமும் மழைக்காலமும்-3

புகைப்படம் பிரசன்னா

இந்த மழைப்பயணத்தை பயணத்துக்கான பயணம் என்று சொல்லவேண்டும். குறிப்பாக இதையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதில்லை. பார்க்கமுடிந்தால் பார்க்கலாம் என்பதே எண்ணம். எதையெல்லாம் பார்க்கமுடியுமென்றும் தெரியவில்லை. ஆகவே உத்தேசித்த பெரும்பாலான இடங்களுக்குச் செல்லமுடியவில்லை என்பது குறையாகத் தெரியவில்லை. ஒரு பயணத்தைச் செய்யமுடிந்ததே கொண்டாட்டமாக இருந்தது.

தொட்டமலெதே என்ற ஊரில் ஹொன்னமனே ஏரிக்கு அருகிலேயே இரண்டு மலைகள் இருந்தன. கவிபேட்டா, மோரே பேட்டா. அவற்றில் கவிபேட்டாவின் மேல் ஹொன்னம்மா தேவி ஆலயம் உள்ளது. மோரே பேட்டாவின்மேல் பெருங்கற்கால கற்சின்னங்கள் உள்ளன. எங்கள் பயணத்திட்டத்தில் முக்கியமாக நாங்கள் சேர்த்திருந்த இடம் அது. நல்லவேளையாக அது திறந்தவெளி, ஆகவே எவராலும் மூடப்படவில்லை.

காலையில் டீ குடித்ததுமே காரில் கிளம்பி மோரேபேட்டாவுக்கு மேல் சென்றோம். எந்த எல்லைவரை கார் செல்லுமோ அதுவரை சென்றோம். அங்கிருந்த இல்லத்தில் அனுமதிகோரி கார்களை விட்டுவிட்டு நடந்து மேலேறினோம். காப்பித்தோட்டங்கள் மட்டும் சூழ்ந்திருந்தன. வீடுகள் ஏதுமில்லை. சிமிண்ட் பாதை முடிந்து மண்பாதை தொடங்கியது.

காபித்தோட்டங்கள் ரப்பர் தோட்டங்கள்போல காடுகள். தேயிலை தோட்டங்கள்போல ஒழுங்குபடுத்தப்பட்டவை அல்ல. காபி ஒரு நிழல்புதர் மரம். பெரிய சில்வர் ஓக் மரங்கள் செறிந்த காட்டுக்குள் வெயில்படாமல்தான் செழித்து வளரும். ஆகவே காபித்தோட்டங்கள் சற்றே பாதையமைக்கப்பட்ட காடுகளென்றே தோன்றும். காட்டுக்குள் முந்தையநாள் பெய்த மழை அப்போதும் சொட்டிக்கொண்டிருந்தது

காபித்தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்த மண்சாலையில் நடந்தோம். சுற்றிச்சுற்றி மேலேறிச்சென்றோம். ஓர் ஆரஞ்சுமரம் கனிகளை உதிர்த்திருந்தது. செந்தில் எடுத்து உரித்து அனைவருக்கும் சுளைகளை அளித்தார். கிட்டத்தட்ட காட்டுமரம், மணமாக சுவையாக இருந்தது.

வழியில் சில்வர் ஓக் மரங்களில் நல்லமிளகு கொடிகள் சுற்றிப்படர்ந்து ஏறியிருந்தன. மிளகை பலர் பார்த்திருக்கவில்லை. அவர்கள் பார்த்த மிளகு கருப்பாக பொங்கலில் கிடப்பது. வெற்றிலைக்கொடியா என ஒருவர் கேட்டார். ஆமாம் என்று சொல்லி பச்சையான மிளகுக்கொத்துக்களை பறித்து அனைவரின் வாயிலும் போட்டு மென்று பாருங்கள் என்றேன். ஆ ஊ என்று ஒரே சத்தம். ஆனால் அந்தக் குளிருக்கு இதமாகவும் இருந்தது என்றார்கள்.

நாங்கள் ஜிபிஎஸ் வைத்து தேடிச்சென்றோம். மிக அருகே என காட்டியது. ஆனால் செல்லும்வழியெல்லாம் காபித்தோட்டங்களின் முட்கம்பி வேலிகள் தடுத்தன. வெறும் கம்பிவேலி என்றால் தாண்டிவிடலாம். அவற்றை ஒட்டி சில்வர் ஓக் மரங்களை நட்டு முட்புதர்களையும் வளர்த்திருந்தனர். மலையேறி சுற்றி அலைந்து மீண்டும் கீழே வந்து இன்னொரு வழியை கண்டுபிடித்து மேலே சென்றோம்

அந்த வழியும் ஒரு மொட்டைப்பாறையில் முடிந்தது. பெருங்கற்காலச் சின்னங்கள் அங்கே இல்லையோ என்ற எண்ணத்தை அடைந்தோம். ஆனால் அப்படி விட்டுவிடக்கூடாது என்றும் தோன்றியது. ஆகவே மீண்டும் மீண்டும் சுற்றிவந்தோம். ஓர் இடத்தில் வழி முடிவுற்றது. ஆனால் வேலியை தாண்டிக்கடக்க முடிந்தது

வழியறியாமல் அலைமோதினோம். ஓர் இடத்தில் ஒரு பாறை, அரியணை என எனக்குப்பட்டது. சும்மா உட்கார்ந்து பார்போமே என்று அமர்ந்தேன். ‘போஸ்’ கொடுத்து படங்கள் எடுத்துக்கொண்டோம். அருகே கிங்கரர்கள் நின்றனர். என்னை ஒரு தொன்மையான குடித்தலைவனாக உணர்ந்தேன்.

இன்று மானுடவியலாளர் ஒர் ஆர்வமூட்டும் செய்தியைச் சொல்கிறார்கள். முன்பெல்லாம் மாவீரன், பெருந்தந்தையே அரசன் என்று ஆனான் என ஆய்வாளர் நம்பினார்கள். இன்று அதில் ஒரு மாற்றம். பெருங்கலைஞனே குலத்தலைவனாக இருந்திருக்கிறான். பாடகன், ஓவியன், நடிகன், நடனக்கலைஞன். அவனே முதல் குடித்தலைவன், அரசன்.

ஏனென்றால் அவனுடைய கலைத்திறனில் இருக்கும் மர்மம் அவனை அதிமானுடனாக்கியது. தெய்வங்களுடனும் இறந்தவர்களுடனும் விலங்குகளுடனும் இயற்கைச்சக்திகளுடனும் பேசுபவனாக ஆக்கியது. அவனை அஞ்சினர், பணிந்தனர். அவனையே தெய்வமென வழிபட்டனர்.

அவனில் எழுந்த அறியாவிசையே மானுடர் கண்ட முதல்தெய்வம். சன்னதம் கொண்ட மானுடனையே நேரடியாக பழங்குடியினர் வழிபட்டனர். இன்றும் தெய்யம் என்னும் வடிவில் அவ்வழிபாட்டு முறை வடகேரளத்தில் நீடிக்கிறது. அவனை பின்னர் வரைந்தனர், பின்னர் சிற்பமாக்கினர். இன்றைய தெய்வத்திருவுருக்கள் எல்லாம் மானுட உருவம் கொண்டிருப்பது அவ்வாறுதான்

பின்னர் அவன் பூசகனாக ஆனான், அரசனுக்கும் மேலான ஆற்றல்கொண்டவன். பூசகனே பழங்குடிகளில் முதன்மையான குடிமகன். நிலக்கல் குகையோவியத்தில் அரசனும் பூசாரியுமான அந்த மூதாதையின் கல்குடைவு ஓவியம் உள்ளது. அவன் இன்றைய தெய்யங்களைப்போல பெரிய ஓலைமுடி சூடி ஆடும்கோலத்தில் நின்றிருக்கிறான்.

ஆகவே அந்தக் கல்சிம்மாசனம் கலைஞனுக்குரியதுதான். அதில் நானும் அமரலாம், அரைமணிநேரமாவது என்று தோன்றியது. அதில் அமர்ந்திருந்தபோது ஒன்று தோன்றியது, இன்று என் நெஞ்சை கனவுகள் நிறைத்திருப்பதுபோல அன்றும் அம்மூதாதை நெஞ்சையும் கனவு நிறைத்திருக்கும். அவன் அக்கனவால் அவனுக்கும் தொன்மையான மூதாதையருடன் தொடர்புகொண்டிருப்பான்.

மானுடக்குலம் கனவுகளின் சரடால்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. கனவுகளால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. கனவுகளால்தான் மேலெடுத்துச் செல்லப்படுகிறது. கனவைச் சமைப்பவனே மானுடச்சிற்பி. எத்தனை எளியவனாயினும் நானும் அவர்களில் ஒருவன்

மேலும் சென்றால் என்ன தெரியும் என தெரியாமல் நின்றிருந்தபோது ஒருவரைப் பார்த்தேன். கன்னடம் பேசினார், ஆனால் அவர் மலையாளி என தெரியவந்தது. முகமது யூசுப். அவருடைய ஊர் காசர்கோடு செர்க்களா. செர்க்களம் அப்துல் ஹமீது என்ற என் நண்பருக்கு தெரிந்தவர். ஆச்சரியமாக இருந்தது.

யூசுப் எங்களை கற்சின்னங்கள் இருந்த மலையுச்சிக்கு கூட்டிச்சென்றார். அவர் இல்லாவிட்டால் கண்டுபிடித்திருக்க முடியாது. ஓர் இடத்தில் குகைக்குள் செல்வதுபோல தரையில் அமர்ந்து முட்புதர்கள் வழியாக நுழையவேண்டியிருந்தது.

யூசுப் இருநூறு ஆடுகள் வைத்திருந்தாராம். அவற்றை அங்கிருந்து சக்ளேஸ்வர் கொண்டுசென்றார். பண்ணை நஷ்டமாயிற்று, ஆடுகள் நோய்வந்து இறந்தன. அவர் இங்கேயே மீண்டுவந்து இப்போது பசு வளர்க்கிறார். ஒரு சிறு டீக்கடையும் உண்டு. அதை எங்களைக் கண்டதுமே சொல்ல ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையின் மொத்த நிகழ்வே அந்த ஆடுகளின் சாவுதான் போல.

பசுக்கள் மேய்ந்துகொண்டிருந்தன. அவை நனைந்து ஊறியிருந்தன. அங்கே பசுக்களை வளர்ப்பதே கெடுதல், அவை நோயுறக்கூடும். ஆடுகள் கண்டிப்பாக நலமாக வாழாது. ஆடுகள் பாலையின் விலங்குகள், வெயிலுகந்தவை.

மலைப்பாறைகள் நடுவே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நிலைக்கற்களும், கல்அறைகளும் [கற்பதுக்கைகள்] கல்வட்டங்களும் இருந்தன. இந்தப்பகுதி உள்ளூர் மக்களால் பாண்டவர்வீடு [பாண்டவகுடி] என அழைக்கப்பட்டிருக்கிறது. பாண்டவர்கள் இங்கே கானுறை வாழ்வின்போது கற்குடில் கட்டி தங்கியதாக நம்பிக்கை.

வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே இவை அடையாளம் காணப்பட்டுவிட்டன என்றாலும் வேலிகட்டிப் பாதுகாக்கும் முயற்சிகள் இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன. பெருங்கற்கள் ஒன்றரை ஆள் உயரமானவை, அதேயளவு மண்ணுக்கு அடியிலும் ஆழத்தில் நடப்பட்டிருக்கும்.

பொதுவாக நிலைக்கற்கள் ஆண்களுக்கு உரியவை. வீரர்களுக்கும் குடித்தலைவர்களுக்கும் உரியவை. பதுக்கைகள் அன்னையருக்கு உரியவை. சடலங்களை உள்ளே வைப்பதில்லை. சடலங்கள் புதைக்கப்படுகின்றன. பின்னர் எலும்புகள் எடுக்கப்பட்டு இங்கே கொண்டுசென்று புதைக்கப்படுகின்றன. ஒரு பதுக்கைக்குள் பல தலைமுறைகளாக அன்னையர் அடங்கிக்கொண்டே இருப்பார்கள்

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திலும் கொல்லிமலையிலும் பதுக்கைகள் உள்ளன. இந்தியா முழுக்க பதுக்கைகள் பரவியிருக்கின்றன. காலத்தால் அருகமைந்த பதுக்கைகள் மேகாலயா மாநிலத்தில்  உள்ளன. அங்கே இன்றும்கூட பெருங்கற்களை நாட்டும் வழக்கம் பழங்குடிகள் நடுவே உள்ளது. நார்ட்டியாங் என்னும் இடத்தில் பெருங்கற்கள் காடுபோல செறிந்திருந்த ஓர் இடுகாட்டை நாங்கள் பார்த்தோம். மேகாலயாவின் ஜைந்தியா, காஸி இனக்குழுவினர் இன்றும் பெருங்கற்களை நாட்டுகிறார்கள். [சூரியதிசைப் பயணம்-15,2017]

உலோகம் பயன்பாட்டுக்கு வராத காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டவையாதலால் வடிவற்றவை. கற்பாறைகளின் இயல்பான அடுக்குக்கு நடுவே காய்ந்த மரஆப்புகளை அடித்து இறுக்கி அவற்றை நீரில் ஊறச்செய்து உப்பவைத்து கல்லை வெடித்து பிரிந்தெழ வைக்கிறார்கள். அந்தப்பலகைகள் கொண்டுவரப்பட்டு அக்கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றன.

சில பழங்குடிகள் அறுபதுகளில்கூட பசிபிக் தீவுகளில் அப்படி பெருங்கல் நாட்டும் வழக்கம் கொண்டிருந்தனர். அதிலிருந்து இக்கற்கள் எப்படி உருவாயின என அறியமுடிந்தது. இன்று வெவ்வேறு பழங்குடிகள் இக்கற்களை நாட்டுவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றபடி இக்கற்கள் நடப்பட்ட காலம் வரலாற்றுக்கு முந்தைய யுகம். என்று எவரால் ஏன் இவை உருவாக்கப்பட்டன என அறிய எந்தத் தடயமும் இல்லை. இன்றுவாழும் எந்த குடியுடனும் எந்த பண்பாட்டுடனும் எந்த நம்பிக்கைகளுடனும் இவற்றுக்கு எந்த தொடர்பும் இல்லை.

இவை இங்கு வாழ்ந்த மானுட வாழ்க்கையின் முந்தைய அத்தியாயத்தைச் சேர்ந்தவை. அதற்கும் நாம் வாழும் அத்தியாயத்திற்கும் நடுவே எந்த தொடர்பும் இன்றுவரை அறியப்படவில்லை. ஊகங்கள் செய்யலாம், அவற்றை நிரூபிக்க எந்தச் சான்றுகளும் இல்லை என்பதே உண்மை.

பதுக்கைகள் நான்குபக்கமும் கற்பலகைகளால் மூடப்பட்டு மேலே கூரைக்கல் வைக்கப்பட்டவை. முகப்பில் ஒரு சரியான வட்டம் செதுக்கப்பட்டுள்ளது. அதன்வழியாகவே உள்ளே எலும்புகள் வைக்கப்பட்டன. சமீபகாலத்தில் புதையலுக்காக அவற்றை உடைத்து திறந்து தோண்டிப் பார்த்திருக்கிறார்கள். பல பதுக்கைகளில் முகப்புப்பலகை விழுந்து கிடக்கிறது. நிலைக்கற்களிலும் பல சரிந்துள்ளன.

இன்று பெருங்கற்கள், பதுக்கைகள் கிடைக்கும் இடங்கள் பெரும்பாலும் மலைகளாக, பழங்குடிகளின் நிலங்களாக இருக்கின்றன. அதாவது பழந்தொல்குடிகளின் நிலங்களில் இருந்த இக்கற்சின்னங்கள் அழிந்திருக்கலாம். அல்லது பேராலயங்களாக உருமாறியிருக்கலாம். பழங்குடி நிலங்களிலேயே அப்படியே நீடிக்கின்றன. கோத்தகிரியானாலும், கொல்லிமலையானாலும், மணிப்பூரானாலும், குடகானாலும்.

குடகின் சூப்ரண்டெண்ட் காப்டனாக இருந்த ஆர்.ஏ.கோல் இப்பகுதியை ஆராய்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் குடகு மலைக்குடிகளின் தொன்மையான வழிபாட்டிடங்கள் என்று இவற்றை கருதினார்கள். அகழ்வாய்வில் இங்கே எலும்புகளை வைத்துப் புதைத்த சிறிய கலங்கள் கிடைத்தன. ஆனால் உலோகங்களோ, பிறபொருட்களோ கிடைக்கவில்லை. சில சுடுமண் அடையாளங்கள் கிடைத்தன. அவற்றுக்கும் தற்கால நாகரீகத்திற்கும் சம்பந்தமில்லை.

பின்னர் பெருங்கற்கால சின்னங்கள் உலகமெங்கும் கண்டறியப்பட்டு அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகள் அடையாளம் காணப்பட்ட பின்னரே அவை பெருங்கற்கால நாகரீகச் சின்னங்கள் என்று நிறுவப்பட்டது.

இத்தகைய தொல்லியல் நிலைகளில் சென்று நாம் அடைவதென்ன? கிருஷ்ணன் அதை வெவ்வேறு சொற்களில் கேட்டார். கலைச்சின்னங்களை நேரில் சென்றுதான் பார்க்கவேண்டும். இவை வெறும் அடையாளங்கள்தானே? இவற்றை புகைப்படங்களில் பார்த்தாலும் போதுமே?

ஆனால் கலைச்சின்னங்களானாலும் கல்லடையாளங்களானாலும் அவை குறியீடுகள். படிமங்கள். கலை அதில் கலைஞன் ஏற்றிய அர்த்தங்களின் திரள். அடையாளம் அதில் காலம் ஏற்றிய அர்த்தங்களின் குவியம். நாம் ஒன்றை கண்ணால் பார்க்கையில் விழிப்புள்ளத்தின் தர்க்கமும் நனவிலியின் கனவும் சேர்ந்தே அதைப் பார்க்கின்றன. புகைப்படத்தைப் பார்க்கையில் நம் விழிப்புள்ளம் அறிவது ஒன்று, ஆனால் அதை நம் கனவு அறிவதில்லை. நேரில் பார்க்கையில் விழிப்புள்ளத்தை கடந்து கனவின் ஆழம் அடையாளம் காண்கிறது.

இந்தக் கற்பதுக்கைமுன் நிற்கையில் நாம் ஒரு மகத்தான கலைப்படைப்பின் முன் நிற்கும் அதே உள எழுச்சியை அடைகிறோம். கலைப்படைப்பின் எல்லையை தொட நம் கற்பனை தாவிச்செல்கிறது. அதே தாவல் இக்கல்லடையாளங்களின் கால எல்லையை அடையவும் தேவையாகிறது. நம் கனவில் இவை ஏதேதோ ஆகின்றன. அறிந்ததும் அறியாததுமான அர்த்தங்களைச் சமைக்கின்றன. நம்மை ஆழத்திலிருந்து ஆழத்துக்குக் கொண்டு செல்கின்றன. அதன்பொருட்டே நாம் நேரில் வரவேண்டியிருக்கிறது.

நான் இருபதாண்டுகளுக்கும் மேலாக பெருங்கற்கால சின்னங்களைத் தேடிச்சென்று கொண்டே இருக்கிறேன். என் மனதில் அவை எங்கே சென்று பதிந்தன என்று தெரியவில்லை. ஆனால் என் ஆழம் அவற்றால் நிறைந்திருக்கிறது. என் கனவில் அவை வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நான் திகைத்து, சிறுத்து, பின் பேருருக்கொண்டு விழித்தெழுகிறேன்.

அவை என் வரலாற்றுணர்வை எப்படி மாற்றின? இப்படிச் சொல்கிறேன். நாம் மானுடவரலாறு என்று சொல்வது, இன்றைய பழங்குடிகளையும் சேர்த்தேகூட, அதிகபட்சம் பத்தாயிரமாண்டு பழமைகொண்டது. ஆனால் மானுடநாகரீகத்தில் அது ஒரு கடைசிச் சிறுபகுதியே. மானுடப்பண்பாட்டின் 90 விழுக்காடு வரலாற்றுக்கு பின்னால் கிடக்கிறது

மானுடவரலாறு என்பது ஒரு மலையில் அமைந்திருக்கும் பாறை. மலையே மானுடப்பண்பாடு. பாறையை அது சுட்டுவிரல்நுனியால் ஏந்தியிருக்கிறது. வரலாறென்பது நம் விழிப்புள்ளம் என்றால் பண்பாடு அதன் கனவுள்ளம், அதன் நனவிலிப் பரப்பு. ஆழம் மிகமிகப் பிரம்மாண்டமானது, அறிந்தவை அதன் ஒரு சிறுபகுதியைச் சேர்ந்தவை மட்டுமே

எனில் அவை எங்கே? நம்மில் அவை எஞ்சியிருக்கவில்லையா? நம் அறிவில் அவை இல்லை. நம் மொழியிலும் அவை இல்லை. அந்த பண்பாட்டு ஆழத்தில் இருப்பவை நம் கனவின் வேர்கள். நம் நனவிலி அதன்மேல் படிந்திருக்கிறது. நாம் அறியாமல் அதன்மேல் அமர்ந்திருக்கிறோம். அதிலிருந்து வேர்நீர் கொண்டு வாழ்கிறோம்.

அறிவியல், தத்துவம், சிந்தனைகள் அனைத்துமே அறிந்தவற்றாலானவை. அறியாதவற்றாலானது ஆன்மீகமும் கலையும் இலக்கியமும்தான். அவை மட்டுமே அங்கே செல்லமுடியும். இந்த கற்பதுக்கைகளை உருவாக்கியவர்களை நோக்கி நான் ஆராய்ந்து அறிந்து செல்லவே முடியாது- என் கனவினூடாக எளிதில் சென்றமையவும் முடியும். கலைஞனாக என் பணி, என் அறைகூவல் அதுவே.

பெருங்கற்காலக் குன்றிலிருந்து காபித்தோட்டங்கள் வழியாக திரும்பி நடந்தோம். எப்போதுமே இத்தகைய திரும்புதல்களில் நான் அகத்தனிமையை அடைகிறேன். என் காலம் எத்தனை சிறியது என்னும் ஏக்கம் என்னை ஆட்கொண்ட நாட்கள் உண்டு. ஐம்பதாண்டு, நூறாண்டு, ஆனால் இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கண்டவை.

இன்று, அந்தக்காலப்பெருவெளியில் ஒரு துளி நான் என்னும் எண்ணமே எழுகிறது. ஒவ்வொன்றும் நான் அறிந்த அர்த்தங்களை இழக்கின்றன, அறியாத அர்த்தங்களைச் சூடிக்கொள்கின்றன.

[மேலும்]

கற்காலத்து மழை -1
கற்காலத்து மழை-2
கற்காலத்து மழை-3
கற்காலத்து மழை-4
கற்காலத்து மழை-5
கற்காலத்து மழை-6
கற்காலத்து மழை-7
கற்காலத்து மழை-8
குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்
மையநிலப் பயணம் பிம்பேத்கா
முந்தைய கட்டுரைடார்த்தீனியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு வினாக்கள்-7