மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் உரையாடல் சிறப்பாக இருந்தது. காணொளியில் அதிகமானவர்கள் பங்கெடுக்கும்போது கேள்விபதிலில் ஒரு தாமதம் உருவாகிறது. அதை பிரபலமான நிறுவனங்களில் கூட தவிர்க்கமுடியவில்லை. அது ஒரு சின்ன சிக்கல்தான். அதோடு இதில் பங்கெடுப்பவர்கள் பெரும்பாலும் புதியவர்கள், ஆகவே தடுமாற்றங்களை தவிர்க்கமுடியாது.

ஆனால் கேள்விகளெல்லாமே முக்கியமானவை. பல கேள்விகள் இதுவரை பொதுவெளியில் எழாதவை. பலவகையான கோணங்களில் இருந்து இத்தனை வேறுபட்ட கேள்விகளை இன்று வேறெந்த ஊடகத்திலும் எதிர்பார்க்க முடியாது. மணி ரத்னத்தின் பெண்கள் எல்லாருமே படித்த, திடமான பெண்கள். அதாவது தமிழ்ப்பெண்களின் ஒரு சிறுபான்மையினர். அதை ஒரு பெண் சொன்னபோதே என்னால் உணரமுடிந்தது.

மணி ரத்னம் சினிமாவின் காட்சியழகுக்காக நாடகத்தன்மையை காம்ப்ரமைஸ் செய்கிறாரா, காட்சிமொழி மாறிக்கொண்டே இருக்கும் சூழலில் அவர் எப்படி மாறுகிறார், இயக்குநரின் பணியில் கிரியேட்டிவிட்டி- மேனேஜ்மெண்ட் சதவீதம் எவ்வளவு எல்லாமே சுவாரசியமான புதிய கேள்விகள். அழகான ஓர் உரையாடல்நிகழ்வு. நன்றி

செ.செல்வின் குமார்

அன்புள்ள ஜெ

மணிரத்னம் சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவர் இத்தனை நேரம் நேரடியாக வாசகர்களிடம் உரையாடியது இதுவே முதல்முறை என நினைக்கிறேன். இப்படி ஒரு தேர்ந்த சூழலில் இல்லாமல் அவரால் இயல்பாக உரையாடவும் முடியாது. இங்கே இரண்டுவகையான அசட்டுத்தனங்கள் நடைபெறும். தங்களை மிகையாக்கிக் காட்டுவார்கள். அதற்காக பிரபலங்களை மட்டம்தட்ட முயல்வார்கள். அல்லது பிரபலங்களிடம் ஒரேயடியாக குழைவார்கள். இரண்டுமே இல்லாமல் ஆத்மார்த்தமான ஆழமான கேள்விகள் எழுந்தன. மணிரத்னத்திற்கே அவருடைய படைப்புக்களைப் பற்றி இவ்வாறு முற்றிலும் வேறுவேறு களங்களிலிருந்து கேள்விகள் வருமென்பது ஆச்சரியமாகவே இருந்திருக்கும்.

எம்.கிருஷ்ணகுமார்

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் சந்திப்பு சிறப்பாக இருந்தது. விஷ்ணுபுரம் சந்திப்புகளெல்லாமே ஆழமானவையாகவும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டவையாகவும் உள்ளன. அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், தியடோர் பாஸ்கரன் ஆகியோர் சந்திப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

மணி ரத்னம் பேட்டி என்பது வேறொரு உலகம். “ரஜினிகாந்த் கூட வேலைபாத்த அனுபவத்தைச் சொல்லுங்க” என்பதுபோன்ற கேள்விகள்தான் வரும். அல்லது சூழலில் புழங்கும் அரசியல், சாதி முத்திரைகுத்தும் அசட்டுக் கருத்துக்கள். அறிவார்ந்த ஆழமான கேள்விகள் வந்தன. பலகேள்விகளை மணி ரத்னத்திடம்தான் கேட்கமுடியும் என்று தோன்றியது. சினிமாவின் தொழில்நுட்பம் மாறியபோதும் தொடர்ந்து களத்தில் இருந்துகொண்டிருப்பவர் அவர்.

சிறந்த சந்திப்பு. மணி ரத்னம் இயல்பாக ஆழமாக பதில்சொன்னார். அவர் சொல்வார் என நினைத்த பல பதில்களைச் சொல்லவில்லை, பெரும்பாலும் உள்ளுணர்வை நம்பி படமெடுப்பவராகவே வெளிப்பட்டார். குரு படம் நம் மொத்த தேசமே இடதுசாரி சாய்விலிருந்து வலதுசாரி சாய்வுநோக்கிச் செல்வதைக் காட்டுவது என்ற அவருடைய கருத்து மிக ஆழமான ஒன்று

கணேஷ்குமார்

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்
அடுத்த கட்டுரைஇளைஞர்களுக்கு இன்றைய காந்திகள் இலவசம்