செப்டெம்பரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அன்றே ஊரிலிருந்து கிளம்பி ஈரோடு,ஈரட்டி,கோவை,சென்னை, மீண்டும் ஈரோடு என்று சுற்றிவந்தேன். மழைபெய்துகொண்டே இருந்தது. ஒரு மழைப்பயணம் போட்டுவிடலாம் என்று கிருஷ்ணன் சொன்னார். 22 ஆம் தேதி கிளம்பி கர்நாடக மலைநாடு வழியாக ஒரு சுற்று வருவது என முடிவாகியது
நான் 20 ஆம்தேதி சென்னையிலிருந்து காரில் ஈரோடு வந்தேன். மீண்டும் காஞ்சிகோயில் பண்ணைவீடு. மழைச்சாரல் இருந்துகொண்டே இருந்தது. மாலை நண்பர்கள் வந்திருந்தனர். தாமரைக்கண்ணன், அந்தியூர் மணி, பாரி,மணவாளன், வழக்கம்போல கிருஷ்ணன். பேசிப்பேசி தீராத பேச்சு. செந்திலின் நாய்க்குட்டி சிம்பாவை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த வருத்தம் அவருக்கு இருந்தது. சிம்பாவின் அம்மா பாப்பிக்கு வருத்தம் இருந்ததா என்று தெரியவில்லை. கண்களில் வழக்கமான ஆர்வமும் உற்சாகமும்தான் இருந்தது.
21 ஆம் தேதி ஈரட்டிக்குச் சென்று தங்கி 22 ஆம் தேதி மடிகேரி நோக்கிச் செல்வதாகத் திட்டம். மாலையில் என் அண்ணா நாகர்கோயிலில் இருந்து அழைத்தார். என் அப்பாவின் தம்பி சுதர்சனன் நாயர் கோவையில் காலமாகிவிட்டதாகச் சொன்னார். அப்பாவின் தங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய சித்தப்பாதான் எனக்கு ஜெயமோகன் என்று பெயரிட்டவர். அவருடைய மகள்கள் கோவையில் வசிக்கிறார்கள். அவர் பத்மநாபபுரத்தில் இருந்து கோவை வந்தபோது கோவிட்19 தொடங்கியது. அங்கே இருந்துவிட்டார்
அண்ணா கிளம்பி வருவதாகச் சொன்னார். நான் மறுநாள் காலை டாக்ஸியில் கோவைபோக ஏற்பாடு செய்தேன். ஆனால் 21 காலையில் கிளம்பி பாதிவழி சென்றபோது அண்ணா கூப்பிட்டு சித்தப்பாவுக்கு கோவிட்19 தொற்று இருந்ததாகவும், சடலத்தை குடும்பத்தினரிடம் அளிக்கமாட்டார்கள் என்றும், செல்லவேண்டியதில்லை என்றும் சொன்னார். திரும்பிவிட்டேன்.
சோகமாக இருந்தேனா? தெரியவில்லை. சித்தப்பாவுக்கு 85 வயது கடந்துவிட்டது. ஆனால் ஒருவகை சலிப்பும் வெறுமையும் இருந்தது. அதைவெல்ல பயணம்தான் வழி. வேண்டுமென்றே விசையேற்றிக் கொள்ளவேண்டியதுதான்.எப்போதுமே செய்வது அதைத்தான்.
அனந்த முருகன், பிரசன்னா ஆகியோர் சென்னையிலிருந்து வந்தனர். கோவையில் இருந்து ராஜமாணிக்கம், பல்லடம் தீபன், தாராபுரம் லிங்கராஜ் ஆகியோர் வந்தார்கள். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், சிவா, ஈஸ்வரமூர்த்தி. திருச்சியிலிருந்து சக்தி கிருஷ்ணன், காரைக்குடி கணேஷ். நானும் வழக்கறிஞர் செந்திலும் காஞ்சிகோயிலில் இருந்து. பெங்களூர் கிருஷ்ணனும் நினேஷும் மைசூரில் எங்களுடன் சேர்ந்துகொள்வதாகத் திட்டம்.மொத்தம் 14 பேர், மூன்று கார்கள்.
மதியம் சாப்பிட்டுவிட்டு செந்திலின் காரில் ஈரட்டி சென்றோம். செல்லும் வழியிலேயே வானம் இருண்டு சிறுதூறல் விழுந்துகொண்டிருந்தது. வரட்டுப்பள்ளம் அணைக்குமேல் காடு. வானிலிருந்து தொங்கும் பசுந்திரைபோன்ற மரச்செறிவு. இப்போது ஈரட்டியில் எங்கும் பசுமை மட்டும்தான்.
ஈரட்டி விடுதிக்கு இரவு சென்று சேர்ந்தோம். செல்லும்வழியிலேயே அத்தாணியில் இரு உணவகங்களிலாக இரவுணவு. ஒருகடையில் ஒன்பதே ஒன்பது பரோட்டாக்கள்தான் இருந்தன. கொஞ்சம் தோசைமாவும் இருந்தது. இன்னொரு கடையில் கொஞ்சம் தோசைமாவு எஞ்சியிருந்தது. ஆனால் சரமாரியாக பரோட்டா மாதிரி ஒன்றை போட்டுவிட்டார். தொகுத்தும் பகுத்தும் சாப்பிடவேண்டியிருந்தது.
ஈரட்டியில் இரவு 11 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். ஜானகிராமன் கதைகள், சுஜாதா கதைகள் மற்றும் வணிகக்கதைகளில் ஆண்பெண் உறவு சித்தரிக்கப்பட்டிருப்பது; அந்தச் சித்தரிப்பு மாறிமாறி வந்தமை பற்றிய உரையாடல். நல்ல குளிர் இருந்தது. வெளியே மழைபெய்துகொண்டே இருந்தது. நாங்கள் செல்வதைக் கண்டு முன்பு எங்களுடனிருந்த அந்த கரிய பெண்நாய் ஓடிவந்தது. குட்டிபோட்டு வயிறு ஒட்டியிருந்தது. விடுதியை காப்பவரான குமார் நான்கு குட்டிகள் என்றார். நான் எண்ணியது சரிதான்.
காலையில் நாலரைக்கே எழுந்து குளித்தோம்.சிவா ஆயத்தநிலை சப்பாத்திகளை வெப்பக்கலத்தில் கொண்டுவந்திருந்தார். அவற்றை கண்ணன் சூடுபண்ணி அளிக்கை கையில் எடுத்துக்கொண்டோம். பால் இருந்ததனால் டீ போட்டுக்குடித்தோம். காலை இருள் விலகுவதற்குள் ஆறரை மணிக்கே கிளம்பிவிட்டோம். பர்கூர், ஊசிமலை சுழற்பாதை வழியாக கர்கேகண்டி கடந்து கர்நாடகம்.
முழுக்கமுழுக்க காட்டுப்பாதை அது. ராமபுரா, ஹானூர் வழியாக காவிரியை கடந்து கொள்ளேகால். அங்கிருந்து சோமநாதபுரா வழியாக மைசூர். காடுகள் மழையில் பசுமைகொண்டு செறிந்திருந்தன. வழியெல்லாம் ஊர்களில் வாழ்க்கை திகழ்ந்துகொண்டிருந்தது. வயல்களில் பசுமையின் அலை,நீரின் ஒளி. வெறுமே பார்த்துக்கொண்டே செல்வதே ஒர் ஊழ்கநிலை.
கொள்ளேகால் அருகே ஒரு குளம் நிறைந்திருந்தது. அருகே ஒரு கோயில். கோயில்முன் ஓர் ஆலமரமும் அடியில் பிள்ளையாரும். அமர்வதற்கான கல்பெஞ்சுகள் இருந்தன. அமர்ந்து சாப்பிடுவதற்கான இடம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி சப்பாத்தி சாப்பிட்டோம்
மழைத்தூறலில் குளம் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. ஆனால் நீர் கலங்கல். கைகழுவவே கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அந்த காலையுணவுடன் பயணத்தின் மனநிலை அமைந்துவிட்டது. நாடோடிக்கான உளநிலை அமைவதே பயணம் என்பது
மைசூரில் சுற்றுலா முழுவிசை கொள்ளவில்லை, ஆனால் தொடங்கிவிட்டிருந்தது. இந்திய நகர்களில் மைசூர்தான் அழகானது. திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம், பசுமையானதும்கூட. அழகான வடிவமைப்புகொண்ட சண்டிகர், உதய்பூர் போன்ற நகர்களில்கூட தூசி நிறைந்திருக்கும்.மைசூர் கழுவிவிட்டது போல துல்லியமாக இருந்தது.
கிருஷ்ணனையும் நினேஷ்குமாரையும் ஏற்றிக்கொண்டோம். அங்கே நல்ல மைசூர் காபி கிடைக்கும் இடத்தை தேடிக்கண்டடைந்து ஒரு காபி சாப்பிட்டோம். மீண்டும் பயணம்.ஹுன்சூர், குஷால்நகர்,சோமவார்பேட் வழியாக மடிகேரி என்னும் மெர்க்காராவை அடைந்தோம்.
பழைய குடகுநாடு. சிக்கவீர ராஜேந்திரனும் சென்னபசவ நாயக்கனும் ஆட்சி செய்த நிலம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய நாவல்கள் வழியாக அறியப்பட்டது.காவேரியின் பிறப்பிடம். ஜெனரல் கரியப்பாவின் மண்.
குடகின் நாயகர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள். இந்தியாவின் போர்களில் உயிர்நீத்தவர்கள் பலர். மெர்க்காராவில் சாலை முனைகளில் அவர்களுக்கான சிலைகள் ராணுவ உடையில் நின்றிருப்பதைக் காணலாம். எங்கும் அரசியல் தலைவர்கள் மட்டுமே நிறைந்திருக்கும் தமிழ்ச்சூழலின் அது ஓர் இனிய மாறுதல். பிறருக்கும் இந்நாட்டில் முக்கியத்துவம் உண்டு என்பதைக் காட்டுவது
ஊட்டிக்கு வந்ததுபோலிருந்தது. மழை பெய்துகொண்டே இருந்தது. மழைநின்றுவிட்டால் தூறல். புகைபோல மேகம் தெருக்களை மூடியிருந்தது. ஈரமான சாலைகள். நனைந்த திரைகள் அசையும் கடைகள். மழைச்சாரலில் கரைந்து பரவிய வண்ண விளக்குகள்
நல்ல குளிர். விடுதியைச் சென்றடைந்தோம். சூடான குடகு காபி அருந்தினோம். விடுதிகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. சாலையிலும் உள்ளூர்க்காரர்களே தென்பட்டார்கள்.பயணிகள் வரத்தொடங்கவில்லை. குடகின் ‘சீசன்’ என்பது டிசம்பரும் ஜூனும்தான். மழையும் குளிரும் நாடியே பயணிகள் வருகிறார்கள். செப்டெம்பர் இரண்டுக்கும் நடுவே, இரண்டும் கலந்தது.
சென்றதுமே எங்கள் பயணத்திட்டத்தில் பாதி ரத்துசெய்யப்பட்ட தகவல்கள் வந்தன. நாங்கள் திட்டமிட்டிருந்த மலையேற்றம் நிகழாது, அதுவரை செல்லும் பாதை மழையில் உடைந்துவிட்டது. மழைபெய்வதனால் ஜீப்புகள் வர மறுக்கின்றன
என்ன செய்வது என்று யோசித்தோம். அருகே மலைமேடு ஒன்று உண்டு, மண்டல்பட்டு மலையுச்சி என்று பெயர்.அங்கே ஒரு ஜீப் பயணம் செய்யலாம். ஆனால் அங்கு சென்றாலும் ஒன்றும் தெரியாது. இங்கேயே மழைமுகில்தான் மூடியிருக்கிறது என்றார்கள். காபி குடித்துவிட்டு அமர்ந்திருக்கையில் சட்டென்று ஓட்டுநர் “மழைமுகில் விலகுகிறது, கிளம்புங்கள் செல்வோம்” என்றார்
ஜீப்புகளில் ஏறிக்கொண்டோம். நான் ஜீப்பின் பின்னாலிருந்த திறந்த பகுதியில் நண்பர்களுடன் நின்றேன். குளிர்காற்று பற்களைக் கிட்டிக்கவைத்தது. மழைச்சாரல் இருந்தது. பக்கவாட்டு மரக்கிளைகள் வந்து வந்து நீருடன் அறைந்தன. சாலையை அறுத்துக்கொண்டு ஓடைகள் சென்றன.
ஓரு சிறிய அருவியின் கரையை அடைந்தோம். நீர் வெறியுடன் கொப்பளித்துக்கொண்டிருந்தது. பாலத்தின் மேல் நின்று பார்க்கலாம். நீரின் ஓசை சூழ்ந்திருந்தது. அப்பகுதியிலெங்கும் எவருமில்லை. நீர் மட்டும் ஏதோ அறியாத மலைத்தெய்வம் சன்னதம் கொண்டு எழுந்ததுபோல அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது.
அங்கிருந்து மலைக்குமேல் சென்றோம். மலைச்சரிவில் வெட்டி உருவாக்கப்பட்ட சாலை. ஆங்காங்கே அது கடந்த பெருமழையில் இடிந்துசரிந்திருந்தது. சாலையோர ஓடையில் நீர் சுழித்தோடியது. இடைவெளியில்லாமல் புல்படர்ந்த நிலம் அலையலையாகச் சூழ்ந்திருந்தது.
மலைவிளிம்பில் நின்றோம். கீழே முகில்பிசிறுகள் தவழும் மரச்செறிவாலான காடு. அதன்மேல் தொலைவிலிருந்து பனிமூட்டம்போல வெண்மேகத் திரை வந்து மூடியது. பின்னர் காற்று அதை இழுத்து அப்பால் விலக்க காடு ஈரத்தின் ஒளியுடன் எழுந்து வந்தது. காட்டுக்குள் அருவிகள் கொட்டும் ஓசை. ஆனால் அவையெல்லாமே மழைக்கால அருவிகள். காட்டின் சிரிப்பு போல
அந்தியொளி மங்குவதுவரை அங்கே நின்றிருந்தோம். சூழ்ந்திருந்த காடு இருண்டபின்னரும்கூட அந்த மலைமுடிமேல் வெளிச்சம் வானாகச் சூழ்ந்திருந்தது. மழைக்கால அந்திக்கு ஒரு மணம் உண்டு. ஈரத்தின் மணம் அது என்று மனம் மயங்கும். மழையின் ஓயாத ரகசிய ஒலி. இடியின் உறுமல்கள்.
ஜீப்பில் திரும்பும்போது அமைதியாகிவிட்டிருந்தோம். காரின் சிறு குமிழிக்கு உள்ளேயே ஒரு முழுநாளை கழித்திருந்தோம். சட்டென்று நான்குபக்கமும் திறந்துகொண்டுவிட்டது. வெட்டவெளி. உயிர்ததும்பும் பசுமை
ஒரு மலைப்பாறை எனக்கான இருப்பிடம்போல. மலைப்பாறைமேல் இருக்கையில் குளிர்ந்த தவப்பீடம் ஒன்றில் அமர்ந்திருப்பதுபோல் உணர்வதுண்டு. யானைமேல் அமர்ந்திருப்பதுபோலவும். சூழ்ந்து நீலமும் பசுமையுமாக முகிலும் காடும். விடுதலை என்பதை ஆழமாக உணரும் தருணம் அது
காட்டில் இருப்பதற்கு நிகரான அமைதியை பிற இடங்களில் அரிதாகவே அறிகிறேன். காட்டில் நான் இயல்பானவன் அல்ல, அயலவன்தான். ஆனால் காடு என்னை அறியும் என்றும் தோன்றுவதுண்டு.
இரவு விடுதியில் ஈர ஆடைகளைக் கழற்றிவிட்டு அமர்ந்தோம். நான் கெட்டில் கொண்டுவரச்சொல்லி கொதிக்கக்கொதிக்க வெந்நீர் குடித்தேன். கொஞ்சம் தொண்டைக் கரகரப்பு இருந்தது. கடைத்தெருவுக்குச் சென்று பழங்கள் வாங்கிவந்தேன். ஒரு குடையும் வாங்கிக்கொண்டேன். ஆனால் அதை கடைசிவரை பயன்படுத்த முடியவில்லை, காற்று அப்படி.
பழங்களை சாப்பிட்டுவிட்டு படுத்தேன். உடலெங்கும் காரின் அசைவும் விசையும் எஞ்சியிருந்தது. கண்களுக்குள் மலையுச்சியின் ஒளிவிரவிய விரிவு.
[மேலும்]