டார்த்தீனியம்- கடிதங்கள்-6

அன்புள்ள ஜெ

நலம்தானே?

டார்த்தீனியம் படித்துவிட்டு இதை எழுதுகிறேன். என் சொந்த அனுபவத்தில் இருந்து நான் உணர்ந்த ஒன்று உண்டு. ஜாதகம், தோஷம், கிரகம் இப்படி என்னென்ன இருக்கிறதோ தெரியாது. அதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை. ஆனால் நேரம் என்று ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் மிகமிக devastating ஆக இருக்கும். அப்படியே நாம் நினைக்காதது எல்லாம் நடக்கும். ஏன் அப்படி நடக்கிறது ,ஏன் நாம் அப்படி நடந்துகொண்டோம், ஏன் அத்தனைபேரும் அப்படி நடந்துகொண்டார்கள் என்று சொல்லவே முடியாது. ஒரு கெட்டகனவுபோல நடந்து முடிந்துவிடும். பிரிவு,சாவு, நஷ்டம்,நோய், சண்டை எல்லாமே நடக்கும். ஜெ, என் விஷயத்திலே ஒரு கொலை வரை நடந்தது.

நேரம் என்பது beyond human ஆக இருக்கவேண்டும் என்பதில்லை. சைக்கியாட்ரிஸ்டுகள் சொல்வது போல அது ஒரு collective psychological upheaval ஆக இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். டார்த்தீனியம் கதையிலேயே அப்பா அப்படி ஆகிறார். அதற்கு அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உறவில் ஏதாவது காரணம் இருக்குமா?அதை மகன் அறியமுடியாது. ஆகவே கதையில் அது சொல்லப்படவே இல்லை. என்னதான் நடக்கிறது என்று அவனுக்குப் புரியவே இல்லை. வேண்டி விரும்பி தனக்குத்தானே விஷம் வைத்துக்கொள்கிறார் அப்பா, அவ்வளவுதான் கதையில் இருக்கிறது. அதெல்லாம் நடப்பதற்கு ஒரு time circle தான் காரணம் என்றுதான் நான் சொல்வேன்

ஆர்.

அன்புள்ள ஜெ,

டார்த்தீனியம் படித்துக்கொண்டிருந்தபோது ஒன்று தோன்றியது. அந்த கதையை அசாதாரணமான, மர்மமான ஒரு சூழலில் காட்டியிருந்தால் என்ன ஆகும் என்று? ஒரு திரில்லராக மேலே கூட சென்றிருக்கும். ஆனால் இப்போதிருக்கும் பதற்றம் இருந்திருக்காது. இந்தப்பதற்றம் இந்தக் கதை நிகழும் தளம் மிகவும் பழகிப்போனதாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. அந்த சின்னக்குடும்பத்தின் சந்தோஷமானச் சூழல் அறிமுகமானதாக காணக்கிடைக்கிறது. அங்கே இந்த சாபம் வந்து சேரும்போது ஒரு தனிப்பட்ட பதற்றம் ஏற்படுகிறது. இது ஒரு கெட்ட கனவு. நாம் அனைவருக்குமே நம் குடும்பங்களைப்பற்றி இப்படி ஒருசில கெட்ட கனவுகள் வந்து விழித்துக்கொள்வோம். நல்லவேளை என்று விபூதி போட்டுக்கொள்வோம். அந்த மாதிரியான கனவு இது. அத்தனை பேரின் மனசிலும் முளைக்காத விதையாக ஒரு டார்த்தீனியம் உள்ளது.

மா.ராமகிருஷ்ணன்

வணக்கம் ஜெ

ஒவ்வொரு கதையும் படித்து முடித்ததும் ஒருவித உணர்வு ஏற்படும். டார்த்தீனியம்- புரிந்துகொள்ள முடியாத சோகத்தையும் வீழ்ந்த உணர்வையும் கொடுத்தது.  இது ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி; பரம்பரையின் வீழ்ச்சி. கருமையின் கொடிய விஷம் சுற்றி வளைத்து இறுக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக விஷமேற்றிக் கொல்லும் கொடுமை. பாம்பு, வௌவால், ஆந்தை, இவைகளெல்லாம் இருட்டின் தேவதைகள். இவை, பயம், மரணம், துரதிருஷ்டம், இன்னும்,இன்னும்…

எனக்குப் பழைய நினைவை ஏற்படுத்தியது, அந்த மாட்டின் மரணம். என்ன பெரிய நாய், பூனையெல்லாம்…? மாட்டை விட மனிதனுக்கு அணுக்கமான விலங்கு வேறுண்டா ? நான் சிறுவனாக இருந்தபோது, இறந்த கன்றைப் பார்த்து, வாசற்படியில் உட்கார்ந்து என் அப்பத்தா அழுதது நினைவுக்கு வந்தது. மனம் ஆறுதலடையாத சில விஷயங்களில் அதுவும் ஒன்று.

இது ஊழ்வினையா ? திருஷ்டியா ? செய்வினையா ? இவைகள் என்ன? எப்படி இயங்குகின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், இவைகள் பொய் என்று சொல்ல மனம் மறுக்கிறது. இவைகள்தான் இந்த டார்த்தீனியம். அல்லது, எந்தக் காரணமும் இன்றி வெறும் வீழ்ச்சியையும், துக்கத்தையும், துரதிருஷ்டத்தையும் மட்டுமே கொடுக்கும் விசை. ஒரு குடும்பம், அதன் மகிழ்ச்சி, ஒரு வம்சம், அதன் வாழ்வு, வளம் அத்தனையையும் பேயைப்போல உறிஞ்சி வீசியெறியம் விசை.

விவேக் ராஜ்

முந்தைய கட்டுரைசிறியன சிந்தியாதான்
அடுத்த கட்டுரைதொழில்நேர்த்தி- கடிதங்கள்