டார்த்தீனியம் கடிதங்கள்- 4

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் மிகுந்த மனத்தொந்தரவை அளித்த கதை. என்ன பிரச்சினை என்பதே கதையில் இல்லை. ஒரே ஒரு படிமம் மட்டும்தான். அது தன்போக்கில் விரிந்து ஒவ்வொன்றாகப் பலிகொள்கிறது.  என்ன பிரச்சினை என்றால் இப்படி பலிகொள்ளும் சில மர்மமான விஷயங்களை நாம் நம் வாழ்க்கையிலேயே பார்த்திருப்போம்.

என் வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் இது உறவுகளில் உருவாகும் அவநம்பிக்கை அல்லது தூரம்தான். அது எப்படி உருவாகிறதென்றே தெரியாது. ஆனால் உருவாகிவிட்டால் வளர்ந்துகொண்டே இருக்கும். என்னதான் செய்தாலும் அது வளரும். அதை அழிக்க அழிக்க மேலும் வளரும். அந்த உறவை முழுமையாக அழித்தபிறகுதான் அது அடங்கும்

இதை நான் அந்த காலகட்டத்தைக் கடந்து வந்த பிறகுதான் உணர்கிறேன். ஆனால் இதை வாழ்க்கையின் பாடம் என்றே நினைக்கிறேன். நாம் அப்செஷனை மட்டும்தான் பார்க்கிறோம். வெறுப்புகூட ஒரு அப்செஷன் தான் என்று நினைக்கிறேன். அதுவும் நம்மை amuse செய்கிறது. அதனால்தான் அதை நாம் அவ்வளவு ஆர்வமாக வளர்த்துக்கொள்கிறோம்

ஒரு நஞ்சு எப்படி நம்மை அடிமையாக்குகிறது என்பது என்றைக்குமே ஆச்சரியமானதுதான். உண்மையில் நஞ்சுதான் அப்படி அடிமையாக்கும். ஏனென்றால் அது திகட்டாது. Nector எல்லாம் திகட்டிவிடும்.

எஸ்

***

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் இப்போதுதான் படித்தேன். உங்கள் பழைய கதை. அந்தக்காலகட்டத்தில்  சிற்றிதழ்ச்சூழலில் புகுந்து விதவிதமாக எழுதிப்பார்த்திருக்கிறீர்கள். அன்றெல்லாம் சிற்றிதழ் எழுத்து என்றால் சுவாரசியமே இல்லாத அன்றாட யதார்த்தம்தான். பேச்சுவாக்கில் யாரும் சொல்லிவிடக்கூடிய ஒரு அனுபவத்தை அப்படியே கதையாக எழுதிவிடுவார்கள். அது நடைமுறையில் உண்மையாக இருக்கவேண்டும் என்றுதான் அளவுகோல். அதை எதற்கு எழுதவேண்டும், அதான் பேசிக்கிடக்கிறதே என்று தோன்றும் நமக்கு.

அன்று படுகை, போதி, அம்மன்மரம் போன்று பலவகையான கதைகளை எழுதியிருக்கிறீர்கள். தொன்மம், நாட்டார்மரபு, புராணம் , பேய்க்கதை என்று எல்லாவகையிலும் எழுதி அவையெல்லாமே  உயர்தர இலக்கியம் ஆகும், அவற்றில் வாழ்க்கையின் அடிப்படைக்கேள்விகள் இருந்தால்போதும் என்று நிறுவியது உங்களுடைய சாதனைதான். அந்த அடிப்படைக் கேள்விகளும் சிக்கல்களும் இல்லை என்றால் எத்தனை யதார்த்தம் இருந்தாலும் அது வரண்ட எழுத்து என்றும் நிறுவியது உங்கள் எழுத்து

டார்த்தீனியம் ஒரு பக்கா திரில்லர். கிட்டத்தட்ட ஸ்டீஃபன் கிங் வகையான திரில்லர். அன்றுதான் ஐரோப்பாவிலேயே சீரியஸ் லிட்டரேச்சருக்குள் திரில்லர் ஹாரர் என்றெல்லாம் எழுதிப்பார்த்தார்கள். போஸ்ட்மாடர்னிஸ்டுகள் அவற்றை ஆதரித்து எழுதி நிலைநாட்டினார்கள். சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு ப்யூர் திரில்லரை இலக்கியமாக எழுதி நிலைநாட்டியது ஒரு முக்கியமான சாதனை. ஆனால் அதன்பிறகுகூட பலர் அதை பின்பற்றவில்லை. நீங்கள்தான் மண் போன்ற பலகதைகளை எழுதினீர்கள்

டார்த்தீனியம் பக்கா திரில்லர்- ஃபேண்டஸி. ஆனால் உங்கள் வாழ்க்கையை தெரிந்தவர்களுக்குத் தெரியும். அது ஆட்டோ பயாக்ரஃபிக்கல் கதை. உங்கள் வாழ்க்கையின் அடிப்படையான விஷயம் ஒன்றைச் சொல்ல கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் உங்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து விலக்கிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் எந்த அம்சமும் இக்கதையில் இல்லை. அப்பா உங்கள் அப்பா போல இல்லை. சூழல் உங்கள் சூழலே இல்லை. ஆனால் ஹாரர் உங்கள் வாழ்க்கையில் இருந்தது

ஒரு demon பலவகையில் இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் செடியாக அதை உருவகம் செய்யும்போது அது இன்னும் மூர்க்கமாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அதனுடன் நம்மால் communicate செய்யவே முடியாது. அதற்கு செவியோ கண்ணோ இல்லை. உயிர்மட்டும்தான். அது ஒரு program அல்லது wish மட்டும்தான். ஒரு spell என்பதற்கு டார்த்தீனியம் மிகச்சரியான உதாரணம். விதைக்குள் கருவாக இருந்து பேருருவம் கொண்டு வீட்டையே முட்டையை நாகப்பாம்பு உடைப்பது போல உடைத்துவிடுகிறது.

The demon of sorrow அல்லது The spell of unhappiness என்று அதைச் சொல்லலாம். தெய்வம் மனிதன்மேல் விடுக்கும் சாபம் போல. இந்த கோவிட் காலகட்டத்தில் அதை வாசிக்கையில் ஒரு பெரிய பதற்றம் ஏற்படுகிறது

ராம்குமார்

***

அன்புள்ள ஜெ,

டார்த்தீனியம் குறுநாவல் வாசித்தேன். முதல் பகுதி படித்தபோது முற்றிலும் வேறொருவர் எழுதியதாகவே நம்பினேன். நடை முற்றிலும் வேறொன்றாக இருந்தது. குமரியின் நிலம் அதில் இல்லை; அந்நிலத்தை மனக்கண்ணில் ஏற்றும் உங்களின் தனித்துவமான உரையாடல்கள் இல்லை. இக்குருநாவல் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நடையில் வழக்கமாகக் காணப்படும் துள்ளல் இல்லை; உரையாடல்களில் காணப்படும் அங்கதம் இல்லை. ஒரு இறுக்கமான மொழிநடை கதையெங்கும் உள்ளது. அது வாசிப்பைத் திகில் அனுபவமாக மாற்றுகிறது. இக்கதையை நீங்கள் மீண்டும் எழுதினால் வேறுபட்ட ஒரு மொழி அனுபவம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.ஆனால், பழைய வெர்சன் தரும் உணர்வு இருக்குமா என்று தெரியவில்லை.

அன்புடன்

இராஜரெத்தினம் தில்லைச்சிதம்பரம்

முந்தைய கட்டுரைமொழியாக்கம்,கடிதம்
அடுத்த கட்டுரைஇருட்டிலிருந்து வெளிச்சம்