டார்த்தீனியம்- கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் கதையை படித்தேன். என்னை மிகவும் கொந்தளிக்க வைத்த கதை இது. இனம்புரியாத இருட்டு, விளக்கமுடியாத வீழ்ச்சி இரண்டையும் வாழ்க்கையில் பார்க்கநேர்பவர்கள் கொஞ்சபேர்தான். அவர்களுக்கு இந்தக்கதை மிகவும் புரியும். சிலருக்கு அதைப்பற்றிய ஆங்சைட்டி இருந்துகொண்டிருக்கும். அவர்களுக்கும் புரியும். மற்றபடி பலர் இதை ஒரு திரில்லராக படித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் என நினைக்கிறேன்

இந்த வீழ்ச்சி எனக்கு நடந்தது. என் 23 முதல் 40 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்தக்கதை. அப்பா சரிய ஆரம்பித்தார். நான் அதை தடுக்க முயன்று நானும் சரிந்தேன். குரூரமாகச் சொல்கிறேனே. இந்தக்கதையில் வருவதுபோல அந்த அப்பா செத்தால்தான் அந்த சேகா முடியும். சாகாமல் அது முடியவே முடியாது. அழுகிப்போன உறுப்பை வெட்டி வீசுவது மாதிரித்தான். ஒன்றுமே செய்யமுடியாது. என் அப்பா செத்தபிறகுதான் என்னால் மீளமுடிந்தது.

இன்றைக்கு யோசிக்கையில் அதில் மனித முயற்சி ஒன்றுமே செய்யமுடியாது என்று தெரிகிறது. உண்மையில் இது இப்படித்தான். மனிதனால் ஆகமுடியாது என்று ஒன்னுமில்லை என்பார்கள். அப்படி இல்லை. இதில் ஒன்றுமே சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஆகவேதான் நான் சோதிடத்தில் ஈடுபாடு கொண்டேன். சோதிடம், கிரகபலன் மட்டுமே கொஞ்சமாவது இதனை விளக்கக்கூடியதாக இருக்கிறது. போராடாதே, விலக்கம் கொள் என்பதுதான் ஜோதிடம் இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் சொல்லுவதாக உள்ளது. அது கோழைத்தனமாக இருக்கலாம், ஆனால் அது மனிதனின் மனத்தை ஆறுதல்படுத்தி அவன் உடைந்துபோகாமல் காக்கிறது.மனம் உடையாமல் இருந்தால் எந்த அழிவிலிருந்தும் நம்மால் மீண்டுவிடமுடியும். நீங்களும் அப்படி மீண்டவர்தான் இல்லையா?

எம்.ராகவன் சிவானந்தம்

***

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் என்னை உலுக்கிய கதை. அதை என் வாழ்க்கையுடன் அடையாளப்படுத்திக்கொண்டேன். அதையெல்லாம் நினைக்க விரும்பவில்லை. ஆகவே எழுதவும் விரும்பவில்லை

நான் யோசித்த ஒன்று இந்தக்கதையில் இருக்கிறது. அது இதுதான், மனிதனுக்குச் சந்தோஷம் போதுமானதாக இல்லை. சந்தோஷம் திகட்டுகிறது. கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் செயற்கையாகவும் இருக்கிறது.  அதை அழிக்க மனிதர்களின் அகத்தில் இருந்தே ஆணை வருகிறது. தீதும் நன்றும் பிறர்தர வாரா. ஆனால் தீது பெரும்பாலும் நாமே தந்துகொள்வதுதான்

நாம் சேலஞ்ச் , ரிஸ்க் என்ற பேரில் நாமேதான் துன்பங்களை நாடிச் செல்கிறோம். என் அப்பாவுக்கு பிடித்தமான இரு வார்த்தைகள். அந்த வார்த்தைகளால்தான் அவர் அழிந்தார்.

இந்தக்கதையில் அந்தக்குடும்பத்தின் அன்பும் கொண்டாட்டமும் நெகிழ்வும் எல்லாம் சொல்லப்படுகிறது. அத்தனை பாஸிட்டிவாக இருக்கும்போதே அது கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் உள்ளது. அதனால்தான் அவர் அந்த கருப்புச்செடியை கொண்டுவந்து நட்டார் என நினைக்கிறேன்

ஆர்.கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெ

Seeds of unhappiness எல்லா காலத்திலும் உண்டு. பழங்காலத்தில் நோய், பஞ்சம், போர். இந்தக்காலத்தில் சலிப்புதான் என நினைக்கிறேன். boredom of happiness ஒரு பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டிருக்கிறது. சென்ற ஆண்டுடன் என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிந்தது. ஒரு உறவுமுறிவு. அதை தவிர்க்கமுயன்றேன். முடியவில்லை. அந்த டார்த்தீனியம் என் வீட்டை மூடி நொறுக்கியது. நான் நஞ்சுமூடி தப்பினேன். நோயில் கிடந்து பிழைத்துக்கொண்டேன். அந்த இடமே மனசில் இருந்து மறையவேண்டும் என்று நாடு மாறிவந்தேன்

ஏன் அதெல்லாம் என்று யோசித்துப் பார்த்தேன். முக்கியமான காரணம் ஈகோதான். ஆனால் ஈகோ பிரசினை ஏன் வருகிறது? வாழ்வதே பெரிய சவாலாக இருந்திருந்தால் ஈகோ பிரச்சினை வந்திருக்குமா? நுகத்தில் இழுக்கும்போது காளைகள் சண்டைபோடுவதில்லை. தொழுவில் நிற்கும்போது முட்டிக்கொள்கின்றன. என் தாத்தா சொல்லும் சொலவடை. அது உண்மை. இன்றைக்கு சலிப்பினால்தான் இத்தனை ஈகோ பிரச்சினை. குத்திக்கிழித்து ரத்தம் குடிக்கிறோம். கொலைவெறி கொள்கிறோம்.

டார்த்தீனியம் மகிழ்ச்சியின் சலிப்பை சொல்லும் அற்புதமான ஒரு கதை. குரூரமான கதை, ஆனால் குரூரமான உண்மை என்று சொல்லவேண்டும். நான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. ஒரு எட்கார் ஆல்லன் போ கதை மாதிரி. ஆனால் இதை படித்திருக்கக்கூடாது என்றும் நினைக்கிறேன்

எம்.ஜெயராஜ்

முந்தைய கட்டுரைமழைப்பாடல் நிகழ்வது
அடுத்த கட்டுரைகதைகளின் பாதை- கடிதங்கள்