டார்த்தீனியம்- கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

டார்த்தீனியத்தை திகிலுடன் படித்து முடித்தேன். உண்மையில் அது தற்போது எழுதப்பட்டு வெளியாகிறது என்ற நினைப்புடனே தினமும் வாசித்தேன். முடிவில் அக்கதை 1992ல் வெளிவந்தது என அறிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அக்கதை இப்போது படிக்கும் போது இன்று எழுதப்பட்டது போல்தான் இருக்கிறது. டார்த்தீனியம் கால எல்லைகளற்றது. எக்காலத்திற்குமானது. கறுப்பு என்பது நிறமல்ல அது நிறமற்றது என்று எனக்குத் தோன்றுவதுண்டு. வெளிச்சமின்மை இருள் தருவது போல. இருக்கும் வெளிச்சத்தையே மூடும் கறுப்பு டார்த்தீனியம். உண்மையில் ஒவ்வொரு சிதைந்த வாழ்க்கையிலும் ஒரு டார்த்தீனியம் கிளைவிரித்து நிற்கிறது. கிளையெல்லாம் நிறைந்த விதைகள் அது அழிவற்றது, தொடர்வது என்றுமுள்ளது என்பதையே காட்டுகிறது.

அன்புடன்,

ஆர்.பிரேம் ஆனந்த்.

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் வாசித்தேன். அது உங்கள் வாழ்க்கையை ஒட்டிய கதை. ஆனால் அது என்னுடைய வாழ்க்கையின் கதையும் கூட. இருட்டுக்கு மிகப்பெரிய கவற்சி உண்டு. அது எங்கிருந்து வருகிறது? அது நம்முள்தான் உள்ளது. நாமேதான் அதை நட்டு வளர்த்து அழிக்கிறோம். 1980களில் என் அப்பா திருச்சியில் மிகப்பெரிய மொத்த வியாபாரி. எங்கள் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தன. அழகான குடும்பம்.

ஆனால் அப்பா திடீரென்று சூதாட ஆரம்பித்தார். உலக அளவில் ஓடி ஓடி சூதாடினார். ஐந்தே ஆண்டுகளில் மொத்தமும் சரிந்தது. அப்பா மாரடைப்பில் மறைந்தார். நாங்கள் துறையூரில் அம்மாவின் சொந்த ஊரில் ஒரு இரண்டு ரூம் வீட்டில் குடியேறினோம். பிகாம் படித்து முடிக்காத நான் ஒரு வீட்டில் கார் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தேன். படிப்படியாக வாழ்க்கையில் ஒருமாதிரி செட்டில் ஆனோம். ஐந்தாண்டுக்காலம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கிறோம்

இன்றைக்கு யோசித்துப்பார்த்தால் அப்பா ஏன் அப்படி இருந்தார்? ஏன் எல்லாவற்றையும் வேண்டுமென்றே அழித்தார்? டார்க்தீனியம் அதற்குப் பதில் சொல்கிறது. வாழ்க்கையில் சிலவிஷயங்களை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். கதையில் அப்பா அவரே அந்த இருட்டை கொண்டுவந்து நடுகிறார். அது வெளியே இருந்து வரவில்லை.

எஸ்.சோமசுந்தரம்

அன்புள்ள ஜெ

டார்தீனியம் கதையை நான் முன்பு படித்ததில்லை. இப்போது படிக்கையில் முதலில் ஒரு திகில் கதையை வாசிக்கும் உணர்வு. மெல்லமெல்ல அது ஒரு கொடூரமான சமகாலக் கனவு என்ற எண்ணம் ஏற்பட்டது. இன்றைக்கு தமிழகத்திலுள்ள 90 சதவீத குடும்பங்களில் இந்த பிரச்சினை உள்ளது. குடி சூதாட்டம் அரசியல் என ஏதோ ஒரு இருட்டு குடும்பங்களில் புகுந்துகொள்கிறது. அதுவும் சரியாக குடும்பத்தலைவர் ஐம்பதைத் தொடும் வயதில். அப்படியே ஆட்கொண்டுவிடுகிறது. தடுக்கவே முடியாது. இழுத்து உள்ளே கொண்டுபோய்விடும். அனைவருமே அதிலிருந்து தப்ப நினைப்பார்கள். பலசமயம் அவரேகூட முயற்சி செய்வார். ஒன்றுமே செய்யமுடியாது. அந்த சக்தி விதியின் ஆணைபோல இழுத்துக்கொண்டு சென்றுவிடும்

சமகால இருட்டின் கதை டார்த்தீனியம். ஒரு பாப்புலர் திரில்லரின் பாணியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன் அடியில் இருக்கும் ஆழம் மலைக்கச் செய்கிறது. ஒவ்வொரு இழப்பும் துக்கமும் அந்த இருட்டின்மேல் மீண்டும் அப்செஷன் கொள்ளச் செய்கிறது. அடிமனதில் கனவு எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு விஷயத்தையும் கூர்ந்து கவனித்தால் போதும் இந்தக்கதையின் ஆழமென்ன என்று புரியும்

ஜெயக்குமார் எம்

முந்தைய கட்டுரைவெண்முரசின் இணையாசிரியர்கள்
அடுத்த கட்டுரைஆலன் டூரிங்