சில சொகுசுகள் அத்தனைபேருக்கும் இருக்கும். உணவில், உடையில், தங்குமிடத்தில், உடைமைப்பொருட்களில். அவை இனிய மனநிலைகளை உருவாக்கக்கூடியவை. சிலசமயம் அவை நினைவுகளுடன் இணைந்தவை. சிலசமயம் உடல்நிலை சார்ந்தவை. பெரும்பாலும் அழகுணர்வு சார்ந்தவை.
அழகுணர்விலிருந்து ஆடம்பரத்தையும் சொகுசையும் பிரிக்கமுடியாது. முழுமுதன்மையான எளிமை என்பது அழகுக்கும் எதிரானதே. நான் இதுவரை கண்டதில் ஒரு வியப்பான விஷயம் உண்டு, வணிகர்களுக்குக்கூட அழகுணர்வு சற்றேனும் இருக்கக்கூடும். விவசாயிகளிடம்தான் அழகுணர்வு அரிதிலும் அரிதாக இருக்கிறது. அவர்களுக்கு அனைத்துமே பயன்தரு பொருட்கள் மட்டுமே
அழகுணர்வு உடைய ஒருவர் முழு எளிமையில் வாழமுடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஆனால் வெற்று ஆடம்பரங்களை அவர் தவிர்க்கமுடியும். எளிமை போலவே வெற்று ஆடம்பரமும் அழகுணர்வுக்கு எதிரானதே. ஏனென்றால் அது வெறும் ஆணவநிறைவு. பிறரை விட மேலான ஒன்றை அடைவது, அடைவதற்கு அரிய ஒன்றை அடைவது மட்டுமே அதில் உள்ளது. வெறும் அடையாளப்பிரகடனம், வெறும் தன்மிதப்பு அது
என் சொகுசுகள் சில உண்டு. உணவில் நல்ல பிரதமன் போல. உடையில் விலை பொருட்டல்ல, ஆனால் நல்ல உடைகள் பிடிக்கும். உறைவிடத்தில் நட்சத்திர விடுதிகளின் நல்ல அறைகள்.
நல்ல அறை சரி, அது ஏன் நட்சத்திரவிடுதி? நல்ல அறையாக ஒன்றை அமைத்துக்கொள்வது எளிது. அதை மிகத்தூய்மையாக ,மிகநேர்த்தியாகப் பேணுவதற்கு ஓர் உழைப்பு தேவை. அது நட்சத்திரவிடுதிகளிலேயே இயல்வது. அத்தனை தேர்ந்த பணியாளர்களை வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது.
நட்சத்திரவிடுதிகள் பணியாளர்கள் சூழ இருந்தாலும் நாம் தன்னந்தனியாக இருக்கும் இடம். எதையும் பெறலாம் என்ற இடத்தில் முற்றிலும் அமைதி திகழும் இடம். சரியான, வெளிச்சத்தில் சரியான தண்மையில், அமைந்த ஓர் அறை அளிக்கும் மகிழ்ச்சியை நான் எப்போதும் விரும்புகிறேன்
நான் தொடர்ச்சியாக நட்சத்திரவிடுதிகளில் தங்கத் தொடங்கி 15 ஆண்டுகளாகின்றன. 2005ல் கஸ்தூரிமான் தயாரிப்பின்போது 30 நாட்கள் விஜய்பார்க் விடுதியில் தங்கினேன். ஒரு நட்சத்திர விடுதி நடுத்தரப் பொருளியலில் இருந்து வந்தவனுக்கு அளிக்கும் அயன்மையை கடந்து இயல்பான வாழ்விடமாக ஆனது அப்போதுதான்
அதன்பின் இத்தனை ஆண்டுகளில் நட்சத்திரவிடுதிகளின் அறைகளில் அமர்ந்து எழுதியதே மிகுதி. எழுதுவதற்கு மிக உகந்த சூழலாக இவ்வறைகள் அமைந்துவிட்டிருக்கின்றன. எழுதிய நினைவுகள் அறைகளுடன் இணைந்துகொள்கின்றன
ஆனால் நட்சத்திரவிடுதிகளின் பல ஆடம்பரங்களுடன் எனக்குத் தொடர்பில்லை. நான் மதுவிடுதிகளுக்கும் உணவுவிடுதிகளுக்கும் செல்வதில்லை. நீச்சல்குளங்களுக்கோ உடற்பயிற்சிநிலைகளுக்கோ செல்வதில்லை. இங்கே முடிவெட்டிக்கொள்வது நகம்வெட்டிக்கொள்வது எதையுமே செய்வதில்லை.
ஒவ்வொரு விடுதியிலும் அறை தவிர எனக்கு ஆர்வமுள்ள இடங்கள் ஒரு சில உண்டு. அவை பெரும்பாலும் வெளியே அமர்ந்திருப்பதுபோன்ற அகன்ற சூழல் கொண்ட இடங்கள். சென்னையில் திறந்தவெளி அனுபவம் என்பதே இயல்வது அல்ல, கொசுவும் பொடியும் புகையும் நிறைந்து மூச்சுத்திணறும், நட்சத்திரவிடுதிகளின் உள்கூடங்கள் அவ்வனுபவத்தை நடித்துக் காட்டுகின்றன
நட்சத்திர விடுதிகளில் நான் விரும்பும் சொகுசு வெந்நீர் ஷவர், வெந்நீர் குளியல்தொட்டிதான். வீட்டிலும் அமைக்கலாம், ஆனால் என் இயல்பான கஞ்சத்தனம் அதை அனுமதிக்காது. வெந்நீரில் ஒருநாளில் எட்டுமுறை நீராடியதுகூட உண்டு. சாதாரணமாக மூன்று முறை.
நட்சத்திரவிடுதிகள் மட்டுமே இந்தியாவில் சர்வதேசத் தரத்துடன் ஒப்பிடத்தக்க சேவையும் கட்டமைப்பும் கொண்டவை என்பது என் எண்ணம். ஏனென்றால் அவற்றின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினர். கடுமையான போட்டிநிலவும் சூழல் அத்தொழிலில் உள்ளது. இந்திய விடுதிகள் அதே தரம் கொண்ட வெளிநாட்டு விடுதிகளை விட சொகுசானவை, ஏனென்றால் வெளிநாட்டு விடுதிகளில் ஊழியர்கள் மிகக்குறைவு.
அங்கெல்லாம் நேரடி ஊழியர்களை நிர்வாகம் செய்யமுடியாது என்பதனால் பெரும்பாலும் அறைநிர்வாகத்தை தொகுப்பூதிய முறைப்படி கொடுத்துவிடுகிறார்கள். அந்த தொகுப்பூதிய ஊழியர்கள் பெரும்பாலும் குடியேறிகள். அவர்கள் அவ்வேலையை தரமாகச் செய்வதில்லை. அவர்களிடம் நாம் எதையும் பேசவோ கோரவோ முடிவதுமில்லை.
இந்திய நட்சத்திர விடுதிகளின் ஊழியர்கள் பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்து இளைஞர்கள். அவர்கள் ஒப்புநோக்க மிகத்திறமையானவர்கள், பணிவானவர்கள், தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அது சீன இனத்தவரிடம் உள்ள குணமா என்ன? ஏன் அது நம் திராவிட இனத்தவரிடம் அமைவதே இல்லை?
ஈரட்டியில் இருந்து நேரடியாக நட்சத்திரவிடுதிக்கு. ஒரு திரைப்பட வேலை. எப்போதும் இந்த உருமாற்றம் எனக்கு உண்டு. முன்பொருமுறை சென்னை ஹயாத் விடுதியில் பன்னிரு நாட்கள் தங்கி அங்கிருந்தே பயணம் கிளம்பி மறுநாள் ஆந்திராவில் ஒரு சிற்றூரில் தலைக்கு எழுபதுரூபாய் வாங்கும் தெருவோர தூங்குமிடத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன்
இந்த அறைகளின் மிகப்பெரிய கண்ணாடிச்சன்னல்கள் எனக்கு உவப்பானவை. உள்ளே இருக்கையிலேயே வான்கீழ் வாழும் உணர்வை அளிப்பவை. ஆகவே நான் பெரும்பாலும் விடுதிகளில் மாடிகளையே தேர்வுசெய்வேன். கண்ணாடிச் சன்னலைத் திறந்தால் பக்கத்துவீட்டு கட்டிடம் தெரிவது பெரிய கொடுமை
கண்ணாடிச்சன்னல் வழியாக பொழுது துலங்கி சுடர்ந்து இருண்டு விண்மீன்கள் தோன்றுவது வரை பார்த்துக்கொண்டிருப்பதுண்டு. சன்னல்கட்டை சில விடுதிகளில் பெரிதாக இருக்கும். அங்கே இரவில் தலையணை போட்டு படுத்துக்கொள்வதும் உண்டு. விண்மீன்களை பார்த்தபடி இரவு துயில்கொள்வது மனம் அடங்கும் அனுபவம்
கோவையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தேன். கோவிட் வந்தபின் முதல் விமானப்பயணம். விமானநிலையமே ஒரு மருத்துவமனை போலிருந்தது. ஏகப்பட்ட சோதனைகள், கெடுபிடிகள். முகமூடி, முகக்கவசம், கைகளை தூய்மைப்படுத்தும் எரிசாராயத்தின் நீங்கா மணம். பெட்டிகள் மேல் எதையோ வீசினர், அவை பிசுக்கு படிந்து ஒட்டின
என்னருகே அமர்ந்திருந்த அம்மாள் முகக்கவசத்தை நீக்கி, முகமூடியை நீக்கி ஓங்கி ஒரு தும்மல் போட்டாள். பிறகு முகமூடியை போட்டு முகக்கவசம் அணிந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்
விமானத்தில் நுழையும்போது மீண்டும் பலவகை காப்புகள். சந்திரனில் இறங்குபவனைப்போல் உணர்ந்தேன். ‘ரோஜர், வி ஆர் லேண்டிங். எ ஸ்மால் ஸ்டெப் டு மி, எ லீப் டு மேன்கைண்ட்’என்று சொல்லிக்கொண்டேன்.
விமானத்தின் உள்ளே நடு இருக்கையில் அமர்பவருக்கு உடலெங்கும் மூடும் கவசம். பாவம் பலர் பரிதாபமாக விழித்தனர். ஒரு சிறுவன் குதூகலமாக இருந்தான். விமானப்பணிப்பெண்கள் வெள்ளை உடையணிந்து செவிலியராக தெரிந்தனர்
வழக்கமாக விமானம் நிற்கும்போது, அது சரியாக நிற்பதற்கு முன்னரே , எழுந்து முண்டியடிப்பதும்; பெட்டிகளை உருவி எடுத்து தூக்கிக்கொண்டு ஒருகையால் செல்பேசியில் நோண்டிக்கொண்டு பொறுமையிழப்பதும், இந்தியப் பண்பாடு. இம்முறை கடுமையான ஆணைகள் வழியாகச் சீராக வெளியே அனுப்பினார்கள்
வெளியே பெட்டிகளை எடுக்கும் இடத்திலும் ஒழுங்கை ஆணையிட்டு பேணினர். நெருக்கியடிக்கவேண்டாம் என ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால் எல்லாம் அவர்களின் கட்டுப்பாடு இருக்கும் வரைத்தான். வெளியே செல்லும் இடத்தில் நுழைவுஅனுமதியை காட்டும்படி கோரினார்கள். அங்கே மொத்த பயணிகளும் முண்டியடித்து, முட்டிமோதி, உடல்களாக அலைமோதினர்
எங்கள் லாப்ரடார் நாய் [மறைந்த] ஹீரோவுக்கு ஒரு பயிற்சியாளர் பயிற்சி அளித்தார். இரண்டே நாளில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது. ஆணைகளுக்கு கட்டுப்படும். ஒழுங்காக செயல்படும். பொறுப்பு மிளிரும் கன்கள், பவ்யமான உடல்மொழி. ஆனால் சாப்பாடு வைக்கும் ஓசை கேட்டால் அதன்பின் மொத்தமும் தலைகீழ். அருகிருப்பவர்களை எல்லாம் உந்தி விலக்கி, பயிற்சியாளரை கவிழ்த்துப்போட்டுவிட்டு பாய்ந்து சென்று லபக் லபக் என்று விழுங்கும். சாப்பிடும்போது மெல்லிய உறுமலும் உண்டு
சாப்பிட்டு முடித்தபின் மூஞ்சியில் ஓர் அமைதி, புன்னகை என்று கூட தோன்றும். நம்மை பார்த்து வால்சுழற்றி “சாரி, என்ன இருந்தாலும் நான் ஒரு நாய் தானே?”என்று சொல்வதுபோல. ஆம், நாமெல்லாம் இந்தியர்கள். அனைத்து சக இந்தியர்களும் நம் சகோதரர்கள்
கிரீன்பார்க் வந்து சேர்ந்தேன். என் பிரியத்திற்குரிய விடுதி. சென்னையில் நான் அதிகமாக தங்கிய இடங்களில் ஒன்று. நான்கடவுள் படம் முழுக்க இங்கேதான் இருந்தேன். அப்போது தொடங்கிய உறவு. அன்றிருந்த ஊழியர்களில் சிலரே இன்று இருக்கிறார்கள். பழகிப்போன அறை. பழகிப்போன சன்னல்காட்சி
இரவில் வெளியே நகர்வெளிச்சம் நிறைந்த இருட்டு. அதைப்பார்த்துக்கொண்டு இன்றைய நாளை முடிக்கிறேன். இங்கே ஒருவாரம், மீண்டும் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகக் காடு. காடு பிறிதொரு சொகுசு. இது அதையும் அது இதையும் பொருள்கொள்ளச் செய்கின்றன.