மாடன்மோட்சம்- கடிதம்

மாடன் மோட்சம்

அன்புள்ள ஜெ

மாடன்மோட்சம் சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருந்தேன், வாசிக்கத் தோன்றவில்லை. ஞானி பற்றிய கட்டுரையில் அதைப்பற்றிய குறிப்பை வாசித்தபிறகே வாசிக்கத் தோன்றியது.

என்னை தயங்கவைத்தது அதன் அரசியல் உள்ளடக்கம். அந்த கருவை கேட்டதுமே இது ஒரு வழக்கமான அரசியல்கதை அல்லவா என்று தோன்றிவிட்டது. அந்தக் கருவை அது ஒரு பெரிய விஷயமாக எழுந்து வருவதற்கு முன்னரே எழுதிவிட்டீர்கள் , அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அந்தக்கதையை இப்போது வாசித்தபோது இப்படி அரைகுறை வாசிப்புகள் வழியாக ஒரு கதையைப்பற்றி முடிவெடுப்பது எவ்வளவுபெரிய பிழை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இது பலமுறை பட்ட குட்டுதான் என்றாலும் மனம் இப்படித்தான் செயல்படுகிறது.

இங்கே கதைகளைப்பற்றி பேசப்படும் 90 சதவீதம் பேச்சுக்களும் அர்த்தமற்ற வம்பளப்புகள். கதையின் கருவை சுருக்கி சாதாரணமாக சொல்லும் பேச்சுக்கள். கதையை எதிர்க்கவேண்டும் என்றால்கூட  அசட்டுத்தனமாக தர்க்கப்பிழை , இலக்கணப்பிழை என்று எதையாவது புனைந்து சொல்வார்கள். பெரும்பாலும் சொல்பவருக்கு இலக்கியத்துடன் சம்பந்தமில்லை என்பதுதான் அதில் தெரியும். ஆகவே கதையைப் பாராட்டிய குறிப்பும் சரி, எதிர்க்கும் குறிப்பும் சரி,பெரும்பாலும் அதைப்பற்றிய சில்லறைப்பேச்சாகவே நின்றுவிடுகிறது

மாடன்மோட்சம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றிய கதை. அது எழுதப்பட்ட 1990களில்தான் மாடன்கள் அருள்மிகு மாடசாமிகளாக உருமாற ஆரம்பித்தார்கள். மாடனை இந்துப்பெருமரபில் இணைத்து இடம்பெயரமுடியாமல் நிறுவி சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்வதைப்பற்றிய அங்கதக்கதை அது

ஆனால் அதன் அடிப்படை மெட்டஃபர் ’தெய்வமும் மனிதனும்’ என்பது. உலக அளவில் நவீன இலக்கியத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட கருக்களில் ஒன்று. குறிப்பாக ஜீஸஸ் மனிதர்களை சந்திப்பது ஒரு நிரந்தரமான கதைத்தருணமாக மேலை இலக்கியத்திலே உள்ளது.

ஏனென்றால் ‘இன்று உன்னுடன் ஏசு இரவுணவு அருந்தட்டும்’ என்பது மிகப்புகழ்பெற்ற இவாஞ்சலிக்கல் வாக்கியம். Jesus knocks at your door என்ற சொல்லாட்சியும் உண்டு.  ஏசு ஒரு வீட்டின் கதவைத்தட்டுவது படங்களாகவும் நிறைய வரையப்பட்டுள்ளது. அதைச்சார்ந்து டால்ஸ்டாய் கூட ஒரு கதை எழுதியிருக்கிறார். மாஸ்டர்கிறிஸ்டியன் நாவல் [மேரி கெரெல்லி]பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

இந்தப்பாதிப்பிலேதான் புதுமைப்பித்தன் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையை எழுதியிருக்கிறார். ஜீசஸ் தேடிவரும் கதையில் இருந்துதான் புதுமைப்பித்தன் தூண்டுதல் அடைந்தார் என்று க.நா.சு எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கும் தமிழில் ஒரு முன்னுதாரணக்கதை உள்ளது. தியாகையரைப் பார்க்க ராமன் நடந்து வந்தான் என்று கதை உள்ளது.

அதற்கு முன் சைவமரபிலும் தென்னாடுடைய சிவன் பக்தர்களுடன் விளையாட நேரில் வந்ததைப்பற்றிய கதைகள் உள்ளன. பிள்ளைக்கறி கேட்டதாகக்கூட கதை உண்டு. நீங்கள் ஒருமுறை எழுதியதுபோல கிறிஸ்தவத் தொன்மம் இங்கே சைவத்தில் வந்து சேர்ந்ததாகக்கூட இருக்கலாம்.

Jesus at the Door (Jesus Knocking at the Door), by Del Parson

திருவிளையாடல் புராணத்தில் இருந்து எடுத்து சினிமாவில் கையாளப்பட்ட சிவனும் தருமியும் சந்திக்கும் உரையாடலும், சிவனும் பொதுமக்களும் பேசும் இடமும் அழகானவை. நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவை.

இந்த மரபில் மாடன்மோட்சம் வருகிறது. இங்கே இம்ப்ரவைசேஷன் என்னவென்றால் வருவது நாட்டார்தெய்வமான மாடன். மற்ற தெய்வங்களுக்குரிய ஒரு ‘அனைத்தும் அறிந்த’ தோரணை மாடனிடம் இல்லை. அதுவும் மனிதனைப்போலவே பிரபஞ்சத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்ட சின்ன தெய்வம்தான். மனிதனை சோதிக்கவோ, மனிதனுடன் விளையாடவோ மாடன் வரவில்லை. பசி தாளமுடியாமல் மனிதனிடமிருந்து பலிகொடை கேட்டு வருகிறது.

இந்த அம்சம் நம் மரபிலேயே உள்ளது. சிவனும் விஷ்ணுவும் எதையும் பக்தனிடம் கோருவதில்லை. ஆனால் மாடனும் இசக்கியும் பலி கேட்டு தொந்தரவு செய்பவர்கள். பெருந்தெய்வங்கள் மனிதனை மேலிருந்து பார்ப்பவர்கள். சிறுதெய்வங்கள் மண்ணிலேயே வாழ்பவர்கள்

மாடனின் பசி என்பதே இந்தக்கதையின் முக்கியமான மெட்டஃபர். அது கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெரிய மரபின் பசி. காட்டின் பசி. தெய்வங்கள் பசித்திருக்கின்றன என்பதே ஒரு பெரிய படிமம்.

இந்தக்கதை முழுக்க உள்ள அழகு என்பது மாடனின் அறியாமையும், அப்பாவித்தனமும்தான். அது உரையாடல் வழியாகவே நிலைநாட்டப்படுகிறது. மாடனை விட பூசாரி அப்பிதான் நாலுந்தெரிந்தவனாகவும், துணிச்சல்கொண்டவனாகவும் இருக்கிறான்

உரையாடல்களில் இருக்கும் நகைச்சுவையை, நுணுக்கமான வட்டாரப்பகடிகளை ரசிக்கும்போதே அது விடும் இடைவெளிகள் வழியாக மனிதனுக்கும் தெய்வத்திற்குமான உறவிலிருக்கும் சூட்சுமமான விளையாட்டுக்கள் வெளிவருவதுதான் இந்தக்கதையின் சிறப்பு. மாடன் மனிதனைவிட பாவமான ஒன்றாகவே வருகிறது. ஆனால் ஆயிரம் வருடமாக நின்றுகொண்டிருக்கும் கால். காலமே இல்லாதது அது.

அப்பி மாடனை மிரட்டுகிறான். ஆனால் பலி கிடைக்காவிட்டால் பூசாரி குடலை உருவி தின்னவேண்டியிருக்கும் என்று மாடன் போகிற போக்கில் சொல்ல அப்பிக்குள் அச்சம் ஏற்படுகிறது.

மண்ணோடு மண்ணாக மனிதர்களுடன் இருக்கும் தெய்வம் எப்படி பெருந்தெய்வமாகி மேலே செலுத்தப்படுகிறது என்பதுதான் இந்தக்கதை. இது சமகால அரசியல் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே நடந்துவரும் ஒரு பண்பாட்டுப்பரிணாமம்.

நுணுக்கமான மாற்றங்கள் மாடனில் உருவாகின்றன. அதன் வன்முறை இல்லாமலாகிறது. அது இனி குடல்மாலை போட்டுக்கொள்ள முடியாது. ஆனால் சுனாமியை கொண்டுவர முடியும். அது இனிமேல் மக்களோடு மக்களாக வாழமுடியாது, கோயிலுக்குள் இருக்கவேண்டும், வானத்தில் திகழவேண்டும். பிரபஞ்ச விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்ட மாடன் இனிமேல் மந்திரத்துக்கும் கட்டுப்படவேண்டும்.

அதிலும் அழகான உள்மடிப்புகள் உள்ளன.மாடனை அப்பி உறவாலும் அன்பாலும் கட்டிப்போட்டிருக்கிறான். ‘சிக்கென பிடித்தேன், எங்கெழுந்தருளுவது இனியே?’ என்றவகையான பிடி அது. அதுதான் பக்தி. ஆனால் மந்திரம் அப்படி அல்ல. அது மர்மப்பிடி. அதில் அன்பு இல்லை. அது ஓர் ஆணை. மாட்டை கட்டுவதுபோல தெய்வங்களை கட்டிவைப்பது. பக்திமரபு மண் சார்ந்தது.மந்திரமரபு மேல்தட்டு சார்ந்தது. பக்தி இயக்கத்துக்கும் வைதிகமரபுக்குமான போரே இதுதான்.

ஒரு பண்பாட்டில் இருந்து இன்னொரு பண்பாட்டுக்கு மாடன் சென்று சேர்கிறது.  மாடனின் வேர் கதையில் குறிப்புணர்த்தப்படுகிறது. மாடனின் பக்தர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வசதியாக ஆகிவிட்டார்கள் என்று அப்பி சொல்கிறான். ஆனால் சேரி அதேபோல சாக்கடை ஒழுகும் தெருக்களுடன்தான் இருக்கிறது. அப்பியும் அந்த தெருக்காரன்தான். மாடனுக்கு அவன்தான் சொந்தக்காரன். அவனிடமிருந்துதான் மாடன் களவாடப்படுகிறது.

தன்னை காட்டுக்குட்டி என்று மாடன் சொல்கிறது. பாஸ்டர்ட் என்பதற்கான வார்த்தையாக அது உயர்சாதியினரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது மாடனுக்கு ஒரு சிறப்பு. அது தாய்தந்தை அற்றது, காட்டில் பிறந்தது. மாடனை இப்போது சிவனின் மகனாக்கிவிட்டார்கள். அதற்கு தந்தை வந்துவிட்டார். அகாலமாகிய காட்டில் இருந்து காலத்திற்குள் குடிபுகுந்துவிட்டார்.

இந்தியாவின் பண்பாட்டு மாற்றம் பற்றிய ஒரு புரிதல் உள்ளவர் இந்தக்கதையின் பகடிகளை விரித்து விரித்து எடுக்கமுடியும். அவர்களுக்கான கதை இது. தெருக்கூத்தில் வரும் ஒரு காட்சிபோலவும் சட்டென்று கதை மாறிவிடுகிறது. இங்கே வருபவர்களுக்கெல்லாம்  நீ பிள்ளை கொடுக்கிறாயா என்று அப்பி கேட்க மாடன் மிரளும் இடம் ஓர் உதாரணம். நாட்டுப்புற காவல்தெய்வங்களில் மாடன் பிரம்மசாரி. பிரம்மசாரியை பிள்ளைவரம்கொடுக்கச் செய்கிறார்கள். தன்னைப்பற்றி எழுதப்படும் புராணங்களை எல்லாம் மாடன் அவதூறாகவே நினைக்கிறது

தமிழில் எழுதப்பட்ட சிறந்த பத்துச் சிறுகதைகளில் ஒன்று என்று மாடன்மோட்சத்தைச் சொல்லமுடியும்.

எஸ். அருண்குமார்.

அன்புள்ள அருண்,

நன்றி.

தமிழில் நல்ல வாசிப்பு அரிது. பொருட்படுத்தும்படியான விமர்சனம் அதனினும் அரிது. அழகியல்வாசிப்பு, வரலாற்று வாசிப்பு, தத்துவ வாசிப்பு ஆகியவற்றை எதிர்பார்க்க வழியே இல்லை. இங்கே அதற்கான ‘கருவிகள்’ எவரிடமும் இல்லை. நம் பண்பாட்டுச் சூழலை வரலாறு,தத்துவம் சார்ந்து அறிந்தவர்களும் அழகியல்முறைகளில் அறிமுகமுள்ளவர்களும் மிகக்குறைவு

அரசியல்சரிநிலைகளின் அடிப்படையிலும் எளிமையான அக்கப்போர்களின் மொழியிலும் விமர்சனம் செய்வதற்கான பயிற்சியே இங்கே உள்ளது. கோட்பாட்டு விமர்சனங்களை பார்த்தால் அவற்றின் சிக்கலான மொழிக்கும் கலைச்சொற்களுக்கும் அடியில் எளிய அரசியல்சரிநிலை சார்ந்த வாசிப்பே இருக்கும்.

இக்கதை வெளிவந்தபோது மூத்த இலக்கியவாதிகள் சிலர் எழுதியதுதான் உண்மையில் நல்ல வாசிப்பாக இருந்தது.அதன்பின் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது சில நல்ல வாசிப்புகள் வந்தன. வங்கமொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டபோதுதான் உண்மையில் கூரிய அழகியல்நோக்கு கொண்ட வாசிப்புகள் வந்தன.அவை உங்கள் கருத்துக்களுக்கு அணுக்கமானவை.

உங்கள் வாசிப்பு நிறைவளிக்கிறது. எப்படைப்பும் தன் வாசகர்களைக் கண்டுகொள்ளும் என நான் நம்புகிறேன்.

இக்கதையுடன் ஒருவகையில் தொடர்பு படுத்தி வாசிக்கவேண்டிய கதை ’நீரும் நெருப்பும்’. ஒன்றின் இரு பக்கங்கள் இவ்விரு கதைகளும். இருபத்தைந்து ஆண்டுக்கால இடைவெளியில் எழுதப்பட்டவை.அதைப்பற்றியும் எழுதப்பட்டு நீண்ட இடைவெளிக்குப்பின் சரியான புரிதலுடன் ஒரு நல்ல வாசிப்பு வந்தது.

ஜெ

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

நீரும் நெருப்பும் [புதிய கதை]

மாடன் மோட்சம் – ஒரு பார்வை

மாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்- கடிதம்
அடுத்த கட்டுரைபி.டி.எஃப் நூல்கள்