நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?
நேர்த்தியும் அழகும்-நேற்றும் இன்றும்
அன்புள்ள ஜெ
முக்கியமான கட்டுரை. இங்கே இன்று நடைபெற்றுக்கொண்டிருப்பது திறன்வளர்த்துச் செயல்புரிதல் அல்ல. நடைமுறைச் சமாளிப்பேதான். இதை நாம் ஒரு தொழிலை நடத்தும்போதுதான் உணர்வோம். குரங்குகளை வைத்து கோலம்போடுவதுபோலத்தான் நம்மூர் தொழிலாளர்களை வைத்து வேலைவாங்குவது என்று என் முன்னாள் பாஸ் சொல்வார்
என்னென்ன பதில்கள் சொல்லப்படும்?
‘சார் இதெல்லாம் இப்டித்தான் செய்யமுடியும். இல்லேன்னா விழுந்திரும். இல்லேன்னா உங்க ரிஸ்குலே சொல்லுங்க, செஞ்சிருவோம், எங்களுக்கு என்ன’. கடைசியில் விழவைத்துவிடுவார்கள். ‘அப்பவே சொன்னேனே சார்” என்று பொறுப்பிலிருந்தும் நழுவிவிடுவார்கள். நாம் பொறுப்பேற்பது தற்கொலை.
‘நாங்கள்லாம் இருபது வருசமா இதைத்தான் சார் செஞ்சிட்டு வர்ரோம். இதுவரைக்கும் ஒண்ணும் ஆகலை. எல்லாருக்கும் இதான் வசதியா இருக்கு. இப்ப புதிசா மாத்தினா என்னாகும்னு தெரியலை’
‘இந்த பட்ஜெட்டுக்கு இப்டித்தான் சார் செய்யமுடியும். மேலே போகணும்னா டபிள் ஆகும். பரவாயில்லையா?”
“அதெல்லாம் கேரளாவிலே இல்லேன்னா மெட்ராஸிலேதான் சார் . இங்கல்லாம் இதான் சார் சரியாருக்கும்”
”சார் அழகைப்பாத்தா குவாலிட்டி போயிரும்”.அழகும் குவாலிட்டிதான் என்று சொல்லி புரியவைக்கவே முடியாது
ஆர். குமாரசாமி
அன்புடையீர்! வணக்கம்!
தங்களின் கட்டுரையில் முற்காலத்தில் ஒரு செயலை நேர்த்தியாக அழகாக செய்வது அந்த தொழில் செய்பவரின் வாழ்வை தொழிலைக் காக்கும்,. ஆனால் அது..இப்போது முதலாளித்துவ பண்புகளாகிவிட்டதனான் நாம் அவற்றை கற்றுக்கொள்வதுமில்லை. அவற்றில் கவனம் செலுத்துவதும் இல்லை என்கிறீர்கள்! ஆனால் அது காலவெளியில் அந்த தொழில் செய்பவரையும் அவர் இருக்கும் நிறுவனத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சாய்த்துவிடும் . தொழில் நேர்த்தி என்பது அப்போதும் இப்போதும் எப்போதும் அதை வளர்ப்பதாகத்தான் இருக்கும்!
தொழில் நேர்த்தி க்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போகையில்தான் அதைச் செய்பவர் துவண்டு போய் சமாளிப்புகளில் இறங்கி தன்னையும் தன் தொழில் நேர்த்தி மையும் இழக்கிறார் என்றும் சொல்லுவேன்! கல்வி நிலையங்களில் கல்வி கற்பது ஒரு சமாளிப்பாக போய்விட்டது என்னும் தங்கள் கூற்று நூறு சதவீதம் உண்மை! அதனால் அதன் உண்மையான திறம் என்ன என்பதை இந்த தலைமுறை இழந்து .சமாளிப்பது என்பதையே ஒரு திறனாக நினைக்கிறார்கள் . அப்படிப் பட்டவர்களையே . சமூகமும் கொண்டாடுவதாகவே நினைக்கிறேன்!
நெடு நாட்களுக்குப்பின் உண்மையான உருப்படியான தற்கால சூழலில் நாம் செய்து கொள்ள வேண்டிய மாற்றம் பற்றிய அருமையான கட்டுரை .என் நண்பர் ஒருவர் மூலம் இக்கட்டுரை காணக் கிடைத்தது. மிக்க நன்றி! தமிழை மிக அழகாக எடுத்தாண்டவிதம் இன்னும் அருமை! நன்றி!
வணக்கம்!
இரா. இரவிச்சந்திரன்
சென்னை
செய்தொழில் பழித்தல்