பூனையும் தெய்வமும்- கடிதங்கள்

பூனையும் தெய்வமும்

அன்புள்ள ஜெ ,

நம் மரபில் பூனை உ வடிவில் உள்ள கடவுளும் உண்டு .உதாரணம் : மார்ஜரர ருத்ரன் .பூனை வடிவில் உள்ள ருத்ரரான் இவருக்கு உரிய மந்த்ர விதானம் உண்டு . எலித்தொல்லை நீக்குவதற்கான விதானம் . கூர்மையான பற்கள் உடைய மார்ஜார ருத்ரனை குறித்து இம் மந்திரத்தின் த்யான ஸ்லோகம் பேசுகிறது . எலித்தொல்லை நீங்க சொல்லப்பட்டிருக்கும் பல மந்திரங்களில் இதுவும் ஒன்று .

எலித்தொல்லை நீங்க ஒரு தனி மந்த்ரம் என்பது வேடிக்கையாக தோன்றும் .ஆனால் எலிகளால் ஏற்படும் சேதத்தை ஜீவ ஹிம்சை இல்லாமல் தவிர்ப்பதற்கான வழி இது .கோவில்கள் , மடங்களில் உள்ள தானிய அறைகளில் இம்மூர்த்தியின் யந்த்ரம் பழைய காலங்களில் ஸ்தாபிக்கபடும் .இது தவிர தனி நபர்களும் பயன்படுத்துவதுண்டு .இன்றளவும் நெகிழி பொருட்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இது போன்ற ஒரு சில வழிமுறைகளை பயன்படுத்துவதாக அந்த தொழிலில் இருந்த நண்பர் ஒருவர் கூறினார் .

மார்ஜார ருத்ரன் மந்த்ர உபாசகர்களுக்கு மட்டும் தெரிந்த மூர்த்தி .நம் தெய்வ ரூபங்களை குறித்து பல்லாண்டு காலம் ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு கூட இத்தகைய பல மூர்த்திகளை குறித்து தெரியாது . தெரிய வேண்டியதும் இல்லை .
இன்னொரு சுவாரச்யமான விஷயம் உண்டு .பூனை அகாலமாக உயிர் விட்டால் மார்ஜார ரக்ஷஸாக மாறும் .இத்தகைய ரக்ஷஸஸ்களை சாந்தி செய்யும் வழிமுறையும் கூறப்பட்டுள்ளது .
நன்றி

அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

அன்புள்ள அனீஷ்,

ஏற்கனவே ஒருமுறை ஒரு நிகழ்வை சொல்லும்போது இந்த மூர்த்தியைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைவு. ஆனால் எங்கும் சிலையோ வேறுவடிவோ மூர்த்தம் பற்றிய விளக்கமோ நான் கேள்விப்பட்டதில்லை. ஆச்சரியம்தான். எல்லாவகையிலும் இங்கே தெய்வங்கள் உள்ளன

ஜெ

ஜெ

அன்புள்ள ஜெ,

வங்காளத்தில் வழிபடப்படும் ஷஷ்டி தேவி பூனையை வாகனமாகக் கொண்டவள். குழந்தைகள் நலன் காக்க இந்த தெய்வத்தை வழிபடுகிறார்கள். இந்த தெய்வம் வங்கப் பழங்குடிகளில் இருந்து மைய வழிபாட்டுக்கு வந்திருக்கலாம். மலைகளில் இந்த தேவியை பூனைவடிவம் கொண்ட தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

ஷஷ்டி- வங்கதேசப்பூனைக்கடவுள்.

சங்கரநாராயணன்

 

அன்புள்ள ஜே

இந்து மதத்தில் பல அடுக்குகள் உள்ளன என்று அறிந்திருப்பீர்கள். அதன் அடித்தளமான பழங்குடி- நாட்டார் மரபில் பூனை தெய்வமாகவே உள்ளது. மாண்டியாவில் பூனையை ஒரு கிராமக்கோயிலில் மங்கம்மா தேவியின் வடிவமாக, தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

கர்நாடகப் பூனைவழிபாடு

ஆர்.சந்திரசேகர்

 

அன்புள்ள ஜெ,

பூனை பற்றிய கட்டுரை அருமையானது. இந்திய – இந்து தெய்வங்கள் ‘அச்சத்தால்’ உருவானவை அல்ல ‘பிரபஞ்சம் பற்றிய வியப்பை’ அடிப்படையாகக் கொண்டவை. அங்கிருந்து கவித்துவமாக மேலெழுந்தவை. அதை அருமையாகச் சுட்டியிருக்கும் கட்டுரை அது

அத்வைத வேதாந்தத்தில் பூனை உவமையாகச் சொல்லப்பட்டிருக்கும் இடங்கள் எல்லாமே அற்புதமான கவித்துவத்துடன் உள்ளன

ராஜ் முகுந்த்.

அன்புள்ள ராஜ் 

நான் பூனை மைய இந்துமதத்தில் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்த்தேன். இந்து தெய்வங்கள் பலவகை. மையவழிபாட்டுத் தெய்வங்கள், தாந்த்ரீக தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள். மையத்தெய்வங்கள் ஒரு பிரபஞ்சதரிசனத்தின் வெளிப்பாடான படிமங்கள். சிவன் விஷ்ணு எல்லாம் அவ்வாறு கண்டடைப்பட்டவை. நாகம், கருடன்,யானை,புலி போன்றவையும் அவ்வாறே. அவை நேரடி வழிபாட்டில் இருக்கும். அல்லது மையத்தெய்வ வழிபாட்டின் பகுதியாக இருக்கும்.

தாந்த்ரீக தெய்வங்கள் தாந்த்ரீகச் சடங்குகளின் பொருட்டு உருவகம் செய்யப்பட்டவை. அவற்றுக்கு அச்சடங்குகளில் முக்கியமான இடமிருக்கும். அனீஷ் கிருஷ்ணன் நாயர் குறிப்பிடுவது அதையே. ஆந்தை போன்றவையும் இவ்வாறு நிறுவப்படுவதுண்டு.

நாட்டார் மரபு மிக விரிவானது. அதில் எல்லா உயிர்களும் ஏதேனும் ஓரிடத்தில் தெய்வமாகும். இயற்கையுடனான உறவிலிருந்து எழுவது நாட்டார் வழிபாடு. அங்கே தெய்வங்கள் குறியீடுகள் ஆகும், குலக்குறிகளாக ஆகும், சடங்குச்சின்னங்கள் ஆகும். அவை காலப்போக்கில் மேலே சொல்லப்பட்ட இரு மரபுகளுடன் இணைந்து உருமாறவும்கூடும்

ஜெ

பூனைசாட்சி

 

முந்தைய கட்டுரைமழைப்பாடலின் விரிவு
அடுத்த கட்டுரைகையிலிருக்கும் பூமி