நமது மலைப்பாறைகள்- கடிதம்

மலையும் குகையும்

காடுசூழ் வாழ்வு

மலைப்பெருமாள்கள், காட்டு அம்மன்கள்

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் சித்தராயன் மலை, ஆதி பெருமாள் மலை செல்லும் போது நாம் பார்த்த மலைகளில் முக்கால் பங்கை உடைத்து நொறுக்கி ஜல்லியாக்கி கொண்டிருந்ததை பார்த்தோம். 70% மலைகள் வெடி வைத்து உடைக்கப்பட்டு , நொறுக்கப்பட்டு ஜல்லியாக, எம் சாண்ட் எனும் மேனுபேக்சரிங் சாண்ட்டாக மாற்றப்பட்டு கர்நாடகா கேரளாவிற்கும், தமிழகத்தில் உள்ள கட்டுமானப்பணிகளுக்கும் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது ஒரு மாபெரும் பிரச்சினையின் இடைக்கண்ணி . மலைகள் தொடர்ந்து தகர்க்கப்படுவது,

 1. நிலவியல் சம நிலையை குலைக்கிறது.
 2. ஆறுகளின் தோற்றுவாய் அழிக்கப்படுவது
 3. பருவ நிலை மாற்றம்.
 4. சிறிய நீர்நிலைகள், நீர்த்தேக்கங்களின் நீராதார சிதைவு
 5. வனங்கள், குறுங்காடுகள், சிறு உயிரினங்கள், பறவைகள், பூச்சிகளின் வாழ்விடம் அழிதல், உயிரிய பன்மய சூழல் அழிதல்.
 6. மண் அரிமானம் பெருகுதல்
 7. பருவக்காற்றுகளை தடுத்து மழைப்பொழிவை கொடுக்கும் மலைகள், குன்றுகளை தகர்த்து நொறுக்குவதால் மழை பொழிவின்மை.
 8. பருவ நிலை மாற்றத்தில் மழை குறைவால் ஏற்படும் வெப்ப நிலை மாற்றம்.
 9. நில வளம் பாழ்பட்டு திரிந்து பாலையாகும்.
 10. நிலவியல் முக்கியத்துவம் வாய்ந்த மடிப்பு மலைகள் ( folded mountains), dome mountains, block mountains, volcanic mountains எல்லாம் paleontology மற்றும் நிலவியல், புவியியல் , ஆராய்ச்சிக்குரியவை.
 11. தொல் மனிதர்களின் வாழிடம், நினைவிடம், வழிப்பாட்டிடங்கள், ஈமச்சின்னங்களின் அழிவு.
 12. கலாச்சார , பண்பாட்டியல் சின்னம் இல்லாமல் ஆவது.

 

என்பது போன்ற பல மாபெரும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் , அதோடு கபிலரும், பரணரும், அகத்தியரும் இன்னும் பல புலவர்களும், முனிவர்களும், சித்தர்களும் இருந்து சென்ற மலைகளை நாம் அழிக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் இந்த அழித்தொழிப்பு நடக்கிறது. அருகர்கள், முன் காலத்திய சமணப்பள்ளிகள், வட்டெழுத்து கல்வெட்டுக்கள், இசைக்கல்வெட்டுக்கள், கல்விக்கல்வெட்டுக்கள், நம் பண்பாட்டை பறை சாற்றும் அரிய ஆவணங்களை கொண்டிருக்கும் இந்த பொக்கிஷங்கள் கண் மூடித்தனமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஒரு மலை உருவாக பல லட்சம் ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் அதை வெடி வைத்து தகர்த்து ஜல்லியாகவும் , எம் சாண்ட் ஆகவும் நொறுக்கி கட்டுமானத்திற்கு அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப சில மணி நேரங்கள் போதுமானதாக இருக்கிறது. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆனை மலை, தமிழின் தொன்மையான மாங்குளம் கல்வெட்டு இருக்கும் மலைத்தொடர்கள், கிமு 2ம் நூற்றாண்டை சார்ந்த இசைக்கல்வெட்டை தன்னகத்தே கொண்டிருக்கும் அரச்சலூர் மலைகள் முக்கால் பாகம் ஜல்லியாகி விட்டது. சமணப்பண்பாட்டின் அடித்தளமாக இருந்த தமிழக மலைகளில் 50% அளவிற்கு க்ரானைட்டாகவும், ஜல்லியாகவும், எம் சாண்ட் ஆகவும் அழிக்கப்பட்டு விட்டது. நம் முது மூதாதைகள், ஆதி மானுடர்கள் விட்டு சென்ற ஈம வட்டங்கள், கல் பதுக்கைகள், கல் திட்டைகள், வாலி வீடு எனும் டால்மன்கள்கள், ரிங் மார்க்குகள், கப் மார்க்குகள், வானியல் குறியீடுகள், தொல் வழிபாட்டிடங்கள், தொல் மானுடர் வாழிடங்கள், குகை ஓவியங்கள் இவைகள் அனைத்தும் வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜல்லியாக, எம் சாண்ட்டாக மாற்றப்படுகிறது. இதற்கு முன்னால் இவை அயல் நாடுகளில் கல்லறைகளை அலங்கரிப்பதற்காக கிரானைட் பாளங்களாக உடைத்து நாசம் செய்யப்பட்டது.

ஆற்று மணலுக்கு மாற்றாக வந்த மாற்று மணல் என சொல்லப்பட்ட எம் சாண்ட் எனும் மேனுபக்சரிங் சாண்ட், மற்றும் ப்ளாஸ்ட்ரிங் சாண்ட் ஆகியவை இந்த அரிய மலைகளை நொறுக்கி , தகர்த்து ஜல்லியாகவும், மணலுக்கு மாற்றாகவும் முன்னிறுத்தப்பட்டது இந்த நூற்றாண்டின் மாபெரும் அறியாமை. ஆற்று மணலாவது மீண்டும் உருவாக வாய்ப்பிருக்கிறது, மாற்று மணல் என்ற பெயரில் மலைகளை நொறுக்கி உருவாக்குவது, மீண்டும் இந்த மலைகளை உருவாக்காது. காற்று, நீரின் முக்கியமான மூன்று செயல்கள் மூலம் ஆறும் , அதில் படியும் மணலும் உருவாகிறது.

மண் அரிமானம்( erosion),எடுத்து செல்லப்படுதல் ( transportation), படிமானம் (deposition) ஆகிய செயல்கள் மூலம் ஆற்றில் மண் வளம் உருவாகிறது. இந்த வளம் புதுப்பிக்கப்படக்கூடும். ஆனால் அதுவுமே ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை தான். பசு காலையும், மாலையும் பால் கறக்கிறது என்பதற்காக அதன் மடியை அறுத்தெடுத்து பால் வர வைப்பதற்கு முயல்வது போல ஆற்றை சுரண்டி அலுப்பதற்குள், மலையை சுரண்ட வாய்ப்பு ஏற்படுத்தி அதை சுரண்டுகிறார்கள். சூழல் சார்ந்த விஷயங்களில் உலகளவில் இவ்வளவு அசட்டையான , அற்பமாக செயல்படும் சமூகங்கள் இல்லவே இல்லை எனலாம். அண்டை மாநிலங்களான கர்நாடகா வும், கேரளாவும், ஆந்திராவும் ஆற்று மணலோ, மாற்று மணலோ, தமிழர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம் என துணிகிறார்கள். பணத்திற்காக எந்த இழிவையும் செய்ய தயங்காத அயோக்கிய சமூகமாக சொரணையற்று இருப்பதில் தமிழ் சமூகம் கொள்ளும் பெருமிதத்திற்கு ஈடு இணை இல்லை.

ஆரவல்லி மலைத்தொடர் தான் உலகிலேயே இருக்கும் மலைத்தொடர்களில் மூத்ததில் முக்கியமானது, அதே அளவு முக்கியமான மலைத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் தவிர , சிவாலிக் குன்றுகள், விந்திய , சத்பூரா மலைத்தொடர்கள், கிழக்கு தொடர்ச்சி மலைகள், தக்காண பீட பூமி மலை ச்சூழல்,என்று இந்தியா முழுக்க இருக்கும் பண்பாட்டு தொட்டில்களில் இது போன்ற அழித்தொழிப்பு, அயல் நாட்டில் கல்லறை கட்ட கிரானைட் எடுக்கப்படுவதில்லை, கட்டுமானத்திற்காக மலைகள் பிளக்கப்பட்டு, ஜல்லிகளாகவும், சரளைகளாகவும், எம் சாண்ட் ஆகவும் மாற்றப்படுவதில்லை. க்ரெட்டேஷியஸ் யுகத்திலிருந்து வரும் இம்மலைத்தொடர்களை நம் அறியாமையால், அறிவீனத்தால், அதீத நுகர்வு வெறியால் அழித்துக்கொண்டிருக்கிறோம். நிலவியல் ஆய்வின் மூல சான்றுகளை எந்த குற்ற உணர்வுமின்றி அழித்து கொண்டிருக்கிறோம்.

கட்டுமான மூலப்பொருட்களுக்கு நாம் இயற்கை வளஙகளை சார்ந்திருக்கிறோம். ஆனால் அது அந்தந்த பகுதிகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் கூட இவ்வளவு பேரழிவு வராது. இதில் கட்டுமான பொறியாளர்கள், ஆய்வு பேராசிரியர்கள், பல்கலைகழகங்கள், ஆகியவை கட்டுமானத்தில் fine aggregate மற்றும் coarse aggregate களுக்கு மாற்றுப்பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்த தங்கள் ஆய்வுகளை சமர்ப்பிக்க வேண்டும். இணைப்பு மூலப்பொருட்களாக மணல், எம் சாண்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக சுண்ணாம்பு சாந்துடன் மரப்பிசின், அல்லது ஒட்டும் தன்மையுள்ள செயற்கை பிடிமானப்பொருட்களை கண்டறியலாம். மேற்பூச்சு ( plastering) மற்றும் தளம் அமைத்தலுக்கு மணல், எம் சாண்ட் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும் தொழில் நுட்பஙகளை பயன்படுத்தலாம். கட்டுமான வடிவமைப்பாளர்கள், ஆர்க்கிடெக்ட்கள், மேற்பூச்சு இல்லாத கட்டுமான அழகியலை பிரபலப்படுத்த வேண்டும். திரைப்படங்கள், அரசு அலுவலகங்கள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை உள்ளவர்கள், சூழல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் முனைவோர்கள் மேற்பூச்சு இல்லாத கட்டுமானங்களை ஆதரித்து பிரபலப்படுத்த வேண்டும்.

மிக முக்கியமாக கான்க்ரீட்டில் இருக்கும் பைன், கோர்ஸ் அக்ரிகேட்களின் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில் பாலிமர், பைபர் ரீ இன் போர்ஸ்ட் கான்க்ரீட்டை உபயோகிக்கலாம். ரீ சைக்கிள்ட் அக்கிரிகேட்களை உபயோகிக்கலாம். கான்க்ரீட் வேஸ்ட்களில் இருந்து மேனுபக்செர்ட் அக்ரிகேட்களை ஐரோப்பிய நாடுகள் உபயோகிக்கின்றன. அந்த நடைமுறைகளை ஆராயலாம். ஷியர் வால் கன்ஸ்ட்ரக்சன், ப்ரீ காஸ்டிங் , உள்ளிட்ட கான்க்ரீட் ரிச் தொழில் நுட்பஙகளை பெரிய , அவசரமான கட்டுமானங்களுக்கு தேவை எனும் இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். க்ரானைட் கற்களில் தளம் அமைப்பவர்கள், மீது தனியாக அதீத சூழல் சீர்கேட்டு வரி விதிக்கலாம் . உள் கட்டமைப்பு, அணைக்கட்டுமானம் , வானாளவிய நகர் கட்டுமானங்களில் மட்டும் கான்க்ரீட் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். கான்க்ரீட் பயன்பாட்டை குறைக்கும் பில்லர் சிலாப் தொழில் நுட்பம், foam கான்க்ரீட், fibre reinforced concrete, ஜியோ பாலிமர் கான்க்ரீட் ஆகிய நவீன நுணுக்கஙகளை பயன்படுத்தலாம். மைசீலியம் மாதிரியான வேதியியல் ரீதியாக வினை புரியாத பூஞ்சைகள், காளான்களை அக்ரிகேட்களாக பயன்படுத்தும் நுட்பஙகள் மேலை நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தரைத்தளங்களில் கெட்டிப்படுத்தப்பட்ட மண் தளம், மறு சுழற்சி ப்ளாஸ்டிக்களில் இருந்து பெறப்படும் ப்ளேக்குகளை மூலப்பொருட்களாக உபயோகிக்கும் கான்க்ரீட்கள்., saw dust , rice husk இவைகளை மூலபோருட்களாக கொள்ளும் டிம்பர் க்ரீட் தொழில் நுட்பஙகளை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு இன்ஹேபிடேட் தளத்தில் வந்திருக்கும் கான்க்ரீட்டிற்கு மாற்றான பொருட்கள் பற்றிய அறிமுகத்தை ( https://inhabitat.com/11-green-building-materials-that-are-way-better-than-concrete/) பாருங்கள். கான்க்ரீட் பயன்பாட்டிலும், கட்டுமான பொருட்கள் பயன்பாட்டிலும் சூழல் பொறுப்புணர்வோடு இந்திய கட்டுமானத்துறை செயல்பட வேண்டும். உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கான்க்ரீட்களில் 7 ல் 1 பங்கை இந்திய கட்டுமானத்துறை நுகர்கிறது. வளரும் பொருளாதாரம், குறையும் வங்கி வட்டி வீதம், அதிகரிக்கும் தனி நபர் வருவாய் இவை அனைத்தும் இயற்கை வளஙகள் , மூலப்பொருட்கள் மீது பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதற்கான தீர்வை இந்திய கட்டுமானத்துறை முன் வைத்து உலகிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரம்.

பைன் , மற்றும் கோர்ஸ் அக்ரிகேட்களுக்காக பல்லாயிரம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த மலைகளை வெடி வைத்து நொறுக்கி ஜல்லியாக, மணலாக, கிரானைட்டாக மாற்றி நுகர்ந்து நாம் சாதிக்க இருப்பது என்ன ? என்பது பற்றிய பொது விவாதத்தை பொறியாளர்கள் துவக்க வேண்டும். கட்டுமான தத்துவார்த்திகள், மாற்று கட்டுமான நடைமுறைகள் பற்றி பொறியியல் துறை சார் நிபுணர்களிடமும், சாமானிய மக்களிடமும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உலகமே தற்சார்பு கட்டுமானம், உள்ளூர் தொழில் நுட்பம் , இயற்கையை குறைவாக பயன்படுத்தும் கட்டுமான முறை என்று முன்னேறிக்கொண்டிருக்கும் போது , நாம் கோடிக்கணக்கான ஆண்டுகளில் உருவாகி வரும் மலைகளை நொடியில் வெடி வைத்து நாசம் செய்து நுகர்ந்து வருவதை போல கீழ்த்தரமான செயல் வேறில்லை. ஆற்றில் கூட வெள்ளம் வந்தால் புது மணல் உருவாகி விடும். மலையை உடைத்து ஜல்லியாகவும், எம் சாண்ட் ஆகவும் ஆக்கினால் மீண்டும் அங்கு மலை உருவாக பல கோடி ஆண்டுகள் தேவைப்படும். மலைகள் ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி , பல கோடிக்கணக்கான முன்னோர்கள் கட்டிக்காத்து நம்மிடம் ஒப்படைத்த சொத்துக்களை நம் அறியாமையால் அழித்து நாசம் செய்வது நிர்மூடத்தனம் இன்றி வேறு என்ன? சூழலியலாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் துவஙகி ஒவ்வொருவரும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்திய கட்டுமானத்துறையில் இதனால் ஏற்படும் மாற்றம் உலகளவில் நமக்கு சுய சார்பு கட்டுமானத்தில் மிகப்பெரிய முன்னோடிக்குரிய பெருமையை பெற்றுத்தரும். எனவே தயவு செய்து இந்த புவியின் பாரம்பரிய பண்பாட்டு, நிலவியல் சான்றான மலைகளை அழிப்பதை உடனடியாக நிறுத்த நம்மால் இயன்றதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

 

ராஜமாணிக்கம்.

முந்தைய கட்டுரைமுதற்கனல் – எண்ணங்கள்
அடுத்த கட்டுரைஇரு கேள்விகள்