ஊரென்றமைவன…

அந்தியூர் வட்டாரத்தில் ஈரட்டி ,தாமரைக்குளம், வெள்ளிமலை,பர்கூர் பகுதிகள் உண்மையான கிராமிய வாழ்க்கை கொண்டவை என்பதற்கான சான்றுகள் இரண்டு. ஒன்று, நாய்கள் சுதந்திரமானவை. இரண்டு, பசுக்கள் பெரும்பாலும் நாட்டுப்பசுக்கள். அவை என் இளமைக்கிராமத்தை நினைவூட்டுகின்றன.

சீமைப்பசு எனப்படும் டென்மார்க் நாட்டு கலப்பினப்பசுக்கள் 70களில் எங்களூரில் வந்து இணைந்துகொண்டன. மிகப்பெரிய அகிடு கொண்டவை. கழுதைக்குரலில் ரோய்ங்கே என கத்துபவை. “நம்ம பசு அம்மான்னு சொல்லுது. அவனுகளுக்க பசு அவனுகளுக்க பாசை பேசுது” அந்தக்கால கண்டுபிடிப்பு.

அவை வந்து பால்மழை சொரியத்தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுப்பசு மறைந்தது. நாட்டுப்பசுக்களுக்கு லட்சுமி, அம்மிணி, நந்தினி என்றெல்லாம் பெயர்கள் போடுவார்கள். சீமைப்பசுக்கள் வந்ததும் அவற்றுக்கு என்ன பெயர் போடுவதென்று குழப்பம். ரோசி, ரீட்டா என்றெல்லாம் பெயர்கள் வைத்தனர். ஒருவர் டைகர் என்று வைத்தார். அது ஆணின் பெயர் என்று சொல்லிப்பார்த்தோம். ”கெடக்கட்டும், களுதை. பாலுகறந்தா சரி” என்றார்.

நாட்டுப்பசுவை பார்த்தால் இன்றைய இளைஞர்கள் காளை என நினைக்கக்கூடும். பெரிய கொம்புகள், சின்ன அகிடு. பவ்யமான பாவனைகள். பால் ஒருலிட்டருக்கு மேல் கறக்காது. ஆனால் எதையும் தின்னும், எப்படியும் வாழும். நோய்நொடி குறைவு. நம்மைச் சார்ந்திராது, நாம் அதைச் சார்ந்திருக்கலாம்.

எங்களூரில் நாய்களை  ‘வளர்ப்பவர்கள்’ இல்லை. நாயும் மனிதர்களும் சேர்ந்து வளர்வார்கள். வளர்ப்புநாய் என்ற சொல்லாட்சியே கிடையாது. ‘அதென்ன, நாமளா அதை வளக்கோம்? ஆண்டவருல்லா நம்மையெல்லாம் வளக்காரு?”.

நாய்களுக்கு அவை ஊர்நாய்கள் என்று காட்ட கழுத்தில் பட்டை இருக்கும். பெரும்பாலும் அவை பனைநார்ப்பட்டைகள். அவை தாங்கள் ஏற்றுக்கொண்ட மனிதர்களை ஒட்டி வாழும். பனை ஏற கூடவே போகும். வயல்களின் கரைகளில் அமர்ந்திருக்கும். ஒருவேளை உணவு கொடுத்தால் உண்ணும். ஆனால் மைய உணவு வேட்டையாடப்படும் எலிகள், முயல்கள், குட்டிப்பாம்புகள்தான்.

ஈரட்டி வனவிடுதிக்கு நாங்கள் சென்றதுமே நாய்கள் தேடி வந்துவிட்டன. வழியிலேயே எங்களை கண்டு முனகி வாலாட்டி ஏற்றுக்கொண்டு அணுகி, ‘எல்லாம் நம்ம ஏரியாதான், ஒண்ணும் கூச்சப்படாதீங்க’ என்று கூடவே வந்து, வாசல்களிலும் முற்றத்திலும் அமர்ந்திருந்தன. சாப்பாடு வைத்தால் பதற்றமில்லாமல் சாப்பிட்டன. நாள்தோறும் நாய்கள் கூடிக்கூடி வந்தன. கடைசியில் மொத்தம் ஐந்து இருந்தன.

கட்டிப்போடப்படும் நாய்களில் ஒரு மிகையான பரபரப்பும் சீற்றமும் இருக்கும். அவை அமைதியாக அமர்வதில்லை. எந்நேரமும் அவற்றில் ஒரு கொப்பளிப்பு இருக்கும். வீடுகளில் வளர்க்கும் நாய்கள் தங்களை குழந்தைகள் என்றும் எண்ணிக்கொள்கின்றன. எந்நேரமும் கொஞ்சப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றன. கிராமங்களில் நாயை கொஞ்சுவது அரிது. தங்களுக்குச் சமமாக நடத்துவார்கள். விவசாயம், மழை, மனைவி பற்றிய கவலைகளை பகிர்ந்துகொள்வார்கள்.

எங்கள் வீட்டில் நாயை கட்டிப்போடுவதில்லை, ஆனால் காம்பவுண்டுக்குள் வளர்க்கிறோம். அதுவே கட்டுப்பாடுதான். இந்த கிராமத்து நாய்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆகவே அவற்றுக்கு ஒரு வகையான முதிர்ச்சி உண்டு. பதற்றம் இல்லை. நம்மைக் கண்டால் வாலாட்டுவதுடன் சரி. குழைவு, நடனம் ஒன்றுமில்லை. நமக்கு சகஉயிர் என்னும் அங்கீகாரம் அளிக்கின்றன.

இதோ, கண்ணை மூடிக்கொண்டு கால்மேல் கால்போட்டு படுத்திருக்கையில் நாய் உலகின் எஜமானன் போலிருக்கிறது. அதற்கு கடமைகள் இல்லை. அச்சங்களும் பதற்றங்களும் இல்லை. மாடுகள் மேய்கின்றன. அவற்றை அரைக்கண் சொக்கி நாய்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. மேய்ச்சல்வாழ்க்கையே உயரியது என பிரிட்டிஷ் கற்பனாவாதம் கண்டுகொண்டது. நாய்கள் அதை நன்கறியும். மாடுகள் தங்களை நாய் கண்காணிப்பதை அறிந்திருக்கின்றன. அவ்வப்போது அதை உறுதிசெய்துகொள்கின்றன.

நாங்கள் நடக்கச் சென்றபோது ஒரு நாய் எங்களை நோக்கி வந்து முனகி வாலாட்டி இணைந்துகொண்டது. எங்களுடன் முழு தூரமும் வந்தது. பொறை வாங்கிப்போட்டேன். கூடவே வந்துவிட்டது. கருமையில் வரிகள் கொண்ட வினோதமான நாய். நல்ல உயரமானது. பெட்டை, கருவுற்றிருந்தது. என் கணிப்பில் நான்கு குட்டிகள். ஒருவாரத்திற்குள் வெளிவந்துவிடும். முலைக்கண்கள் புடைத்திருந்தன. கண்களிலும் களைப்பு இருந்தது.

ஆனால் மிகமிக பதவிசானது. அமைதியானது. அதை நாம் பார்த்தால் மட்டும் வாலாட்டும். எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டிருந்தது. உடலசைவுகளில், நடையில் ஒரு முதிர்ச்சியும் கௌரவமும் இருந்தன

இரண்டு நாட்கள் எங்களுடன் இருந்தது. நன்றாகச் சாப்பிட்டது, ஓய்வெடுத்தது. நாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் வந்தது. மூன்றாம் நாள் காட்டுக்குள் மின்னஞ்சல் பார்ப்பதற்காக பைக்குகளில் சென்றோம். கூடவே வந்தது, அங்கேயே நில் திரும்பி வந்துவிடுவோம் என்று பலவகையில் சொன்னோம். ஆனால் கூடவே வந்து ஓர் இடத்தில் நின்றுவிட்டது. திரும்பி வந்து பார்த்தால் அது இல்லை, எங்கோ போய்விட்டது. சரிதான், அது சுதந்திரமான நாய். அதற்கான தடங்கள் இருக்கலாம். எங்கிருந்தாலும் பெற்றுப்பெருகி வாழ்க

பயணத்தில் ஒரு கிராமக்கோயிலில் வேண்டுதல்சிலைகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டோம். கைகூப்பிய மனித உருவங்களுடன் மாடும் நாயும் இருந்தன. அவையும் நலமாக இருக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். அவையும் இணைந்ததே ஊர் என நம்பியிருக்கிறார்கள்.

நம்மில் பலருக்கு நாய்கள் காட்டுவிலங்குகள், மனிதர்கள் அவற்றை செயற்கையாகக் கட்டுப்படுத்துகிறார்கள் என்னும் எண்ணம் உண்டு. நம்முடன் இருக்கும் நாய்களும் பசுக்களும் முப்பதாயிரம் ஆண்டுகளாக நம்முடன் சேர்ந்து பரிணாமம் அடைந்தவை. அவையும் ஊர்விலங்குகள்தான். நம் ஊர்கள்மேல் அவற்றுக்கும் உரிமை உண்டு. அவைதான் ஊரை முழுமைசெய்கின்றன

முந்தைய கட்டுரைவிஷக்கிணறு- சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைமழைப்பாடல் நிகழ்வது