விஷக்கிணறு- சுனீல் கிருஷ்ணன்

சுனீல் கிருஷ்ணனின் விஷக்கிணறு குறுநாவல் பற்றி ஸ்வேதா சண்முகம்

ஜெவின் இலக்கிய முன்னோடிகள் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  “வாழ்க்கையின் ஒரு தளம் மூலம் அடையப்படும் உண்மை மறு தளத்தால் மறுக்கப்பட்ட படியே உள்ளது. அப்படி பற்பல உண்மைகளை அதன் பரப்பில் மோதவிடும் ஒன்றாகவே எப்போதும் பெரிய படைப்பு உள்ளது.” என்னும் வரியை உள்வாங்கிய அதே நாளில் “விஷக் கிணறு” வாசித்தேன்.

“தற்செயலாக ஏதோ ஒரு கதவைத் திறப்பது அல்லவா லாகிரியின் இயல்பு?” என அவதானிக்கும் கவிஞனுக்குத் தான் விழுந்து கொண்டிருக்கும் கிணறு குறித்த பிரக்ஞை அருங்காட்சியக  அனுபவம் வழி  கிடைக்கிறது.

விஷக் கிணற்றின் வதையை எந்நேரமும் உணர்பவர் மீனாவின் அப்பா. அந்த விஷக் கிணற்றின் இருப்பை அவர் மூலம் தற்செயலாக அறிந்து கொள்பவன் அக்கவிஞன்.  கவிஞனாக அல்லாமல் கலகக்காரனாக நினைவுக் கூறப்படும் அவனுக்கு ஒரு வகையில் அந்த கிணறு    தேவைப்படுகிறது. உருவகக் கதையில் வரும் இறைக்கு அந்த கிணறு தேவைப்படுவது போல.  அவன் கைகள் படைக்க  எழுவதும்  அவ்விசையிலே.

சமகால அவதானிப்புகள், கூரிய அங்கதம், நுண்ணிய சித்தரிப்பு என ஈர்ப்பது மலேசியா சார்ந்த கதைச் சரடு. இதற்கு எதிர் தளத்தில் தன் கவி நடையால்  ஈர்க்கிறது ஆதி யுகத்தில் விரியும்  உருவகக் கதை.

பொன் மஞ்சள் குருவி ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒவ்வொன்றாகக் காட்சியளிக்கிறது. வெளிர் நிற கண்ணனை வரலாற்றுப் பாவையாகப் பாவிக்கும் லாஸ் அலமோஸ் பகுதியிலும் அக்குருவி தன் அழைப்பை விடுக்கிறது. மன்ஹட்டன் மாந்தர்களை ஆழத்திலிருந்து எழும் தீப்பிழம்பென ஒவ்வொருவறையும் அவ்விஷக் கிணறு சீண்டுகிறது. குறுநாவலின் மையம் இப்பகுதியில் முழுமை கொள்ளக் காண்கிறேன்.

“விஷக் கிணறு” – வரலாற்றின் ஒரு சிறு துளியைப் பிரவாகத்தின் ஒரு பகுதியாக அணுகிச் சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும் கதை.

சுனீல் கிருஷ்ணன் ‘விஷக்கிணறு’


ஸ்வேதா வலைப்பூ

முந்தைய கட்டுரைஆலன் டூரிங்
அடுத்த கட்டுரைஊரென்றமைவன…