முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கடராமன் 27-1-2009 அன்று டெல்லியில் அவரது இல்லத்தில் தன் 98 ஆவது வயதில் மறைந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் எட்டாவது குடியரசுத்தலைவராக இருந்தார்.
வெங்கடராமனின் மறைவு பெரிய செய்தியாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் நெடுநாட்களாக அவர் நோயுற்றிருந்தார். முதுமையால் மரணம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. தீவிர அரசியலில் இருந்தும் செய்திகளில் இருந்தும் அவர் விலகி கால்நூற்றாண்டாகிறது. புதிய தலைமுறையில் சிலருக்கே அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆர்.வெங்கடராமன் ஓரு ‘மக்கள் அரசியல்வாதி’ அல்ல.அவரால் மேடையில் பேசவோ மக்களைக் கவரவோ முடியாது. அவர் அரசாங்கத்தை வழிநடத்தும் தகுதிகோண்ட நிர்வாகி. அவரை மக்கள் அரசியல்வாதிகளுக்குத் தேவையாக இருந்தது. அதைப்போலவே அவருக்கும் அவர்கள் தேவையாக இருந்தார்கள். நெடுநாள் காமராஜ் அவரது அரசியல் ஊர்தியாக இருந்தார். பின்னர் இந்திரா.
தமிழகத்தின் தொழிலமைச்சராகவும் பின்னர் இந்திய நிதியமைச்சராகவும் இருந்த ஆர்.வெங்கடராமன் ஆற்றிய சேவைகள் இன்று எடுத்துச்சொன்னாலொழிய நினைவுகூரப்படுபவை அல்ல. பொதுவாக பொருளியல்-சமூக தளத்தில் ஆற்றப்படும் பணிகள் மெல்லமெல்லத்தான் பலன் அளிக்கும். அவற்றல் பயன்பெறும் தலைமுறையினருக்கு அவற்றை உருவாக்கியவர்கள் அறிமுகமாகிக்கூட இருக்கமாட்டார்கள். அந்த விதிக்கு ஆளானவர்களில் ஒருவர் ஆர்.வெங்கடராமன்.
காமராஜ் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர்.வெங்கடராமன் இன்றைய முக்கியமான தொழில்வட்டங்களாகிய கோயம்புத்தூர், திருப்பூர், சிவகாசி, ஓசூர் ஆகியவற்றின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தார். இந்த மையங்களே இன்றும் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கின்றன. தமிழகம் அதன் பொருளியல் வளர்ச்சிக்காக ஆர்.வெங்கடராமன் அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. குறிப்பாக பின்தங்கிய வரண்ட கிராமப்பகுதியான ஓசூருக்கு அது பெங்களூருக்கு அருகே வருகிறது என்பதனாலேயே அமைந்துள்ள சாதகநிலையை ஊகித்த அவரது செயல் தீர்க்கதரிசனம் மிக்கது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருவருடம் முன்பென்றால் பொதுத்துறையைச் சார்ந்தே சிந்தித்த ஆர்.வெங்கடராமன் அவர்களின் பொருளியல் அணுகுமுறை விமரிசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று அமெரிக்கப்பொருளாதாரம் ஆட்டம் கண்டநிலையில் பொதுத்துறையின் உறுதிதான் இந்தியாவைக் காப்பாற்றியது என்னும் சூழலில் அவரது பணி மிகவும் முக்கியமாக கருதப்படவேண்டும். ஆர்.வெங்கடராமன் பொதுத்துறையை உருவாக்குவது வலுப்படுத்துவது என்னும் தளத்திலேயே தன் பொருளியல் பங்களிப்பை நிகழ்த்தியவர்.
ஆர்.வெங்கடராமன் அவர்களுக்கு அஞ்சலி