வலி என்பதும் குறியீடே- கடிதம்

வலி என்பதும் குறியீடே – விஷால்ராஜா

இனிய ஜெயம்,

எழுத்தாளர் விஷால்ராஜா எழுதிய வலி என்பதும் குறியீடே எனும் கட்டுரையை தளத்தில் வாசித்தேன். முக்கியமான கட்டுரைஎன்பஅதை விடவும் அழகிய கட்டுரை. அதை அழகியல் பொருந்திய கட்டுரையாக உயர்த்துவது அதிலுள்ள எழுத்தாளனின் அலைச்சல். சுயம் பிரகாசமான படைப்பு ஒரு மட்டை, கோட்பாட்டின் தாக்கம் பெற்ற பிரதி ஒரு மட்டை, இந்த இரு மட்டைகளால் மாறி மாறி அடிக்கப்படும் டென்னிஸ் பந்து போல விஷாலின் அலைச்சல். இறுதியாக விஷால் வந்தடையும் இடம் என கட்டுரைக்குள் செயல்படும் எழுத்தாளனின் சிந்தனை ஓட்டம் என்ற arc இந்த மதிப்பீட்டு விமர்சனக் கட்டுரையை அழகு பொதிந்ததாக மாற்றுகிறது.

ஸேடி ஸ்மித் கதைத் தொகுதி வழியே அவரை வகுத்துவைக்கும் வகையில், தமிழில் இத்தகு கோட்பாட்டு நிலைகளை அடியொற்றி வந்த பின்நவீன பிரதிகளின் வெற்றி தோல்வி என்ன, அந்தக் கோட்பாடுகள்  ‘இங்கே’ வருவதில் அதில் நிகழ்ந்த பலம் பலவீனம் என்ன, இந்த பின்புலத்தில் ஸ்மித் ஐ வாசிக்கையில், அவர் கதைகளில் ஏற்கும்  மறுக்கும் நிலைகள் என்னென்ன, உலக அளவில் ரேமண்ட் கார்வார், தமிழின் அளவில் ஜெயமோகன் புனைவுகளுடன் ஒப்பிட்டு ஸ்மித் இன் எல்லை எது, ஏன், என விவரித்து, ஒரு எழுத்தாளர் மட்டுமே உறைக்கத் தக்க (கிட்ட தட்ட பன்ச் டயலாக்) இறுதிக்கூற்றுடன், மதிப்பீட்டு விமர்சனக் கட்டுரையை நிறைவு செய்கிறார்.

மேலை மரபில்  இந்த பின்நவீனக் களத்தை கட்டமைத்த கோட்பாடுகனின் பின்புலத்தில் எந்த ஒரு ஆன்மீக தவிப்பும் இல்லை என்பது

இதன் அடிப்படை பலவீனம். இந்த பலவீனத்தின் மீது எழுந்த விவாதங்களின் மேல் நிலைபெற்றதே அதன் மொழி சார்ந்த நோக்கு.  இலக்கியம் மொழியில் நிகழ்கிறது எனினினும் அது முற்ற முழுதாக மொழியுடன் மட்டுமே கட்டுப்பட்ட ஒன்றல்ல. இதற்க்கு எதிர் நின்று கோட்பாடு சொல்லிவிட்டது என்பதற்காக,இலக்கியத்தில்  மொழியை அந்தரத்தில் நிறுத்தி,

கட்டுடைத்தல், மறு கட்டமைத்தல், மையத்தை உடைத்து ஜல்லியாக உதிர்த்தல், விளிம்புகளை உயர்த்தல் போன்ற கொத்தனார் வேலைகளை எல்லாம் அதன் மேல் சுமத்தி, என்ன நேர்கிறது என்று பரிசோதித்தார்கள்.

பின் நவீன மொழியியலின் அறிவாளிகள் தரப்பை மூளை நரம்பியலும், அறிவிலிகள் தரப்பை ஆலன் சோக்காலும் வந்து முடித்து வைத்தனர். தமிழின் முகநூல் மெய்யறிவர் மொழியில் சொன்னால் அந்த ‘பாடியை எடுத்துட்டாங்க’.

விஷால்ராஜா

தனது இயல்பில் சுயம்ப்ரகாசமற்ற பின்நவீன கோட்பாட்டின், தமிழில் அவரவர் அறிவின் இருப்பு இன்மைக்கு தக புரிந்து கொள்ளப்பட்ட வகைமையின் சாட்சியங்களே இன்று தமிழில் பின்நவீனத்துவ இலக்கியங்கள் எனும் மியூசியத்தில் எஞ்சி நிற்கும் ஸ்பெசிமன் பிரதிகள்.

இந்த வரிசையில் ஸேடி ஸ்மித் குறித்த அறிமுகத்தை காண்கையில், அய்யய்யோ மறுபடியுமா என்ற கூக்குரல் உள்ளே எழாமல் இல்லை. என்ன ஒரே ஆறுதல் இருபது வருடத்தில் இத்தகு பிரதிகளை பேசுவதில் சமநிலை கூடி இருக்கிறது என்பதே. தனது மொழியாக்கப் பணிகளின் பொருட்டு சமகாலப் புனைவுகளின் வரிசையில் ஸ்மித்தை வாசிக்க நேர்கையில், எனக்குள் எழுந்த தத்தளிப்புக்கு முகம் கொடுத்திருக்கிறார் விஷால்ராஜா என்று இக் கட்டுரை குறித்து பேசுகையில், மொழிபெயர்ப்பாளர் நரேன் சொன்னார்.

இலக்கிய அனுபவம் என்பது ஒரு துளி தன் கடலில் கரையும் அனுபவம். துளியை கடல் சேர்க்கும் ஆற்றலே இலக்கியத்தில் திகழும் மொழி. இதை செய்யாத இலக்கியம் அதன் மொழி, (ஸ்பானர்தான் ஆனால் அது எந்த நட்டையும் முடுக்காது) எந்தப் பயனும் அற்றது. இப்படி நட்டை முடுக்காத ஸ்பானர்களின் உற்பத்தியை  இன்னும் அங்கே நிறுத்திய பாடில்லை என்பது ஸேடி ஸ்மித் வருகை  வழியே புரிகிறது.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபிணைப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைடார்த்தீனியம்[குறுநாவல்]-3