பிணைப்பு [சிறுகதை]- தனா
மாளாப் பெருங்காதல் ஒன்று உண்டெனின் அது கனவுகளில் மீள மீளப் பேருருவாக்கம் அடைந்து அமர நிலையை அடைகிறது. சீனியம்மாள் நிறைந்து வாழ்ந்தாலும் யாருமறியா வெற்றிடத்தில் இருந்தவர் பேயாண்டித்தேவர். சீனியம்மாளை கைவிட நேர்ந்தாலும் நிலத்தின் பசுமையை அவரால் விட்டு விலக இயலவில்லை. காதலின் இனிமையை விட தன் நிலத்தின் சிறுபுல்லின் உயிர்க்கருணை முக்கியமானாதாகவெ இருந்திருக்கிறது. பேரனில் சீனியம்மாள் கண்டது பேயாண்டித்தேவரின் அன்பை, அவள் அன்பை முழுமையாய் நிறைத்தது அவனிடமே. அவன் வாழ்வெங்கும் நினைத்து பேருவகை கொள்ளும் அரிய பரிசை அளித்திருக்கிறார் அல்லவா? உயிர்த்தோழி தன் மனம் கவர் காதலனை, தன் நண்பனிடம் சொல்லும் மகிழ்ச்சி தருணங்கள் போல அவன் மனதில் அது என்றுமிருக்கும்.
இறுதியில் சீனியம்மாள் கம்பீரமாக அமர்ந்திருப்பதும், தாத்தா மொட்டை அடித்துக்கொள்வதும், நீலத்தின் இறுதியில் ராதையின் அழகுச்சிலைக்கு முன்னால் கிருஷ்ணன் குழலூதி அவள் கண் உயிர் பெறும் காட்சி மனதில் வருகிறது.காதல் என்றாலே அந்த ராஸ்கல்தான் நினைவிற்கு வருகிறான், ஆண்கள் வெறுக்கும் புன்னகையுடன் பெண்கள் விரும்பும் குழலோசையுடன்
தனாவிற்கு வாழ்த்துக்கள்
தண்டபாணி
அன்புள்ள ஜெ
பெருங்காதலை நாம் எழுதி எழுதிப்பார்த்துக்கொள்கிறோம். அது எவ்வண்ணம் இங்கே திகழ்கிறது என்பது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது. இங்கே எல்லாமே தற்காலிகமானவைதான். நிரந்தரமான ஒன்றுக்கான ஏக்கமே பெருங்காதலை உருவாக்குகிறது. தனாவின் பிணைப்பு ஒரு மாறா உறவை கற்பனை செய்கிறது. கற்பனையோ உண்மையோ மாறாமையை நம்பியே மாறும் வாழ்க்கையை வாழமுடிகிறது. அருமையான கதை
ஆனந்த்
அன்புள்ள ஜெ
தனாவின் பிணைப்பு ஒரு அரிய கதை.
பொதுவாக எதிர்மறைப்பண்பு கொண்ட கதைகளையே நாம் இப்போது அதிகமாக வாசிக்கிறோம். உன்னதம் உச்சம் ஆகியவற்றை கனவுகாணும் கதைகள் அருகிவிட்டன. அவை செண்டிமெண்ட் என்று தவிர்க்கப்படுகின்றன. அத்தகைய கதைகளில் ஒன்று இது
ராஜ்குமார்