நாகர்கோயிலில் இருந்து கிளம்பும்போதே செப்டெம்பர் இறுதி வரைக்குமான கட்டுரைகள், கடிதங்கள், கதைகளை என் வலைத்தளத்தில் ஏற்றி வைத்துவிட்டேன். ஆகவே சென்ற ஒரு வாரமாகவே பெரும்பாலும் பேச்சு, சுற்றியலைதல், சும்மா இருத்தல்தான். வாசிப்பும் எழுத்தும் ஏதுமில்லை. எப்போதுமே நண்பர்கள் புடைசூழ இருக்கிறேன்.
காஞ்சிகோயிலில் நண்பர் செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் சிலநாட்கள் இருந்தேன். புதியவாசகர் சந்திப்புகள் நிகழ்ந்த அந்த இடம் பலருக்கும் அறிமுகமானதுதான். அங்கே ராஜமாணிக்கம், கதிர்முருகன், ஜி.எஸ்.எஸ்.வி நவீன், பாரி, மணவாளன், திருமூலநாதன், அந்தியூர் மணி போன்ற நண்பர்கள் வந்தனர்.
காஞ்சிகோயிலில் செல்பேசி குறைவாகவே கிடைக்கும். மாடிக்குப்போனால் குறுஞ்செய்திகள் அனுப்பலாம். நான் வைத்திருக்கும் ஜியோ இணைப்பு கிடைப்பது காற்றைப் பொறுத்து. எதிர்பாராதபோது சில துளிகள் வந்து ஒட்டியிருப்பதுபோல தெரியும். ஆகவே வெளியுலகத் தொடர்புகள் இல்லை.
கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராஜமாணிக்கம், கதிர்முருகன் ஆகிய நண்பர்களுடன் திருச்செங்கோடு அருகே உள்ள பெருமுகை என்னும் இடத்தில் இருக்கும் ஆதிப்பெருமாள் கோயில் கரடு என்ற மலைக்குச் சென்றோம். திருச்செங்கோடு மலை அருகே செல்லும் தேசியநெடுஞ்சாலையில் நின்று பார்த்தபோது ஓர் ஒற்றையுடல் என, ஓய்ந்து படுத்திருக்கும் அறியாப்பெருவிலங்கு என தெரிந்தது. சென்ற சில மாதங்களாகவே இப்பகுதியில் நல்ல மழை. ஆகவே எங்கும் பசுமை பொலிந்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஏராளமான சிறிய மலைகள். விரிந்த வறண்ட சமநிலத்தில் ஆங்காங்கே எழுந்து நின்றிருக்கின்றன. ஏறத்தாழ தக்காணப் பீடபூமியின் நில அமைப்பு உருவாகி வந்துவிட்டது. இவை கரடுகள் என்று சொல்லப்படுகின்றன. பெரிய பாறையடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்த குவியல் போன்ற அமைப்பு கொண்டவை. பெரும்பாலான பாறைகள் செந்நிறம்—ஆகவேதான் செங்கோடு என்று பெயர்.
மலைகளின் மேல் முள்மரங்கள்தான் பெரும்பாலும். குற்றிலைப்புதர்கள், மழையில் தோன்றி மறையும் நெருஞ்சிபோன்ற விதைப்பெருக்கம் கொண்ட சிறுசெடிகள். இங்கே கல்லுடைத்து எம்சாண்ட் ஆக மாற்றும் தொழில்தான் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல மலைகள் சென்ற இரண்டு மூன்று ஆண்டுகளில் காணாமலாகிவிட்டிருக்கின்றன
பெருமாள் கரடுக்கு மேலே இருந்த பெருமாளை கீழே கொண்டுவந்து கான்கிரீட் கோயில் கட்டி நிறுத்திவிட்டார்கள். சின்னஞ்சிறு பெருமாள். இப்பகுதியின் மலைகள் மேலெல்லாம் சிறிய, திறந்தவெளி பெருமாள் ஆலயங்கள் உண்டு. ஒரு கல்லில் நிறுவப்பட்ட சிறு சிலைதான். இப்போது மேலே ஆலயமில்லை. மேலே செல்ல வழியுமில்லை. இருந்தாலும் ஏறிவிடுவோம் என்று பாறைகளில் தொற்றி ஏறி தாவி மேலே சென்றோம்.
மதிய வெயிலில் வெந்த மலைப்பாறையில் இருந்து அனலடித்தது. ஆனால் மேலேறி அமர்ந்து சுற்றிலும் செறிந்திருந்த காட்டை பார்ப்பது மனம் விரியவைக்கும் அனுபவமாக இருந்தது. இங்கே இன்னமும் ஏராளமான காடு எஞ்சியிருக்கிறது. பசுமை மூடிய மலைகள் அடுக்கடுக்காக எழுந்து நின்றன. ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே பெரிய மரங்களெல்லாம் வெட்டி அழிக்கப்பட்டுவிட்டன. குட்டைமரங்களாலான காடு. சமீபகாலமாக வனக்கொள்ளை தடுக்கப்பட்டிருப்பதனாலும், வனத்தில் ஆடுமேய்ப்பவர்கள் குறைந்து வருவதனாலும் காடு செறிந்து செழித்துள்ளது.
இத்தகைய சிறிய காடுகள் உண்மையில் பசுமைமாறாக் காடுகளின் அளவுக்கே பல்லுயிர்ப்பெருக்கம் கொண்டவை. இங்கே யானை போன்ற பெரிய விலங்குகள் இல்லை. ஆனால் கீரி முயல் போன்ற சிற்றுயிர்கள் ஏராளமாக உள்ளன. பறவைகள், அவற்றுக்கு உணவாகும் பூச்சிகள் மிகுந்துள்ளன. தியோடர் பாஸ்கரன் அடிக்கடிச் சொல்வதுண்டு ‘இயற்கை ஆர்வலர் இயற்கை என்றதுமே பசுமைக்காடுகளை கற்பனை செய்து கொள்வார்கள். இயற்கைச்சூழல் என்றாலே அது வறண்ட நிலங்களும் கரட்டுமலைகளும் சதுப்புகளும் எல்லாம் அடங்கியதுதான். எல்லா இடங்களிலும் உயிர்ச்செறிவு ஒன்றே”
மலையிலிருந்து இறங்கி அருகே இருக்கும் உறும்புக்கிணறு மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்றோம். காட்டுக்குள் அமைந்த இந்த அம்மன்கோயில் உண்மையில் ஓர் இயற்கையான அழியா ஊற்றுதான். ஊற்றை அம்மனாக வணங்கி பின் அம்மனை மையவழிபாட்டுக்குள் இணைத்துவிட்டனர். உறும்பு அல்லது உறம்பு என்றால் மலையூற்று. ஊற்றுநீர் பெருகி ஒரு கான்கிரீட் தொட்டியை நிரப்பி வழிந்துகொண்டே இருக்கிறது. சுற்றிலும் காடு மண்டிய மலை அணைப்பதுபோல வளைத்திருந்தது.
தன்னந்தனிமையான இடம். நாங்கள் சென்றபோது ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. அன்றாடபூசை ஏதுமில்லை. பூசைக்காக எவரேனும் வரும்போது மட்டும்தான் திறக்கிறார்கள். இயற்கையான இந்த ஊற்று யானைகளுக்கு பழக்கமானது. ஆகவே அவை நீர் அருந்த வருகின்றன. அந்திக்குப்பின் அங்கே எவரும் செல்வதில்லை. உடனே திரும்பிவிட்டோம்.
அருகிலேயே சஞ்சீவராயன் மலை பெருமாள் கோயில். இது செல்வாக்கான பெருமாள். சமீபமாக கட்டப்பட்ட பெரிய கான்கிரீட் ஆலயம், நன்கு பேணப்படும் புல்வெளிகளால் ஆன சூழல். மலைப்பாறையில் அமைந்த சிறிய கோயில். மொத்த மலைப்பாறையையும் உள்ளே வைத்து பெரிய கோயிலை எழுப்பியிருக்கிறார்கள். மூன்றாம் மாடியில் இருக்கும் மிகப்பெரிய கருவறைக்குள் நின்றிருக்கும் பெருமாள் சிலை பன்னிரண்டு அடி உயரமானது
மலைப்பாதையில் ஏறிச்சென்றால் உச்சியில் அனுமார், ராமானுஜர் ஆகியோருக்கான ஆலயங்கள் உள்ளன. அங்கே அமர்ந்து சுற்றிலும் மழையீரத்துடன் இருட்டி வந்த பச்சநிலவெளியை நோக்கியபடி அமர்ந்திருந்தோம்.
இருட்டியபின் திரும்பி வந்தோம். வரும் வழியில் அத்தாணி என்னும் ஊரைச் சேர்ந்த நண்பர் நவநீதனின் இல்லம் சென்றோம். ஆசிரியராகப் பணியாற்றுபவர். என் வாசகர். அவர் இல்லத்தில் டீ அருந்திவிட்டு காஞ்சிகோயில் திரும்பினோம்
வரும் வழியெல்லாம் மழை. காஞ்சிகோயிலில் காரிலிருந்து நனைந்தபடியேதான் இறங்கி ஓடவேண்டியிருந்தது. மழை, குளிர்காற்று, விழிநிறைத்த பசுமை, அமைதிதிரண்டு எழுந்த பாறையடுக்குகள், காலத்தைக் கடந்த ஆலயங்கள். ஒரு நாள், பயனுற வாழ்ந்தோம் என்று நம் பிறவிநூலில் எழுதவேண்டிய ஒரு கணக்கு.