உடையாள், முடிவில்

 

 

 

இந்த குழந்தைகளுக்கான அறிவியல் புனைகதையை முதன்மையாக என்னுடைய ஒரு அகவிடுதலைக்காகவே எழுதினேன். இது மொழியில் கற்பனையில் எனக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது.

ஆனால் இவ்வாறு சில  கதைகளை எழுத வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு ஏற்படுவதற்கு நம் பள்ளிகள், கல்லூரிகளுடன் எனக்கிருக்கும் உறவாடலும் ஒரு காரணம். இங்கே பள்ளிகளில் பொதுவாக அறிவியல் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, அறிவியல் தகவல்களே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. விளைவாக, தொழில்நுட்பமே அறிவியல் என கருதப்படுகிறது

அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகளே. அவை தத்துவத்திற்கே அணுக்கமானவை. மெய்ப்பித்தல்- பொய்ப்பித்தல் வழிமுறைகளின் படி அவை நடைமுறை வாழ்வுக்கு வருகின்றன. அதன் பின் தொழில்நுட்பமாக ஆகின்றன. அறிவியலின் தர்க்கம் பற்றி கார்ல் பாப்பர் விரிவாக எழுதியிருக்கிறார். அதைப்பற்றிய விவாதம் இத்தளத்தில் நடைபெற்றுள்ளது

அறிவியல் கொள்கைகளை ‘அறிந்து கொள்வது’ வேறு ‘புரிந்து கொள்வது’ வேறு. புரிந்துகொள்வதையே அறிவியல் கல்வி என்கிறோம். ஓர் அறிவியல் கொள்கையை கற்பனையைக் கொண்டு விரிவாக்கம் செய்ய முடியும் என்றால், மறுத்து வாதாட முடியும் என்றால், முன்பில்லாத ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும் என்றால் ஒருவர் அந்த அறிவியல் கொள்கையைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

அந்தப்புரிதலை அறிவியல் புனைகதைகள் எளிதாக உருவாக்க முடியும். ஆகவேதான் உலகமெங்கும் அறிவியல்கல்வியில் இன்று அறிவியல் புனைகதை ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. இக்கதையின் முதன்மை நோக்கம் அதுவே

கூடவே இன்னொன்றும் உண்டு. ‘தத்துவப்படுத்தல்’ [philosophizing] என்று அதைச் சொல்லலாம். செய்திகளை தர்க்கபூர்வமாக தொகுத்தும் பகுத்தும் பொதுமைப்படுத்தி விதிகளை உருவாக்குவது அறிவியலின் தர்க்கச் செயல்பாடு. Induction deduction method என அது அறிவியலில் விரிவாகப் பேசப்படுகிறது

அதற்கும் அப்பாலுள்ளது அறிதல்களை நுண்மையாக்கி அருவமாக்கிப் பார்ப்பது. அதைத்தான் தத்துவப்படுத்தல் என்கிறோம். எடை என்பது எப்படி உருவாகிறது என்பது தர்க்கபூர்வ கேள்வி. எடை என்றால் என்ன என்பது நுண்மையாக்கல். காலம் என்றால் என்ன, தூரம் என்றால் என்ன என்பதெல்லாம் அத்தகைய தத்துவக் கேள்விகள்.

இளமையிலேயே தத்துவப்படுத்தல் கற்பிக்கப்படவேண்டும். அந்தப்பயிற்சி சிந்தனைக்கு மிக முக்கியமானது. எல்லாவகையான கல்வியிலும் தத்துவப்படுத்தல் இன்றியமையாதது. அதுவே அடிப்படை விதிகளை உருவாக்குகிறது. அது இல்லாததனால்தான் நாம் சிந்தனையில் முன்னகர முடிவதில்லை.

நம் கல்வியில் தத்துவப்படுத்தல் இல்லை. ஆகவேதான் கொஞ்சம் நுட்பமாக ஒரு சிந்தனை தென்பட்டாலும் ‘ஒரே தத்துவமா இருக்கு’ என்று சொல்லி கடந்து செல்கிறோம். குழந்தைகள் அளவிலேயே தத்துவப்படுத்தலை அறிமுகம் செய்யும் முயற்சி இந்தக்கதை.

இந்தக்கதையின் தத்துவப்பகுதிகள் குழந்தைகளுக்குப் புரியுமா என்று பலர் கேட்டனர். இது எல்லாக் குழந்தைகளுக்கும் உரிய கதை அல்ல. கொஞ்சம் சிந்திக்கும் தன்மைகொண்ட குழந்தைகளுக்குரியது. அக்குழந்தைகளுக்குக் கூட முழுக்கப் புரியாது. ஆனால் அவர்களைச் சிந்திக்க வைக்கும். புரியாத பகுதியை அவர்கள் பின்னர் கண்டடைவார்கள்.

நம் குழந்தைகள் வெறுமே தகவல்களைத்தான் படிக்கின்றன. தகவல்களில் இருந்து மேலே சிந்திக்கும் குழந்தைகளுக்காக மட்டுமே இக்கதை எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக  ‘நாமி வெளியே சென்று செடிகளில் பாக்ட்ரீயாக்கள் மஞ்சளாகப் படிந்திருப்பதை பார்த்தாள், அவை வெயிலில் மின்னிக்கொண்டிருந்தன’ என்று இந்தக்கதையில் வாசித்ததுமே ஒரு சராசரி எட்டாம் வகுப்பு குழந்தை ‘பாக்ட்ரீயாக்கள் கண்ணுக்கு தெரியாது, என் பாடப்புத்தகத்தில் அப்படித்தான் உள்ளது’ என்றுதான் சொல்லும்.

ஆனால் நான் உத்தேசிக்கும் குழந்தை ‘பாக்ட்ரீயாக்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்தால் கண்ணுக்குத் தெரியும் வடிவை அடையலாமே. செல்கள்கூடத்தான் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த உடம்பு தெரிகிறதே” என்று யோசிக்கும். அந்த அடிப்படைத் தர்க்கத்திறன் கொண்ட குழந்தைதான் இந்நாவலை வாசிக்கமுடியும். நம் குழந்தைகள் அப்படி ஆகவேண்டும் என்பதே என் எண்ணம்.

நான் உத்தேசிக்கும் அந்தக் குழந்தை மேலும் தேடல் கொண்டு கூகிளைப் பயன்படுத்தி தேடினால் பாக்டீரியாக்கள் திரண்டு பலவகை வடிவங்களில் பூச்சுகள், முண்டுகள் வடிவில் தாவரங்களில் இருப்பதை கண்டுகொள்ள முடியும். ஆஸ்திரேலியா அருகே என்னும் ஷார்க் பே கடற்கரையில்  cyanobacteria என்ற பெரியவகை பாக்டீரியாக்களாலான பாறைகள் உள்ளன. பூமியில் உயிர் உருவான காலத்தில் உருவானவை இவை. இப்பாறைகள் Stromatolite எனப்படுகின்றன. அன்று கடல்நீரில் இருந்த பாக்டீரியாக்கள் அடுக்கடுக்காக படிந்து படிந்து நீண்டகால அளவில் பாறைகளாக மாறிவிட்டன. டேவிட் அட்டன்பரோ அங்கே போய் எடுத்த ஆவணப்படத்தையும் பார்க்கமுடியும்

நம்முடைய சூழலில் அறிவியல்கல்வி என்பது தகவல் மனப்பாடக்கல்விதான். பலர் அதில் பட்டம்பெற்றும் பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். ஆனால் அறிவியலின் அடிப்படைகள் கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் படித்த வேலையை இயந்திரம் போல செய்பவர்கள். தங்களுக்கு தெரியாது என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. இது கொஞ்சம் தேடல் கொண்ட அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கான கதை.

இதை எழுதியதும் தகவல்களைச் சரிபார்க்க இரண்டு முதுநிலை அறிவியலாளர்களுக்கு அனுப்பினேன். சுவிட்சர்லாந்தில் நுண்உயிரியலில் முதுமுனைவர்  ஆய்வுசெய்யும்  சுசித்ரா ராமச்சந்திரன், அமெரிக்காவில் இயற்பியலில் ஆய்வு செய்யும் கே. மாதவன். இருவருக்கும் நன்றி.

இந்தக்கதையை ஆறாவது படிக்கும் நண்பரின் மகனுக்கு அனுப்பினேன். அவனுக்கு ஆர்வத்தையும் சிந்தனைப் பெருக்கையும் உருவாக்குகிறது என்று தெரிந்தது. அவன் அம்மா “அந்தக்குழந்தை அங்கே தனியா இருக்கா?” என்று கேட்டபோது “அதுக்கு தனிமைன்னா என்னான்னே தெரியாதே” என்று அவன் பதில் சொன்னான். அவன் கதைக்குள் வந்துவிட்டான் என்று தெரிந்துகொண்டேன்.

சூழ்ந்திருக்கும் அரைகுறைத்தன்மை, அறியாமையின் ஓசைகளைக் கடந்து நம் குழந்தைகள் அறிதலின் புதிய எல்லைகளை நாடவேண்டும் என்று விரும்புகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஉடையாள்-10
அடுத்த கட்டுரைமலைப்பெருமாள்கள், காட்டு அம்மன்கள்