ஆசிரியருக்கு,
சுவாமி சர்வபிரியானந்தர் ராமகிருஷ்ணா மடத்தினை சேர்ந்தவர். 1994 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டின் தியோகர், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாபித்தில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் ராமகிருஷ்ணா மிஷனுக்கு பல்வேறு திறன்களில் பணியாற்றியுள்ளார். தியோகர் வித்யாபித் மேல்நிலைப்பள்ளியின் துணை முதல்வர், சிக்ஷனா மந்திரா ஆசிரியர்கள் பயிற்சி கல்லூரி , மற்றும் பேலூர் மடத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்த பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராக இருந்தார். பேலூர் மடத்தில் உள்ள துறவற நன்னடத்தை பயிற்சி மையத்தில் ஆச்சார்யாவாக இருந்துள்ளார். பின்னர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் ராமகிருஷ்ண மடத்தின் அமைப்பிலும், இப்போழுது நியுயார்க்கிலும் உள்ளார். கரோனா காலத்துக்கு முன் சுவாமி ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் பட்ட படிப்பு படிக்க சேர்ந்துள்ளார்.
சுவாமி இந்தியாவின் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (எக்ஸ்ஐஎம்பி) புவனேஷ்வரிடமிருந்து வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர்.
இன்றைய ஐரோப்பிய வழி கல்வி கற்று ஆங்கில பார்வை வழி உலகத்தினை புரிந்து கொள்வோருக்கு சுவாமியின் உரைகள் மரபினை புரிந்து கொள்ள பெரிதும் உதவும். மரபில் ஆழ ஊன்றியவர், அதே நேரம் நவீன மனதின் கேள்விகளை , சிந்திக்கும் முறைகளை அறிந்தவர். சுவாமி வாசிப்பு அதிகம் உள்ளவர், பல புத்தகங்களை தனது உரையில் பரிந்துரைப்பார்.
தளத்தில் அத்வைதம் அறிமுகம் பற்றி கேட்ட வாசகர் ஒருவரின் கடிதம் பார்த்தேன். என்னை போல நவீனத்துவ மனநிலையில் இருந்து வேதாந்தம் பற்றி ஆர்வமுள்ள அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கு பயன்படும் என்றுதான் இதை அனுப்பினேன். உங்கள் விஷ்ணுபுரம், கொற்றவை, இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், கீதை உரைகள் போன்றவை என்னை போல உள்ளவர்களுக்கு உந்துதலாக இருந்தது. இந்த உரைகளும் ஆங்கிலம் வழி புரிந்து கொள்பவர்களுக்கு பயன் படும் என நினைக்கின்றேன்..
அன்புடன்
நிர்மல்