செய்திநிறுவனங்களின் எதிர்காலம்
அன்புள்ள ஜெ..
அச்சு ஊடகங்கள் நமக்கு அவசியம் என்ற உங்கள் கருத்தில் ஒரு சாமான்யனுக்கு உடன்பாடுதான். ஊரடங்கு நாட்களின் காலையில் ஒரு கடை முன் கூட்டம் நிற்கிறதென்றால் அது நாளிதழ் கடையாக இருக்கும். தளர்வற்ற ஊரடங்கில் கடை திறக்கக்கூடாது என்பதால் அதிகாலையில் சாலையோரத்தில் விற்பனைக்கு வைத்து ஏழு மணிக்குள் விற்றுத்தீர்த்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர்
என்ன அவலமென்றால் , இந்த ஆர்வமெல்லாம் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம்தான்.
இன்றைய மத்திய வர்க்க மற்றும் பணக்கார பதின்பருவருத்தினரால் ( சில விதிவிலக்குகள் தவிர) தமிழை சரளமாக வாசிக்க முடியாது என்பது தங்களுக்கு தெரியாததல்ல.
சேவையை மேம்படுத்துவது , சந்தைப்படுத்தும் யுக்தி , வடிவமைப்பு இவையெல்லாம் இருக்கட்டும்.
தினமும் அச்சிதழைப்படித்தால் ஊக்கத்தொகை என்று சொன்னால்கூட அவர்களால் படிக்க முடியாது.
தமிழ்வழிக்கல்வி என்பது அழிந்து வருகிறது. இப்படி ஒரு நிலையை உருவாக்கிய அரசியல்வாதிகளை மனசாட்சியின்றி ஆதரித்த அச்சிதழ்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருப்பது காலத்தின் விளையாட்டு.
அரசு அறிவிப்பால் தேசத்தில் பதட்டம் என எழுதியவரை அழைத்து உன் மகனுக்கு விபத்து என்றால் பதடுவாயா அல்லது பதறுவாயா என கேள்வி கேட்டு தமிழ் கற்பித்தார் அந்தக்கால தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்.
பதட்டம் பதற்றம் , கருப்பு கறுப்பு , பொருத்து பொறுத்து போன்ற நுட்பங்களெல்லாம்கூட வேண்டாம். எழுவாய் பயனிலை சரியாக இருப்பது , ஒற்றெழுத்துகள் பயன்பாடு , சர்வசாதாரணமான வாசிப்பில் புலப்படக்கூடிய எழுத்துப்பிழைகளை தவிர்த்தல் போன்ற அடிப்படை விஷயங்களைக்கூட அச்சிதழ்கள் கவனிப்பதில்லை. மக்களுக்குப்புரியும்படி சுவாரஸ்யமாக எழுதுகிறோம் என பாவனை செய்து கொண்டு ஐநூறு சொற்களை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு அதில் எழுதுகிறார்கள்
தமிழ் ஆளுமை இல்லை , காலத்துக்குத் தகுந்த புதுமைகள் இல்லை. ஏதாவது கட்சிப் பிரச்சாரம் மட்டும் செய்யத் தெரிந்திருக்கிறது. காசு கொடுத்து கட்சிப்பிரச்சாரத்தை வாங்கிப்படிக்க மக்கள் முட்டாள்கள் அல்லர்
நல்ல விஷயங்களை இணையத்தில் தேடிப்படிக்கிறார்கள் , இலக்கிய உரைகளை இணையத்தில் கேட்கிறார்கள். கலந்துரையாடல்களில் ஆர்வமாய் பங்கேற்கிறார்கள்.
தமிழ் சரளமாக வாசிக்க முடியாத இளைஞர்கள் வெண்முரசு போன்ற இலக்கிய வடிவங்களை ஒலி வடிவில் மாற்றி அனுபவித்து பயனடைகின்றனர். அவர்களை அச்சிதழ்களைப் படிக்கச் சொல்வதே பெரிய வன்முறைதான்.
நீங்கள் சொல்வதுபோல அச்சிதழ்கள் தேவைதான். ஆனால் அச்சிதழ்கள் தமது அரசியல்களால் ஒரு தலைமுறை புதிய வாசகர்களை இழந்து விட்டன
தமது இதழ்களின் பிரதான கட்டுரையாளர்கள் பட்டியல் , அவரவர் கட்சி சார்பு என ஒரு கோப்பு தயார் செய்தால் கட்சிகளின் அடியாளாக தாம் மாறியிருப்பது அவர்களுக்கே தெரிய வரும்
அச்சிதழ்கள் உச்சத்தில் இருந்தகால கட்டத்தில் இலக்கியவாதிகளை துச்சமாகவும் காமெடியன்களாகவும் மக்களுக்குப் புரியும்படி எழுதத்தெரியாத மூடர்கள் என்றும் சித்தரித்தன.
உண்மையில் இன்று மக்களுக்குப்புரியும்படி எழுதும் அவர்களது ஃபேஸ்புக் தமிழ் மக்களுக்குப்பிடிக்கவில்லை. அதைத்தான் அவர்கள் தமது அலைபேசியிலேயே படித்து விடுகிறார்களே.
கட்சி அனுதாபிகளை களைந்து விட்டு , தமிழ் தெரிந்த இலக்கியவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் மட்டுமே அச்சிதழ்கள் பிழைக்கும்
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள ஜெ
அச்சிதழ்களின் எதிர்காலம் கட்டுரையைக் கண்டேன். அதில் நீங்கள் இருவருமே குறிப்பிடுவது இதழ்களின் நடுநிலைமை. அதுதான் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. அந்த நம்பகத்தன்மையே அவர்களின் செல்வம். அதை நம்பியே அவர்கள் சந்தா சேர்க்கமுடியும்.
நடுநிலைமை என்றால் எல்லாரையும் எதிர்ப்பது அல்ல. சில பிரின்சிப்பிள்களை வெளிப்படையாக முன்வைப்பது. இந்து ஆங்கில நாளிதழில் அது உண்டு. அது இடதுசாரிப்பார்வை கொண்ட நாளிதழ். அதை வெளிப்படையாகவே முன்வைக்கிறது. லெஃப்ட் லிபரல் சிந்தனை. ஆனால் அதெல்லாம் கட்டுரைகளில்தான், செய்திகளில் அல்ல. செய்திகளில் எப்போதுமே டேட்டா மட்டும்தான் இருக்கும்
அந்தக்கட்டுரைகளேகூட பார்வைக்கோணம் இடதுபக்கமாக இருக்குமே ஒழிய கூச்சலிடுவது ஆர்ப்பாட்டம்செய்வது கிடையாது. எந்த தனிநபரையும் புகழ்ந்து கொண்டாடுவதில்லை. மாஸ் ஹிஸ்டீரியாவின் பாஷை இல்லை. அதுதான் வாசகனுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது
ஆனால் தமிழ் ஹிந்துவைப் பாருங்கள். தெற்கிலிருந்து ஒரு சூரியன். அது என்ன ஆய்வுநூலா? ஒரு நீத்தார்மடல். அதை எதற்கு இவர்கள் வெளியிடவேண்டும்? அண்ணாத்துரை பற்றி அதேபோல ஒரு euphoria. வாசகர்களில் 90 சதவீதம்பேர் நடுநிலையானவர்கள். கட்சிசார்பானவர்கள் கூட உள்ளூர நடுநிலைச் செய்திகளையே விரும்புவார்கள். அவர்களுக்கு இதைப்பார்த்தால் என்ன தோன்றும்? ஜெயலலிதா இறந்தபோது ‘வங்கக்கடற்கரையில் தங்கம் புதைக்கப்பட்டது’ என்று தினமலர் செய்தி போடுகிறது. நீ எவரை புகழ்கிறாயோ அங்கேபோய் காசு வாங்கிக்கொள், என்னிடம் ஏன் கேட்கிறாய் என்றுதானே பொதுவாசகன் கேட்பான்
உண்மையில் நீங்கள் எழுதியபோது தமிழ் ஹிந்து கும்பலுக்குப் புரியவில்லை. அவர்கள் ஜூனியர்விகடனில் வேலைபார்த்துவிட்டு வந்தவர்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் இந்தமாதிரி ஜர்னலிசம்தான்
இன்னொன்று நியூஸை வியூஸாக எழுதுவது. செய்தி ஆய்வுகளை எவர் செய்யவேண்டும்? அரசியல்நோக்கர் என்று ஏற்கப்பட்டவர்கள் எழுதவேண்டும். அவர்களும் தகவல்களைத்தான் தொகுத்து எழுதவேண்டும். அபிப்பிராயங்களை அல்ல. அபிப்பிராயம் சொல்ல நீயார் என்றுதான் வாசகன் கேட்பான். துறைசார் கட்டுரைகளை அத்துறை நிபுணர்கள்தான் எழுதவேண்டும். எழுத இடமிருக்கிறதே என்று ஜர்னலிஸ்டுகளே இஷ்டத்துக்கு ஆலோசனையும் அபிப்பிராயமும் சொன்னால் அதுவும் நம்பகத்தன்மையை இல்லாமலாக்கும்
பார்ப்போம், இந்த அலைகூட நல்லதுதான். தகுந்தது தப்பிப்பிழைக்கும்
என்.ஜெகன்னாதன்