வெண்முரசு- வினாக்கள்-4

வெண்முரசு விவாதங்கள்

வெண்முரசு படைப்பு மூலமஹாபாரதத்தின் புனிதத்தன்மையை DeMystify செய்கிறது என்ற விமர்சனத்தை எப்படி ஏற்கிறீர்கள் ? அது இன்றைய அல்லது வருங்கால தேவை என நினைக்கிறீர்களா ?

சிவராம் வெங்கடேசன்

அன்புள்ள சிவராம்

ஒருவிஷயத்தை உண்மையிலேயே DeMystify செய்ய முடியுமென்றால் அதை கட்டவிழ்த்துத்தான் ஆகவேண்டும். பொத்திப்பேணலாகாது. அதிலும் தூயஅறிவே பிரம்மம் என்ற மரபில் வந்த நான். எதையுமே வேண்டுமென்றே நான் பூடகமாக்குவதில்லை. என் அறிவின் உச்சவிசையுடன் எல்லாவற்றையும் மோதி உடைத்து தர்க்கபூர்வமாக விளக்கவே முயல்வேன்.

அந்த எல்லைக்கு அப்பால் முடிவின்மையின் மர்மத்துடன் எது நின்றிருக்கிறதோ அதைத்தான் என் படைப்பு மர்மமாக, அப்பாலுள்ளதாக, அறியமுடியாததாக முன்வைக்கும். வெண்முரசில் அவ்வாறு எது விளக்கப்பட்டுள்ளது எது விளக்கத்திற்கு அப்பால் நின்றுள்ளது என்பது வாசகர்கள் கண்டடையவேண்டியது

ஜெ

வெண்முரசு நாவலில் வரும் பிற கதைகள் சூதர் கதைகள், முனிவர்கள் உரைப்பவை மிகவும் பொருத்தமாக இடத்தில் வருகிறது , சிபி சக்கரவர்த்தி தன் உடலை வெட்டி அளிக்கும் கதை வியாசர் பீஷ்மருக்கு உரைப்பதாக வருகிறது

​(முதற்கனல் நாவலில்) . இது போல் பல கதைகள் இந்த connections எப்படி அமைத்தீர்கள்.

 

அசோக் சாம்ராட்

 

அன்புள்ள அசோக்

நான் முன்பும் சொன்னதுதான். வெண்முரசின் ஊடுகதைகள் அதன் தனித்துவமான புனைவுமுறை. செவ்வியலில் அந்த முறை உள்ளது, ஆனால் வெண்முரசில் அது நவீனப்புனைவுமுறையாக உள்ளது. மகாபாரதத்தில் ஒர் ஊடுகதை தற்செயல் இணைப்பாகவே வரும். எவரேனும் ஒரு விளக்கமாக, நினைவுகூர்தலாக ஓரு கதையை இணைப்பார்கள்

வெண்முரசில் சொல்லப்படும் மையக்கதையின் இன்னொரு பக்கத்தை, இன்னொரு இயல்கையைச் சுட்டுவதற்காகவே ஊடுகதை வரும். அது வெளிப்படையாக இல்லாமலிருக்கும். வாசகர்கள் அதை உய்த்துணரவேண்டும், அவ்வளவுதான்.

இந்த இணைப்பை எண்ணி அமைக்கமுடியாது. என்ண எண்ண மலைப்பு மட்டுமே வரும். ஆனால் எழுதும்போதிருக்கும் உயர்நிலை அத்தகைய பல்லாயிரம் இணைப்புக்களை இயல்பாக உருவாக்கும் தன்மைகொண்டது. இத்தனை ஆண்டுகள் மகாபாரதமும் புராணங்களும் பேசப்பட்டும் எவரும் சுட்டாத உள்ளிணைவுகளும் ஒத்திசைவுகளும் வெண்முரசில் வருவதை வாசகர் உணரலாம். உதாரணம், பரசுராமனுக்கும் கர்ணனுக்குமான ஒப்பீடு. தமயந்திகதைக்கும் மகாபாரதக்கதைக்குமான இணையோட்டம்.

வெண்முரசின் முக்கியமான வாசக இடைவெளி இதில்தான் உள்ளது. ஊடு பாவு என ஓடும் வெவ்வேறு கதைச்சரடுகளைக்கொண்டு ஒரு மாபெரும் பின்னலை உருவாக்கிக்கொள்பவனே அதன் வாசகன்

ஜெ

மகாபாரத போரில் கர்ணன் , அர்ஜுனன் , பீஷ்மர் , துரோணர் முதலான முதன்மை வீரர்கள் பயன்படுத்திய பெரு அஸ்திரங்கள் குறித்து மிக விரிவான வர்ணனை கொடுத்தீர்கள். இந்த விஷயங்கள் முழுக்க முழுக்க கற்பனையா ?

இ.ஆர்.சங்கரன்

 

அன்புள்ள சங்கரன்

மகாபாரதப்போரில் பல அஸ்திரங்கள் பேசப்படுகின்றன. அந்த அஸ்திரங்கள் எப்படி அளிக்கப்பட்டன? பொருள்வடிவாகவா அல்லது சொல்வடிவாகவா அல்லது வெறும்பிரக்ஞை வடிவமாகவா? அது சொல்லப்படவில்லை.

பாசுபதம் போல அர்ஜுனன் பெற்ற அரிய அஸ்திரங்களை அவன் போரில் பயன்படுத்தவுமில்லை. போரின் வெற்றிதோல்விகளை பெரும்பாலும் அஸ்திரங்கள் தீர்மானிக்கவில்லை.

ஆகவே அஸ்திரங்கள் என்பவை சிலவகை நுண்ணிய மெய்ஞானங்கள், அல்லது மறைஞானங்கள் என்று நான் எடுத்துக்கொண்டேன். பாசுபதம் பெற்ற கதை அதையே உறுதிசெய்கிறது

ஜெ

​வெண்முரசின் மொழி ரீதியான பங்களிப்பு முக்கியமானது என நம்புகிறேன். குறிப்பாக தனித்தமிழ் சார்ந்து பல ஏற்கத்தக்க நுட்பமான பயன்பாடுகள் உள்ளன. சட்டென ஈற்றரை, பொழுதிணைவு வணக்கம் போன்றவை நினைவுக்கு வருகிறது.

சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள சுனில்

ஆம், ஒவ்வொரு புனைவும் அதற்கான மொழியைக் கண்டடைகிறது. வெண்முரசின் மொழி சீராக உருவாகிவருவதை காண்கிறேன். தொடக்கம் முதலே அது தனித்தமிழ்தான். மழைப்பாடலுக்குப் பின் தூயதமிழாக மாறிவிட்டது.அது அந்நாவல்தொடரின் அகமொழி என நினைக்கிறேன்

அந்த மொழியின் பங்களிப்பென்ன? அது வெண்முரசை சமகாலத்திலிருந்து விலக்கி தொன்மையின் கனவில் நிறுத்துகிறது. பலநுண்ணிய விஷயங்களை கூர்மையாகத் தொகுத்துச் சொல்ல உதவுகிறது. பல இடங்களில் இயல்பாக செய்யுளாகி கவித்துவத்தை அடைகிறது.

ஜெ

​வணக்கம் ஜெ. வெண்முரசில் அரண்மனைச் சித்தரிப்பு, அரச முறைமைகள் பற்றிய விவரிப்பில் நீங்கள் பார்த்தும் கேட்டும் அறிந்த கேரள அல்லது ஐரோப்பிய அரண்மனைகள், அரச முறைமைகளின் தாக்கம் உண்டா?

கணேஷ் கௌரிசங்கர்

அன்புள்ள கணேஷ்

கற்பனைக்கு சில துளிகள் உண்மைபோதும், எஞ்சியவை பெருகும். அரசமுறைமை இன்றும் நீடிக்கும் ஓர் ஊர் கேரளம். இப்போதும் அரசகுடி உள்ளது. ஆசாரமுறைமைகள் நீடிக்கின்றன. நான் மூன்று அரசர்களை நேரில் பார்த்தவன். அவை என்னுள் பதிந்து வளர்ந்தன

ஜெ

அன்பு ஜெ. வெண்முரசை எழுதி முடித்ததில் நீங்கள் முன்பறியா ஒன்றை Discover செய்த விஷயம் இருப்பின் அதை பகிரமுடியுமா ?

சிவராமன்

அன்புள்ள சிவராமன்,

முன்பறியா பல கண்டுகொண்டேன். மெய் என சில. ஏற்கனவே நினைத்தவை பொய் என சில. அவற்றை பகிரமுடியாது

ஜெ

[வெண்முரசு நிறைவை ஒட்டி குருபூர்ணிமாவின்போது நிகழ்த்திய உரையாடலில் எழுத்தில் கேட்கப்பட்ட வினாக்கள்]

முந்தைய கட்டுரைஇந்தியா திரும்பலாமா?
அடுத்த கட்டுரைஉடையாள்- கடிதங்கள்