வெண்முரசின் மொழி குறித்து இந்த கேள்வி. ஒன்றை சரியாகச் சொல்ல, அழகாகச் சொல்ல, குறிப்பிட்ட விதத்தில் விளங்க வைக்க முயற்சிசெய்து கொண்டே இருப்பவர் நீங்கள். வெண்முரசில் நீங்களே உருவாக்கிய சொற்கள், neologisms, குறித்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் குறிப்பாக உங்கள் உவமைகள் குறித்து தனியாக அதிகம் பேசப்படவில்லை. நவீன இலக்கியத்தில் உங்கள் அளவுக்கு அத்தனை விதமாக உவமைகள் கையாள்பவர் வேறு எழுத்தாளர் இருக்கிறார்களா என்றுத் தெரியவில்லை. ரப்பர் முதலே உவமைகள் நிறைய இருக்கிறது. வெண்முரசில் உவமைகள் வேறொரு உச்சத்தை அடைந்திருக்கின்றன. உவமைகள் மீது இத்தனை பரந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது. இதற்கான தயாரிப்புகள் குறித்து சொல்ல முடியுமா?
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஸ்ரீனிவாஸ்
உவமைகள் என்பவை உருவகமொழியின் ஒரு பகுதி.[ Figurative speech] உருவகமொழி என்பது இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று. அத்தகைய மொழி செய்திப்பயன்பாடு போன்ற தளங்களில் பொருள்மயக்கத்தை உருவாக்குவதனால் தவிர்க்கப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் அது ஆதாரமானது
ஏனென்றால் இலக்கியம் உணர்த்துவதன் வழியாகத் தொடர்புறுத்த முயல்கிறது. கூறியவற்றைவிட கூறப்படாதவற்றை வாசகனுக்கு அளிக்கமுயல்கிறது. நேரடியாக எதைச் சொல்லமுடியாதோ, சொன்னால் தொடர்புறுத்தமுடியாதோ அதுதான் எப்போதுமே இலக்கியத்தின் பேசுபொருள்
புனைவின் மொழியை மீமொழி என்கிறார்கள் [Metalanguage] அது மொழிக்குள் செயல்படும் தனிமொழி. ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் சுட்டுவது. புனைவுமொழி படிமங்கள், நுண்ணிய இடைவெளிகள் ஆகியவற்றின் வழியாகவே இயங்கமுடியும். படிமங்கள் உருவகமொழியின் நுண்ணிய அலகுகள். உவமைகள் எல்லாமே படிமங்கள்தான்.
யதார்த்தவாத, இயல்புவாத எழுத்துக்களில் படிமமொழி குறைவாக இருக்கும். ஏனென்றால் அவை வாசகன் அறிந்த அகவுலகைக் காட்டுகின்றன, அவற்றை பெரிதாக வர்ணிக்கவேண்டியதில்லை. அகத்தை அவை பெரிதாக விளக்குவதில்லை, நிகழ்வுகளையே முன்வைக்கின்றன. பெரும்பாலான நவீனத்துவப் படைப்புகள் அத்தகையவை
ஓர் எழுத்தாளன் புறத்தையோ அகத்தையோ எடுத்துச் சொல்லமுயன்றால் ‘போல’ இல்லாமல் சொல்ல முடியாது. நவீனத்துவர் அப்படி எடுத்துச் சொல்வதில்லை. ஒரு தெரு என்றால் அதன்பெயர், அங்கே என்னென்ன இருந்தது, என்னென்ன நிகழ்ந்தது என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்வார்கள். அவர்கள் சொல்லுமிடம் நாம் பார்த்தறிந்த இடமோ, அதைப்போன்ற இன்னொரு இடமோதான். ஆகவே பிரச்சினையில்லை, நாம் அதை அகக்கண்ணால் பார்த்துவிடுவோம். அது அஸ்தினபுரி என்றால்?
நாம் நினைப்பதுண்டு அகம்தான் அருவமானது, புறம் பருவடிவானது என்று. அது மெய்யல்ல. புறமும் அருவமானதே. ஒரு பொருளின் அமைப்பையோ இயல்பையோ இன்னொருவரிடம் சொல்ல முயலுங்கள். படிமங்கள், உவமைகள் தேவையாகும். ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிடாமல் சொல்லவே முடியாது. நாம் நிறங்களையே ஒப்பீடுகள் வழியாகத்தான் சொல்கிறோம்—மாம்பழநிறம், இலைப்பச்சைநிறம்,, வான்நீலநிறம் என்று.
அகத்தைச் சொல்ல புறத்தைத்தான் உவமையாக்கவேண்டும். உள்ளத்தின் இயல்புகளைச் சொல்ல நாம் பயன்படுத்தும் எல்லாச் சொற்றொடர்களும் உவமைகளோ உருவகங்களோதான். உள்ளம் இனித்தது என்றால் என்ன? நினைத்துக் கசப்படைந்தான் என்றால் என்ன?
நவீனத்துவர் உள்ளத்தைச் சொல்ல முயல்வதில்லை. சொல்லாமல் அதை ஒரு பொதுப்படிமமாக நிறுத்துவார்கள், அல்லது நிகழ்வுகளில் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் காட்டும் அந்த அகம் தர்க்கபூர்வமானது, புறவயமான உலகுக்கு நேரடியாகக் கட்டுப்பட்டது. நவீனத்துவத்திற்கு முன்பிருந்த செவ்வியல் எழுத்தும்சரி, கற்பனாவாத எழுத்தும் சரி புறத்திற்கு கட்டுப்படாத அகஎழுச்சிகளை, கொந்தளிப்புகளை,பரவசங்களை நேரடியாகச் சொல்பவை. ஆகவேதான் ‘கங்குல்வெள்ளம்’ [இரவெனும் பெருவெள்ளம்] என்று சொல்லநேர்கிறது.
பின்னர் நவீனத்துவத்தை கடந்துவந்த எழுத்துக்களும் அகத்தின் மீறல்களையும் பாய்ச்சல்களையும் நேரடியாக எழுதமுயன்றன. உன்னதமாக்கல் அவற்றின் இயல்புகளில் ஒன்று. அது படிமமொழி வழியாகவே நிகழமுடியும். படிமமொழியை யதார்த்த உலகில் நிறுவுதல் கடினம். அதற்காகவே மிகைக்கற்பனைகள், மாயயதார்த்தங்கள் உருவாகி வந்தன.
வெண்முரசு நவீனத்துவத்திற்கு முந்தைய செவ்வியல்மரபின் அழகியலை நவீனத்துவத்திற்கு பிந்தைய மீளுருவாக்க முறைப்படி படைப்பாக ஆக்கியிருக்கிறது. அதில் எவரும் காணமுடியாத புறவுலகுகள் வருகின்றன. அதீத அகநிலைகள் வெளிப்படுகின்றன. அவற்றை படிமங்கள் வழியாகவே சொல்லமுடியும். படிமங்களை புனைவுப்பரப்பில் நிறுத்துவதற்கு உகந்த வழி என்பது உவமையாக அவற்றை முன்வைப்பதுதான்
ஜெ
வெண்முரசு தத்துவத்தில் உச்சமாக வேதாந்தத்தை வைக்கிறது. மகாபாரதக் காலத்தில் இருந்ததைப்போல மற்ற தத்துவங்கள் இருக்க வேதாந்தம் உங்கள் குருமரபில் இன்று கிடைத்ததைப் போல இருக்கிறதைப் போல தோன்றுகிறது. இது சரியானதா இல்லை தவறான புரிதலா?
அந்தியூர் மணி
அன்புள்ள மணி
காவியங்கள் எல்லாமே ஒரு தத்துவத்தில் வேரூன்றியவை. பெரும்பாலான காவியகர்த்தர்கள் தங்களுக்கு என ஒரு தத்துவமரபைக் கொண்டிருப்பார்கள். தாந்தே போன்றவர்கள் நேரடியாகவே புனித தாமஸ் அக்வினாஸ் போன்ற ஞானியரின் கலைக்குரலாக ஒலித்தவர்கள்.
வெண்முரசு ஒரு நவீனக்காவியவடிவம். ஆகவே அதற்கும் ஒரு தத்துவ அடிப்படை உண்டு, ஒரு மரபும் உண்டு. அது வேதாந்தம்தான். நாராயணகுருவில் தொடங்கும் நவீன வேதாந்த மரபு அது. அதுதான் அதன் மெய்த்தரிசனம். அதிலிருந்து மேலெழுந்தும் மீறியும் அது செல்லுமிடங்கள் உண்டு. அது கலையின் வழி.
மகாபாரத காலத்தில் என்ன இருந்தது என நமக்குத்தெரியாது. தெரிந்தாலும் அதை அப்படியே திரும்ப உருவாக்க இன்று ஒரு நவீனநாவலை எழுதவேண்டியதில்லை. இன்று ஒரு நவீனநாவல் எழுதப்படுவதென்பது இன்றைய அழகியலைக்கொண்டுதான். இன்றைய தத்துவ, அற, சமூகக் கேள்விகளை ஆராய்வதற்காகத்தான்.
ஆனால் இன்றைய நோக்கில் நேற்றின்மேல் விமர்சனம் வைப்பது அல்ல நான் உத்தேசிப்பது. இன்றைய தேடல்களுக்கு மரபிலிருந்து ஆழ்படிமங்களை எடுத்துக் கையாள்வதும் மறுஆக்கம் செய்வதும்தான். வெண்முரசு பேசுவது அன்றையவாழ்க்கையை அல்ல, இன்றுள்ள வாழ்க்கையை. அன்றைய சூழலில் இன்றைய வாழ்க்கையை எழுதும்போது என்றுமுள்ள உணர்வுகளும் சிந்தனைகளும் மட்டுமே பேசப்படும் வாய்ப்பு அமைகிறது.
ஜெ
வெண்முரசு அத்தியாயங்கள் தினமும் இணையத்தில் வாசிக்கப்பட்டு விவாதங்கள் நடக்கிறது. வாசகர்களின் இந்த பங்கு ஒரு ஆழ்ந்து அமிழ்தல் உணர்வு கூடுதல் அனுபவம் அளித்தது. சிலவற்றில் நீங்களும் பங்கேற்றுள்ளீர்கள். இந்த போக்கை பற்றி உங்கள் கருத்து?.
முரளி
அன்புள்ள முரளி
வெண்முரசு அத்தியாயங்களை நாள்தோறும் வெளியிடாமலிருந்திருந்தால் இத்தனை பக்கங்கள் எழுதியிருக்க மாட்டேன். விரைவிலேயே சலிப்பு வந்திருக்கலாம். கவனம் விலகியிருக்கலாம். எதிரிலமர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தவர்கள்தான் எழுதவைத்தவர்கள்.
இப்படி ஒரு முறை இதற்கு முன்பு இருந்ததில்லை- இது நவீனத்தொழில்நுட்பத்தால் இயல்வதாகிறது. ஆராய்ச்சி செய்ய,எழுத, பிழைதிருத்த, வெளியிட, வாசிக்க, எதிர்வினையாற்ற தொழில்நுட்பம் மிக எளியவழிகளை அளித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது
வாசகர்கள் இருந்ததனால், அவர்கள் தொடர்ந்து வாசித்தமையால், இதை எழுதமுடிந்தது. வாசகர்கள் இல்லாமலிருந்தாலும் சோர்வு உருவாகியிருக்கலாம்.
ஆனால் வாசகர்களுக்கு புரிகிறதா, அவர்கள் ரசிக்கிறார்களா என்பது இந்நாவலின் ஆக்கத்தில் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை. ஏனென்றால் சிறந்த வாசகர்களை மட்டுமே நான் கருத்தில்கொண்டேன். முதற்கனல் தாண்டுவதற்குள்ளாகவே அவர்களை அடையாளம் காணவும் முடிந்தது.
அத்துடன் பெரும்பாலும் பிரசுரமாகும் அத்தியாயம் முன்னரே எழுதப்பட்டிருக்கும். அதற்கான எதிர்வினைகள் வரும்போது நாவல் வெகுவாக முன்னால் சென்றுவிட்டிருக்கும். ஆகவே இது ஓர் உரையாடலாக அமையவில்லை. தமிழ்ச்சூழலில் இப்படிப்பட்ட ஒரு படைப்புக்கு வாசகர்கள் இருப்பார்களா என்ற ஐயம் உருவாக்கும் சோர்வை நீக்கும் காரணியாக மட்டுமே இருந்தது
ஜெ
[வெண்முரசு நிறைவை ஒட்டி குருபூர்ணிமாவின்போது நிகழ்த்திய உரையாடலில் எழுத்தில் கேட்கப்பட்ட வினாக்கள்]