நீலத்தில் மலர்தல்

 

வெண்முரசு விவாதங்கள்

அன்புள்ள ஜெ

நீலம் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இரண்டுமுறை வாசித்துமுடித்து மீண்டும் வாசிக்கிறேன். அதை வாசிப்பதில் ஒரு தொடக்கச் சிக்கல் இருக்கிறது. அதன் ஓசையழகு முதலில் தடையாகவே இருக்கிறது. ஏனென்றால் நாம் எப்போதுமே உரைநடையை ‘அர்த்தம்’ சார்ந்தே வாசித்துப் பழகிவிட்டோம். அர்த்தமெடுக்க தடையாக இந்த ரிட்டாரிக் இருக்கிறது.

ஆனால் இதுவும் நம் வாசிப்பின் ஒருவழிதான், இதுவும் இலக்கியத்தின் ஒரு முறைதான் என்று நமக்கே நாம் சொல்லிக்கொள்ளவேண்டியிருக்கிறது. இன்றைய நவீனச்சூழலுக்கு அன்னியமானது இதிலுள்ள உணர்ச்சிகரமும் மொழியும். ஆனால் இந்த மனநிலைகள் நமக்கும் உரியவைதான். ஒரு நெகிழ்ச்சியின்போது நாம் லாஜிக்கலாக இருப்பதில்லை. கட்டுப்பாட்டுடனும் இருப்பதில்லை. நீலம் ஒரு நெகிழ்ச்சியின் உன்மத்தத்தின் தருணத்தையே நீட்டி நாவலாக ஆக்கியிருக்கிறது

அந்த உணர்வு வந்தபிறகு நீலத்தை மெல்ல நாவுக்குள் சொன்னபடியே வாசித்தேன். சரசரவென்று அத்தியாயங்களைப் புரட்ட நினைக்கவில்லை. நின்று சொல்லிச் சொல்லி வாசித்தேன். தமிழ்மொழியின் சந்தத்தின் அழகு என் மனதை அப்படியே நிறைத்துவிட்டது. இதுபோன்ற ஓர் அனுபவம் எனக்கு தமிழ்நவீன இலக்கியத்தில் இதற்குமுன் உருவானதே இல்லை

கிருஷ்ணா பாலாஜி

நேற்று ஜென்மாஷ்டமி. காலையில் எழுந்ததுமே கண்ணன் நினைப்பு. ஆகவே கண்ணனின் புகழை வாசிப்போம் என்று நினைத்தேன். வழக்கமாக பாகவதம். கூடவே கண்ணன் பாடல்கள். இந்தமுறை நீலம் வாசிக்கலாம் என முடிவுசெய்தேன். ஆகவே…

கண்ணன் பிறந்த நாளில்..

முதற்கனலில் அம்பை, மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும், வண்ணக்கடலில் ஏகலைவனின் அம்மா ஆகிய கதாபாத்திரங்களை மிகவும் விரும்பினேன். வெண்முரசை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருந்தேன். எங்கோ ஒரு உலகிலே இதெல்லாம் உண்மையாகவே நடந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் தோன்றும்

வெண்ணைக்கண்ணன்

முந்தைய கட்டுரைஇருட்டிலிருந்து வெளிச்சம்
அடுத்த கட்டுரைடார்த்தீனியம், கடிதங்கள்-5