அன்புள்ள ஜெ
வண்ணக்கடலின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். நான் முதலில் மழைப்பாடலில் இருந்து இந்நாவலுக்குள் வந்தபோது இது ஏன் வேறுமாதிரி இருக்கிறது என்ற எண்ணம்தான் வந்தது. உண்மையில் இது ஒரு சிக்கலான விஷயம். ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு அமைப்பு. ஆனால் ஒரே கதையின் தொடர்ச்சி. நாம் தொடர்கதையை எதிர்பாக்கையில் இது நாவல் என்று பிடரியில் அறைகிறது
இளநாகனின் பயணம் எதைக் காட்டுகிறது. எனக்கு லாங் ஷாட் மேலும் மேலும் லாங் ஆக மாறுவதையே காட்டுகிறது. முதலில் ஒரு நகரின் கதை- அஸ்தினபுரி. முதற்கனலில் அது வருகிறது. அதன்பிறகு கங்கை- சிந்து சமவெளியின் கதை. அதுதான் மழைப்பாடல். இந்நாவலில் ஒட்டுமொத்தக் கதையும் அப்படியே பாரதவர்ஷத்தின் நிலப்பரப்புக்கு மாற்றப்பட்டுவிடுகிறது. இது பாரதக்கதை என்று சொல்லவிரும்புகிறது வண்ணக்கடல்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவதன் பின்னணியில் பாரதநிலமே அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதையும் வண்ணக்கடல் சொல்கிறது. ஒவ்வொரு சிறுவனுக்கும் தெளிவான குண இயல்புகள் சொல்லப்படுகின்றன. அவர்களுக்கு நடுவே உள்ள வேறுபாடும் சொல்லப்படுகிறது.
அதைவிட இந்நாவலில்தான் கதை முழுக்க நீடிக்கும் வஞ்சங்கள் உருவாகின்றன. இனி ஒருபோதும் திரும்பமுடியாதபடி ஒவ்வொருவரும் வரையறை செய்யப்பட்டுவிடுகிறார்கள்.
எஸ்.சபரிகிரீசன்
வண்ணக்க்கடலில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் தத்துவ விவாதங்களை முறைப்படுத்திப்புரிந்துகொள்ளாமல் அதைச் சரிவர அறியமுடியாது என்ற எண்ணம் வந்தது. முதலில் தத்துவப்பகுதிகளை தனியாக வாசிக்கவேண்டும். கதையின் ஒருபகுதியாக அது மாறி மறைந்துவிடக்கூடாது
வண்ணக்கடல்- அன்னம்
குந்திக்குள் இருந்த அன்னை மிருகம் கொன்று உண்ட குட்டியே கர்ணன் என இப்பகுதி உணர்த்தி செல்கிறது. அது மற்ற ஆதரவற்றிருக்கும் ஐந்து குட்டிகளை காப்பதற்கு ஒரு குட்டியை பலி கொள்கிறது, அதாவது கைவிடுகிறது. குந்தியின் ஆழ்மனம் செல்லும் வழியினை இந்த ஒரு கனவுக்காட்சி விளக்கி செல்கிறது. அற்புதம்.