கருத்து மாறுபடலாகாதா?

மாறுபட்ட கருத்து இருந்தாலும்

‘மாறுபட்ட கருத்து இருந்தாலும்’ எனத்தொடங்கும் கட்டுரையிலுள்ள கருத்துக்களை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு வினா எழுந்து வந்தது. ‘உண்மையிலேயே ஒருவருக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாமல்லவா?. அதை முன்வைத்த பின் அவர் ஒரு படைப்பை ஏற்கலாம் அல்லவா?. அது நேர்மையான ஒரு முன்னறிவிப்பாக ஏன் இருக்கலாகாது?”

சூழலில் இருந்து எழும் எளிமையான கேள்விதான். முதலில் இது சரியானது என்றும் தோன்றும். உண்மையில் இது கருத்துச் செயல்பாடு பற்றிய பிழையான புரிதல்கள் சிலவற்றிலிருந்து வருகிறது. இதிலுள்ள சிக்கல்கள் என்னென்ன?

முதற்சிக்கல் ஒரு படைப்பாளியை, அல்லது சிந்தனையாளரை முழுமையாக அறுதியாiக ஒரு கருத்துநிலையின் கொடியடையாளம் என வகுத்துக்கொள்வது. தன்னையும் அதேபோல ஒரு நிலையடையாளமாக வரையறைசெய்துகொள்வது. ‘இவர் இந்துத்துவா, நான் முற்போக்கு’ என்பதுபோல

அறிவுச்செயல்பாட்டின் ஒன்றாம்வகுப்பில் உருவாகும் சிக்கல் இது. உண்மையில் ஒருவர் இந்த  தேர்வில் வென்றபின்னரே ஒன்றாம் வகுப்பில் நுழையமுடியும். ஒரு கருத்துநிலைச் செயல்பாட்டாளரைக்கூட  நல்ல வாசகன் அவர் அறுதியாக இன்ன கருத்துநிலையின் அடையாளம் மட்டும்தான் என வரையறைசெய்துகொள்ளலாகாது.எவரையும் அவர் ஒரு படைப்பில், ஒரு கட்டுரையில், அந்த வெளிப்பாட்டில் என்ன சொல்கிறார் என்பதைக்கொண்டே அடையாளம் காணவேண்டும். அதைப் புரிந்துகொள்ள அவருடைய படைப்பியக்கத்தை அல்லது சிந்தனைப்பரிணாமத்தை கருத்தில்கொள்ளலாம்.

நம்மையும் அவ்வண்ணம் எங்கும் ஆழமாக நட்டுவிடக்கூடாது. நாம் நம்மை நிலையாக நட்டுவிட்டால் அதன்பின் நாம் வாசகர் அல்ல, சிந்திப்பவர் அல்ல, ஒரு தொண்டன் மட்டுமே.தொண்டர்கள் கருத்துச்செயல்பாட்டுக்குள் வரக்கூடாது. அவர்கள் கொடிபிடிக்கவும் கோஷம்போடவும்தான் செல்லவேண்டும். நம்மை தொண்டனாக நிறுத்திவிட்டு மற்றவர்களையும் தொண்டர்களாக அணுகுவதென்பது தொண்டர்மனநிலையின் மிக ஆதாரமான நிலைபாடு. கருத்துவிவாதத் தளத்தில் அது உச்சகட்ட அசட்டுத்தனம்.

படைப்பாளிகளை அவர்களின் படைப்புகளைக் கொண்டு அணுகவேண்டும். அவர்களை அறுதியாக அடையாளப்படுத்தி வகைப்பாடு செய்வதை எந்த இலக்கியவாசகனும் செய்யமாட்டான். அது அவர்களின் படைப்புக்களை வாசிக்காமலேயே ஒரு முத்திரைபோடுவது. அவர்களை அணுகும் அத்தனை வழிகளையும் மூடிக்கொள்வது. ஓவியனிடம் போய் “நான்லாம் ஓவியங்களை கண்ணைமூடிட்டேதான் சார் பார்ப்பேன்”என்று சொல்வதுபோன்றது

படைப்பாளிகளை வாசித்தபின் விமர்சனரீதியாக வகுப்பது வேறு. அங்கே அழகியல் அடையாளங்களும் அரசியல் அடையாளங்களும் பரிசீலிக்கப்படலாம். வகைபாடு நிகழலாம். அப்போதுகூட அது அவர்களை அறிவதற்கான ஒரு வழிமுறையே. அது அவர்களை முழுமையாக வகுக்காது என்னும் எண்ணம் தேவை.அதை ரத்துசெய்தபடியே அவர்களின் ஒவ்வொரு புதுப்படைப்பையும் படிக்கவேண்டும்.

முன்பு சுந்தர ராமசாமி சொன்னார். ஒருவர் ராமசாமியை அணுகி “சார் நான் நாடார். ஆனாக்க பிராமின் லிட்டரேச்சரும் படிப்பேன். உங்க ரைட்டிங் படிச்சேன்” என்று ஆரம்பித்தார். எரிச்சலே அடையாத ராமசாமியே எரிச்சலடைந்து “படிக்காதீங்க ப்ளீஸ்”என்றார்.

நான் கருத்துரீதியாக முரண்படுகிறேன் என்று எங்கே சொல்லவேண்டும்? ஒருவர் ஒரு கருத்தை தொடர்ச்சியாகச் சொல்கிறார் என்றுகொள்வோம். அதில் ஒருபகுதியை மட்டும் நான் ஏற்கிறேன் என்றால்  ‘பொதுவாக அவருடைய கருத்துநிலைபாடு எனக்கு ஏற்பில்லை, ஆனால் இந்த கருத்து எனக்கு ஏற்புடையதே’ என்று கூறலாம். அது நம் நிலைபாட்டை தெளிவாக்குவது

ஒருவருடைய கருத்துச்செயல்பாடு ஒட்டுமொத்தமாக உங்களுக்கு ஏற்பில்லாதது என்று கொள்வோம். ஆனால் அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் நீங்கள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியிருக்கிறது. அப்போது உங்கள் மறுப்பைச் சொல்லிவிட்டு ஆதரவைச் சொல்லலாம். ஏனென்றால் அந்த ஏற்பு எதற்காக மட்டும் என்று சொல்வதற்காகத்தான்

ஒரு கதையை வாசிக்கும் முன் ஆசிரியனின் கருத்தியலில் ஏற்பில்லை, ஆசிரியருடன் உடன்பாடில்லை என்றெல்லாம் சொல்வது அசட்டுத்தனம். ஆனால் அந்த கதை ஒரு கருத்தியல்நிலைபாடு கொண்டிருக்கிறது என்றுகொள்வோம், அதை நீங்கள் ஏற்கவில்லை ஆனால் அதன் வேறு அம்சங்களில் ஏற்பிருக்கிறது என்றால் உங்கள் மறுப்பை முதலில் சொல்லலாம். ‘சூழியல்கருத்துக்களில் எனக்கு ஏற்பில்லை, ஆனால் யானை டாக்டரின் ஆளுமையும் யானைகளுடனான அவருடைய உறவும் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று ஒருவர் சொல்வது அவருடைய நிலைபாட்டை தெளிவாக்குவது.

சுருக்கமாகச் சொன்னால் ஒருவர் ஒரு கருத்துநிலை சார்ந்து  தன் ஏற்புக்கு முன் மறுப்பைச் சொல்வது விவாதத்தின் ஓர் உத்தி, தேவையென்றால் மட்டும் கையாளலாம். ஓர் ஆளுமையை அணுகும்போதே தன் மறுப்புகளை அறிவித்து தன்னையும் முன்வைப்பது அவரை தனக்குத்தோன்றியவகையில் வரையறைசெய்வது மட்டுமே. அது அத்துமீறல், அல்லது அசட்டுத்தனம். ஒரு படைப்புக்கு முன் அதைச் சொல்வது என்பது படைப்பு என்பது ஓர் அபிப்பிராயம் மட்டுமே என்று புரிந்துகொள்ளும் அறிவின்மை.

முந்தைய கட்டுரைடார்த்தீனியம் [குறுநாவல்]-4
அடுத்த கட்டுரைமுதற்கனல் – எண்ணங்கள்