அன்புள்ள ஜெ,
உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களை கூர்ந்து வாசிப்து உண்டு . முன்னர் உங்களுக்கு வரும் கடிதங்களில் இந்த வரி கண்டிப்பாக இருக்கும் “உங்களின் பல கருத்துகளில் முரண்பாடு இருந்தாலும் நான் உங்கள் வாசகன்” என்று. தற்போது இது குறைவு என்று நெனைக்கிறேன், அல்லது நீங்கள் அந்த வகையான கடிதங்களை வெளியிடுவதில்லை.
ஒருவரை ஏற்றுக்கொள்ளும் போது இந்த disclaimer கண்டிப்பாக சேர்த்து விடுகிறார்கள், இது ஒரு பாதுகாப்பற்ற மனநிலையை வெளிக்காட்டுகிறதா? இல்லை தங்களை உங்களுக்கு இணையாக நிறுத்தி கொள்வதனால் வருகிறதா? எவரும் எதில் முரண்பாடு என்று கூறுவதில்லை அனால் அந்த வரியை சேர்த்துவிடுகிறார்கள். ஒரு எழுத்தாளருக்கு வாசகர்களாய் இருப்பது என்பது ஒரு மாணவப்பருவம், அதில் கொந்தளிப்புகளும் உடைவுகளுமே இருக்கமுடியும். ஆசிரியரில் முரண் கொள்ளவது என்பது கிட்டத்தட்ட அவருக்கு நிகரான ஒரு ஆளுமையை நாம் அடைந்த பின்னரே வரமுடியும் என்பது என் எண்ணம்.அல்லது ஆசிரியருக்கு அனுபவம் இல்லாத வேறு துறைகளில் நாம் நிபுணர்களாய் இருக்கும்போது அதுகுறித்த அவரின் கருத்துகளுடன் முரண்படலாம்.
முன்கூறியவற்றை தவிர்த்து ஆணவத்தை தவிர வேறு ஏதாவது வழிகளில் முரண் கொள்ள முடியுமா?
அன்புடன்
ஆல்வின் அமல்ராஜ்
அன்புள்ள ஆல்வின்
இந்த வரியை நானும் ஒரு புன்னகையுடன் கவனிப்பதுண்டு. இதுவாவது பரவாயில்லை, சுந்தர ராமசாமியை வீட்டுக்குச் சென்று சந்திக்கும்போதுகூட ‘கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் அந்தவழியாகப் போனபோது தற்செயலாகச் சந்தித்தேன்’ என்றவகையில் எழுதும் வழக்கம் இருந்தது.
இது ஏன்?இங்குள்ளது கட்சிகட்டும் வழக்கம். எளிமையான மனிதர்களால் தலைநிமிர்ந்து தனித்துநிற்க முடிவதில்லை.அவர்களுக்கு ஏதாவது ஒரு கூட்டம் தேவையாகிறது, அந்தக்கூட்டம் அவர்களுக்கு ஓர் அடையாளத்தை, தன்னம்பிக்கையை, நிலையான தன்மையை அளிக்கிறது.
இந்தவகையான கட்சிகட்டல்களை இங்கே அரசியலமைப்புக்களே உருவாக்குகின்றன. அவற்றுக்குத்தான் அவ்வாறு உருவாக்கி நிலைநிறுத்தும் அமைப்புவல்லமையும் புறவயமான சில கோட்பாடுகளும் உள்ளன.முற்போக்கு முகாம், இந்துத்துவ முகாம் என்றெல்லாம் இலக்கியத்துள் குழுக்கள் உருவாகின்றன. அதில் உறுப்பினராக இருப்பவர் அந்த கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர், அந்தக் குழுவுக்கு விசுவாசமானவர். அவ்வாறு அவர் தன்னை முன்வைக்கவேண்டும்.
அந்தவகையான குழுக்கள் எல்லாமே விசுவாசத்தால் கட்டப்பட்டவை. விசுவாசம் என்பது அகவயமானது. ஆகவே அதை புறவயமாக நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும். தொடர்ச்சியான சந்தேகமே அந்தக் குழுவின் ஆயுதம். அது வாள்முனைபோல முதுகில் தொட்டுக்கொண்டே இருக்கும். அதன்முன் பதறிக்கொண்டே இருப்பார்கள்.
இந்தக்குழுக்கள் எல்லாமே ‘பிறனை’ கட்டமைக்கின்றன. ‘நாம Xஅவங்க’ என்பதே அவர்களின் வழக்கமான சட்டகம். அதனடிப்படையில் எவரை புறக்கணிக்கவேண்டும், எதிர்க்கவேண்டும் என வரையறைசெய்கின்றன. அவர்கள் மீதான காழ்ப்பையும் வெறுப்பையும் இடைவிடாமல் பயிரிட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன்பொருட்டு தங்களால் வரையறுக்கப்படும் பிறனை தாங்களே ஒருவகையில் சித்தரிக்கின்றன. அவர்களைத் திரிக்கின்றன. அந்த பிறனை தங்கள் உறுப்பினர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளலாகாது என்று வலியுறுத்துகின்றன.
முற்போக்கு முகாம்களில் சுந்தர ராமசாமி எப்போதுமே பேசுபொருளாக இருந்தார்—ஆனால் அவரை வாசிக்கலாகாது என்ற விலக்கும் இருந்தது. அவற்றின் ‘கொள்கைநடத்துநர்கள்’ சொல்வதன் வழியாகவே அவரை உறுப்பினர்கள் வாசிக்கவேண்டும். ஜெயகாந்தனுக்கேகூட அந்த விலக்கு சிலகாலம் இருந்தது.
எப்போதும்அந்த வெறுப்பும் ஒதுக்கும் உண்டு, ஆனால் அன்றெல்லாம் ஒரு நேர்நிலையான இலட்சியக்கனவும் இருந்தது. இன்று அது இல்லை, எதிர்நிலை மட்டுமே. ஆகவே காழ்ப்பும் கசப்பும் இன்று மிகுந்துள்ளது.
அத்துடன் இன்று இந்த இடதுசாரிக்குழுக்கள் மிகமிகச் சிறுத்துள்ளன. அவற்றுக்கு மையக்கட்டுப்பாடு மிகக்குறைவு. கோட்பாட்டுரீதியான வழிகாட்டுதல்களும் மேலிடத்திலிருந்து இல்லை. ஆகவே பலவற்றை இங்கே தனிப்பட்ட காழ்ப்புகொண்டவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். இன்று பல இடதுசாரி பண்பாட்டு அமைப்புகளை நேரடியாகவே மதவெறியர்கள் முன்னெடுத்து வழிநடத்துகிறார்கள். மதவெறியர்கள் திராவிட இயக்க அடையாளத்துடன் செயல்படுகிறார்கள். இந்துத்துவ மதவெறிக்கு எதிரான மதவெறி என்றவகையில் அதை இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்
இச்சூழலில் எவரும் ‘முன்ஜாமீன்’ எடுத்துத்தான் ஆகவேண்டும். இல்லையேல் வந்துகுவியும் காழ்ப்புகளுக்குப் பதில் சொல்லி மாளாது. இங்கே பல இலக்கியவாதிகள் முற்போக்கு முத்திரைக்கு ஏங்குபவர்கள், அதன்பொருட்டு குழைபவர்கள். ஏனென்றால் அங்கே ஒரு சின்ன வாசகர் –நண்பர்வட்டம் தனக்கு அமைகிறது என நம்புபவர்கள் அவர்கள்
ஓர் உதாரணம் சொல்கிறேன். எனக்குத்தெரிந்து கவிஞர் சமயவேல் முற்போக்கு முகாமுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முப்பதாண்டுகளாக முயல்பவர். உரிய கப்பங்கள், முன்ஜாமீன்கள் வாங்காமல் கருத்தே சொல்லாதவர். சமீபத்தில் அவர் பா.செயப்பிரகாசம் என் மேல் வழக்கு தொடுக்கப்போவதாகச் சொன்னபோது பா.செயப்பிரகாசத்தை ஆதரித்துவிட்டு, அவ்வாறு வழக்கு தொடுப்பது தேவையற்றது என்று சொல்லிவிட்டார். அவருடைய தோழர்கள் அவரை சங்கி என்று சொல்லி வசைபாடித் தள்ளிவிட்டார்கள். இதுவே இந்துத்துவத் தரப்பிலும் நிகழ்கிறது.
ஆகவே வேறுவழியே இல்லை, இப்படி ஒரு முன்னறிவுப்புடன் பேசுவது இயல்பானது. அப்படியாவது எதையாவது பேசுகிறார்களே என நினைக்கவேண்டியதுதான். பாருங்கள், இப்படிப்பேசுபவர்கள்தான் அந்தத் தரப்பில் கொஞ்சமாவது படிப்பவர்கள், எதையாவது யோசிப்பவர்கள். மற்றவர்கள் அந்தந்த குழுக்களின் அதிகாரபூர்வநிலைபாட்டை, அதற்குரிய கலைச்சொற்கள் மற்றும் வசைச்சொற்களுடன் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் மட்டுமே.
இந்தக் கருத்தியல்குழுக்களுக்கு இவர்கள் அல்லாத பிறர் அனைவரும் ஏதாவது குழுவைச் சேர்ந்தவர்களே என்று ஓர் எண்ணம் உண்டு. அதெப்படி குழுவாக அன்றி ஒருவன் செயல்படமுடியும் என நினைப்பார்கள். அவர்களிடம் தாங்கள் எதிர்ப்பவர்களை தாக்க ஒரே ஒரு ஆயுதம்தான் இருக்கும். தாங்கள் எதிர்ப்பவர்கள் தங்களுடைய அரசியல் எதிரிகளின் தரப்பினர் என்று சொல்லிவிடுவது.
நீங்கள் இடதுசாரிகள் மற்றும் திராவிட இயக்கத்தவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், கொஞ்சம் சந்தேகப்பட்டால், அவர்கள் சுட்டிக்காட்டும் எதிரிகளை நீங்களும் அவர்களின் சொற்களிலேயே எதிர்க்காவிட்டால், நீங்கள் சங்கிதான். இந்துத்துவர்கள் அதை தேசத்துரோகி அல்லது விலைபோய்விட்டவர் என்று சொல்வார்கள், அவ்வளவுதான் வேறுபாடு.
இப்படி முன்ஜாமீனுடன் எழுதுபவர்கள் ஒரு சாரார். இன்னொரு சாரார் பொதுவான பெயர்களுடன் எழுதுபவர்கள். இவர்கள் எதை அஞ்சுகிறார்கள்? நடைமுறையில் இவர்கள் தன் அருகே இருப்பவரைத்தான் சமாளிக்கவேண்டியிருக்கிறது. அவர் இவருக்கு நண்பராக இருப்பார், பலசமயம் உதவியானவராக இருப்பார். அவரைத்தான் இவர்கள் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
அந்த ‘அருகிருக்கும் நபர்’ இலக்கிய வாசகர் அல்ல, அதற்கான நுண்ணுணர்வு இருக்காது, ஆனால் ஓரு கருத்தியல் அடையாளத்தைச் சுமந்துகொண்டிருப்பார். அது அவருடைய மெய்யான ஆளுமை அல்ல, அவருடைய பொதுப்பிம்பம். அவரே உருவாக்கி முன்வைப்பது. ஆகவே அதை அவர் ஆவேசமாக நடித்தாகவேண்டும்.எனவே வெறிகொண்டு பேசிக்கொண்டிருப்பார், எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பார், தர்க்கத்துக்கான ஒரு வாய்ப்பையும் தவறவிடமாட்டார், ஆனால் எதையுமே தர்க்கபூர்வமாக அணுகமாட்டார், மிகையுணர்ச்சியை முன்வைப்பார், எந்த மாற்றுத்தரப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார், தன் எதிர்த்தரப்பினர் அயோக்கியர்கள் அல்லது முட்டாள்கள் என்பதில் உறுதியாக இருப்பார். அவரை சமாளிக்கவே முடியாது. அவரை வெட்டிவிடவும் முடியாது. அவருடன் விவாதிப்பதென்பது மாபெரும் நேரவிரயம்.
ஆகவேதான் எனக்கு வாசகர் கடிதம் எழுதுபவர்களில் பலர் பொதுப்பெயரை சற்று மாற்றிக்கொண்டு எழுதுகிறார்கள்.ஊர்ப்பெயரை எழுதவிரும்புவதில்லை. மின்னஞ்சல் வெளியிடவும் பலர் தயங்குகிறார்கள். ஆரம்பத்தில் இது ஒரு கோழைத்தனம் என்னும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் சூழலில் இருக்கும் ஒற்றைப்படையான மூர்க்கம், வசைபாடல்களும் ஏளனங்களுமாக வெளிப்படும் வெறி எனக்கே அச்சத்தை அளிக்கிறது. அதற்குப் பழகாதவர்கள் ஆழமான மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டியிருக்கும். அவர்களின் வேலையே கெட்டுப்போகும்.
ஆகவே பரவாயில்லை, நம் அறிவுச்சூழலில் இருக்கும் இந்த மாபெரும் தொற்றுக்கிருமியை சமாளிக்க இப்படி ஒரு முகக்கவசம் அணிவதில் பிழையொன்றுமில்லை
ஜெ