அன்புள்ள ஜெ
நூறுகதைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இக்கதைகளில் பெரும்பகுதியை ஒருவகையான நுணுக்கமான நாடகங்களாகவும் ஆக்கிக்கொள்ள முடிகிறது. அதை நீங்கள் ஆனையில்லா கதையைப்பற்றிய இன்னொரு கதையிலே காட்டியிருந்தீர்கள்.
நானும் மொழி போன்ற கதையை அப்படி ஒரு நாடகமாகவே வாசித்தேன். மொழி கதையிலிருப்பது முடிச்சு அல்ல. சிலபேர் அப்படி என்னிடம் சொன்னார்கள். குழந்தையை அவள் தமையன் தெய்வமொழி பேசி மீட்கும் இடத்தில் கதை முடிந்துவிட்டது என்று ஒருவர் சொன்னார்.
இது ஒரு மனச்சிக்கல். தனக்கு பிடித்த இடத்தில் ‘கதை முடிஞ்சிடிச்சுங்க’ என்று சொன்னால் ஒருவர் தேர்ந்த வாசகர் என்ற பாவலா அமைந்துவிடுகிறது. எழுதுபவனைவிட ஒருபடி மேலாக தன்னை வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த அசட்டுத்தனம் இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு பெருவாரியாக கூடியிருக்கிறது
இந்தக்கதையில் ஏராளமனா கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஒவ்வொருவரும் குழந்தை மாட்டிக்கொண்டதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் கதை. ஒருவருக்கு அது தெய்வங்கள்பேசும் மொழி என்று தோன்றுகிறது. இன்னொருவருக்கு பிசாசின் பாஷை என்று தோன்றுகிறது. அந்த விரிந்த வகைபேதங்கள்தான் அழகான கதையாக இதை ஆக்குகிறது
எஸ்.ராஜேஷ்
அன்பு ஜெ,
“இருக்குத துக்கங்களிலே ஆயிரத்திலே அஞ்சுபோக மிச்சமெல்லாம் ஆத்மநிர்மித துக்கம்தான்.” என்ற வார்த்தைகள் எனக்கு பெரிய திறப்பாய் இருந்தது ஜெ. துக்கத்தை நீங்கள் வகைப்படுத்திய போது ஒவ்வொரு இடத்திலும் நின்று என் துக்கங்களையெல்லாம் பொருத்திப் பார்த்து சரணடைந்தேன். அவற்றைக் கரைத்தேன்.
“மனுஷனுக்க மனசு ஒரு விசித்திரமான விஷயமாக்கும். அது அப்டியே பாற்கடலா எளகும். புளிச்சு நாறி நஞ்சுக்கடலா ஆகும். பூவா விரியும். உடனே அதை முள்ளா மாத்தி தன்னையே குத்திக்குத்தி கிழிப்பான்..” என்பதின் உண்மைகள் என் மனதறிந்தது தான். எத்துனை முறை அப்படி என்னையே நான் என்னையறியாது தண்டித்திருக்கிறேன். இத்துனையும் ஆழ அறிந்தபின், என் மனதை நான் தான் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று தெரிந்தபின் எத்துனை ஆழமாக இறை நம்பிக்கையைத் தழுவ ஆரம்பித்தேன், சரணடைந்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என் துன்பத்தின் அடைக்கலத்தை அணுவணுவாக செதுக்கினேன். அதை நினைக்க சில சொற்களை அன்றாடம் பயன்படுத்தினேன். உடலை வருத்தி மனதை திடமாக்கினேன். அன்றாடம் பேசினேன். என் தூவக்காளியை நானே எனக்காக உருவாக்கினேன். எனக்கு புரியவரும் ஆன்மீகத்தை கோர்த்துக் கொண்டே வந்து அவளை வடிவமைத்து, நான் அடைக்கலம் தேடி என் மனத்தில் பிரதிட்சை செய்திருந்தேன்.
இந்தவுலகில் ஆடுவதும் வேடமிடுவதும் நான்தான் ஆனால் ஆட்டுவிப்பது நீயே என்று சொல்லியே என் மனதை அந்த ஆத்மநிர்மித துக்கத்தினின்று விடுதலை செய்திருக்கிறேன். செய்துகொண்டே இருக்கிறேன். அது எனக்கான என் தூவக்காளி. இதனை இந்தக் கதையில் தான் உணர்ந்தேன் கண்ணீர் பெருக்கோடு.
ஒருவகையில் துன்பங்களின் அனைத்து பரிமாணங்களையும் பல்வேறு கதைகளில் சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். அவை அனைத்தையுமே என் வாழ்வுக்காக கோர்த்துக் கொண்டே வருகிறேன். அது என்னை துன்பத்தைக் கடக்க ஏதுவாக்குகிறது.
ஜெ.. யானையைப் போலவே உங்கள் அடியாழத்தில் விரவிக் கிடக்கும் புற்களைப் பார்க்கிறேன். புற்களைப் பார்க்கும் போது நீங்கள் சொன்னதையே நினைவுகூர்கிறேன். “புல்லு இந்த பூமிக்க நுரையாக்கும். புல்லுக்கு கோடிவிதை. புல்லைத்தின்னும் உயிரும் புல்தின்னியை தின்னும் உயிரும் மட்டும்தான் இந்த பூமியிலே வாழ்ந்திருக்கு.” என்ற வரிகள் நீங்கள் தந்த யானையின் வரிகளைப் போலவே நினைவில் பதிந்துவிட்டது.
ஜெ என்றவுடன் நான் முதலில் நினைவு கூரபவை யானை, புல், நிலவு என்பதாக இன்று உணர்கிறேன். இவற்றை இரசிக்கையில் என் மனம் நினைவுகூறும் முதல் நினைவும் உங்கள் வார்த்தைகள் தான்.
தூவக்காளி என்ற துன்பத் தேற்றிக்காக நன்றி ஜெ. அருமையான கதை.
அன்புடன்
இரம்யா.
அன்புநண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம், நலம்தானே?
மலைவிளிம்பில் சிறுகதை படித்தேன். முதலில் ரப்பர் தோட்டத்திற்குள்ளேயே நுழைந்து விட்டது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது.
சுந்தரத்தை ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் அவன் சூரன்காணியைப் பார்க்க வருகிறான். சுந்தரம் அந்த அளவிற்குக் கதைசொல்லியின் குடும்பத்தை நம்பிக்கைத் துரோகம் செய்து மோசம் செய்து விடுகிறான்.
வீடும் கூடப் போய்விடும் என்னும் நிலை வந்தபின் சுந்தரத்தைப் போய்ப் பார்த்து அவமானப்படுத்தப் படும்போதுதான் அவன் அந்த முடிவுக்கு வருகிறான். ஆனால் சூரன் காணியைப் பார்க்கச் செல்லும் வழியைத் தவறவிடுவதன் மூலம் முதலில் அவன் காக்கப்படுகிறான்.
சரியான வழியில் சென்று காணியைப் பார்த்திருந்தால் சுந்தரத்திற்கு ஏதேனும் தீங்கு செய்திருப்பான்.
எதிர்பாராமல் என்னைக் கொலை செய் என்று சுந்தரமே வந்து நிற்பது போல் வந்து நிற்கும்போது இது தெய்வம் தந்த வாய்ப்பாக நினைக்கிறான். கொல்லத் திட்டமெல்லாம் சரியாகப் போடுகிறான்.
திடீரெனத் தான் சுந்தரத்தைக் கொன்றால் என்ன ஆகுமென்பதை எல்லாம் நினைத்துப் பார்க்கிறான். அவனின் இந்த எண்ண ஓட்டம் முழுதும் உண்மையில் நடப்பதுபோலவே வாசகரை நினைக்க வைப்பதே ஜெயின் எழுத்து வல்லமை.
ஆனால் இன்னும் அவன் சுந்தரத்தைக் கொல்லலாமா என் எண்ணமிட்டுக் கொண்டே பாறை மறைவில் காத்திருப்பதோடு கதை முடிகிறது.
கண்டிப்பாக அவனால் கொலை செய்ய முடியாது என்னும் முடிவுக்கு நாம் வரவே அவனின் எண்ணஓட்டம் வழி வகுக்கிறது. பாவம்தான் அவன்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்றுதானே வள்ளுவர் சொல்லியிருக்கிதார்.
வளவ. துரையன்.