வணக்கம் ஜெ
உங்களுடைய இந்த உரையை கேட்க நேர்ந்ததால், இதுகுறித்து எழுதத் தோன்றியது. நீண்ட நாட்களாகவே இதுகுறித்து எண்ணிக்கொண்டிருந்தேன். தமிழில் எவ்வளவோ நூல்கள் புதிது புதிதாக வருகின்றன. ஆனால் வரலாறு, தத்துவம் தொடர்பான நூல்கள் எவ்வளவு மறுபதிப்பு வருகின்றன என்று பார்த்தல் மிகவும் சொற்பம்- கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். பல தமிழ் நூல்கள் tamildigitallibrary இணையத்தளத்தில் ஒளிநகல் எடுத்துப் பதிவேற்றப்பட்டுள்ளது. அவற்றிலும் முதன்மையான நூல்கள் மறுபதிப்பு வரவில்லை. நீங்கள் குறிப்பிட்டதுபோல் யாரும் இப்போது இதைச் செய்யத் தயாராக இல்லை.
முதன்மையான வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் நூல்கள் கூட மறுபதிப்பு வரவில்லை. அச்சிட்டு வெளியிடாவிட்டாலும் மின்னூல்களாக வெளியிடலாம். OCR தொழில்நுட்பம் மூலம் ஒளிநகல் செய்யப்பட்ட பக்கத்திலுள்ள எழுத்துருக்களை தனியாக Text வடிவத்தில் மாற்றலாம்.ஆனால் அப்படி ஸ்கேன் செய்யப்படவேண்டிய பக்கத்திலுள்ள எழுத்துருக்கள் தெளிவாகவும் இருக்க வேண்டும். அதிலும் பல பிழைகள் வருகின்றன. அவைகளை வாசித்து சரிசெய்வதற்கு முழுவதுமாக தட்டச்சு செய்துவிடலாம்.
மொழிபெயர்ப்பு விஷயம் இன்னும் மோசம். பல மொழிபெயர்ப்பு நூல்கள் வருகின்றன. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட சிந்தனைக் குழுவைச் சார்ந்ததாக உள்ளன. புத்தகக் கண்காட்சியில் பார்த்தால் அதிகமாக மார்க்சிய நூல்களும்,இந்திய-இந்து எதிர்ப்பு நூல்களுமே கண்ணில் படுகின்றன. அவை தவறில்லை. ஆனால் அதற்கு மட்டும் எப்படி இவ்வளவு மொழிபெயர்ப்பு வேலை செய்யப்படுகிறது ? சுடச்சுட மொழிபெயர்ப்பு வந்துவிடுகிறது.
நீலகண்ட சாஸ்திரியின் மூன்று நூல்கள் தவிர வேறு எந்த நூலும் தமிழில் இல்லை, மகாத்மா காந்தி நூல்வரிசை என்கிற பழைய தொகுப்பு நூல்களில் இரண்டு மூன்று தலைப்புகள் மட்டுமே இப்போது மறுபதிப்பில் உள்ளன. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பி.டி.சீனிவாச ஐயங்காரின் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லை.
இவையெல்லாவற்றையும் விடக் கொடுமையானது, உங்களுடைய ஆறு தரிசனங்கள் நூலைப் படித்த பின்பு, அவை அனைத்தையும் தனித்தனியாக மூலநூல்களில் படித்துவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் யோக சூத்திரம், சில வேதாந்த நூல்கள் தவிர்த்து வேறு எந்த நூலும் தமிழில் இல்லை. ஆனால் அவை அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன. என்ன ஆச்சர்யம் என்றால், சமஸ்கிருதம் நம்மை விட ஆங்கிலேயர்களுக்கு அணுக்கமானதா என்ன ? அவர்கள் இவ்வளவு பெரிய உழைப்பைச் செய்து அனைத்தையும் தங்கள் மொழிக்கு மொழிபெயர்த்துள்ளனர். அந்த சுரணை கூட நமக்கில்லை.
மேலும் ஆங்கில நூல்கள் பல்வேறு இணையதளங்களில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றில் பல இலவசமாகக் கிடைக்கின்றன. Project Gutenberg காப்புரிமை இல்லாமல் இலவசமாக நூல்களை வாசிக்கக் கொடுக்கிறது. தமிழிலும் Project Madurai இலக்கிய நூல்கள் அனைத்தையும் அச்சேற்றியிருக்கிறது. ஆனால் ஆங்கிலேயர்களின் பிரம்மாண்டமான மொழிபெயர்ப்புப் பணியுடன் ஒப்பிடும்பொழுது நாம் செய்தது சொற்பமே. Amazon Kindle ஐத் திறந்தால் தமிழ் நூல்களில் உருப்படியானவை என்றால் பாதிக்கும் குறைவுதான். இந்திய அரசு, மொழிபெயர்ப்பு மையம் ஒன்றை உருவாக்கி பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது. அது மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. தமிழில் இதுவரை இரண்டு நூல்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.
மேலும் இயந்திர மொழிபெயர்ப்பு அவ்வளவு சரளமாக இல்லை. Google மொழிபெயர்ப்பு ஓரளவு சரியாக மொழிபெயர்க்கிறது. இருப்பினும் பல இடங்களில் வாக்கியம் முன்பின் தவறாக அமைந்துவிடுகிறது. மேலும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான பல தமிழ் சொற்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை.
நிதிப்பிரச்சனை என்பதைவிட நாம் அதுகுறித்து கண்டும் காணாமலும் இருப்பதே இதற்குக் காரணம் என நினைக்கிறேன்.
-விவேக்
அன்புள்ள விவேக்,
பலகாரணங்களைச் சொல்லலாம். அதில் முதன்மையான காரணம் நாம் நம்முடைய முதன்மையான அறிவுச்செயல்பாட்டை ஆங்கிலத்தில்தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பது. மதம், தத்துவம்,அரசியல்கோட்பாடு, வரலாற்றாய்வு,சமூகவியலாய்வு உள்ளிட்ட எல்லாமே ஆங்கிலத்தில்தான். ஆகவேதான் ஆங்கிலத்தில் எல்லா நூல்களும் வெளிவருகின்றன.
அடுத்தபடியாக அரசுகளின் அக்கறையின்மை. இங்கே தமிழ் தமிழ் என்னும் குரல்கள் கேட்கும் அளவுக்கு எவருக்கும் ஆர்வம் ஏதும் இல்லை என்பதே உண்மை.கேரள அரசின் பதிப்புத்துறை கேரளம் சார்ந்த எல்லா நூல்களையும் மலையாளத்திற்கு கொண்டுவந்துள்ளது. சம்ஸ்கிருத மூலநூல்களையும் தமிழ், பாலி மூலநூல்களையும் தொடர்ச்சியாக கொண்டுவருகிறது. லாபநோக்கமில்லாத ஓர் அமைப்பே இதைச் செய்யமுடியும். அப்படி தமிழில் அமைப்புக்கள் இல்லை. இத்தனைக்கும் செம்மொழி அந்தஸ்துபெற்ற தமிழுக்கு மலையாளத்தைவிட பலமடங்கு நிதிவரவு உள்ளது. அது வீணடிக்கப்படுகிறது
இதற்கு அப்பால் கிடைக்கும் நூல்களைப்பற்றி எந்தப்பேச்சும் இல்லை. பலநூல்களை இணையத்தில் தேடினால் ஒருவர்கூட ஓரிடத்தில்கூட குறிப்பிட்டதில்லை என்று காண்கிறோம். அறிவியக்கம் மேல் எவருக்கும் மதிப்பில்லை, அதில் ஈடுபாடுகாட்டுபவர்களும் அருகிவருகின்றனர். அதன்விளையே இந்நிலைமை
ஜெ