மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
க்ளப் டென் சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பாக தோல்பாவை நிழற்்கூத்து கலைஞர்களின் நல்வாழ்வுக்காக நிதி திரட்டும் பொருட்டு இணையவழி நிகழ்வு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தோம் அதற்காக சாகுல் ஹமீது அவர்கள் எழுதிய கடிதம் உங்கள் தளத்தில் வெளியானதால் உலகம் முழுவதுமுள்ள உங்கள் வாசகர்கள் கண்டதோடு மனமுவந்து நிறைய பொருளுதவியும் செய்தார்கள்
அந்தப் பணத்தில் தோல்பாவைக் கூத்து நடத்தும் கலைஞர்களுக்கு சுயமாக தொழில் செய்வதற்கான தளவாட பொருட்களை நேற்று வாங்கிக் கொடுத்தோம் அதற்காக உங்களுக்கு கிளப் டென்் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இத்துடன் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த நிகழ்ச்சியின் யூடியூப் சுட்டியை இணைத்துள்ளேன்.
Warm Regards,
Club Ten Team
அன்புள்ள கிளப் டென் அமைப்பினருக்கு
நீங்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியை யூடியூபில் பார்த்தேன். பறக்கை போன்ற ஊர்களில் தெருவில் சிறுவர் புடைசூழ அமர்ந்து பார்க்கும் தோல்பாவைக்கூத்து ஒரு காலப்பயணம். அந்நினைவை உருவாக்கியது நிகழ்ச்சி
உங்கள் முயற்சிக்கு என் நன்றி
ஜெ
***
அன்புள்ள ஜெ
கிளப் டென் அமைப்பு தோல்பாவை கலைஞர்களுக்காக எடுத்த முயற்சியை கண்டேன். உண்மையில் பெருமைகொள்ளத்தக்க நிகழ்வு. இணையம் வழியாக அந்த நிகழ்ச்சியையும் பார்க்கமுடிந்தது. இளமைக்கால நினைவுகளை உருவாக்கியது
தோல்பாவைக் கூத்து போன்ற கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இன்று ஐரோப்பாவில் அதைப்போன்றவற்றை காக்கவும் வளர்க்கவும் பெரும் நிதி செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசும் பெருநிறுவனங்களும் செய்யவேண்டிய பணியை தனியார் கூட்டமைப்புக்கள் செய்வது வருத்தம் அளித்தாலும்கூட அதற்கும் சிலர் இருப்பது மகிழ்ச்சியாகவும் இருந்தது
ராஜ்குமார்