தலைமகனின் சொற்கள்

சி.வை.தாமோதரம்பிள்ளை

தமிழியக்கம் என்னும் அலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைவுபெற்றது. தமிழை காலத்திற்கேற்ப மாற்றுவது, தமிழிலக்கியங்களைப் பேணுவது, தமிழை ஒரு பண்பாட்டு அடையாளமாக நிலைகொள்ளசெய்வது ஆகிய அடிப்படை நோக்கங்கள் கொண்டது அவ்வியக்கம். தமிழ்க்கல்வி இயக்கம், தமிழ்ப் பதிப்பியக்கம், தனித்தமிழியக்கம், தமிழிசை இயக்கம் என பல கிளைகளாக அது செயல்பட்டது.

தமிழ்ப்பதிப்பியக்கத்தில் உ.வே.சாமிநாதய்யர் பரவலாக அறியப்பட்டவர். அறியப்படாதோர் பலர் உள்ளனர். சிலப்பதிகாரத்தை பதிப்பித்த சௌரிப்பெருமாள் அரங்கன், நாலடியார் நைடதம் முதலியவற்றை வெளியிட்ட களத்தூர் வேதகிரி முதலியார், தொல்காப்பியம் முதலியவற்றை பதிப்பித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை என அதன் முதன்மை ஆளுமைகள் பலர் உண்டு. அவர்களில் சாமிநாதய்யருக்கு நிகராக கருதப்படுபவர் சி.வை.தாமோதரம்பிள்ளை.

ஈழத்துத் தமிழறிஞரான சி.வை.தாமோதரம்பிள்ளை தமிழ்ப்பதிப்பியக்கத்திலும், தமிழ்க்கல்வி இயக்கத்திலும் பெரும்பங்காற்றியவர். ஈழத்தில் சிறுபிட்டியை சேர்ந்த கிங்ஸ்பரி வைரவநாதனின் மைந்தர் தாமோதரம்பிள்ளை. அவர் தந்தை வழியில் கிறிஸ்தவர், பின்னாளில் சைவராக மாறினார். கத்தோலிக்கர்கள் ஈழத்தில் நிறுவிய வட்டுக்கோட்டை செமினாரியில் கல்வி பயின்று கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது குமரகுருபரரின் ‘நீதிநெறிவிளக்கம்’ என்ற நூலை மாணவர்களுக்காக உரையுடன் ஏட்டிலிருந்து பதிப்பித்தார். அதுதன அவர் பதிப்பியக்கத்திற்குள் நுழைந்த வழி.

சேனாவரையர் உரையுடன் தொல்காப்பியத்தை நல்லூர் ஆறுமுகநாவலர் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார்.  திருவாவடுதுறை மடத்துடன் தொடர்பிலிருந்த சி.வை.தாமோதரம்பிள்ளை திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் உதவியுடன் வீரசோழியம் ,தணிகைபுராணம் போன்ற நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.அவருடைய முதன்மையான பதிப்புச்சாதனை கலித்தொகையை 1887ல் உரையுடன் வெளியிட்டதுதான்.

கலித்தொகையின் புகழ்பெற்ற பதிப்புரையை நாம் பள்ளிப்பாடநூலிலேயே வாசித்திருப்போம். “பழைய சுவடிகள் யாவுங் கிலமாய் ஒன்றொன்றாய் அழிந்துபோகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதிவைப்பாரும் இலர். துரைத்தனத்தாருக்கு அதன் மேல் இலட்சியமில்லை. சரஸ்வதியை தம்பால் வகிக்கப்பெற்ற வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க்கின்றாளில்லை. திருவிடையீர், நுங்கருணை இந்நாள் தவறினால் பின்பு தவம்புரிந்தாலும் ஒருதரம் அழிந்த தமிழ் நூற்களை மீட்டல் அரிது. யானைவாய்ப்பட்ட விளாம்பழத்தை பின் இலண்டத்துள் எடுத்துமென்? ஓடொன்றோ கிட்டுவது?”

இவ்வரிகளில் இருக்கும் அறைகூவல் அந்தக்காலத்தையது மட்டுமல்ல எக்காலத்திலும் அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் தமிழ்ச்சமூகத்தை நோக்கி விடுக்கப்படுவது. கற்பாறையில் மண்டையால் முட்டிக்கொண்டு கதறுவதுபோன்ற ஓலம். அன்று சுவடிகளுக்காக. இன்று நாள்தோறும் மணல்வீச்சினாலும் மற்ற ‘திருப்பணிகளாலும்’ அழிந்துகொண்டிருக்கும் சிற்பங்களுக்கும் கல்வெட்டுகளுக்குமாக. அன்றுமின்றும் தமிழ்ச்சமூகம் பெரும்பாலும் பண்பாட்டுநோக்கற்ற, செவியற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது

சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் பதிப்புரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார் ப.சரவணன். காலமென்னும் நதியில் நீந்தி மூழ்கி மீட்டெடுத்த சுவடிகளாலானது நம் தமிழ்மரபு. அதன் முன்னோடி வீரர்களில் ஒருவரின் தன்னுரைகள் இவை. நம் பண்பாட்டுப்போரின் ஆவணங்கள். தமிழ்ப்பதிப்பியக்கத்தை சற்று அறிந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதிலுள்ள பதிப்புரைகளை வாசிக்கமுடியும்

அன்று சொற்களுக்குப் பொருள்கொள்வதென்பது ஒரு பெரிய தேடல். ஏனென்றால் தமிழிலக்கியங்கள் தோன்றிய அறிவுப்புலத்தில் இருநூறாண்டுகள் இடைவெளி விழுந்துவிட்டிருந்தது. பெரும்பாலான நூல்கள் இரண்டுமூன்று தலைமுறைகளாகவே எவராலும் பயிலப்படவில்லை. சொற்களுக்குப் பொருள் அளிக்கும் வாழ்க்கைச்சூழலும் மாறிவிட்டிருந்தது. ஆகவே உரையுடன் பதிப்பிப்பதென்பது பல ஆண்டுகள் நாள்தோறும் செய்யவேண்டிய கடும் உழைப்பாக இருந்தது

அந்த உழைப்பின் பேருருவை இந்தப் பதிப்புரைகளில் காணலாம். “விடியல வெங்கதிர் காயும் வெய்மலகலறை என்னும் வாக்கியத்தையும் ஒரு பரிபாடல் செய்யுளையும் பிரித்துணர்வதற்கு எத்தனை புலவரிடம் கொண்டு திரிந்தேன். எத்தனை வித்துவான்களுக்கு கடிதமெழுதிக் கைசலித்தேன். எனக்கு வந்த மறுமொழிகளைச் சொன்னால் வெட்க்கக்கேடு என்றறிக” என்று சி.வை.தாமோதரம் பிள்ளை குறிப்பிடுகிறார்

அதைவிட முக்கியமானது சரியான பாடத்தை அறிவது. இன்று அப்பதிப்புகளைக் காண்கையில் மிகமிக விரிவான பாடபேதங்கள் இருப்பதைக் காணலாம். ஏட்டில் பார்த்து எழுதும்போது உருவாகும் பிழைகளே மிகுதியும். பஞ்சபாண்டவர் கட்டில்கால் போல மூன்று என்று இருவிரலை காட்டினான் என்பதில்  ‘விரலை வாலென்றும் கட்டிலை கடல் என்றும் பஞ்சபாண்டவரை பிஞ்சுபாகற்காய் என்றும் எழுதி வைத்தால் அம்மொழியை சரிப்படுத்தல் இலேசாகுமா?”என்று பகடியாக எழுதுகிறார் பிள்ளையவர்கள்.

வெறும்பதிப்புரைகள் அல்ல இவை. பதிப்பாசிரியர்களில் உ.வே.சாமிநாதய்யருக்குள் ஒரு எழுத்துக்கலைஞர் இருந்தார் என்பதை பின்னாளில் அவர் எழுதிய  என்சரித்திரம், மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வரலாறு, நினைவுக்குறிப்புகள் போன்ற உரைநடை நூல்கள் காட்டின. அவருக்கு நிகரான ஒரு எழுத்துக்கலைஞரை நாம் சி.வை.தாமோதரம் பிள்ளை நூல்களிலும் காணலாம். ஓர் இலக்கியவாசகனுக்கு அத்தகைய வரிகள் மின்னல்கள்போல வந்து தொட்டுச்சென்றுகொண்டே இருக்கும் அனுபவம் இந்நூலில் அமையும். இலக்கியவாதியாக எனக்கு இந்நூலின் முதன்மையான கொடை இதுதான்

தமிழில் சங்கம் மருவிய காலத்தில் சமணர் காலம் தொடங்கியதை இவ்வாறு சொல்கிறார் பிள்ளையவர்கள். “சங்கத்தின் பிற்காலம் சமணர் தலைப்பட்டது தாயிறந்த பெண்ணுக்கோர் சற்குணம் நிறைந்த சிற்றாத்தாள் வாய்த்தது போலும்”

பள்ளி கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கும் முறையை “நீந்துதல் தொழிலை கற்பிப்பான் ஒரு நீராசிரியன் கற்பானை ஏரி நதி கிணறு குளங்களில் இறங்க விடாது குடத்தில் தண்ணீர் மொண்டு சிறு குழியில் விட்டு கால்மறையா தண்ணீரில் மாரடிக்க விட்டாற்போல…” என்கிறு பிள்ளையவர்கள் குறிப்பிடுகிறார்.

பொதுவாக பிள்ளையவர்கள் நகைச்சுவையுணர்ச்சியுடன் எதையும் எழுதவில்லை. பெரும்பாலான தருணங்களில் ஒருவகை சீற்றத்துடனேயே எழுதுகிறார். அவ்வப்போது கடுமையாக மறுக்கிறார். அவருடைய சீற்றத்தினூடாக இயல்பான நகைநுண்ணுணர்வு வெளிப்படும்போதுதான் அழகான மொழிவெளிப்பாடுகள் அமைகின்றன

ஆய்வுரைகளை சுருக்கமாகவே எழுதியிருக்கிறார். ஆயினும் முப்பால் என்பது பழையபிரதிகளில் திருக்குறளைக் குறிப்பிடுவதாகாது என்பதுபோன்ற பல விவாதங்களை அக்காலத்தில் பிள்ளையவர்கள் உருவாக்கியிருக்கிறார் என்பது இவற்றினூடாகத் தெரிகிறது.

தமிழ்ச்செய்யுட்களை பொருள்கொள்வது இன்று, இத்தனை உரைகளுக்குப்பின்னர் இயந்திரத்தனமாக நிகழும் ஒரு செயலாக மாறிவிட்டிருக்கிறது. ஒருநூற்றாண்டுக்கு முன் அது மரபு என்னும் காட்டுயானைக்கு முன்னால் நின்று அதனுடன் பேசமுற்படுவதுபோல் இருந்திருப்பதை இந்நூலின் விவாதங்கள் காட்டுகின்றன

ஒரு தலைமகனின் சொற்கள் என்னும் உணர்வு இந்நூலை வாசிக்கையில் நெகிழவைக்கிறது. கூடவே இத்தனை பேருழைப்பால் உருவான தமிழியக்கத்தின் அலைகள் இன்று முற்றாகவே அழிந்துவிட்டதை, மரபிலக்கியத்தின் மீதான வாசிப்பும் ஆய்வும் அருகிவிட்டிருப்பதை உணரும் துயரும் உருவாகிறது

இப்பதிப்புரைகளை வெவ்வேறு தொன்மையான ஆவணக்காப்பகங்களில் இருந்து தேடி எழுத்துப் பிழைகளைந்து அழகிய பதிப்பாகக் கொண்டுவந்திருக்கும் ப.சரவணன் வாசகர்களின் நன்றிக்குரியவர். இன்றும் எஞ்சும் அவரைப் போன்றவர்களால்தான் தமிழ் வாழ்கிறது.

தாமோதரம்- ப.சரவணன் காலச்சுவடு பதிப்பகம்

ப.சரவணன், ஆய்வாளர்
சிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

சி.வை. தாமோதரம் பிள்ளை தமிழ் விக்கி

உ.வே.சாமிநாதையர் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஉடையாள்-9
அடுத்த கட்டுரைதலைவியர் எண்மர்