இளிப்பியல்

ஒரு நாளில் எப்படியும் பதினைந்து இருபது ஏளனப்படங்கள் [மீம்ஸ்] எனக்கு வந்துவிடுகின்றன. ஒரு கேலிச்சித்திரத்தை [கார்ட்டூன்] உருவாக்குவது கடினம். அதை வரையவேண்டும், அதற்கு கலைஞன் வேண்டும். ஏளனப்படத்தை எவர் வேண்டுமென்றாலும் உருவாக்கலாம். அதற்கு மென்பொருட்களே உள்ளன.

அவற்றை பரப்புவதும் எளிது. தீவிரமான ஒரு நிலைபாடு கொண்டிருந்தால்போதும், அதன் ஆதரவாளர்கள் அதை தலைக்கொண்டு பரப்புவார்கள். அது ஒருநாள் முதல் கூடிப்போனால் ஒருவாரம் வரை உலவி மறையும். வடிவேலு ஏளனப்படங்களின் நாயகன். அடுத்தபடியாக கவுண்டமணி.

ஆரம்பத்தில் ஒரு மெல்லிய ஈடுபாடு இருந்தது. சிரிப்பதுமுண்டு. ஆனால் வரவர எரிச்சல் ஏற்படுகிறது. அனுப்புபவரை உடனே பிளாக் செய்துவிடுகிறேன். அப்படி நூறுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை தடுத்துவிட்டேன். ஆனாலும் வந்துகொண்டே இருக்கின்றன

இன்றைய சமூக ஊடகவெளி ஏளனங்களால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை கீழ்த்தரமாக பகடி செய்கிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரால் கோமாளியாக காட்டப்படுகிறார். இதில் ஒருவரை கோமாளியாக காட்டுபவர் ஒன்றை அறிவதில்லை, அவரால் ஆதரிக்கப்படுபவரும் அதேபோல மறுதரப்பால் கோமாளியாக்கப்படுவார். முகமிலியாகிய பெருந்திரள் அத்தனை பேரையும் கோமாளிகளாக ஆக்கி அமர்ந்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

அடிப்படையில் இதிலுள்ள சிக்கல் சாமானியனின் காழ்ப்புதான். அவன் முகமிலி. தன்முகத்தை இரவுபகலாக புகைப்படம் எடுத்து சமூகவலைத் தளத்தில் போட்டுக்கொண்டே இருந்தாலும் அவன் முகமிலிதான். ஆகவே அறியப்படும் முகங்களை கேலி செய்வதில் அவனுக்கு ஒரு தன்மகிழ்வு உருவாகிறது.

ஒரு முக்கியமான நபரை கேலி செய்து ‘கெக்கெக்’ என்று சிரிப்பவன் வரலாற்றில் பரிதாபத்துக்குரிய ஒரு வெறுந்துகள். அவனால் எதையும் தீவிரமாக செய்யவோ புரிந்துகொள்ளவோ எதிர்வினையாற்றவோ முடியாது. ஆனால் அதற்கப்பால் எழும் ஆற்றலுடையவர்களும் அதேபோல அசட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள். அதன் வழியாக அறியாமலேயே தன்னையும் வெறுந்துகளாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த சமூகவலைத்தள நையாண்டிகள் வெளிவந்து கொண்டிருந்தபோது நானும் கல்பற்றா நாராயணனும் அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அன்று இங்கும் கேரளத்திலும்  ‘பின்நவீனத்துவ’ அறிவுஜீவிகள் அது ஓர் அதிகார எதிர்ப்புச் செயல்பாடு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதிகாரத்தின் அடையாளங்களை ‘மக்கள்’ நையாண்டி செய்து தலைகீழாக்குகிறார்கள், அதன்வழியாக அதிகாரத்தை ‘கொட்டிக்கவிழ்க்கிறார்கள்’ வகையான சளசள.

கல்பற்றா சொன்னார், இங்கே மக்கள் என்பதே அதிகாரத்தால் கட்டமைக்கப்படும் அடையாளமாகத்தான் உள்ளது. அந்த அடையாளங்களை மக்களிடமைருந்து அகற்றி வேறொருவகையில் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்வதுதான் பெரிய அறைகூவலாக உள்ளது.

“இன்று திரண்டுவந்துள்ள இந்த ‘மக்கள்’ என்பவர்கள் நவீனத்தொழில்நுட்ப உதவியுடன் அதிகாரத்தால் திரட்டி எடுக்கப்பட்டவர்கள். அவர்களைக் கொண்டு அதிகாரம் எதையும் செய்ய முடியும்” என்றார் கல்பற்றா நாராயணன்.

“அடிப்படையில் இந்தக் கேலி மாற்றத்துக்காக நிலைகொள்பவர்களை காலி செய்வதில்தான் சென்று முடியும். சீரிய அரசியல் பிரச்சினைகளை பேசமுடியாமலாக்கும். மேலோட்டமான இளிப்பை மக்களுக்கு அளித்து அவர்களை அமரச்செய்துவிடும்” கல்பற்றா சொன்னார்.

அது உண்மையாகிவிட்டிருப்பதையே இன்று காண்கிறேன். ஒன்று இன்று எல்லாமே நையாண்டிதான். அத்தனைபேரும் வசை – நையாண்டி குரலில்தான் பேசுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் பொறுப்பான குரலில் பேசிக்கொண்டிருந்த பலரும் இந்த மொழிக்கு மாறிவிட்டார்கள். இல்லையென்றால் எவரும் கவனிப்பதில்லை.

இது நம்முடைய சொல்லாடல்களை எல்லாம் சல்லிசாக்கிவிட்டது. ஒரு தலைப்பின் ஊடுபாவுகளை இன்று பேசமுடியாது. உட்சிக்கல்களை ஆராயமுடியாது. ஒற்றை நிலைபாட்டை நையாண்டியாகவும் வசையாகவும் முன்வைக்க மட்டுமே முடியும். இந்த அழகியலுக்கு இளிப்பியல் என்று பெயர்சூட்டலாம்.

நான் கேலியை, பகடியை எதிர்க்கவில்லை. அது என்றுமிருக்கும். ஆனால் இன்றிருப்பது கேலியோ பகடியோ அல்ல வெற்று இளிப்பு. கேலியிலும் பகடியிலும் ஒர் அறிவுத்தன்மை இருக்கும், நாம் யோசிப்பதற்கு ஏதாவது இருக்கும். இளிப்பு வெறும் காழ்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகிறது. கேலியிலும் பகடியும் சற்று நன்னோக்கம், நாகரீகம் இருக்கும். இளிப்பு காறித்துப்புவதுபோல.

“ஒரு ஐம்பதுபக்க கட்டுரையை இன்று ஒரு மீம் சொல்லிட்டு போய்ட்டே இருக்கு” என்று ஒரு பின்நவீனத்துவ ஆத்மா சொன்னதைக் கேட்டேன். ‘என் மூளைக்கு அவ்வளவுதான் புரிகிறது, அவ்வளவுதான் எனக்குத்தேவை’ என்பதே அந்தக்குரலின் பொருள்.

அரசியல், சமூகவியல், பொருளியல், இலக்கியம், தத்துவம் எதுவானாலும் எளிமைப்படுத்துவதே தேக்கநிலை. அதுதான் ஆதிக்கத்திற்குச் சாதகமான நிலை. முழுச்சிக்கல்களுடன், முழுமையான உள்ளோட்டங்களுடன் புரிந்துகொள்ள முயல்வதே எதிர்ப்புநிலை, படைப்பூக்கம் கொண்ட நிலை.

எளிமைப்படுத்துவதை இன்று எல்லாரும் செய்கிறார்கள். ஆனால் ஓர் எதிர்ப்பரசியல், ஒரு படைப்புச்செயல்பாடு தன்னை எளிமைப்படுத்திக் கொண்டால் தன் தரப்பை தானே அழிக்கிறது. தன் எதிர்த்தரப்பை எளிமைப்படுத்திக்கொண்டால் வேறுவழியில்லாமல் தன்னையும் எளிமைப்படுத்திக் கொள்கிறது.

வேறுவழியில்லாமல் நாம் இந்த இளிப்பரசியலுக்குள் சென்றுவிட்டோம். இது உண்மையான பிரச்சினைகளை, அவற்றைப் பேசுபவர்களையே அறுதியாக பலிகொள்ளும். அதைப் புரிந்துகொண்டு, தீவிரமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டிய பொழுது வந்தணைந்துள்ளது.

அதற்கு முதலில் நம் எதிரிகளை நோக்கி இளிப்பதை நாம் நிறுத்தவேண்டும். எதிரிகள் நம்மை நோக்கி இளிக்கட்டும், அதற்கு எதிராக பலமுகம் கொண்ட உண்மையை நிறுத்துவோம் என்று முடிவெடுக்கவேண்டும். அது ஒன்றே இந்த இளிப்பு யுகத்தைக் கடந்துசெல்ல ஒரே வழி.

முந்தைய கட்டுரைஉடையாள்-7
அடுத்த கட்டுரைநீலமும் சன்னதமும்