டார்த்தீனியம் [குறுநாவல்]-5

கடும் காய்ச்சலும், பிரக்ஞை தவறிய மனசுமாக,  காம்ப்புக்குத் திரும்பினேன்.  அப்பு மாமா ரொம்பச் சொன்னார்.  ஆனால் ஊரில் மேலும் ஒரு கணம் கூட தங்க என்னால் முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.  வந்ததுமே ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். நினைவே இல்லை.

மூன்றாம் நாள் கண் விழித்தபோது, என்னைச் சுற்றி டாக்டர்கள், ஸ்குவாட்ரன் லீடர் அருகே அமர்ந்து, என் கையை எடுத்து தன் பெரிய கைக்குள் வைத்துக்கொண்டார்.  கெட்டியான மீசையுடன் கூடிய, சதுர முகத்தில் கவலையும் கனிவும்.

“அச்சா பேட்டா.  யுவார் ஆல் ரைட் நௌ” என்றார்.  பிறகு எல்லோரும் வெளியேறிய பிறகு,  “இதோ பார் உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.  நேரடியாகக் கேட்கிறேன்.  நீ என்ன போதை மருந்தை உபயோகிக்கிறாய்?”

” இல்லை” என்றேன்.

“மறுத்தால் முடியாது.  உன் சிம்டம்ஸை ஆராய்ந்து வருகிறார்கள்.  மிக மோசமானபடி நீ அடிக்ட் ஆகியிருக்கிறாய்.  என்ன மருந்து அது? சொல்லிவிடு.  உன்னைக் குணப்படுத்தத்தான் கேட்கிறோம்”.

நான் அழுதேன்.  எந்தப் போதைப் பொருளையும் தொட்டதே இல்லை என சத்தியம் செய்தேன்.

டாக்டர் வந்து கத்தினார்.  ” உன் கைகளையும் நகத்தையும் பார். முட்டாள்.  நீ யாரை ஏமாற்றுகிறாய்?” என்று கூவினார்.  என் கைகளை அப்போதுதான் கவனித்தேன்.  அவை இள நீல நிறத்தில் இருந்தன.  நகங்கள் சாம்பல் நிறமாக!

நான் உரக்க வீரிட்டேன்.  மீண்டும் நினைவிழந்தேன்.  மறுபடி விழித்துக்கொண்டபோது, இன்னும் பெரிய ஆஸ்பத்திரியில் இன்னும் பெரிய அறையில் சிக்கலான இயந்திரங்களுக்கு மத்தியில் இருந்தேன்.

அன்று ஒரு டாக்டர் குழு என்னை விசாரணை செய்தது.  என்ன மருந்து தின்றாய்?  மார்ஃபினில் வளரும் பாம்பை விட்டு நாவில் கொத்த வைத்து போதை அடைகிறார்களே அதை உபயோகித்தாயா?  சீனா நாட்டு குட்டிப்பாம்பு, மண்புழு போன்றது, அதை நரம்பில்  கொத்த விட்டு போதை பெற்றாயா? அது எங்கே?  காம்ப்பில் எங்கே வைத்திருக்கிறாய்?  புட்டியில் அடைத்து வைத்திருக்கிறாயா? எங்கே?

எனக்குத் தலை சுற்றியது.  ஒன்றுமே புரியவில்லை என்றேன்.  பெரிய டாக்டர் சீறினார்.  “முட்டாள்.   உனக்குத் தெரியுமா? உன் ரத்தத்தை ஒரு அவுன்ஸ் எடுத்து ஒரு யானையின் உடம்பில் செலுத்தினால் அது செத்துப்போகும்.  அத்தனை விஷம்.  எப்படி அது உன் உடம்பில் ஏறியது?  எப்படி படிப்படியாக இப்படி விஷமானாய்?”

என் கண்கள் இருண்டன.  பாய்ந்து டாக்டரைப் பிடிக்கப் போனேன்.  அவர் பதறி விலகினார்.  “நீ யாரையும் தொடக்கூடாது.  உன் நகமே விஷம்” என்றார்.

“டாக்டர் நான் பிழைப்பேனா?” என்றேன்.

” நீ உண்மையைச் சொல்லு” என்றார்.

நான் எல்லாவற்றையும் கொட்டினேன்.  அவர்கள் துளிக்கூட நம்பவில்லை.  கடைசியில் ஒருவர் ” சோ, உன் வீட்டருகே கருநாகங்கள் நடமாட்டம் அதிகம்?” என்றார்.

” ஆமாம். இந்தச் செடி வந்தபிறகு” என்றேன்.

“கருநாகம் சிறு வயதிலேயே உன்னைக் கடித்திருக்கிறதா?

நான் குழம்பி ” இருக்கலாம்” என்றேன்.  போய் விட்டார்கள்.

என் உடம்பின் ரத்தம் முழுக்க அகற்றப் பட்டது.  எட்டு மாதங்களுக்குப் பிறகு உடம்பெங்கும் தோழர்களின் ரத்தம் பாய புது மனிதனாக எழுந்தேன்.  என் நோய் நாளில் எனக்கு வந்த கடிதங்களைப் படித்தேன்.  கருப்பன் வெளியே வந்து ஏழெட்டு பசுக்களைக் கடித்து விட்டது.  கடிபட்ட உயிர்கள் உடனே இறந்துவிட்டன.  அதற்கு கடும் விஷ சக்தி இருந்தது.  கடைசியில் அது முத்தனைக் கடித்துக் கொன்றபோது, அதை பொறி வைத்துப் பிடித்து, சுட்டுவிட்டார்கள்.  எப்றாய் டாக்டர் தான் சுட்டவர்.

மறு வாரத்துக் கடிதத்தில், அப்பாவின் மரணம்.  வற்றி உலர்ந்த பிணத்தை வெகு தூரத்திலிருந்து தான் பார்க்க முடிந்ததாம்.  அவர் மரணத்தினால்தான் கருப்பன் வெளியே வந்திருக்கிறது.  வீட்டுக்குள் யாரும் புக முடியாது.  அத்தனை புதர் நெரிசல், பாம்புகள்.  அப்பா அங்கேயே மக்கிப் போகும்படி விட்டுவிட வேண்டியதுதான்.

நீ உடனே லீவு போட்டு வா’ என்றிருந்தார் அப்பு மாமா.  ஒரு மகாருத்ர ஹோமமும், அப்பாவின் ஆத்ம சாந்திக்கு ஒரு யாகமும் பண்ண வேண்டும்.  அவருடைய கடைசிச் சடங்குகளையும் நீத்தார் கடன்களையும் முறைப்படி செய்ய வேண்டும்.  ஆத்மாவை அலையும்படி விட்டு விடக்கூடாது.

என்னுடைய தலைமுடி உதிர்ந்து, நகங்கள் உதிர்ந்தன.  புருவமும், இமைகளும்கூட உதிர்ந்தன.  மெதுவாக நடைபிணம் போல ஆனேன்.  பிறகு மெல்ல மீண்டேன்.  மனமும் உடலும் வேகமாய் தளிர்விட்டு தழைக்க ஆரம்பித்தன.  நீண்ட நோய்ப்படுக்கை எனக்கு ஒருவிதமான எதிர்மறை உத்வேகத்தை உண்டு பண்ணி, நான் சதா என் உடம்பைப் பற்றியே எண்ணுபவனாக ஆனேன்.  பயங்கரமாய் சாப்பிட்டேன்.  ஓயாமல் உடற்பயிற்சி செய்தேன்.  மிக விரைவில் கட்டுமஸ்தாக ஆகிவிட்டேன்.  மீசை தடித்தது.  மனமும் முரடாக ஆனது.

நான் ஊருக்குப் போகவில்லை.  ஊரையே என் மனசை விட்டு கழட்டிப் போட்டுவிட்டேன்.  மாமிச உணவும் உடல் வலிமையும் என்னை காமத்தை நோக்கி இட்டுச் சென்றன.  திளைத்தேன்.  போகம் சொறியச் சொறிய நமைச்சலெடுக்கும் சிரங்கு.  என் மனசுக்குள் வேறு நினைப்புகளுக்கோ நெகிழ்ச்சிகளுக்கோ இடமில்லாமல் ஆயிற்று.  ஒவ்வொரு நாள் காலையிலும் அன்றைய போதை பற்றிய ஆர்வப் பரபரப்புடன் எழுந்தேன்.

என்னை கிழக்கு மாகாணங்களுக்கு மாற்றினார்கள்  இரண்டு முறை ஹெலிகாப்டர் சாகஸங்களில் ஈடுபட்டு, ரிகார்டுகளைப் பெற்றேன்.  பறத்தலின் உத்வேகம், தரையில் மஞ்சள் பெண்கள் தரும் வெறி.  நான் முதல் நிலை பைலட்டாக உயர்ந்தேன்.  லெஃப்டினன்ட் பதவிக்கான பட்டைகளை அணிந்து பெருமிதப் பட்டுக்கொண்டேன்.  வாழ்வும் லட்சியமும் ராணுவமே என்று ஆகியது.

என்னுடைய முகம் மாறிவிட்டிருப்பதை ஒருநாள் கண்ணாடியில் பார்த்தபோது கவனித்தேன்.  கன்னங்கள் தொங்கி, கழுத்து தடித்து, கண் கீழே பைகள் விழுந்து, தடித்த மீசையும், ஷேவிங் பச்சை கன்னங்களும், முன் வழுக்கையும், கரிய உதடுகளுமாக எத்தனையோ ராணுவ முகங்களில் ஒன்றாக என்னுடையதும் ஆகிவிட்டிருந்தது.  வன்முறையும் வக்கிரமும் என் முகத்தில் தெரிந்தது.  அவை எனக்கு திருப்தி தந்தன.  எனினும் நினைவின் தொலை தூரத்தில் தெரிந்த அந்தப் பையன் முகம் ஒருவித ஏக்கத்தையே ஏற்படுத்தியது.

விடுமுறைகளில் காஷ்மீரில் அலைந்தேன்.  கயாவிற்குப் போனேன்.  அஸ்ஸாம் காடுகளில் வேட்டையாடினேன்.  ஊருக்குப் போவது பற்றி மட்டும் எண்ணவே இல்லை.  ஒருநாள் இரவு விழித்துக்கொண்டேன்.  ரம்மின் குமட்டல் வயிற்றுக்குள் இருந்துகொண்டே இருந்தது.  மெல்ல மீண்டும் நினைவு மயங்கியபோது, தெளிவாக அம்மாவைக் கண்டேன்.  நானும் அப்பாவும் ஒரு கற்படி மீது அமர்ந்திருக்கிறோம்.  அம்மா கருப்பனுடன் மணல் மீது நடக்கிறாள்  அப்பால் ஆறு மதிய வெயிலில் தளதளத்தது.  கண் கூசும் ஒளி!  நான் அப்பாவிடம் அவர் தாடையைத் தொட்டு, அம்மாவைக் கூப்பிடும்படி கெஞ்சினேன்.  அப்போதுதான் நான் ஒரு சிறு பையன் என்பது எனக்குத் தெரிந்தது.  அம்மாவை தண்ணீர் அடித்துக் கொண்டு போய்விடும் என்று பயந்தேன்.  “அம்மா! அம்மா!”

கண் விழித்தேன்.  தலையணை நனைய நனைய கண்ணீர் விட்டிருப்பதை  உணர்ந்தேன்.  எழுந்து அமர்ந்து, ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன்.  எனது இன்றைய வாழ்வு நான் ஆடும் ஒரு வேஷ நாடகம் என்று புரிந்தது.  எப்படியும் வாழ்ந்துவிடவேண்டும் என்ற இயல்பான வெறி உயிரைக் குடைந்து துரத்த, என் மனம் போட்ட வேஷம்!  உள்ளே அப்புண் பச்சையாக, ரத்தம் சிந்த அப்படியேதான் இருக்கிறது.  இத்தனை வருடம் என்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.

மறு விடுமுறையில் ஊருக்கு வந்தேன்.  வரும் வழிநெடுக உணர்ச்சி வசப்படக் கூடாது, நான் இத்தனை நாள் சேர்த்துக் கொண்ட முரட்டுத்தனங்களை முழுக்க சேர்த்து என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், என்று நினைத்தபடியேதான் வந்தேன்.  எப்படி அன்னியன் போல வீட்டை போய் பார்ப்பது என்று மாற்றி மாற்றி திட்டம் போட்டேன்.

ஆனால் ஊரில் பஸ் இறங்கிய அக்கணமே கலங்கிப் பதறிப் போய்விட்டேன்.  தொண்டை கரகரத்தது.  உடம்பு நடுங்க நின்றேன்.  பெட்டியை நாகர்கோவில் விடுதியில் வைத்துவிட்டு வந்திருந்தேன்.  கருப்புக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு நடந்தேன்.  வெயில் கொதித்த மத்தியானம்.  ஜங்ஷனில் மனித வாடையே இல்லை.  செம்மண் தூசியில் ஷூ பதிந்து தடம் போட்டது.  சருகுகள் மெல்லிய காற்றில் சலனம் கொண்டன.  எதிரே வந்த பாச்சியும், செல்ல முத்துவும் என்னைப் பார்த்துவிட்டு, வெற்று முகத்துடன் போனார்கள்.  என் முகம் ஒரு முகமூடி போல என்னை மறைத்தது.  உள்ளூர நான் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.

அப்பாவும் நானும் சேர்ந்து பஸ் பிடிக்க வருகிற சாலை!  அவர் எனக்காக மாங்காய் அடித்து தந்த மாமரம்! அப்பு மாமாவின் வீட்டு முகப்பு!  யாரும் இல்லை.  உதடுகளை இறுக்கியபடி நடந்தேன்.  கால்கள் தன்னிச்சையாக நடந்தன.  யாரும் எதிரே வரலாகாது என்று பிரார்த்தனை செய்தேன்.  எந்த மானுட முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை அப்போது.   நினைவுகள் என்னுள் கொதித்தன.  குமிழியிட்டன.  கடவுளே! சம்பவங்கள் எப்படி வெறும் நினைவுகளாக ஆகிவிடுகின்றன!  உருவங்களுக்கும் அருவங்களுக்குமான இடைவெளி எத்தனை சன்னமானது!  இருபது வருடங்கள் எப்படி  ‘இருந்ததா?’ என்பது போல ஆகிவிட்டன!

ராஜப்பாவின் வீடு இருந்த இடத்தில் மண்மேடு, குமாரசாமியின் வீடும் இல்லை.  மூலைக்கல் வீடு பழையது!  பேய் மாளிகை போல மக்கிப்போய் நின்றிருந்தது. அந்தப் பகுதியை நெருங்க நெருங்க ஒன்று தெரிந்தது.  அப்பகுதியில் மனித வாடையே இல்லை.  பறவைகளின் ஒலி கூட இல்லை.  மெல்ல மெல்ல காய்ந்த மரங்களும், புதர்களும் தென்பட ஆரம்பித்தன.  சற்று நேரத்தில், காய்ந்த தோட்டங்கள் மட்டும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படுகிற, மண் நிறமும், பழுப்பு நிறமும் மட்டும் உள்ள ஒரு உலகில் நான் நின்றிருந்தேன்!  சகல மரங்களும் சருகு சுள்ளிக் குவியல்கள்.  காற்று கடந்து சென்றபோது சரசரவென்ற பேரோசை எழுந்தது!

ஏறத்தாழ நாற்பதடி தொலைவில், மூலை திரும்பியபோதே, என் வீடு திடுதிப்பென்று கண்ணில் பட்டது.  எதிர்பார்த்த காட்சிதான் என்றாலும் என் உணர்வுகள் உறைந்து போயின.  நெருங்கிப் போகப் போக அந்தக் காட்சி பெரும் விரிவுடன் என்னை நோக்கி வந்தது!  கருநாகம் ஒன்று கோழி முட்டையை உறிஞ்சி விட்டு, ஓட்டை சுற்றி நெரிப்பது போல அந்த மாபெரும் கொடி எங்கள் வீட்டை சுற்றி இறுக்கியிருந்தது.  உத்தரங்களும் சட்டங்களும் நீண்டு துருத்தியிருந்தன.  சுவர்கள் விரிசலிட்டு விட்டிருந்தன.  வீடு நொறுங்கும் ஒலி கேட்பது போலிருந்தது. நூறு நூறு கிளைகளினால் அப்பிராந்தியத்தையே நிறைத்திருந்தது டார்த்தீனியம்!  உருண்ட வழவழப்பான பெரிய கிளைகள். கரிய தகடுகளாய் இலைகள்.  கிளைகள் முறுகியும் விலகியும் உறுமல்போல ஒலித்தன.   காற்று வீசியபோது அது சீறுவது போலிருந்தது.

பீதியும் அசாதாரணமான ஒரு கவர்ச்சியும், என்னை அப்படியே பிரமை பிடித்து நிற்க வைத்தன.  எத்தனை நேரம் என்று தெரியவில்லை.  கண்களை மூடினால் இமைகளுக்கு உள்ளேயும் அந்த பயங்கரக் கருமை நெளிந்தது!  சட்டென்று, அதன் கொட்டை ஒன்று உதிர்ந்ததைக் கவனித்தேன்.  விதையா?  ஓரடி முன்னால் வைத்து உற்று கவனித்தேன்.  அதன் கிளைகள் முழுக்க கொத்து கொத்தாக விதைகள் அடர்ந்திருப்பதை மூச்சடைய வைத்த அச்சத்துடன் கண்டேன்!

[முற்றும்]

[கணையாழி 1992 இதழில் வெளிவந்த குறுநாவல்- தி.ஜானகிராமன் குறுநாவல்போட்டியில் பரிசுபெற்றது]

நன்றி நா.சந்திரசேகரன்

கணையாழி,டார்த்தீனியம்

முந்தைய கட்டுரைஇரு கேள்விகள்
அடுத்த கட்டுரைவிளைநிலத்தில் வாழ்வது