டார்த்தீனியம் [குறுநாவல்]-2

விடிவதற்குள்ளேயே அரக்கப்பரக்க எழுந்து அந்தச் செடியைப் பார்க்க விரைந்தேன். அதற்குள் அப்பா அங்கு வந்து அதன் முன் குனிந்து அமர்ந்திருந்தார். அருகே காலி பக்கெட்.

“வாடா” என்றார் அப்பா. “பார்த்தியா, ஒரே ராத்திரிக்குள்ள முளை விட்டிருக்கு”

எனக்குள் மிகச் சன்னமாய் நேற்றைய பீதி மீண்டது. தூரத்திலேயே தயங்கி நின்றேன்.

அப்பா அதனருகே கையைக் கழுவினார். உதறியபடி, “எப்ராய் டாக்டருக்கே இந்த செடியப் பத்தி ஒண்ணும் தெரியாது.  கோவளத்திலே ஒரு துரை ரெண்டு கொட்டை கொடுத்தானாம்.  நட்டுப் பாத்திருக்கார்.  கறுப்பா மொளைச்சதாம்.  ஒண்ணை நான் பிடுங்கிட்டு வந்துட்டேன்.  துரை இதும்பேர் பிளாக் டெவில்னானாம்.  ஒரிஜினல் பேரு டார்த்தீனியம்னு பத்மநாபன் டாக்டர் சொன்னார்.  எப்படியிருக்கு பாத்தியா?” அப்பா ஒருவித பரவச நிலையில் இருந்தார்.

தயங்கியபடி அதைப் பார்த்தேன்.  அந்த செடி கருமையான இரு முளைகளுடன் இரண்டு இஞ்ச் வளர்ந்திருந்தது.

“எங்கே உங்கம்மா?”

“உள்ளேயிருக்கா”

“ராத்திரியெல்லாம் ஒரே பினாத்தல். என்னத்தை கனவு கண்டாளோ என்ன இழவோ. கனகுவை இன்னிக்கு குளிப்பாட்டணும்”

அன்று ஞாயிற்றுக்கிழமை என நினைவு கூர்ந்தேன்.

“அப்பா”

“ஏண்டா?”

“இது வேணாம்பா”

அப்பா நின்றார். அவர் முகம் தீவிரமடைந்தது.  “ஏண்டா?” என்றார்.

“பயமாயிருக்குப்பா”

சிரித்தபடி என்னை தோளில் தொட்டு “முட்டாப்பயலே. அவ என்னமோ பினாத்தினா ஆம்பிளைச் சிங்கம் நீ எதுக்குடா பயப்படறே?  பாரேன்.  சாயந்திரம் அவளே தண்ணி விடுவாள்”

“வேணாம்ப்பா”

“உளறாதே.  வாடா கனகுக்கண்ணூ  குளிக்கலாமாடீ?” அப்பா நடந்தார்.

“டேய். கருப்பனை அவுத்துக்க”

அப்பா கருப்பனுக்கான சோப்பை எடுத்தார். கருப்பன் அதைப் பார்த்தது. “உய்ய்ய்ங்” என்று தீனமாய் ஒரு கதறல். அதன் உடல் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்தது.  காதை மடித்து மூக்கை தாழ்த்தி வால் நுனி மடிந்து வந்து அடிவயிற்றில் ஒட்ட மூலையில் பதுங்கியது.  சோகம் தாங்காமல் அரற்ற ஆரம்பித்துவிட்டது.  நான் அருகே போனபோது அடிக்க வருபவனைப் பார்ப்பதுபோல் “அய்யாங்” என்று வீரிட்டது.  அவிழ்த்தேன். மேலும் மூலையில் ஒடுங்கியது. இழுத்தபோது வலுக்கூட்டி வர மறுத்தது.  கண்ணீருடன் கூடிய விம்மல்கள் வேறு.

“வர மாட்டேங்குதுப்பா.  பாவம் குளியல்னாலே அதுக்குப் பிடிக்கலை”

“வாடா கறுப்பா. இதபார், மெதுவா குளிப்பாட்டுவேனாம். உனக்கு இன்னிக்கு பிரியாணி வேணுமா வேணாமா?”

கருப்பன் அப்பவிடம் மன்றாடியது.  “ஞய்” என்றது.

அப்பா குச்சி ஒன்றை கையிலெடுத்தார்.  “எழும்புடா. சொன்னா கேக்க மாட்டே?” ஓங்கினார்.  “வள்ள்” என்று பல்லைக் காட்டியது.  முன்காலைத் தூக்கி தடுக்க முயன்றது. மீண்டும் ஓங்கினார்.  பயங்கர ஊளையுடன் நகர்ந்து வெளியே வந்தது.

அப்பா கனகுவை அவிழ்த்துக் கொண்டார். அது எழுந்து வாலைத்தூக்கி சாணி போட்டுவிட்டு பின்காலால் ஒயிலாக காதை உரசியது ” போலாம்டா” என்றார் அப்பா.  கிளம்பு என்பதுபோல அதை மெதுவாய் தட்டினார்.

கனகு திரும்பி, தன் பிள்ளைக்கு சத்தம் காட்டிவிட்டு, அப்பாவிற்கு பின்னால் பதவிசாக வந்தது.  மக்ரூணி கயிறு இழுபட பின்னால் வந்து நடக்கும் தாயின் கால்களுக்குள் மூஞ்சியை நுழைத்து, முலையைத் தொட முயன்றது.  முடியவில்லை. அலுப்புற்று பக்கவாட்டில் திரும்பி பராக்குடன் நடந்தது. கீழே கிடந்த மாஞ்சருகு ஒன்றை கவ்விய பிறகு அவசரமாய்  எங்கள் பின்னால் ஓடி வந்தது.  தாண்டிச்சென்று பெரிய மனுஷத் தோரணயாய் காத்து நின்றது.  கனகு அதை ஒரிரு முறை அதட்டியது.  மக்ரூணி அதை அலட்சியப்படுத்தி முன்னால் ஓடியது. புதருக்குள் ஒலிகள் கேட்டபோது செவிகளைத் தூக்கி கண்களை உருட்டி கவனித்தது. பிறகு அப்பவிடம் “ம்பேய்” என்றது.

ஆங்காங்கே நின்று கால் தூக்கி பிஸ் அடித்த கருப்பன் “அடப்பாவிகளா” என்ற முகபாவத்துடன் வந்தது.  வால் இன்னமும் நிமிரவில்லை.

ஆற்றில் நிறையப் பெண்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.  மணலில் குழந்தைகள் விளையாடின. ஒரே கூச்சல்.  துணி துவைக்கும் ஓசை.  வெயிலில் நீர்த்துளிகள் கண்ணாடி சில்லுகளாய் தெறித்தன.  ஜலம் ததும்பியபோது அலைகள் கண் கூச வைத்தன.  வண்ணாரக் கல்லில் பத்திருபது பேர் தொழில் முறை லாவகத்துடன் துவைக்கும் தாளம்.  அவர்களுக்கு மேலே குட்டி வானவில் ஒன்று தெரிந்தது.  நீர் ஆழமற்றது போல தன் அடிப்பரப்பைக் காட்டியது. பொன்னிறப் படுகை.  நீந்தும் மீன்களின் நிழல் விழுந்து நெளிந்தோடினது அதன் மீது.  காற்றில் மீன்கள் அவ்வப்போது தாவி எழும் பளிச் பளிச்கள்.

புன்னை மரத்தடியில் ஆளில்லை.  அப்பா தாழையின் வேரில் கனகுவைக் கட்டினார்.  அதைப் பின் நின்று உந்தி நீரில் இறக்கினார்.  கனகு உடலைக் குறுக்கி பச்சையாக சிறுநீர் கழித்தது.  தண்ணீரை முகர்ந்து உஸ்ஸ் என்று சீறி ஒரு மிடறு விழுங்கியது.  பிறகு தலையை அண்ணாந்தபடி நீரில் இறங்கியது.  அப்பா அதன் முதுகில் நீரை அள்ளிக் கொட்டினார்.  திவலைகள் உருண்டன.  கனகு கண்களை மூடி பெருமூச்சு விட்டது.  ஒரு முறை அமிழ்ந்து எழும்பி மூக்கைத் திறந்து சீறியது.  தன் பையனிடம் “ம்பா” என்றது.

மக்ரூணி அப்பாவை ஆவலுடன் பார்த்தது.   அப்பா அதை பின்னிருந்து உந்தினார்.  ஒரு நிமிடம் எதிர்பலம் காட்டிவிட்டு பிறகு ஒரே தாவு.  மிதந்து தாயை அணுகி நீரில் முங்கி முலை தேடியது.  அதிருப்தியுடன் எழுந்து காதுகளை சிலுப்பியபடி விலகி நீந்தியது.  மிதந்து அசையும் புன்னை மரப்பூக்களை கனகு நாக்கு நீட்டி பொறுக்க முயன்றது.   அதன் வால் பெண்களின் கூந்தல் நுனிபோல மிதந்தது.

கறுப்பன் ஆழ்ந்த சோகத்துடன் கரையில் அமர்ந்திருந்தது.  துக்கம் தாளாமல் தவித்தபடி காலை மாற்றி ஊன்றிக் கொண்டது.  முன் கால் ஒன்றை சற்று தூக்கி வைத்திருந்தது.  அடிபட்டது போல அடிக்கடி அரற்றிக் கொண்டது.

நானும் அப்பாவும் அதைப் பார்த்தோம்.  குண்டுக் கட்டாக தூக்கி நீரில் வீசினோம்.  செத்தேன் என்பது போல ஒரு அலறல்.  பிறகு ஆவேசமாய் கரை நோக்கி நீந்தி வந்தது.  நானும் அப்பாவும் அதன் தலையை நனைத்துவிட சிரமப்பட்டு நீரை விசிறினோம்.  “பாத்துடா மூக்கில் பூந்துடப்போறது”

கரையேறி வெடவெடவென்று நடுங்கியது.  ரொம்பவும் ஒடிசலாய் அது ஆகிவிட்டிருந்தது.  வால் நுனி துடித்தது.  அப்பா அதற்கு நுரை பொங்க சோப்பு போட்டார்.  சோப்பை நக்கி விட்டு மூன்று நாள் வீட்டுச் சூழலை நாறடித்து விடும் பழக்கம் அதற்கு உண்டு.   எனவே அதன் தலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.  என் கைகளை நக்கியது.  மீண்டும் தண்ணீரில் போட்டோம்.  அந்தப் பகுதியைக் கலக்கும்படி ஊளையும் கதறலும் எழுந்தன.  நாலைந்து குழந்தைகள் வேடிக்கை பார்க்கக் கூடின. கறுப்பன் “உர்ர்?” என்று அவர்களை கோபமாய் பார்த்து உறுமியது.  வெயிலில் அதைக் கட்டினோம்.  சிலிர்த்து உதறி தன் உடம்பை நக்க ஆரம்பித்தது.

நானும் அப்பாவும் நீரில் தாவினோம்.  நான் நீந்தி மக்ரூணியை அணுகி அதை தழுவினேன்.  அது உதறியபடி விலகிச் சென்றது. கனகு மீன் துடுப்பு போல காதுகளால் நீரை துழாவியபடி, என்னை ஆவலாகப் பார்த்தது.

அப்பா என்னிடம் “டேய் அந்தச் செடி இருக்கே. அது உண்மைல செடியா, மரமா, கொடியான்னு தெரிலைடா” என்றார்.

நான் வியப்புடன் பார்த்தேன்.

“அதாண்டா மூளையைப் போட்டு கிறுகிறுன்னு அடிக்குது.  இப்ப பார், ஒரே நாள்ள முளைச்சிட்டது.”

“அப்பா ஒரே நாள்ள இவ்வளவு வளருது.  கொஞ்ச நாள்லே ரொம்ப பெரிசா ஆயிடுமோ?”

“பாத்துடலாம்.  காலம்பற ஆனந்தம் திங்குதிங்குன்னு குதிச்சா.  அவளுக்கு ஏன் இவ்வளவு வெறின்னுதான் தெரியலை”

கனகுவைத் தேய்த்தோம்.  கழுத்தை தேய்த்துவிட்டது அதற்குப் போதவில்லை.  திருப்பித் திருப்பிக் காட்டியது.  சொட்ட சொட்ட கரையேற்றி நடந்தோம்.

கருப்பன் உலர்ந்து ரோமம் பளபளக்க உற்சாகமாகவும், புதிசாகவும் வால் சுழல எங்கள் முன் ஓடியது.

வீட்டு முற்றத்தில் அம்மா அந்தச் செடியருகே நின்றிருந்தாள்.  அப்பாவிடம் “இன்னமும் இதை வெட்டலியா? ” என்றாள்.

“அப்பவே சொல்லிட்டேனே முடியாதுன்னு?:”

“இது இங்க நிக்கப்பிடாது”

“இங்கதான் நிக்கும். நீயென்னடி மகாராணி அதிகாரம் பண்றே? இது இங்க நின்னா என்ன?”

“வேணாங்க” என்றாள் அம்மா கொஞ்சலாய்.

“ஏன் வேணாம்? அதைச் சொல்லு”

“எனக்கு பயம்மாயிருக்குங்க”

“ஏன் பயப்படணும் ஒரு செடிக்காக?  இதபார், இது விளையாட்டில்லை.  ஒண்ணு ரெண்டில்லை. அறுபது ரூபாய் கொடுத்திருக்கிறேனாக்கும்.  இது இங்க தான் நிக்கும்”.

“எதுக்குங்க இது?”

“இனிமே இதைப் பத்தி பேசாதே” என்றார் அப்பா, திடீரென்று முகத்திலும் குரலிலும் கடுமை குடியேற.

அம்மா கண்களைச் சுருக்கி, ஆங்காரத்துடன் கூர்ந்து பார்த்தாள்.  அவள் முகமும் உறைந்தது.  பிறகு அவள் ஏதும் பேசவில்லை.  உள்ளே போய்விட்டாள்.

அப்பா ஒரு நொடியில் மீண்டும் இயல்பாக மாறினார்.   “இன்னிக்கு உனக்கு டியூஷன் உண்டோ இல்லையோ?”

“உண்டு”

“சீக்கிரம் வந்துடு.  மட்டன் எடுக்கணும்”

அப்பாவும் நானும் சேர்ந்தே கிளம்பினோம்.  அவர் வயல்களைப் பார்க்கப் போகிற தோரணையில் சட்டை இல்லாமல், தொந்தி மீது அங்கவஸ்திரம் அணிந்திருந்தார்.  திருப்பத்தில் விடை தந்து ” சீக்கிரம் வந்துடு” என்றார்.

சாயந்திரம் நான் திரும்பிய போது அப்பா திண்ணையில் சயனித்திருந்தார்.  பரிபூரண சுகவாசியாக.  அருகே வெற்றிலைச் செல்லம், டிரான்ஸிஸ்டர், கூஜாவில் தண்ணீர், விசிறி, சிரித்தபடி அம்மா, என்னைக் கண்டதும்  “வாடா” என்றார்.

“மாடன் கொண்டு வந்துட்டானா?” என்றேன்.

அப்பா அசிரத்தை நடித்து “என்னது?” என்றார்.

“புலால்?”

“அப்பவே.  நீ வரட்டும்னு காத்திருக்கோம்.”

“கழுவியாச்சா?”

“பின்னே…”

அம்மா காபி தந்தாள்.  சட்டையைக் கழட்டியபடி சாப்பிட்டேன்.  அப்பா கருப்பனின் பிரியாணிச் சட்டியை எடுத்தார்.  கருப்பன் ஆனந்த பரவசமாகி “அய்யாங்” என்று வீரிட்டது.  உடம்பு கச்சாமுச்சாவென்று உதற தவித்தது.  ஆவேசத்துடன் தூணை தழுவி ஏற முயன்றது.  வால் வீசு வீசென்று காற்றில் ஒலித்தது.

“பட்ற பாட்டைப்பார்.  எரப்பாளி” என்றார் அப்பா.   “வாடா”

தோட்டத்துக் கல்லடுப்பில் பற்ற வைத்தோம். அப்பா அடுப்பில் தீ மூட்டுவதற்குள் அவரே சிவந்து அனல் மாதிரி ஆனார்.  பானையில் தண்ணீர் விட்டு இலேசாக கொதித்தவுடன் அரிசியும், வெட்டித் துண்டு பண்ணிய எலும்புகள், கழிவு இறைச்சி ஆகியவற்றையும் போட்டோம்.  பிறகு முழு பாக்கெட் மஞ்சள் தூள்.  மாமிசம் வேகும் மணம் எழ கருப்பனின் குரல் திக்கெட்டும் ஒலித்தது.

“வேகட்டும் வாடா” என்றார் அப்பா.  அம்மா அடுக்களையில் பரபரப்பாய் இருந்தாள்.  ஜலதரங்க கச்சேரி.

“ஆனந்தம், தேங்காய்ப்பால் ஏதாவது பிழியணுமா?

“நச்சரிக்காம இருந்தாப் போரும்”

தட்டில் அரளிப் பூக்களை சிவப்பாக குவித்து வைத்தது போல இறைச்சித் துண்டங்கள் இருந்தன.  தீ திகுதிகுவென எரிந்தது.  அம்மாவின் முகம் தளதளவென்று அலை பாய்ந்தது.  முந்தானையால் மூக்கைப் பிழிந்தாள்.  கண்கள் சிவந்திருந்தன.  வெங்காய வாசத்துடன் இருந்தாள்.  அப்பா டைனிங் டேபிளில் தாளமிட்டு “கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம்!” என்று பாடினார்.

நான் அம்மாவிடம் ரகசியமாய், ” என்னது செடி விஷயமாய் சிதம்பரம் பிள்ளை ரொம்ப பிடிவாதமாய் இருக்காப்ல” என்றேன்.

அம்மா என்னைப் பார்த்தாள்.  “அது அப்பிடித்தாண்டா.  எப்ப குழந்தை எப்ப பெரிசுன்னு ஒண்ணும் சொல்ல முடியாது”

“அவருக்கென்ன அந்தச் செடிமேல இவ்வளவு?”

“பைத்தியம். கருப்பா இருக்கோல்லியோ?”

“அதனாலே?”

“அந்த மீனாட்சி கூடத்தான் கருப்பு”

“அதான் நீ வேணாங்கறியா?”

அம்மா சிரித்து ” போடா” என்றாள் .  பிறகு சீரியஸாகி ” அது கிரகச்சாரம்டா.  வீட்டுக்கு நல்லதில்லை” என்றாள்.

” நீ நேத்தைக்கு என்ன கனவும்மா கண்டே?”

அம்மா திடீரென்று சீறினாள்.  “நீ போடா.  உன் வேலையைப் பாரு”.

நான் குழம்பியவனாக வெளியே வந்தேன்.  கருப்பனின் பிரியாணி தயாராகிவிட்டது.  வாழையிலையில் அதை கொட்டி, கிளறி, ஆற வைத்தோம்.  “கருப்பனை விடுடா”.  நான் ஓடிப்போய், கருப்பனை அவிழ்த்தேன்.   ஒரே பாய்ச்சல்.  நான் வந்தபோது கருப்பன் இலையருகே பரிதவித்தபடி நின்று கொண்டிருந்தது.  உடம்பு தவித்தது.  அப்பாவைப் பார்த்து “ம்ம்…ம்.  வ்” என்று முனகியபடி வாலாட்டியது.  அப்பா வேறெங்கோ பராக்கு பார்த்தபடி நின்றார்.

“சொல்லிடுங்கப்பா.  சும்மா அதை சித்ரவதை பண்ணாதீங்க”

“டிஸிப்ளின் டெஸ்டுடா.  சரி எடுத்துக்கடா கருப்பா”

கருப்பன் பாய்ந்து விழுந்தது.  லபக் லபக் என்று விழுங்கியது.

” இனி கனகுவுக்கு கஞ்சி” என்றார் அப்பா.  சிறிய செம்பு அண்டாவில் சிறிது உளுந்து சேர்த்து, காய்ச்சி ஆற வைத்திருந்த கஞ்சியை இருவருமாய் சுமந்து சென்று கனகுவின் முன் வைத்தோம்.  கனகு முங்கியது.  கண்வரை கஞ்சி.

“கஞ்சியிலே எதுக்குப்பா முங்குது?”

“பழக்க தோஷம்.  புண்ணாக்கு தேடுது”

“அப்பா  மக்ரூணிக்கு?”

“இன்னைக்கு பாலே கறக்கலை.  எல்லாமே மக்ரூணிக்குத்தான்”

மக்ரூணி பாலின் போதையில் வாழ்வே மாயம் என்று படுத்துக் கிடந்தது.

ராத்திரி சாப்பாடு ஒரே கனம்.  ஆட்டிறைச்சிப் பொரியல்  இறைச்சியினால் குழம்பு.  அம்மா மிகவும் பக்குவமாய் செய்திருந்தாள்.  குழம்பில் நிறைய தேங்காய்ப்பாலும், மசாலாவும் சேர்த்திருந்தாள்.  எண்ணெய்ப் படலத்தில் கருகிய வெங்காயங்கள்  மிதந்தன.  தேங்காய் பாலில் வேக வைத்து சற்று நெய் சேர்த்துப் பொரித்த இறைச்சித் துண்டங்கள் பழுப்பு கலந்த தவிட்டு நிறத்தில் மினுங்கின.  பச்சை மிளகாய்களை பிளந்து உடன் சேர்த்து பொரித்திருந்தாள்.

“சொல்லிட்டேன். இனிமே அடுத்த மாசம்தான்.  சும்மா சும்மா வாங்கிட்டு வந்தீங்கன்னா எடுத்து வீசிடுவேன்.  தொந்தி இப்பவே பார்க்க சகிக்கலை” என்றாள் அம்மா.

“தேவாம்ருதம் மாதிரி சமைக்கறேடி”

அம்மா போலி கடுப்புடன் ” ஐஸெல்லாம் வேணாம்.  பேசாம சாப்பிடுங்க” என்றாள்.

“உண்மையிலேயே பிரமாதம்மா”

அம்மா பூரித்துப் போனாள்.  “சாப்பிடுடா” என்றாள்.

” நீ சாப்பிடலையா ஆனந்தம்?”

“அப்புறம்” என்றாள்.

அப்பா சாப்பிட்டு எழுந்தார்.  ” டேய் நல்லா மல்யுத்தம் பண்ணனும் மாதிரி இருக்குடா”

“திண்ணைல படுத்து உருள்றது.  பரம்பரைப் பழக்கம் அதுதானே” என்றாள் அம்மா, தட்டுகளை எடுத்தபடி.

“தொந்தி மேல சந்தனம் வேணும்மா”

“சும்மாவா எங்க தாத்தா பரம்பரை பண்ணையார் தெரியுமா?”  அப்பா ஏப்பம் விட்டார்.  “எங்கேடி விசிறி?”

அன்று சீக்கிரமே தூங்கிவிட்டோம்.  இரவில் நான் சிறுநீர் கழிக்க எழுந்தேன். மணி  எத்தனை  இருக்கும் என்று தெரியவில்லை.  பின்னிரவுதான்.  நிலா கிழக்கே சரிந்திருந்தது.  காற்று சலனமற்றிருந்தது.  தென்னை மர ஓலைகளில் இருந்து பனி சொட்டும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.  நல்ல குளிர்.  கனகு கால்மாற்றி  நிற்கும் குளம்பொலி கேட்டது.

நிலை கொள்ளாத ஒரு தவிப்பு எனக்குள்  இருந்தது.  நிலவின் ஒளியில் ஓலைகள் எண்ணை பூசப்பட்டவை போல மினுங்குவதைக் கண்டேன்.  தகடு தகடாக, நிலவொளியைப் பிரதிபலித்தபடி, பலா மர இலைகள் அசைந்தன.  நிழல் மெலிதாக இழுபட்டது, கரிய வலை போல.  எங்கோ ஏதோ மலர் விரியும் மணம்.  உளுந்து வறுப்பதுபோல.  இல்லை அது மஞ்சனாத்தி மர இலைகளின் பச்சிலை மணம். … இல்லை.  புதிரானது!  மோஹினி?

எனக்கு திடீரென்று டார்த்தீனியத்தின் ஞாபகம் வந்தது.  முற்றத்தை அடைந்தேன்.  நிலவில், நிழல்களும் ஒளியின் பல்வேறுவித படங்களும் பின்னி அசைந்தபடி, முற்றமே வேறு ஏதோ இடம் போல இருந்தது.  இருட்டில் கூர்ந்து கவனித்தபோது டார்த்தீனியம் இரண்டு சாண் உயரத்தில் வளர்ந்து நிற்பது தெரிந்தது.  முழங்கையளவு கனம்.  இலைகள் இல்லை.  ஒரேயொரு உள்ளங்கையாக இலை மட்டும்தான்.  அதன் கருமை மினுங்கியது.

பயமும், விளக்க முடியாத ஒருவித கவர்ச்சியாலும் நான் ஆட்கொள்ளப்பட்டேன்.  கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  பிரமை பிடித்தவன் போல நகர்ந்து, அதனருகே சென்று குனிந்த்தேன்.  “உஸ்ஸ்” என்று ஒரு சீறல்.  அப்படியே புல்லரித்துப் போய்விட்டேன்.

அந்தக் கருநாகத்தின் கண்கள் இரு சிறு கண்ணாடிக் கோளங்கள் போல இருந்தன.  அவை இன்னதென்றில்லாத ஒரு நிறத்தில் மினுங்கின.  அது ஓசை கேட்டு தனது பத்தியை சடக் சடக்கென்று மாறி மாறி திருப்பியது.  அதன் உடல் டார்த்தீனியத்தைச் சுற்றியிருந்தது.  அதன் பத்தி அதற்கு குடை பிடித்திருந்தது.  மகத்தானதோர் தரிசனத்தைப் பார்ப்பவன் போல நின்றேன்.

உடம்பு மனசுடனான தொடர்புகளை ஒவ்வொன்றாய் உதறுவது போலிருந்தது.  கண்கள் மெல்ல மங்கின.  காட்சி அலை பாய்ந்தது.  கண்களுக்குள் நிழல்கள் நெளிந்தாடின.  காதில் கிர்ர் என்று ரீங்காரம் ஒலித்தது.  விழப்போகிறவன் போலத் தள்ளாடினேன்.  மறுகணம், அத்தனை சக்திகளையும் திரட்டி, உலுக்கி விடுபட்டேன்.   பயம் என்னை உயிர் கொள்ள வைத்தது.  விழக்கூடாது.  விழுந்தால் தீர்ந்தேன்.  மூச்சுவிட சிரமமாக இருந்தது.  முகத்தின் மீது குப்பென்று நீராவி ஊதப்பட்டது போலிருந்தது.  நொடியில் தெப்பலாக வேர்த்துவிட்டேன்.  தடதடக்கும் நெஞ்சை கையால் அழுத்தியபடி உற்று பார்த்தேன்.  கருநாகம் தார் உருகி வழிந்தோடுவதுபோல விலகிச் சென்று கொண்டிருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைஉடையாள்- கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைகாடுசூழ் வாழ்வு