‘எனது நிலக்காட்சி மாறிக்கொண்டிருக்கின்றது. அங்கே கூடு தகர்ந்து அலைகின்றன பறவைகள். எரியும் வெயிலில் உருகுகின்றன தாவரங்கள்’ – சுகுமாரன் ( பயணியின் சங்கீதம்)
ஒன்று
அப்பா ஆபீஸிலிருந்து பரம சந்தோஷமாக வந்தார். செருப்பைக் கழட்டும் ஒலியும், கருப்பன் ‘ங்குங்’ ‘ங்குங்’ என்று கொஞ்சும் ஒலியும் கேட்கவே நான் எழுந்துவந்து பார்த்தேன். அதற்குள் உள்ளே போய், சட்டையை கழட்டிக் கொண்டிருந்தார். என்ன இது; கால் கழுவவில்லை, மாட்டுக்குத் தண்ணீர் கொடுத்தாகிவிட்டதா என்று விசாரிக்கவில்லை, என்று நான் குழம்பிக்கொண்டிருக்கும்போதே, வேஷ்டியை மடித்துக் கட்டியபடி, தொப்பை குலுங்க வெளியே விரைந்தார். அம்மா உள்ளிருந்து வந்து “ஆருடா அது?” என்றாள்.
“உன் புருஷன்” என்றேன்.
“ஏன் இந்த நேரத்தில?” என்றபடி வாசலைப் பார்த்தாள். ” எங்கே?”
“சட்டையைக் கழட்டிப் போட்டார். போயிட்டார்”.
“கால் கழுவலியா?”
“இல்லை”
நம்ப முடியாமல் நாலுபக்கமும் பார்த்தாள். மேஜை மீது கண்ணாடிக் கூடு; செருப்பு. அவள் முகத்தில் வியப்பு தெரிந்தது. ” எங்கே போச்சு அது?”
“தொப்பையும் கையுமா ஓடறதப் பாத்தேன். அவசரமா பாத்ரூம் போனாரோ என்னமோ”.
அதற்குள் முற்றத்தில் மண்வெட்டி ஒலி கேட்க ஆரம்பித்துவிட்டது. அம்மா வெளியே போனாள். அப்பாவின் முதுகும், வழுக்கையும், அதை வேலிகட்டிய நரை கலந்த மயிரும், வியர்த்து ஈரமாக இருந்தன.
“என்ன இது, இந்த வயசில?” என்றாள்.
“வயசு உங்கப்பனுக்கு. அடியே, இதோ பார்…” என்று சொல்ல வந்தவர் என்னைப் பார்த்தார். முகத்தின் சிருங்காரம் படக்கென்று மறைந்தது. “ஏண்டா?” என்றார். நான் தோளை உலுக்கினேன்.
அம்மா அந்தப் பொட்டலத்தைப் பார்த்தபடி, ” என்ன அது, ரோஜாப் பதியனா?” என்றாள்.
“ஏய் அதை தொட்டு கிட்டு வைக்காதே. அலர்ஜியாயிடப் போவுது”
“என்ன இது?”
“டார்த்தீனியம்!”
“என்னது?”
“டார்த்தீனியம்! ஃபாரீனாக்கும்! இப்ப வார வழியிலே எப்றாய் டாக்டரைப் பார்த்தேன். அவர்தான் குடுத்தார். ஜெர்மனியோ ஆப்ரிக்காவோ… நிச்சயமா ஃபாரின் சரக்குதான்”.
“பூக்குமா?” என்றாள் அம்மா.
“ஆமா; தலைல வச்சிக்கலாம். உன் மூஞ்சிக்கு கறுப்பா பூவைச்சா நல்லாத்தான் இருக்கும்”
“கருப்பாகவா அப்பா?” என்றேன்.
“பின்னே” என்றார் அப்பா. “இது சாதாரண சரக்கு இல்லை. ஃபாரினாக்கும்! வேரு, தண்டு, இலை எல்லாமே கருப்பாய்த்தான் இருக்குமாம். அதான் டார்த்தீனியம்னு பேரு. துரைகள் ரொம்ப விரும்பி வளர்க்கிறாங்களாம்”.
“நீக்கிரோக்களா இருக்கும்” அம்மா சொன்னாள்.
“போடி. டீ, இந்த செடியோட அருமை உனக்கென்ன தெரியும்? அதெப்படி, ஆனையப்ப பிள்ளை வீட்டில கருவாட்டு மணம்தானே மூணு சாமத்லே அடிக்கும்?”
அம்மா இம்முறை கோபித்துக் கொண்டாள். “ஆம, உங்க மீனாட்சி வீட்டிலே மல்லியப்பூ மணம் அடிக்குமே. அங்க போறதுதானே? எதுக்கு ஆனையப்ப பிள்ளை வீட்டத்தேடி வரணும்?”
” விதியை வெல்ல யாரால் இயலும்?” என்றார் அப்பா.
“உக்கும்” என்று நொடித்தபடி அம்மா உள்ளே போனாள்.
நான் மீனாட்சியைப் பற்றி விசாரிப்பதா, டார்த்தீனியத்தைப் பற்றி கேட்பதா என்று குழம்பினேன். பிறகு “யாருப்பாது, மீனாட்சி?” என்றேன்.
” என்னோட பழைய லவ்வு. அவளும் டார்த்தீனியம் மாதிரித்தான் இருப்பா. கருப்பா வழவழப்பா….” அப்பா அந்த செடியை எடுத்துக் காண்பித்தார். அப்போதுதான் அதை நான் கவனித்தேன். கன்னங்கரியதாக, நல்ல வழவழப்பும் மினுமினுப்பும் உடையதாக, ஒரு தண்டும் இரு பொடி வேர்களும் உடைய சிறு செடி.
“மீனாட்சி இப்ப எங்கப்பா?”
“போயிட்டா”
“செத்துப் போயிட்டாளா?”
“சீச்சி; மிலிட்டரிக்காரன் கட்டிக்கிட்டு போயிட்டான். இப்போ ரோடு ரோலர் சைசுக்கு வந்துட்டா. டேய் நீ ஒரு வாளித்தண்ணி கொண்டுவா…”
“அப்பா, இதுக்கு தண்ணி விடலாமோ என்னமோ?”
“ஏண்டா?”
“ஃபாரின் செடி; அங்கெல்லாம் தண்ணிக்குப் பதில் ஒயின்தானாமே…”
“படவா ராஸ்கல். கிண்டலா?” அப்பா எழுந்தார்.
நான் சிரித்தபடி விலகி ஓடினேன்.
செடியை நட்டோம்.
தண்ணீர் ஊற்றும்போது நான் கேட்டேன். ” இது செடி மாதிரியே இல்லப்பா. கார்பன் துண்டு மாதிரி இருக்கு”
” இதோட அழகே அதாண்டா. பிளாக் இஸ் பியூட்டிபுல் தெரியுமா?”
“அம்மா கிட்ட சொல்லவா?”
“என்னது?”
“பிளாக் இஸ் பியூட்டிபுல்னு?”
“குடலைப் பிடுங்கிடுவேன். படவா. அப்றம் நீ மட்டும் தப்பிச்சிருவியா? பிராகிரஸ் ரிபோர்ட் வருது, ஜாக்கிரதை”
“இனிமே அதெல்லாம் பயப்பட மாட்டேம்பா”
“ஏண்டா?”
“ஃபோர்ஜரி. முப்பிடாதி உங்க மாதிரி போடறான்”
“பெரிய இண்டர்நாஷனல் சாமியாரா வந்திடுவான் போலிருக்கே…” அப்பா கையைக் கழுவினார். “டேய் இனிமே இதை நீதான் பாத்துக்கணும். ஆம்பிளைகள் தான் இதும் பக்கத்துல வரமுடியும் தெரியுமா? பொம்பளைங்க தொட்டா அலர்ஜியாயிடும். ரிஷியாக்கும். பயங்கர கற்பு”
“ஃபாரின்லே ரிஷிகள் உண்டா அப்பா?”
“இப்பல்லாம் அவுங்கதாண்டா… ஹரே ராமா ஹரே கிருஷ்ணான்னு பரப்பிரம்மமா இருக்கான்கள். ஆனந்தவல்லித் தாயே, டீக்கு வழியுண்டா?”
“மீனாட்சி கிட்டயே போய் கேளுங்க”
“கேட்டா என்ன, குடுக்காமலா இருப்பா? அவள் புருஷன் அஸ்ஸாம்ல இருக்கான். நல்ல டீத்துளா அனுப்புவான். ஆனந்தம், அவ நடக்கிறப்ப கெட்டில் மாதிரியே மூச்சு விடறாடி”.
கில்லாடி அப்பா. அம்மாவை அப்படியே பூரிக்க வைத்துவிட்டார். டீ வந்தது. அம்மா முகம் சிவக்க சிரித்தபடி, “ஆமா, ஊரான் பெண்டாட்டியைக் கிண்டல் செய்யுங்க” என்றாள்.
“என் பெஞ்சாதி மாதிரி உண்டா? ஹீரோயின் அம்மா வேஷம் போட்ட மாதிரி இருக்கே”
“வயசாவுதுன்னு ஒரு நெனைப்பு உண்டா கெளவனுக்கு” என்றபடி அம்மா உள்ளே போனாள்.
“அப்பா உங்க சின்ன வீடு இன்னிக்கு என்னை முட்ட வந்தது. இனிமே அது பக்கத்தில நான் போக மாட்டேன். அம்பேல்” என்றேன்.
“கனகுவா, சாதுவாச்சே; ஒண்ணும் பண்ணமாட்டாளே”
“மூத்தாள் பிள்ளையாச்சே” என்றாள் அம்மா.
” நீ மக்ரூணியை ஏதாவது கொடுப் படுத்தியிருப்பியோ” அப்பா எழுந்தார். ” டார்ச் எங்கேடா?”
அப்பா உபகரணங்கள் சகிதம் கிளம்பினார். அவர் தொழுவை நோக்கி நடந்ததுமே பிராந்தியம் ரகளைப் பட்டது. நாய் “ங்க்” “உய்ய்” “பவ்” என்றெல்லாம் ஒலியெழுப்பி, சங்கிலி உரச, குதித்தது. கனகு முடிந்தவரை கயிற்றை இழுத்துத் திரும்பி “ம்பேய்” என்றது. அதன் கழுத்துக்குக் கீழேயிருந்து மக்ரூணி எழுந்து நின்று, அப்பாவை ஆர்வத்துடன் பார்த்தது. வாலைத் தூக்கி ஒன்றுக்கிருந்தது. வாயிலிருந்த வைக்கோலிழையுடன், “ம்மா” என்றது. எதனருகே அப்பா முதன் முதலாய் போகப்போகிறார் என்று ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியது. அப்பா கருப்பனை அணுகி, அதன் காதைச் சுண்டினார். அது பரம உற்சாகத்துடன் மறு காதையும் சுண்டப்படுவதற்காகக் காட்டியது. அதன் வால் வீசு வீசு என்று காற்றில் சுழன்றது. அப்பா தொழுவில் மரப்பட்டை மீது அமர்ந்து, கனகுவை தட்டிக் கொடுத்தார். மக்ரூணி அவர் மீது பாய்ந்து ஏற முயன்றது.
அப்பா உலகை மறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன். வழக்கம்போல் அவர் பிரியாவிடை பெற்று எழ இனிமேல் ராத்திரியாகிவிடும். பிறகு ஆற்றுக்குப் போய் குளியல். கூடவே நானும் போவேன். நான் குளிப்பதில்லை. ராத்திரியில் ரொம்பவும் குளிர் அடிக்கும். தண்ணீர் சூடாகத்தான் இருக்கும். ஆனால் கரை ஏறிய பிறகு நிற்க முடியாதபடி வெடவெடக்கும். அப்பாவிற்கும் எனக்குமான அந்தரங்கமான நேரம் இந்தக் குளியல்.
நான் கொஞ்சம் படித்தபிறகு வெளியே வந்தேன். இருட்டிவிட்டது. தொழுவின் இருட்டில் நான்கு ஜீவன்களும் தத்தம் மொழிகளில் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தன. கனகுவின் கண்கள் மினுங்கின. அப்பா டார்ச் அடித்து அதன் உடலின் உண்ணி பொறுக்கிக் கொண்டிருந்தார். ஒளி படுவது எப்படி அதற்குத் தெரியும் என்று புரியவில்லை. சிவப்பு வட்டம் விழும் இடம் படபடவென்று துடித்தது.
“அப்பா”
“ஏண்டா?”
“மணி என்ன ஆகிறது தெரியுமா?”
“ஏழா?”
“எட்டு பதினஞ்சு. அம்மா ஆரம்பிச்சிட்டா”
“இதோ வரேண்டா”
மீண்டும் சல்லாபம்.
“அப்பா” என்றேன் பொறுமை இழந்து.
“வரேண்டா முண்டம். இதோ பார், கனகு வேட்டியைப் பிடிச்சு இழுக்கறது”
“எனக்கு அதைக் கண்டாலே பத்திட்டு வரது. காலைல தண்ணி கொண்டாந்து வைக்க வாறேன், முட்ட வருது”
“சும்மா பயங்காட்டியிருப்பாடா. பெரிய கள்ளியாக்கும்” அப்பா அதை அணைத்தார்.
“வரப்போறீங்களா இல்லையா?”
“வரட்டுமா கனகு? நாளைக்குப் பாப்பம். டேய் மக்ரூணி” கன்றுக்குட்டியை தூக்கினார். ” சமர்த்தா படு என்ன? த பாரு, வைக்கோல் விரிச்சிருக்கேன். பயப்படாம தூங்கணும், கேட்டியா ராஜு, நேத்து ராத்திரி ஒரே அலறல். என்னமோ ஏதோன்னு ஓடி வந்து பார்த்தா, தோ இவ்வளவூண்டு தவளை ஒண்ணு. சமாதானம் பண்ணி தூங்க வைக்கறதுக்குள்ளே ஒரு வழியா ஆயிட்டேன். தூங்குடா கண்ணா, ஏன் முழிக்கறே?”
“பாவம் அதுக்கு வைக்கோல் திங்கவும் தெரியலே; ஆசையும் விடலே” என்றேன்.
” குலாவி முடிச்சாச்சா இல்லையா? பனி கொட்டுது. அப்பறம் சளி புடிச்சு மத்தவுங்க உசிர வாங்கறது” அம்மா உள்ளிருந்து கத்தினாள்.
“இதோ”
நான் நாயை அவிழ்த்தேன். அது பாய்ந்து அப்பாவை அணைக்க முயன்றது.
“கருப்பன் எதுக்கு?” என்றார் அப்பா.
“துணைக்குத்தான்”
“பாவம். இருட்ல ஏதாவது சத்தம் போட்டா பயந்துக்கும். இங்கியே நிக்கட்டும்”
“நல்ல நாய்” என்றேன். ” அப்பா, நீங்க செல்லம் கொஞ்சி நாயைக்கூட பயந்தாங்குளியாப் பண்ணி வச்சிருக்கீங்க”
“குழந்தைடா அது”
“ஆமா ஊரெல்லாம் இது நெறத்துல குட்டி குட்டியா நாய்கள்”
“ஆஹ்ஹஹ்ஹா!” என்றார் அப்பா. மாமரத்திலிருந்து பறவைகள் பதறி எழுந்தன.
ஆறு நிலவில் மினுங்கிய மணற்பரப்பும், நடுவில் இருண்ட மினுங்கும் அலைகள் ததும்பும் ஜலப்பரப்புமாய் அமைதியாய் ஆழ்ந்து கிடந்தது. ஜில்லிட்ட குளிர். மணற்பரப்பில் பனி மேலே படிந்திருந்தது. பாதம் அழுந்திப் புதைந்தபோது உள்ளே வெதுவெதுப்பு. நூறு நூறு ஜந்துக்களின் ஒலிகள் இணைந்த ரீங்காரம் மௌனத்தின் ஒரு பகுதியாக ஒலித்தது. மயக்கம் தரும் நறுமணம்!
“தாழை பூத்திருக்குடா. பூநாகம் இந்த மணத்துல மயங்கித்தான் உள்ளே ஏறிக்குது”
அப்பா மணலில் படுத்தார். கருப்பன் அவர் காலருகே உட்கார்ந்து காலை முகர்ந்தது. சற்றுத் தள்ளி நான் ஒருக்களித்து அமர்ந்தேன்.
“அப்பா அந்த மோகினி கதை..”
“இன்னொரு நாள்டா. இப்ப பேசவே பிடிக்கலை. பாடட்டுமா?”
“சரி பாடுங்க”
” தோடி?”
“நான் ஓடியே போய்டுவேன்”
“சரி, இல்லை ஜெமினி கணேசன் பாட்டு பாடவா?”
“கமல் பாட்டுப்பா”
“சின்னப்பையன் அவன். அவன் பாட்டெல்லாம் சுகமில்லை. ஜெமினிதான் காதல் மன்னன்.
“சரி பாடுங்க”
அப்பா மிகவும் சுகமாய், வாய்க்குள் முனகினார். சில்வண்டுச் சுருதியுடன் இணைந்து மெல்லக் குழைந்தார். வெகுநேரம் போலிருந்தது. வார்த்தைகளற்ற இசை மெல்ல தெளிந்தது.
“இரவும் நிலவும் காயுது
என் நினைவில் தென்றல் வீசுது”
எனக்குள் நிலவும், மணல் வெளியும், நதியின் கிளுகிளுப்பொலியும், தலைமயிரைக் கலைத்த தென்றலும், இனம் தெரியாத ஒரு சோகமும், கலைந்து எழுந்து குழம்பின. அந்தத் தாழம்பூ மணம்! வெகுநாள் முன் கண்டு மறந்த ஒரு சோகம் மிகுந்த கனவு ஞாபகம் வந்தது போலிருந்தது. மார்பு அடைத்தது. கண்கள் மெல்ல ஈரம் பெற்றன.
அப்பா முடிக்க மனமின்றி, பாடியபடியே இருந்தார். இதோ இந்தக் கனவின் லயம் முடிந்துவிடும். இதோ, என்று மனம் நுனியில் தத்தளிக்க, முடியலாகாது என்று ஒரு முனை ஏங்கித் தவிக்க, கணம் கணமாக காலம் ஓடி மறைய…. தாங்க முடியாமல் நான் மெலிதாக விம்மினேன்.
எப்போது அப்பா மௌனமானார் என்று தெரியவில்லை. அப்படியே படுத்திருந்தார்.
நான் உருவமற்ற நினைவுகளில் ஆழ்ந்திருந்தேன். அப்பா பெருமூச்சுடன் திரும்பிப் படுத்ததை உணர்ந்து விழித்துக்கொண்டேன்.
“பாடி முடிச்சதும் எப்படியிருக்கு தெரியுமா? இப்ப இந்த நிமிஷத்துல புதிசா பிறந்தது மாதிரி!”
“ம்ம்” என்றேன்.
“எல்லா ஞாபகங்களும் அப்படியே முன்னால வந்து நிக்குதுடா. வலி இல்ல. ஆனா சோகமா இருக்கு. எவ்வளவு ஞாபகங்கள்….”
நான் புரியாமல் அவரையே பார்த்திருந்தேன்.
“வாழ்க்கைல ஒரு தடவையாவது லவ் பண்ணணும்டா. அந்தப் பிராயத்த தவற விட்டுடக்கூடாது. வேற ஒண்ணுக்குமில்ல, இப்படி ஒரு கட்டத்தில நினைச்சுப் பார்க்கிறப்ப எவ்வளவு பிரகாசமா இருக்கு அதெல்லாம்! அப்ப அதெல்லாம் பெரிய இம்சை. ம்ம்….” என்றார். பிறகு, ” ப்ச், இப்ப எல்லாமே டிராமா மாதிரி இருக்குடா. வயசாக ஆக, ஒரு சூன்யம் மனசில. டிராமா முடிஞ்சு மறுநாள் மைதானம் கிடக்குமே, அது மாதிரி. சில சமயம் நான் நெனைச்சுக்குவேன்; இனிமே ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு. ராத்திரியில ஒரு நாள் அழுதிட்டே பிரார்த்தனை செஞ்சேன் தெரியுமா, என் இளமைய மீண்டும் குடுத்துருன்னு…. அசட்டுத்தனம்! உனக்கு இப்போ புரியாது…..”
” உங்களுக்கு வருத்தமா அப்பா?”
“சேச்சே. நான் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். உங்கம்மா இருக்காளே; ஜெம் ஆப் எ லேடி! உனக்கு இப்ப புரியாது. எல்லாமே என்னமோ குருட்டு அதிர்ஷ்டம் மாதிரி நல்லாவே அமைஞ்சு போச்சு”
“அப்ப எதுக்கு சோகம்னீங்க?”
“அப்ப எதுக்கு சோகம்னீங்க?”
“அதெல்லாம் ஞாபகங்கள்டா. இப்ப நீ எதுக்கு அழுதே?”
“யார் அழுதா? நானா?”
“படவா, அறஞ்சேன்னா பாரு. ஏண்டா அழுதே?”
“எங்கப்பா எவ்வளவு நல்லவர்னு நெனைச்சேன்பா”
“போடா” என்றார் அப்பா சிரித்தபடி.
“இல்லேப்பா. நெஜமாப்பா”
அப்பா என்னை மெதுவாக இழுத்து அணைத்துக் கொண்டார். வெதுவெதுப்பாக இருந்தார். மெல்லிய வியர்வை மணம். “சோகம் மாதிரி தித்திப்பான ஒண்ணு வேற இல்லடா” என்றார்.
“வானத்துல மூணே மூணு நட்சத்திரம்ப்பா”
” யாரோ பொறுக்கிட்டு போயிட்டாங்க மீதிய”
“அப்ப இது”
“பாக்கெட் ஓட்டை”
நான் சிரித்தேன். என் நெகிழ்ச்சி விலகியது. அப்பா அதற்காகவே சொல்லியிருக்க வேண்டும். “அப்பா இதைப் பாருங்கப்பா” என்று கறுப்பனின் கண்களைக் காட்டினேன். “எவ்வளவு பிரகாசம் பாத்திங்களா?”
“ரொம்ப தூய்மையான ஆத்மாடா அது. அதுதான் இப்படி ஜ்வலிக்குது”
“ஏம்ப்பா அது இப்படி பேசாம உக்கார்ந்திருக்கு? அதுக்கு நாம் பேசறது கேக்குமாப்பா? அது புரிஞ்சுக்கிறதா?”
“பாஷை புரியறதோ என்னமோ, நிச்சயமா மனசு புரியுது. ராஜு, நாம நினைக்கிறதை விடவும் அதும் மனசு ரொம்ம ஆழமானது தெரியுமா? ஏண்டா கருப்பா பாக்கிறே, புரியுதாடா ஒனக்கு?”
“ங்கங்” என்றபடி கருப்பன் எழுந்து தலைமாட்டுக்கு வந்தது.
“பேரச் சொல்லி கேக்கறாதில எவ்வளவு சந்தோஷம் அதுக்கு பாத்திங்களாப்பா?”
“மனுஷன் கவனிச்சாலே போரும். நாய்ங்க ரொம்ப உற்சாகமா ஆயிடும்டா”
கருப்பன் அப்பாவின் முகத்தை தன் செவிகளைக் கூர்மையாக முன்நீட்டியபடி முகர்ந்து பார்த்தது. ஒரு வகை முத்தம்.
“அப்பா மணி ஒம்பது ஆயிருக்கும்; குளிக்கலையா?”
அப்பா எழுந்தார்.
நிலா நீரில் விழுந்து கிடந்தது. மேகங்களோடு மீன்கள் எழுப்பும் சிறு சிறு அலைகளில் சலனம் கொண்டது.
“ராஜூ, நாந்தான் ஆம்ஸ்ட்ராங். நிலா மேல எறங்கப்போறேன் பாரு” அப்பா படாரென்று குதித்தார். கருப்பன் சந்தோஷமாய் வாலை வீசி குதித்தது.
நிலவு உடைந்து அலைகள் மீது சிதறியது. பிறகு துணுக்குகள் ஒன்று சேர்ந்து மீண்டும் வட்டம். அலைகளில் மிதந்து தாவுகிற பிரகாசம். ” அதை தொடுங்கப்பா”
“ம்ஹூம். அதெல்லாம் மோஹினி சமாச்சாரம். தொடப்படாது. குளிக்கறயா?”
“அய்யோ. குளிர்”
“குதிச்சேன்னா குளிர் போயிடும்”
நிலா சலனமேயற்று நின்றது. கவரப்பட்டவனாக அதையே பார்த்தபடி நின்றேன். திடீரென்று மெல்ல அது வளைந்து நீள்வட்டமாக ஆகி மீண்டது. என் தலைமயிரை சன்னமான தென்றல் வருடியது. தாழம்பூ புதர்களுக்குள் சலசலப்பு ஒலித்தது. ஏதோ புதர் ஜந்து “உய்ய்ய்ங்” என்றது. பயந்துபோன கருப்பனின் வால் உடனடியாக அடிவயிற்றில் படிந்தது. ஓடிவந்து என் கால் நடுவே பதுங்கியது. சந்தேகத்துடன் புதரைப் பார்த்து “பவ்” என்றது.
அப்பா “இரவும் நிலவும் காயுது” என்று சீட்டியடித்தபடி தலையைத் துவட்டினார்.
மீண்டும் வீட்டுக்கு வந்தோம். அம்மா கருப்பனை கூப்பிடும் ஒலி கேட்டது. கருப்பனின் உடம்பெங்கும் பரபரப்பு ஏறியது. அது இயல்பாக நாலடி தூரம் ஓடி, திரும்பி வந்து, அப்பாவைப் பார்த்து வாலாட்டியபடி குழைந்தது. பிறகு மீண்டும் ஓட முயன்றது. திரும்பி அப்பாவைப் பார்த்தது.
“போடா கருப்பா. ரொம்ப காட்டிக்காதே” என்றார் அப்பா.
கருப்பன் நாலுகால்களும் நிலம் பிராண்டி ஒலிக்க ஓடியது.
“பெரிய டிசிப்ளின்!” என்றேன்.
“எவ்வளவு ருசி பாரு. அதுக்குத்தாண்டா சாப்பாட்டோட முழு சொகமும் இருக்கு. நமக்கெல்லாம் சோத்துக்கும் நமக்கும் நடுவில மனசு வந்து நிக்குது”.
சிலசமயம் அப்பா இப்படித்தான் புரியாமல் பேசுவார்.
“என்ன, அப்பவும் புள்ளையும் நிலவை வேணுங்கிற மட்டும் குடிச்சாச்சா?
சாப்பிடணுமா இல்லை அதுவும் வேணாமா?”
“இரவும் நிலவும் காயுது, என் நினைவில் தென்றல் வீசுது” அப்பா பாடியபடி அறைக்குள் போனார்.
“நிலை மயங்கி மயங்கி காதலினான் ஜாடை பேசுது” என்றார் அப்பா.
“சீ, விடுங்க” என்று அம்மாவின் குரல் கேட்டது.
நான் டைனிங் டேபிளில் அமர்ந்தேன். துரித கதியில் தாளம் போட்டபடி, “நிலை- மயங்கி- மயங்கி – காத- லினால்- ஜாடை – பேசுது” என்று களநடைப் பாடலின் ராகத்தில் பாடினேன்.
“ரொம்ப வேகமான காதலா இருக்கும் போலிருக்கே?” அப்பா காதைக் குடைந்தபடி வந்தார். மார்பின் மயிர்கள் வரிவரியாக ஒட்டியிருந்தன. சருமம் மினுங்கியது. என்னை சொக்க வைக்கும் அந்த புதிய உடல் மனம் அவரிடம் எழுந்தது.
“அப்பாவும் பிள்ளையும் பேசற பேச்சைப்பார்”
“தோளுக்கு மேலே போனால் தோழன்” அப்பா அமர்ந்தார்.
“முழங்கால் வரை வரதுக்குள்ளே ஆரம்பிச்சது இது” அம்மா தட்டுகளை வைத்தாள்.
“ஆனந்தம் எனக்கு இன்னோர் அப்பளம்”
“ஒண்ணே குடுக்கப் போறதில்லை. தொந்தி எப்படி இருக்கு தெரியுமா?”
“டைப்பிஸ்ட் காஞ்சனா சொல்றா, என் தொந்தி ரொம்ப கம்பீரமா இருக்காம்”
“ஏன் அவ புருஷனுக்கு தொந்தி இல்லையோ?”
“அவளுக்கு புருஷனே இல்லியே”
“ஏனாம்? பாத்த மூத்து நரைச்சு இருக்கா”
“காரணம் இவளுக்கு தொந்தி இருக்கு… ஹஹ்ஹா!”
அம்மா சாதம் பரிமாறினாள். “என்ன சிரிப்பு இது. ராத்திரியில? பி.எஸ். வீரப்பா மாதிரி இருக்கு”
“டேய் நீ வஞ்சிக்கோட்டை வாலிபன் பாத்தியா?”
“அப்பா உங்க தோள்லே குங்குமம்”
அப்பா ஒரு மாதிரி ஆனார். “சேச்சே இதென்ன, குங்குமம் இல்லை. மை, இங்கு….” என்றபடி தொட்டு பார்த்தார். கையில் ஒட்டியது. “ஏய், பரண்மேல் எதுக்குடி குங்குமத்தை வைக்கிறே? கொட்டுது பார்”
“வழியாதீங்க” என்றாள் அம்மா, தாழ்ந்த குரலில் என்னைப் பார்க்காமல். குழம்பு விடும்போது அவள் முகத்தில் சின்னஞ்சிறு புன்னகை இருப்பதைக் கண்டேன்.
பரபரவென்று ஒலி கேட்டது வெளியே. கருப்பன் ஆவேசமாய் ஓடும் ஒலி.
“என்ன ஆச்சு அதுக்கு?”
“என்ன வயிறு நெறைஞ்சா ஒரு குஷிதான். எஜமான் எவ்வழி அவ்வழி நாய்” என்றாள் அம்மா.
“அப்பளம் கொடுக்க மாட்டே?”
“மாட்டேன்னு அப்பவே சொல்லிட்டேனே”
“டேய் பாதி கொடுடா”
“போப்பா, உங்க வீட்டுக்காரிகிட்டே யார் வாங்கி கட்றது?”
“நான் பாத்துக்கறேன்டா”
“அப்படின்னா நேர்லயே கேக்கறது”
“ஒரு பக்திதான். கொடுடான்னா..”
நான் பாதி அப்பளத்தை ஒடித்து பாதியைத் தந்தேன்.
“புள்ளைக்கு மட்டும் பொரிச்சு பொரிச்சு கொடு. பாவி!” அப்பா கறுவினார்.
“கனகுவுக்கு தண்ணி கொடுத்தியா?”
“எல்லாம் தூங்கியாச்சு. அப்பாவும் புள்ளையும்தான் பாக்கி”
அப்பா எழுந்து கை கழுவினார். ஏப்பம் விட்டபடி, “நிலை மயங்கி மயங்கி காதலினால் ம்ஹூம்…ம்ஹூஹூம்” என்று பாடினார்.
முன் திண்ணையில் புற்பாய் போட்டு அமர்ந்தோம். ஜில்லென்றிருந்தது திண்ணையின் சிமிட்டி. முற்றத்து மாமரம் மெல்ல எதையோ மந்திரித்தபடி நின்றது. அதன் நிழலில் மெல்லிய வலையசைவு. அப்பா வெற்றிலை போட்டுக் கொண்டார். வெற்றிலையில் ஒன்றுமில்லை. அதை போடுவதில்தான் சுகம் என்பார். வாசனைப் பாக்கு, சாயச் சுண்ணாம்பு, தளிர் வெற்றிலை – எல்லாமே முதல் தரம்தான் வேண்டும் அவருக்கு. வித்வான் வாத்தியத்தை சுருதி கூட்டுவதுபோல நளினமாய் போடுவார். அப்பாவின் வாய் அசைவதைக் கண்டு கருப்பன் ஓடிவந்து ஏறிட்டுப் பார்த்து அக்கறையாய் வாலாட்டியது. அப்பா காம்பை அதை நோக்கி வீசினார். முகர்ந்து விட்டு அதிருப்தியுடன் பார்த்தது. ஆவல் மாறவில்லை.
“ இன்னொரு பாட்டு பாடுங்கப்பா”
“ஓராயிரம் பார்வையில்’ பாடவா?”
“பாடினதெல்லாம் போரும். படுக்கப் போங்க. டேய் போடா போய்ப் படுடா”
“டேய் செடிக்குத் தண்ணீர் விட்டியா?”
நான் வாளியில் தண்ணீர் மொண்டு வந்து ஊற்றினேன். அப்பா அறைக்குள் ‘ இரவும் நிலவும்’ என்று பாடுவது கேட்டது.
படுத்த உடனேயே தூங்கிப் போய்விட்டேன். என் கனவில் தாறுமாறாக பற்பல பிம்பங்கள் உடைந்தும் கலந்தும் ஓடி மறைந்தன. திடீரென்று ஒரு விரல் என்னை தொட்டது. சதையின் மென்மையும் சூடும் உடைய விரல். சற்றும் அறிமுகமற்ற திடுக்கிட வைக்கும் ஸ்பரிசம்! நான் அதைப் பார்த்தேன். இருட்டு. எனவே உற்று உற்று பார்க்கவேண்டியிருந்தது. கன்னங்கரிய, வழவழப்பான விரல். அது என்னைஉசுப்பி உசுப்பி எழுப்பியபடி நெளிகிறது. சட்டென்று என் மூளை அதிர்ந்தது. அது அந்த டார்த்தீனியத்தின் தண்டு. மறுகணம் உலுக்கப்பட்டவன் போல நான் கண்விழித்தேன். என் உடல் வியர்வையில் குளிர்ந்து, வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்த்தேன். கனவை மனசுக்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தவனாக ஒரு விதமான பிரமையில் அப்படியே கிடந்த்தேன். அப்போது இருட்டுக்குள் அந்த பயங்கரமான அலறல் ஒலித்தது.
அம்மா! நான் ஒருகணம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டேன். பிறகு என் உடம்பு நாலாபக்கமும் உதறிக்கொள்ள ஆரம்பித்தது. எல்லா சக்தியையும் திரட்டியபடி எழுந்துகொண்டேன். பாய்ந்து விளக்கைப் போட்டேன். ஒடி அப்பாவின் அறைக்கதவை ஓங்கித் தட்டினேன். அந்த ஒலி எனக்கே பயங்கரமாக இருந்தது. “அப்பா? அப்பா!”
கதவை அப்பா திறந்தார். அம்மா படுக்கையில் தலைவிரிகோலமாய் முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன். வியர்வையில் ஈரமான முகத்தில் குங்குமம் வழிந்திருந்தது. தலைமயிர் ஒட்டியிருந்தது.
“அம்மா” என்று உலுக்கினேன்.
அம்மா என்னை யாரோ போல பார்த்தாள்.
அப்பா அம்மாவைக் குலுக்கியபடி, ” ஆனந்தம் இத பார்” என்றார்.
அம்மா மாறி மாறி விழித்தாள். பிறகு திடீரென்று விழித்துக்கொண்டாள். அப்பாவைத் தாவிப் பற்றிக் கொண்டாள். ” அது வேணாம்! அந்தச் செடி வேணாம்!” என்று வீரிட்டாள்!
“எந்தச் செடி?” என்றார் அப்பா.
“அது அந்த கறுப்புச் செடி! அது வேணாம் வெட்டிடுங்கோ. அது வேணாம்”
“ஏண்டி? எதுக்குச் சொல்றே? கனவு ஏதாவது கண்டியா?”
“அது வேணாம் வெட்டிடுங்க..”
“என்ன கனவு கண்டே?…”
“வேணாம். வெட்டிடுங்க. வேணாம்!” அம்மா கண்ணீர் பெருக அழ ஆரம்பித்தாள்.
“சரி வெட்டிடுவோம்” என்றார் அப்பா. ” தூங்கு. நாளைக்குப் பேசுவோம்”
“நாளைக்கே அதை வெட்டிடணும்”
“சரி. நீ தூங்கு” என்றார் அப்பா. நீ போ என்பதுபோல எனக்கு சைகை காட்டினார்.
[மேலும்]