வணக்கம் ஜெ
தன்னம்பிக்கை குறித்த கட்டுரையில், தனிமனித முன்னேற்றம், தன்னம்பிக்கை குறித்து வலதுசாரிகள் எண்ணங்களை கூறினீர்கள். பொதுவாகவே கடவுள் நம்பிக்கை உள்ள பெரும்பாலோர் தன்மை அதுதான். இன்னும் சரியாக சொல்லவேண்டுமெனில் அவர்களை ‘முரட்டு பக்தர்கள்’ எனலாம். பலர் மிகப்பெரிய தேக்கம் கொண்டவர்கள். எல்லாம் எழுதிவச்சபடிதான் நடக்கும் என்று, எவருக்கும் ஊக்கமளிக்கவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள்.
என் அப்பா தலைமுறையைச் சேந்தவர்களுக்கு தனிமனித முன்னேற்றம், தனித்துவத்தைக் கட்டமைப்பது போன்ற நோக்கங்களோ, லட்சியங்களோ இல்லை. நாலு பேர் மதிக்கும் விதமாக, கௌரவமாக வாழ்ந்தால் போதும். ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரில் பலர், தங்கள் தனித்துவத்தைக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.
நீங்கள் தனிமனிதனின் முயற்சி, முன்னேற்றம் ஊக்குவிப்பது குறித்து கூறினீர்கள். அது முற்றிலும் சரியே. இங்கு ஒரு சிறு குழப்பம். ‘தேர்வு செய்யப்பட்ட சிலரில்’ இவ்வாறு கூறுகிறீர்கள்: ”…நமக்கு பள்ளியில் சொல்லித்தரும் பாடம் அல்ல அது. எல்லோரிடமும் திறமை இருக்கிறது, எல்லோரும் ஏதோ வகையில் முக்கியம்தான். அனைவருமே இறைவனின் பிள்ளைகள்தான்… ஆம், அதெல்லாம் பள்ளிப்பாடங்கள் மட்டுமே. முதிர்ந்த மனங்களுக்கு உரிய உண்மைகள் அல்ல.”
ஒருபுறம் இது முரண்பாடாகத் தெரிகிறது. இருப்பினும் இவ்வேற்றுமையை நான், தேர்வுசெய்யப்பட்டவர்களைப் பற்றி சொல்வது படைப்புச் செயல்பாடு, படைப்புத் திறன் பற்றியது எனவும், இங்கு சொல்வது, அன்றாட உலகியல் வாழ்வில் எல்லோரும் ஏதாவதொன்றை செய்யமுடியும், அதற்கான ஊக்கம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும், என்பதாகவும் புரிந்துகொள்கிறேன். இதை விளக்க முடியுமா ?
விவேக் ராஜ்
தன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்
அன்புள்ள விவேக்ராஜ்
நான் சொன்னதற்கு மாறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
தேர்வுசெய்யப்பட்ட சிலர் கட்டுரையில் நான் சொன்னது எல்லாருக்கும் ஏதோ ஒரு தகுதி உண்டு, அனைவரும் சமமே என்று அல்ல. அதற்கு நேர்மாறாக. பல்லாயிரக் கணக்கானவர்கள் பிறக்கிறார்கள். ஏதேனும் தொழில்களைச் செய்கிறார்கள். சில திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் நான் பேச ஒன்றுமில்லை. நான் மதத்தையோ அரசியலையோ முன்வைக்கவில்லை.
அப்பல்லாயிரவரில் ஒருசிலரே தனித்துவமும் கூடுதலான ஆற்றலும் கொண்டவர்கள். அவர்க்ள் தங்களை தனித்துணரவேண்டும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது எல்லாருக்கும் அளிக்கப்பட்டுள்ளது போல ஏதோ ஒன்று அல்ல என்று அறியவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.
எல்லாருக்குள்ளும் வாழும்திறமை உண்டு. அவர்களில் சிலருக்குத் தனித்திறமைகள் உண்டு. கல்வி அவற்றைப் பெருக்கவேண்டும், வழிகாட்டவும் வேண்டும். அனைவரும் அவரவர் தளத்தில் வென்றாக வேண்டும் என்பதும் தேவையானதே. அனைவரும் சமம் என்பது ஒருவகையான ஜனநாயகம்தான்.
ஆனால் அனைவரும் சமம் என்ற சொல் எல்லைகளைக் கடப்பவர்களை, அசாதாரணமானவர்களை, கட்டுப்படுத்தவும் செய்கிறது. நான் சுட்டிக்காட்டுவது அதையே. இங்கே அடிக்கடிப் புழங்கும் ஒரு சொல் உண்டு. “ஒருவர் செருப்பு தைக்கிறார், ஒருவர் ஆட்டோ ஓட்டுகிறார், ஒருவர் பாடுகிறார், ஒருவர் அறிவியலாளராக இருக்கிறார். எல்லாரும் சமம்தான்” சமயங்களில் எழுத்தாளர்களேகூட வீங்கிப்போன அகந்தையின் ‘அதீதத் தன்னடக்கத்’துடன் இப்படிச் சொல்வதுண்டு.
இதைப்போன்ற புரட்டுகள் ஒருவரின் ஊக்கத்தை தொடக்கத்திலேயே கிள்ளிவிடுகின்றன. இப்படிச் சொல்பவர் எவரும் தங்கள் குழந்தைகளை முதன்மைப்படுத்தாமலிருப்பதில்லை. அறிவியலாளராக ஆகவேண்டுமா இல்லை செருப்பு தைக்கவேண்டுமா என்று கேட்டால் எல்லாம் சமமே என்று சொல்வதில்லை.
ஒருவருக்குள் உள்ளடங்கியிருக்கும் தனித்தன்மையை, தன்னாற்றலை அவர் உணர்ந்தாகவேண்டும் என்று மட்டுமே நான் சொல்வதற்குப் பொருள். அசாதாரணமான ஆற்றல் கொண்ட ஒருவர் தன்னை ஒருபடி மேல் என்றே உணரவேண்டும். இவ்வுலகுக்கு மேலும் பொறுப்புகொண்டவர் தான் என அவர் அறியவேண்டும். ஆகவே மேலும் உழைக்க, மேலும் வெல்ல, மேலும் பங்களிப்பாற்ற அவர் எழவேண்டும்
தன்னம்பிக்கைநூல்கள் ‘அனைவருக்கும்’ தங்கள் திறமைகளைக் கண்டடையவும், சூழலில் ஒத்துவாழவும் உதவுகின்றன. நான் அதைச் சொல்லவில்லை. நான் அறிவியக்கத்தில், படைப்பியக்கத்தில் ஏதேனும் பங்களிப்பவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறேன். விதிசமைப்பவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
அந்த வரியை வாசித்ததுமே ஒருவர் தன்னை எங்கே அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதும் முக்கியம். தன்னை சாமானியனுடன் அடையாளப்படுத்திக்கொண்டு ஒருவர் ‘அப்டீன்னா எனக்கெல்லாம் ஒண்ணுமே இல்லியா சார்?’என்று கேட்பவர் சாமானியரேதான். தனித்துவமும் கூடுதலான ஆற்றலும் கொண்டவர்களுக்கு அது உள்ளூரத்தெரியும். அவர்கள் “ஆம், நான் எல்லாருக்குமான ரேஷனை வாங்கவேண்டியவன் அல்ல” என்றுதான் சொல்வார்கள்
நீங்கள் எழுதிய வேறுகடிதங்களால்தான் இதற்கு பதில் சொல்கிறேன். மற்றபடி நான் எழுதிய அவ்வரி ஒருவருக்கு உண்மையில் புரியவில்லை என்றால், முரண்பாடு தெரிகிறது என்றால் அவருக்கு அதைப் புரிந்துகொள்ளும் தகுதியுமில்லை என்பதே என் பதில்
ஜெ