எஞ்சுமா இந்தியப்பத்திரிக்கைகள்
அச்சிதழ்களின் எதிர்காலம் பற்றி நண்பர் செல்வேந்திரன் எழுதிய கட்டுரை இது. ஒட்டுமொத்தமாக நான் இதை அச்சுஊடக நிறுவனங்களின் எதிர்காலமாகக் கொள்கிறேன்.
செல்வேந்திரனின் கட்டுரை இன்றிருக்கும் முக்கியமான நெருக்கடிகள் சிலவற்றை விரிவாகச் சொல்கிறது.ஏறத்தாழ நானே கவனித்திருந்தவைதான்.
தொலைக்காட்சிகள் வந்து, செய்திகள் ஒவ்வொரு கணமும் என நம் கூடத்தில் விழத்தொடங்கியபோதே நாளிதழ்களின் தேவை குறைந்தது. பொழுதுபோக்கு இதழ்கள்- அல்லது பல்சுவை இதழ்கள்- எவற்றையெல்லாம் அளிக்கின்றனவோ அவற்றையெல்லாம் தொலைக்காட்சிகள் அள்ளி அள்ளி வைக்கின்றன.திகட்டத்திகட்ட. காட்சியூடகம் எளிதானது, அதற்கான தனி ஓய்வுநேரமும் கவனமும்கூட தேவையற்றது.
எஞ்சியிருந்த வாய்ப்பு என்பது ,செய்திகளை வாசிக்கும் மனப்பழக்கம் கொண்டவர்களின் ஆர்வம்தான்.கூடவே செய்திக்கட்டுரைகள் என்னும் வடிவம். வாசிப்பை கேளிக்கையாகக் காணும் ஒரு வட்டமும் எஞ்சியிருந்தது. சமூகவலைத்தளங்கள் வந்ததும் அங்கும் அடிவிழுந்தது. எவையெல்லாம் அச்சு ஊடகங்களில் வெளியிடப்படுகின்றனவோ அவையெல்லாம் சமூக ஊடகங்களில் ஒருநாள் முன்னரே பேசி ஓய்ந்துவிட்டிருக்கும்
விளம்பர வருவாயில் ஓடிக்கொண்டிருந்தன அச்சிதழ்கள்.ஆனந்தவிகடன் இதழே எஸ்.எஸ்.வாசன் விளம்பரங்களை வெளியிடும்பொருட்டு தொடங்கியது எனப்படுவதுண்டு.தொலைக்காட்சி மேலும் சிறந்த விளம்பர ஊடகமாக ஆனபோது அச்சு ஊடகங்களுக்கான விளம்பரங்கள் குறைந்தன
இப்போது இணையவிளம்பரம் இன்னும் பயன்மிக்கது, உரிய நுகர்வோரை மட்டும் சென்றடைவது என்று ஆகிவிட்டிருக்கிறது. அச்சு ஊடகங்களுக்கு ஒரு நல்லெண்ணத்தால் விளம்பரம் அளிக்கப்பட்டால்தான் உண்டு. உதாரணமாக ஓரு கட்டிடநிறுவனம் தி ஹிந்து இதழில் விளம்பரம் அளித்தால் அந்த நிறுவனத்துக்கு தி ஹிந்து உருவாக்கியிருக்கும் நல்லெண்ணத்தின் பயன் கிடைக்கிறது.
அதோடு, சட்டபூர்வ விளம்பரங்கள் அச்சில்வந்தாகவேண்டும் என்றும் ஒரு வழக்கம் இங்கே உண்டு. அரசுவிளம்பரங்கள் அவ்வகைப்பட்டவை.
இன்று பொருளியல்நெருக்கடி முற்றிவருகிறது. நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிடத் தயங்குகின்றன. ஆகவே அச்சு ஊடகங்கள் மேலும் நெருக்கடிக்குள்ளாகின்றன. கடைசியாக கொரோனாவின் அடி. அதை அச்சிதழ்கள் கடப்பது கடினம் என்கிறார் செல்வேந்திரன்
அச்சு ஊடகங்கள் ஏன் வேண்டும் என்பதற்கு அவர் சொல்லும் காரணமும் முக்கியமானது.சமூகவலைத்தளச் செய்திகள் உண்மையில் செய்திகளே அல்ல. வதந்திகள், பொய்ச்செய்திகள், திட்டமிட்டபிரச்சாரங்கள் ஆகியவையே இன்றைய சமூக ஊடகங்களில் மிகப்பெரும்பாலும் இடம்பிடிக்கின்றன. சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வந்தால் அதை உடனே நாம் எங்காவது ‘நம்பகமான’ செய்தி நிறுவனங்களில் உறுதிசெய்யவேண்டிய தேவை உள்ளது.
சமூக ஊடகங்கள் வரத்தொடங்கியபோது ‘மக்களால் மக்களுக்கான செய்தி’ என்று சிலர் துள்ளிக்குதித்தனர். பிற ஊடகங்களில் வெளிவராத தங்களுக்கான செய்திகளை மக்கள் தாங்களே சமூகஊடகங்களில் வெளியிடுவார்கள், எல்லா கருத்துக்களும் சுதந்திரமாக வெளிவரும், ஆகவே இது ஒரு ஜனநாயகக் கொப்பளிப்பு என்றனர்.
ஆனால் அப்படியேதும் நிகழவில்லை, நேர்மாறாகவே நிகழ்ந்தது. கும்பலாகச் செயல்படுபவர்கள் சமூக ஊடகங்களைக் கைப்பற்றினர். முகமிலிகள் நிறைந்தனர். வெறும் ‘ஹிட்’களுக்காக பொய்ச்செய்திகளையும் ஆபாசச்செய்திகளையும் வெளியிடுவோர் பெருகினர். மொத்த இணைய ஊடகப்பரப்பும் இன்று திறந்தவெளி மனநோய் விடுதி போல ஆகிவிட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களிலிருந்து எவரும் எதையும் அறியமுடியாது. எதையும் ஆக்கபூர்வமாக விவாதிக்க முடியாது. அது ஒருபோதும் செய்தியூடகம் அல்ல. அது ஒவ்வொருவரும் தங்களைக் காட்டிக்கொள்ளும் இடம். தங்களைக் காட்டிக்கொள்ள இடமளித்தால் மனிதர்கள் ஒருபோதும் உண்மையைக் காட்டமாட்டார்கள், பாவனைகளையே காட்டுவார்கள், மிகையையே வெளிப்படுத்துவார்கள்.
ஏனென்றால் மனிதன் இரண்டுவகையானவன். வெளியே அவன் சூழலால், தன் சாத்தியங்களால் வரையறைசெய்யப்பட்ட இருத்தல் கொண்டவன். மாறாக,அவனுடைய அகம் கட்டற்றது. அங்கே அவன் வீங்கிய அகந்தை கொண்டவன், அதை காமம்,வெறுப்பு,பேராசை, பயங்களால் அழுகவைத்திருப்பவன்.
சர்வசாதாரணமானவர் என்று நீங்கள் நினைக்கும் ஒருவரிடம் அந்தரங்கமாகப் பேசிப்பாருங்கள், அவர் தன்னைப்பற்றி என்ன நினைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு திகைப்பை அளிக்கும். அவருக்கு ரஜினிகாந்த் மீது பொறாமை, பில்கேட்ஸாக தான் ஆகியிருக்கமுடியும் என்று பகற்கனவு எல்லாம் இருப்பது தெரியவரும்.
மனிதர்கள் அப்படித்தான், ஆயிரமாண்டுகளாக இலக்கியங்கள் அதைத்தான் சொல்லிவருகின்றன. மனிதர்களில் பெரும்பாலானவர்கள் “நான்லாம் அப்டியாக்கும்’, ‘என்னைப்பத்தி அவனுக்கு தெரியாது’ ‘நான் என்னிக்குமே’ என்றெல்லாம்தான் நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் அதை மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதையே இப்போது சமூகவலைத்தளங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வம்புகள், சழக்குகள், பூசல்கள், புறம்கூறல்கள்.இன்னொன்று நிகழமுடியாது, நிகழ்ந்தால் இதுவரை இலக்கியமேதைகள் சொன்னதெல்லாம் பொய் என்று ஆகும். சமூகவலைத்தளம் என்பது ஒருபோதும் பொதுஊடகம் அல்ல. அது வேறொருவகை பொதுவெளி. ஒரு சமூகத்தின் கூட்டுநடிப்புக்கான வெளி.
அதற்கு தேவையிருக்கிறது. இன்றைய நவீன உலகம் உருவாக்கும் தனிமை, வெறுமை ஆகியவற்றை தவிர்க்க அது ஒருவழி. இன்றைய அதிமுதலாளித்துவம் ஒவ்வொருவரையும் இன்னொருவரிடம் போட்டியிடச்செய்கிறது. ஆகவே சகமனிதன் எதிரியாகிறான். அருகிலிருப்பவனுடன் நட்பு இயலாததாகும்போது கற்பனையான நட்புகள் கொண்ட சூழல் பெரிய ஆறுதலை அளிக்கிறது
அத்துடன் அருகிருப்பவன் நம் புற அடையாளங்களையே பார்க்கிறான். அவன் அதனுடன்தான் உரையாடுவான். நாம் அகத்தே கொண்டிருக்கும் வீங்கிய ஆளுமையை அவன் அறிவதில்லை. சமூகவலைத்தளத்தில் அதை முன்வைத்து அதற்குரிய நட்புகளை தேடலாம். அங்கே நமது அடையாளம் என்பது நமது பாவனையே. புரட்சியாளன், அல்லது ஸ்டைலான பொறுக்கி, அல்லது துயருற்ற தனியன், அல்லது கலகக்காரன், அல்லது….
உண்மையில் சமூகவலைத்தளத்தை ஊடகமாகக் கொள்பவை நிறுவனங்கள்தான். மிகக்குறைந்த செலவில் சமூகவலைத்தளங்களை அமைப்புக்களும் விளம்பரநிறுவனங்களும் கைப்பற்றி மிகப்பெரிய செய்தியலையை உருவாக்கமுடியும், மாயைகளை உண்டுபண்ணமுடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில் வணிகநிறுவனங்கள் அதைச் செய்தன, இன்று அரசியலியக்கங்கள் செய்கின்ரன. எல்லாக் கட்சிகளும் அதைச் செய்கின்றன.
அங்கே கவனத்தைக் கவர்வதே வெற்றி. ஆகவே வெறுப்பு,ஏளனம்,திரிப்பு ஆகிய மூன்றுமே அத்தனைபேருக்கும் ஆயுதம். செய்தி, செய்திவிமர்சனம், மக்கள் கருத்து, விவாதம் என்ற பேரில் நிகழ்வன முழுக்கமுழுக்க வசையும் பகடியும்தான். ‘மீம்’ அதன் முதன்மையான வடிவமாக மாறியிருக்கிறது.
இன்று சாமானியனுக்குச் செய்தி அரிதாகிவிட்டிருக்கிறது. சமூகவலைத்தளச் செய்திகள், இணைய ஊடகச்செய்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு நண்பர் “நான் தொழில்செய்கிறேன். என் தொழிலுக்காக நான் சமூகஊடகங்களையோ இணையச்செய்திகளையோ நம்பியிருக்கமுடியுமா? என் தொழிலுக்காக இவற்றை எப்படிப் பயன்படுத்த முடியும் என்று மட்டுமே பார்ப்பேன். அதை எனக்காக பயன்படுத்துவது எளிது என்றும் தெரியும்”
இச்சூழலில் அச்சிதழ்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது. அச்சிதழ் வெளியிடும் செய்திக்கு அது முழுப்பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். அது ஒரு நிறுவனம்,அதன் நிலைபாடுகள் வெளிப்படையானவை. அதன் நம்பகத்தன்மையே அதன் ஈட்டுபொருள்.
அச்சிதழ்கள் நம்பகமான செய்தி, அறிவார்ந்த செயல்பாடு வழியாக வாசகனின் ஏற்பைப்பெற்றுக்கொண்டு அவனிடமிருந்தே சந்தா வாங்கி நிலைகொள்ளமுடியும் என்றும் அதுவே எஞ்சியிருக்கும் ஒரே வழி என்றும் செல்வேந்திரன் சொல்கிறார்
ஆனால் தி ஹிந்து கட்டணம் வசூலிக்கிறது.அதைப் பற்றி தன் வாசகர்களிடம் ஆலோசனை கேட்டபோது பெரும்பாலானவர்கள் கட்டணம் கட்டமுடியாது என்றே சொன்னார்கள். செய்தி என்பது சும்மாகிடைக்கவேண்டும் என்றார்கள். நம்மவர் மனநிலை இது. புத்தகங்களையே பிடிஎஃப் போட்டு திருடுபவர் நாம்.
இதன் மறுபக்கம் ஒன்றுண்டு. அச்சிதழ்களுக்கு அந்த நம்பகத்தன்மை உண்டா? ஒரே உதாரணம் சொல்கிறேன். 2009ல் ஈழப்போர் நிகழந்தபோது திருமாவேலன் என்பவர் ஆனந்தவிகடனில் எழுதிய கட்டுரைத் தொடர்களை எடுத்துப்பாருங்கள். அருகே நின்று போரைக் கவனிப்பவர்போல எழுதித்தள்ளினார்.
சிலருக்காவது நினைவு இருக்கும் அக்கட்டுரைகளை.புலிகள் பதுக்கிவைத்திருக்கும் ஆயுதங்கள், காத்திருக்கும் புலிகளின் பெரும்படை, ஈழப்படையினரை உள்ளே இழுத்து அடிக்கப்போகும் அவர்களின் போர்த்தந்திரங்கள் எனவரைபடமெல்லாம் போட்டு அவர் எழுதினார். ஒர் அசட்டுப் பதின்பருவத்து இளைஞன் எழுதும் வலைப்பூ போல. என்ன ஆயிற்று?
அந்த கட்டுரைகள் அவ்விதழை வாசிப்பவனின் நம்பிக்கைக்கு துரோகம் செய்பவை. அவன் உணர்ச்சிக்கொந்தளிப்பான அசட்டுத்தனங்களை, பிரச்சாரத்தை காசுகொடுத்து வாங்கவேண்டுமா என்ன?
வார இதழ்கள் முகநூலில் வருவனவற்றை எடுத்து தொகுத்து அளிக்கின்றன. முகநூலில் எழுதுபவர்களை கூப்பிட்டு வேலைக்கு வைக்கின்றன. வாரஇதழே முகநூல் மாதிரி ஆகுமென்றால் வாரஇதழ்தான் எதற்கு?முகநூலே இருக்கிறதே!
தமிழ் ஹிந்து அதன் பல்வேறு வணிகக் கணக்குகளைக் கொண்டு ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ போன்ற கட்சிப்பிரச்சாரங்களை வெளியிடுகிறது. [என்ன கணக்கு என தெரியாத எவரும் ஊடகச்சூழலில் இல்லை] பிரச்சாரம் இலவசமாகத்தான் கிடைக்கவேண்டும், ஏனென்றால் பிரச்சாரம்செய்பவனுக்கே அதனால் பலன். அதை காசுகொடுத்து வாங்கச்சொல்வதுபோல அபத்தம் உண்டா?
மிகையுணர்ச்சிகள், மாஸ்ஹிஸ்டீரியாக்களை ஊடகங்கள் தலைக்கொண்டால் காலப்போக்கில் அவற்றின் நம்பகத்தன்மை அழியும் அது பெரிய இழப்பு. தற்காலிக லாபத்துக்காக நீண்டகால ஒட்டுமொத்த இழப்பை ஈட்டிக்கொள்வது அது.
உண்மையில் அவ்விதழின் நம்பகத்தன்மையைத்தான் அவர்கள் விற்று காசுபார்க்கிறார்கள். நம்பகத்தன்மை அவ்வளவு சிறிய விலைக்கு விற்கப்படவேண்டியது அல்ல. இல்லாமலானபின் திரும்பி வராது. அன்று ஹிந்துவின் ஊழியர்கள் கொந்தளித்தனர், பதிலும் விளக்கமும் எழுதினர். ஆனால் ஒரு செய்திநிறுவனம் இழக்கும் நம்பகத்தன்மை என்பது மிகப்பெரிய வீழ்ச்சி. எதிர்காலத்தில் அவர்கள் உணர்வார்கள்.
எந்த ‘மாஸ் ஹிஸ்டீரியாவுக்கும்’ இடம்கொடுக்காமல், எங்கும் அதீதமாகச் சாயாமல் நிலைகொள்ளும் அச்சிதழ்தான் நீடித்த மதிப்பை ஈட்டிக்கொள்ளும். தன் மதிப்பீடுகளில் பிடிவாதமாக இருக்கும் இதழ் அந்த மதிப்பீடுகளுக்காகவே ஆதரிக்கப்படும். அதை இதழாளர் முதலில் நம்பவேண்டும்.
இந்தக்கட்டுரையில் நான் வலியுறுத்தவேண்டிய சில உண்டு. அதிலொன்று, செய்திநிறுவனங்கள் குறிப்பாக அச்சுஊடகங்கள் பற்றிய அரசியல்தரப்பினரின் பழிசுமத்தல். இடது வலது இரு தரப்புமே ஊடகங்களை பழிக்கின்றன. ஒட்டுமொத்த ஊடகமும் தங்களுக்கு எதிராக இருப்பதாக இருவருமே சொல்கின்றனர். சங்கிமீடியா என்று ஒரு தரப்பு. பிரெஸ்டிடியூட்கள் என இன்னொரு தரப்பு.
பொதுவாகவே இன்றைய அரசியல்வாதிகள் ‘பொய்ச்செய்தி’ என்று கூவிக்கொண்டே இருக்கிறார்கள். செய்தி என்றாலே பொய்தான் என்று மாற்றிக்காட்டுகிறார்கள். டிரம்ப் பொய்ச்செய்தி, திருட்டு ஊடகம் என்ற சொல்லை பயன்படுத்தாத நாளே இல்லை
உண்மை, சில ஊடகங்களுக்கு தனக்கான திட்டங்கள் இருக்கலாம். செய்திகளைத் திரித்துப்போடுபவை உண்டு. பலசமயம் போதாத செய்திகள் ஓரம்சாய்ந்த செய்திகள் வருகின்றன. ஆனால் ஒட்டுமொத்த செய்திஊடகமும் பொய்யானதே என்று முத்திரைகுத்தினால் இழப்பு மக்களுக்கே.
சரி, இந்த ஊடகங்கள் பொய்யானவை. எஞ்சியிருப்பது என்ன? கட்சிகள் உருவாக்கும் பிரச்சராங்களே செய்திகளுக்கு பதில் நமக்கு போதுமா என்ன? திட்டமிட்டு உருவாக்கப்படும் பொதுக்கிறுக்கு அலைகளை செய்திகளாகக் கொள்ளவேண்டியதுதானா என்ன?
இந்தப் பழிசுமத்தலின் விளைவாகச் செய்தியூடகங்கள் அழியும் என்றால் நமக்கு என்ன எஞ்சியிருக்கும்? இந்த சந்தர்ப்பம் வரலாற்றின் ஒரு முக்கியமான சோதனைக்காலம். இருநூறாண்டுகளாக ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நின்றிருக்கும் பொதுஊடகம் என்னும் கருத்துருவே அழிந்துவிட வாய்ப்பிருக்கிறது. அழிந்தால் ஜனநாயகமும் அழியும்
வருங்காலத்தில் செய்தி நிறுவனங்கள் செய்வதற்குரியவை என்று சிலவற்றைச் செல்வேந்திரன் சொல்கிறார். அதில் முக்கியமானது நம்பகத்தன்மையை வாசகனுக்கு உறுதிசெய்வது, அதற்காக அவன் பணம் கொடுக்கவைப்பது.
இன்று தி ஹிந்து ஆங்கில நாளிதழின் முதன்மையான வணிகமுக்கியத்துவம் அதுதான்.இந்துவின் அரசியல்கருத்துக்களில் பக்கச்சாய்வுண்டு என்ற குற்றச்சாட்டு இருக்கலாம். ஆனால் அது அவர்களின் வெளிப்படையான நிலைபாடு, அவர்கள் மையத்திலிருந்து இடதுபக்கம் சார்ந்தவர்கள். ஆனால் ஒருசெய்தி இந்துவில் வெளிவந்தால் அது தகவல்சார்ந்து பிழையாக இருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை நீடிக்கின்றது
அந்நம்பிக்கைக்கு வாசகன் பணம்கொடுகும் நிலையை உருவாக்கலாம். நான் கண்டிப்பாகக் கொடுப்பேன். சொல்லப்போனால் எதிர்காலத்தில் விளம்பரங்களுக்குக் கூட ஊடகங்கள் அந்நிலைபாட்டை எடுக்கலாம்.
உதாரணமாக தி ஹிந்துவில் ஒரு கட்டிடவிற்பனையாளர் விளம்பரம் அளிக்கிறார், தி ஹிந்துவின் நிருபர்கள் அக்கட்டிட விற்பனையாளரின் பின்னணியை ஆராய்ந்து அடிப்படையான செய்திகளையும் வெளியிடுகிறார்கள் , ஒருவகையில் அவ்விளம்பரத்தை ஆராய்ந்து அதற்குப் பொறுப்பேற்கிறார்கள் என்று கொள்வோம். அவர்களின் விளம்பரத்தின் நம்பகத்தன்மை கூடுகிறது. மறுபக்கம் இணையவிளம்பரம் வெறும் மோசடியாகவே மாறிக்கொண்டிருப்பதனால் சான்றுரைக்கப்பட்ட அச்சு ஊடகவிளம்பரத்தின் சந்தைமதிப்பு மிகுதி. காலப்போக்கில் அதற்கே நிறுவனங்கள் கேட்ட கட்டணத்தில் விளம்பரங்கள் கொடுக்கக்கூடும்
செய்திநிறுவனங்கள் வாழவேண்டும், வாழ்வது அவற்றின் தேவை அல்ல, நம் தேவை. ஜனநாயகத்தின் தேவை. அவை வீழ்வது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நலம்பயக்கும்.