வெண்முரசு சுவரொட்டிகள்

அன்பு நிறை ஜெ,

நலமா?.. கடந்த 20 நாட்களாக வெண்முரசு பற்றியே சிந்தித்து கொண்டுருக்கிறேன்.. சுரேஷ் என்னும் நண்பர் புதிய வாசகர்களுக்கு  வெண்முரசு நாவல்கள் பற்றிய  சிறு குறிப்பை அவரது தளத்தில் வெளியிட்டிருந்தார் அதை பார்த்ததும் ஒரு சிந்தனை வந்தது வெண்முரசு புதிதாய் வாசிக்க வருபவர்களுக்கு உதவும் வண்ணமும், ஏற்கணமே வாசித்துவிட்டவர்களுக்கு அவர்கள் நினைவை தூண்டும் விதத்திலும் வண்ண படங்களை பயன்படுத்தி போஸ்டர்களை தயாரித்தால் என்ன என்று பட்டது..

அப்போதே துவங்கிவிட்டேன்.. இத்தனை நாட்கள் அதிலே மூழ்கிவிட்டேன்.. ஷண்முகவேல் வரைந்த ஓவியங்களை வைத்து ஒவ்வொரு புத்தகத்திற்கும் கதையின் போக்குடன் ஒன்றி போகும் வண்ணமும், என் ரசனைக்கு பிடித்தார் போன்றும் அட்டை படம் செய்தேன், ஒவ்வொரு படமாக  தேடி  சேகரித்து இவற்றை செய்து முடித்துள்ளேன்.. கதை பரப்பு எப்படி பல தேசங்களிலும், கனவு வெளிகளிலும் பறந்துவிரிந்துள்ளதோ அதை  ஒற்றிய நிலக்காட்சிகளை உள்ளடக்கியதாய்  இந்த போஸ்டர்கள் உருப்பெற்றுள்ளது.

தமிழில் இருபத்தாறு தொடர் நூல்கள், 1932 அத்தியாங்கள்,  முப்பத்தேழு லட்சம் சொற்கள் கொண்டு , என்பது மாதங்கள் வரை நீண்ட ஒரு நிகழ் காவியத்திற்க்கு ஒரு சிறு சமர்ப்பணம் தான் இந்த போஸ்டர்கள்.
இன்னொருவகையில் இந்த செயலை நான் செய்ய உந்துதலாய் அமைந்தது உங்களை வசைபாடும் கும்பல்கள் தான்.

நான் கடந்த ஐந்து வருடங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதில்லை, சமீபத்தில் ஒருநாள் புதிய கணக்கு ஒன்றை துவக்கி டிவிட்டர்க்கு சென்றேன் கமல்ஹாசன் அவர்கள் உங்களை பற்றிய ஒரு வாழ்த்து செய்தியை பகிர்ந்திருந்தார் , அதற்கு பின்னூட்டம் அளித்தவர்கள் அளவில்லாமல் உங்கள் மேல் வசை மாரி பொழிந்திருந்தனர். #ஜெயமோகன் என தேடினால் உங்கள் படைப்புகளை எடுத்து பேசியவர்களை விட ,  சமபந்தமே இல்லாமல் உங்களை தூற்றிய வாசிப்பே அறியாத  மனிதர்கள் தான் அதிகமாய் இருந்தனர்..

அந்த காழ்ப்பு மனிதர்கள் சூழ்ந்த வெளியில் இருக்கவே கூசிற்று, அங்கே இருப்பவர்கள்,திளைப்பவர்களுக்கு என்றுமே இலக்கியத்தில் இடமில்லை. ஓர் இலக்கிய ஆளுமைக்கு எங்கும் நிறைந்திருக்க சர்வ வல்லமை உண்டு, நம் மீது உமிழப்படும் காழ்ப்புகளுக்கு நம் மறுமொழி “தன்னற செயல்கள்” மட்டுமே எனும் எண்ணம் வந்தது ..வெண்முரசு அருளிய, அருளும், அருளப்போகும்  அறமெனும் பெருங்கடலின் சிறுதுளி, என்றும் எங்கும் நகைச்சொல் கூறும் அற்பர்களுக்கும் சென்று சேரட்டும்..

இதை போன்று தொடர்ச்சியாக இரண்டுவாரம் ஒரே செயலில் நான் என்னை மறந்து ஈடுபட்டதே இல்லை, இந்த மனநிலையை அடைவதற்கு தான் தேசமெங்கும் அலைந்தேன், தியான பயிற்சிகள் பெற்றேன்.. என் வழி வாசிப்பும், வடிவமைப்பும்,  ஓவியமும் என்பதை செயலற்றியே இன்று கண்டுகொள்கிறேன்…

ஒருவரின் மீது நாம் வைத்துள்ள நேசத்தை நாம் நேசிப்பவர்க்கு தெரிவிக்க, நம்முள் அவர் எவ்வளவு பதிந்து, நாமாக வெளிப்படுகிறார் என்பதை அவர்க்கு நாம் காணச்செய்வதே.. அதுவே நமக்கும் நாம் நேசிப்பவர்க்கும்மான கண்டடைதல் .. ஒவ்வொரு கணமும் என்னை நம்மை கண்டடைந்து வருகிறேன் .. அருகமர்ந்து என்றும் அறம் அருள்பவர்க்கு அன்பு முத்தங்கள்

அன்புடன்,
இளம்பரிதி..

பி.குஇந்த போஸ்டர்களில் QR Code இல் என் அமேசான் தொடர்பாளர் இணைப்பை வைத்துள்ளேன் , அது இடையூறாக இருக்குமெனில் நீக்கி விடுகிறேன்..

போஸ்டர்களில் பயன்படுத்தியுள்ள சில படங்களும், நூலின் தலைப்புகளும் இணையத்தில் கிடைத்ததை வைத்து வடிவமைப்பு செய்துள்ளேன் .. அதனுடைய மேம்படுத்தப்பட்ட தரவுகள் இருந்திருந்தால் இன்னும் தரமாக செய்திருக்க இயலும்..

எல்லா போஸ்டர்களை சேர்த்து ஒரே pdf ஆக தொகுத்துள்ளேன் அதன் அளவு அதிகமாகையால் கூகிள் டிரைவில் பதிவேற்றியுள்ளேன் , தனித்தனி போஸ்டர்கள் அடங்கிய Zip பைலையும் அங்கே பதிவேற்றியுள்ளேன் அதன் இணைப்பு இங்கே

– சில சாம்பிள்கள் உங்கள் பார்வைக்கு

இளம்பரிதி

அன்புள்ள இளம்பரிதி

நன்றி. உங்கள் ஈடுபாடு நிறைவளிக்கிறது. படங்கள் சிறப்பாக உள்ளன. உளமொன்றிச் செயல்படுவது யோகம். அது அளிக்கும் விடுதலைக்குச் சமானமான இன்னொன்று இல்லை.

உங்களைப்போலவே வசைகள் என் நண்பர்கள் பலரை துன்புறுத்துவதை அறிவேன். அதன்பொருட்டே பலர் முகநூலில் புழங்குவதில்லை, அல்லது மறைமுகமாக இருக்கிறார்கள்

அது இயல்பானதே என்பதே என் எண்ணம். சுந்தர ராமசாமியோ ஞானியோ ஜெயகாந்தனோ பெற்ற அளவுக்கெல்லாம் வசைகள் எனக்கு இன்னும் வரவில்லை. இவை இன்றைய ஊடகச்சூழலில் பதிவாகின்றன, அவ்வளவுதான் வேறுபாடு

ஏன் இந்த வசைகள்? எண்ணிப்பாருங்கள். இங்கே பொதுச்சூழலில் எத்தனை எத்தனை முகங்கள் தென்படுகின்றன. ஏதேதோ எண்ண ஓட்டம் கொண்டவர்கள். ஆனால் செயல் என்று எவை கண்ணுக்குப் படுகின்றன? மிகமிக குறைவு. எதையேனும் செய்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர்

செயலாற்றுபவர் இவர்களுக்கு எதிரான ஒரு தளத்தில் இருக்கிறார். செயல்வழியாக ஓர் அளவுகோலை உருவாக்குகிறார். அந்த அளவுகோலில் அவர்களைச் சிறிதாக்குகிறார். ஆகவே அவர்கள் வசைபாடியே ஆகவேண்டும். அது ஓர் ஆற்றாமை மட்டுமே. வசைபாடுவதனூடாக அவர்கள் தங்களை ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள் என்றால் அப்படியே ஆகட்டும் என்றுதான் நான் சொல்வேன்

தொடர்ந்து படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்

ஜெ

முந்தைய கட்டுரைவண்ணங்களை மீட்டெடுத்தல்
அடுத்த கட்டுரைகதைகள்- கடிதங்கள்