ஞானி,தத்துவம்- கடிதங்கள்

ஞானி- கடிதங்கள்

ஞானி,கீழைமார்க்சியம்- கடிதங்கள்

ஜெமோ,

ஞானி அவர்களைப் பற்றியத் தொடர் நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்பதை உணர்த்தியது. இரு துருவங்களையும் தன்னுடைய வழிகாட்டியாக கொள்வதற்கு, தங்களுடைய ஆக்கப்பூர்வமான நிலையாமையும் (unsettling attitude) ஒரு காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. எதையுமே வரையறுக்கத் தேவையில்லை அல்லது முடியாது என்ற முழுமைவாதியான சு.ரா. வும்,  எதையுமே வரையறுத்து முன் நகரமுடியும் என்ற பகுப்புவாதியான (அல்லது பகுத்தறிவு வாதி) ஞானியும் சந்திக்கும் புள்ளிதான் நீங்கள் என்றும் அவதானிக்க முடிகிறது. சற்று மிகையாக, ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில் வரும் தருக்கமும், படிமமும் சந்திக்கும் புள்ளி தான் ஒரு சிறந்த எழுத்தாளன்; மார்க்ஸும், புஷ்கினும் சந்திக்கும் புள்ளி தான் தஸ்தயேவ்ஸ்கி என்று அந்த வெம்மை குளியலறையில் புகாரினுக்கும், அந்திரியானுக்கும் இடையில் நடக்கும் உரையாடலும் நினைவுக்கு வந்து போனது.

உங்களின் மொழியில் நான் பார்க்க முடிகிறது என்ற ஞானியின் எளிமையான மற்றும் கூர்மையான வார்த்தைகள், ‘நிலப்பரப்பு காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்….’ போன்ற மிகை அவதானிப்புகளை விட நம்மைப் புரட்டிப் போடுகின்றன. நீங்கள் சொல்வதுபோல், அனுபவத்தை சிந்தித்து தங்கள் அகமாக மாற்றிக் கொண்ட ஆளுமைகளிடம் வெளிப்படும் கூரிய சொற்களிவை. மீறுவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் எவரிடமிருந்து பெற்றுக் கொண்டீர்களோ, அவரால் உங்கள் மீறலை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஞானியால் நீங்கள் ஏன் மீறுகிறீர்கள் என்பதை துல்லியமாக உங்களிடம் துலக்கி காட்ட முடிகிறது. சு.ரா. முழுமை என்றால், அந்த முழுமையிலிருந்து சிதைந்து மீண்டும் முழுமை நோக்கிய பயணத்தில் இருந்தவர் ஞானி என்றும் எண்ணத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட நீங்களும் அப்படி ஒரு பயணத்தில் இருப்பதை விஷ்ணுபுரம் நாவல் வழியாக உணர்ந்து கொள்கிறார். இந்த மீறலுக்கான காரணத்தை ஞானி சுட்டிக் காட்டியிராவிட்டால், நீங்கள் விஷ்ணுபுரத்தோடே தேங்கியிருப்பீர்களோ என்ற மிகையுணர்வும் எனக்கு ஏற்பட்டது.

நீங்கள் அறிமுகம் செய்யும் மார்க்ஸியர்களின் மேலெழும் ஈரப்புக்கான காரணம் இது வரை புரியாத புதிர்தான். ஞானி தொடங்கி, ராஜ் கௌதமன், தேவி பிரசாத் சட்டோபாத்யா வரை. ஆனால் ஞானி ‘மணல் மேல் ஒரு அழகிய வீடு’ வழியாக முன்னரே அறிமுகமாயிருந்தார்.  ஜெ.கி. யின் ‘Self confident man is a dead human being’ என்ற சொற்களால் ஈர்க்கப்பட்டு அனைத்துக் கற்றலையும் நிறுத்தியிருந்த காலமது. மனதில் எங்கோ ஓரத்தில் ஒட்டியிருந்த ஜெ.கி. பற்றிய அவ நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஞானி. ஆனால், உங்களைக் கண்டடைந்தவுடன் ஞானி அவர்களின் விரிவும், ஜெ.கி யின் யோகாச்சார மரபும் ஒரு வழியாக புலப்படத் துவங்கியது. ஜெ.கியை சுமந்தலைவதை நிறுத்திக் கொண்டேன். தான் பதித்த சுவடுகளை சுமந்தலையாதவர்களால் தான் புதிய சுவடுகளைப் பதிக்க முடிகிறது என்று ஜெ.கி யின் சிந்தனைகளை வரையறுக்கும் தகுதியை எனக்கு அளித்தது ‘மணல் மேல் ஒரு அழகிய வீடும்’ தங்கள் தளக் கட்டுரைகளும் தான்.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே, ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நினைவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் ஞானியின் மெய்யியல் நோக்கிய நகர்வை அவரின் அகவிழியெழுந்து அதற்கு விலையாக புறவிழியிழந்தார் என்ற ஒப்பீடு, எல்லா இயக்கங்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் சித்தாத்தங்களை கண்மூடித்தனமாக நம்பியிருக்கும் களப்பணியாளர்களைத் தான் நினைவுக்கு கொண்டு வந்தது. இந்த சித்தாந்த உருவத்தின் உள்ளடக்கங்களை அக வலிமை கொண்டவர்களால் மட்டுமே ஊடுருவ முடிகிறது.  இந்த இறுகிய பூச்சு அடைத்திருக்கும் அந்த நம்பிக்கையின் ஓட்டைகளையோ, அந்த நம்பிக்கைக்கு காரணமான தத்துவங்களையோ, அதன் மூல சிந்தனைகளையோ புறவிழி மட்டுமே கொண்டு ஊடுருவ முடிவதில்லை என்ற ‘பின்தொடரும் நிழலின் குரல்’  நிதர்சனம் ஞானி பற்றிய இத்தொடர் வழியாக மேலும் வலுப்பட்டுப் போனது.

தான் நம்பும் சித்தாத்தங்களை தன்னுடைய பூர்வபட்சமாக (எதிர்க் கோட்பாடு) எதிர்கொள்ளத் தெரிந்தவர்களால்தான்,  சிறந்த விமர்சகர்களாக முடிகிறது என்பதற்கு ஞானி அவர்கள் சிறந்த உதாரணமாகத் தெரிகிறார். முழுமையிலிருந்து சிதைந்து மீண்டும் முழுமை நோக்கிய பயணம்தான் வாழ்க்கை என்ற ஹெகலின் கருத்து முதல் வாதத்தில் இருந்து இயங்கியலை மட்டும்  எடுத்துக் கொண்டு அதன் வட்டப்பாதையை நிராகரித்த மார்க்ஸியம்,  தாங்கள் அடைய விரும்பும் முழுமையாக ஆரம்ப கால பொதுவுடைமைச் சமூகத்தையே சுட்டுவதிலுள்ள முரண்களை கண்டு கொண்டதால் தான் என்னவோ, ஞானி மார்க்ஸியத்தால் தொன்மங்களை உள்ளிழுத்துக் கொள்ள முடியும் என்று நம்பினார் என்ற புரிதலைத் தான் இத்தொடர் தந்துள்ளது.

இத்தொடரின் போது, மார்க்ஸியம் சார்ந்து நான் புரிந்து கொண்டவற்றை தொகுத்து கொள்வதற்காக எழுதிய என்னுடைய பழைய  பதிவுகளையும் மீள் வாசிப்பு செய்தேன். அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அன்புடன்

முத்து

புரட்சியும் உலக மறுப்பும்

வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்

அன்புள்ள ஜெ

ஞானி நினைவுக்கட்டுரைகள் அழகானவை. ஒட்டுமொத்தமான ஒரு சித்திரத்தை அவை அளிக்கின்றன. இவை நினைவுக்குறிப்புகள், ஆனால் ஞானி பற்றி நினைவுகூர அவருடைய வெவ்வேறு விவாதங்கள் மட்டுமே உங்களிடமிருக்கின்றன என்பது தெரியவருகிறது. அது ஆச்சரியமளிக்கவில்லை. அவருடைய ஆளுமை என்பது அப்படிப்பட்டதுதான்

இந்த நினைவுக்குறிப்புகள் வழியாக வரும் ஞானியின் தேடல்களும் விவாதங்களும் மூன்று தலைப்புகளிலாக திரண்டிருக்கின்றன.

ஞானி முதலில் மார்க்ஸியத்தின் அறவியலும் மெய்யியலும் என்ன என்ற கேள்வியைத்தான் எழுப்பிக்கொள்கிறார். அதுதான் அவருடைய சிந்தனைக்கே அடிப்படை. வழக்கமான கடவுள், சொர்க்கம்-நரகம் சார்ந்த அறவியலும் ஒழுக்கவியலும் மார்க்ஸியத்துக்கு இருக்கமுடியாது. ஆனால் அறவியலும் ஒழுக்கவியலும் இல்லாமல் ஒரு சிந்தனை நிலைகொள்ளவும் முடியாது. டிராட்ஸ்கியை ஸ்டாலின் கொன்றதை வேறெப்படி நாம் கண்டிக்க முடியும்? அந்தக்கேள்வியைத்தான் ஞானி எல்லாவற்றிலும் விரித்துக்கொள்கிறார்.

அதையொட்டி இரண்டாவது பிரச்சினைக்குச் செல்கிறார் ஞானி. இலக்கியம் தனக்கான தனிப்பட்ட செயல்பாடு உடையதா? இல்லை அது பொருளியல்விசைகளின் எதிர்வினை மட்டும்தானா? இலக்கியத்தின் தனித்த செயல்பாட்டை அங்கீகரிப்பவராக அவர் ஆகிறார். இலக்கியத்தை வெறும் பொருளியல்- அரசியல் அடிப்படைகளில் விமரிசிப்பது இயந்திரத்தனமாக ஆகும் என நினைக்கிறார். ஆகவே நவீன இலக்கியத்தை அவர் வேறொரு கோணத்தில் விமர்சிக்கிறார்.

மூன்றாவதாக ஞானி மார்க்சியம் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு எல்லா சிந்தனைகளிலும் தான் ஊடுருவி நிலைகொள்ளும் சிந்தனையாக மாறவேண்டும் என்கிறார். ஆகவே இந்தியாவின் எல்லா சிந்தனைகளுடனும் அது உரையாடவேண்டும் என்கிறார். எல்லாவற்றையும் அது வரலாற்றிலே நிறுத்தி விவாதிக்கவேண்டும் என்று சொல்கிறார். அந்த அடிப்படையில் வள்ளுவர் வள்ளலார் தாயுமானவர் காந்தி பெரியார் எல்லாவற்றையும் உள்ளிழுக்க முயல்கிறார். அத்வைதத்துடனும் உரையாடநினைக்கிறார்

ஞானியின் இந்த மூன்று இயல்புகளையும் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்கிறது இந்தக்கட்டுரைத்தொடர். எத்தனை நையாண்டிகள், எவ்வளவு அழகான உவமைகளும் உருவகங்களும். எருதைப்பழக்குவது, யானையைப் பழக்குவது என்ற உருவகம் மிகமிக அருமை. இனி கொஞ்சநாளில் அது மேடைகளில் உலவும். உங்கள் பெயரையோ ஞானி பெயரையோ சொல்லமாட்டார்கள்.

ஒரு சிந்தனையாளன் வாழ்நாள் முழுக்க சிந்தனைசெய்தவற்றை, பல ஆயிரம் பக்கங்களில் எழுதியவற்றை ஒட்டுமொத்தமாகச் சுருக்கி அளிப்பதென்பது சாதாரண விஷயமல்ல.அவருடன் முப்பதாண்டுகள் பேசி விவாதித்த நினைவுகள் கொண்டே அதைச் சொல்லியிருக்கிறீர்கள். அவர் பல ஆயிரம் பக்கங்கள் எழுதியவர். அதெல்லாம் எவரும் படிக்கக்கிடைக்கின்றன.அவற்றை ஒட்டுமொத்தமாக எப்படிப்பார்க்கவேண்டும் என்றும் இந்நூல் சொல்கிறது. அழகான விவாதங்கள் எப்படியெல்லாம் இங்கே சிந்தனை வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

ஒர் ஆசிரியருக்குச் செய்யவேண்டிய மிகப்பெரிய அஞ்சலி.

 

ரா.கிருஷ்ணகுமார்

 

அன்புள்ள ஜெ,

படுகை, விஷ்ணுபுரம் வெளிவந்தபோது சுந்தர ராமசாமியின் எதிர்வினை எப்படி இருந்தது என எழுதியிருந்தீர்கள். அவர் தன்னுடைய எழுத்தைச் சார்ந்து உருவாக்கிக்கொண்ட ஓர் இறுக்கமான கொள்கையுடன் இருந்திருக்கிறார்.அதை எல்லா படைப்புகளுக்கும் போட்டிருக்கிறார். ஆகவே பல புதிய படைப்புக்களை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. கி.ராஜநாராயணன் கோபல்லகிராமம் வெளிவந்தபோது சுந்தர ராமசாமி எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தார், அதை வெறும் நாட்டுப்புறக்கதைகளாகவே பார்த்தார் என்று எழுதியிருந்தார். அதேபோல ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியையும் சுந்தர ராமசாமி ஏற்றுக்கொண்டதில்லை. அதை சி.மோகன் போன்றவர்கள் அடையாளம் காட்டினார்கள். நீங்கள் விமர்சகராக வந்து விரிவான ஆய்வுரை எழுதி நிலைநாட்டவேண்டியிருந்தது. அவையெல்லாம் பிறகு கிளாஸிக் அந்தஸ்து பெற்ற படைப்புகளாக ஆயின. சுந்தர ராமசாமியின் எல்லை அது என்றுதான் சொல்லவேண்டும். வாசகராக நின்று அவரால் படைப்புக்களை படிக்கமுடியவில்லை என்று தோன்றுகிறது

லக்ஷ்மணன்

ஞானி-21

ஞானி-20

ஞானி-18

ஞானி-17

ஞானி-16

ஞானி-15

ஞானி-14

ஞானி-13

ஞானி-12

ஞானி-11

ஞானி-10

ஞானி-9

ஞானி-8

ஞானி-7

ஞானி-6

ஞானி-5

ஞானி-4

ஞானி-3

ஞானி-2

ஞானி-1

முந்தைய கட்டுரைகதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெய்திநிறுவனங்களின் எதிர்காலம்