வாசகர் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லா வாசகர் கடிதங்களும் உவகையளிப்பவை. ஆனால் அரிதாகச் சில வாசகர்கடிதங்கள் கொண்டாடச் செய்பவை. இந்த வாசகர்கடிதம் அதிலொன்று
இதை எழுதியவன் என்னுடைய உயிர்நண்பரான கே.விஸ்வநாதனின் மகன். விஸ்வநாதனும் நானும் ஆறாம்வகுப்பு முதல் ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்தவர்கள். புத்தகங்களைப் பற்றி ஓயாமல் பேசியவர்கள். வெறிகொண்டு இலக்கியம்பேசி கழித்த நாட்களின் நினைவுகள் எங்கள் இருவருக்கும் உண்டு
விஸ்வநாதன் போக்குவரத்துத் துறை ஊழியனாகவும், பாரதிய மஸ்தூர் சங்க் அமைப்பாளராகவும் பணியாற்றினான். அவனுடைய மகன் ஜெயராம் ஒருவகையில் எனக்கு நெருக்கமானவன். அவன் பெயரில் பாதி என்பெயர். என் நண்பர்கள் வீடுகளிலெல்லாம் ஜெய உண்டு.
ஜெயராம் கலைஞன். கவின்கலை பயின்று அத்துறையில் பணியாற்றுபவன். அவன் ஈரோடு புதியவாசகர் சந்திப்பிற்கு வந்தது என்னை ஒருவகையான தித்திப்பான மனநிலைக்கு கொண்டுசென்றது. அவ்வயதில் விஸ்வநாதன் எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான்.அதே பதற்றம் கலந்த துருதுருப்பு. சற்றே திக்கல்கொண்ட பேச்சு. அச்சு அசல் அப்படியே. விஸ்வநாதன் அதே வடிவில் நீடிக்க நான் மட்டும் வயதாகிவிட்டதுபோல ஒரு பிரமை ஏற்பட்டது
முதற்கனல் பற்றி ஜெயராம் எழுதிய இக்குறிப்பு வாழ்தலுக்குக் கிடைக்கும் பரிசுகளில் ஒன்று