யாத்ரீகனின் பாதை வாங்க- தன்னறம் நூல்வெளி
வணக்கம் ஐயா
என் பெயர் வினோத் பாலுச்சாமி, புகைப்பட கலைஞன் திருவண்ணாமலையில் வசித்து வருகிறேன். ஆவணப்படம் எடுத்தலும், குழந்தைகளுக்கு புகைப்பட வகுப்புகள் எடுப்பதும் எனக்கு விருப்பமான செயல்பாடுகள்.
உங்களது எழுத்துக்களும், குரலும் பலநேரத்தில் மனஅழுத்தத்திலிருந்து விடுபட, வாழ்க்கையை தைரியமாக அணுகுவதற்கு பெருந்துணையாக இருக்கிறது. குறிப்பாக நோயச்ச காலத்தில் என் மனைவிக்கு வைரஸ் தாக்கம் இருக்குமோ என பயத்துடன் கடந்த காலத்தில் முழுக்க முழுக்க உங்கள் கதைகள் தான் எனக்கு துணை நின்றது.
குறிப்பாக ஒரு கதையில் பெயர் நினைவில் இல்லை. அந்த கதாபாத்திரத்திற்கு நாக பாம்பை கண்டால் பயம் அவனுக்கு, அந்த பாம்பு அவனை கடித்தது கூட அவனுக்கு நன்மையாக அமைந்து மீண்டிருப்பான். அந்த மீட்சி என்னை மேலே வர செய்தது. மழை கால இரவு நேரத்தில் ஒரு தேவாலயத்தில் கண்ட தரிசனம் பற்றி வேறொரு கதை அதுவும் என்னை சலனப்படுத்தியது
உங்களது பயணக்கட்டுரை எனது பெரும் வியப்பாகவும், உந்ததுலுமாக இருக்கும். முகங்களின் தேசம் எனக்கு வாழ்நாள் கனவு.அவ்வாறு அலைந்து திரிய வேண்டும். அதில் சற்று அலைந்ததின் தொடர்ச்சிதான் இப்பொழுது புத்தகமாக வந்திருக்கிறது.
யாத்ரீகனின் பாதை கடல் ஆமையினை தேடி மேற்கொண்ட பயணம், என்னை எங்கே கூட்டி சென்றது என்பதே இந்த புத்தகம்.
ஆரம்பத்தில் கைகளால் எழுதியும் சைனோடைப் எனும் பழைய புகைப்பட அச்சு செய்யும் முறையில் அச்சு செய்து கைகளால் உருவாக்கிய புத்தகம்.
தங்களிடம் காட்ட வேண்டுமென்று, இந்த முறை விஷ்ணுபுர நிகழ்வில் எடுத்து வந்திருந்தேன் தயக்கம் காரணமாக காண்பிக்கவில்லை, எனது ஆசை என்னவெனில் இந்த ஒற்றை புத்தகம் பயணப்படவேண்டும் என்று ஆசையிருந்தது, ஒரு நபர் படிச்சுட்டு மற்றவருக்கு அனுப்ப வேண்டும் அவர் மற்றவருக்கு அனுப்புவார், பின்பு ஒரு நாள் நூலகத்தில் சேர்த்துவிட வேண்டும், வேண்டியவர்கள் தேடி வந்து படிக்க வேண்டும் என்று.
பின்பு தம்பி ஸ்டாலின் சொன்னான் இந்த புத்தகம் பார்க்க நல்லாயிருக்கு இதை பத்திரமாக வைத்து கொள்ள தோணுகிறது ஆனால் கையெழுத்தை வாசிப்பது சற்று சிரமமாக இருக்கிறதுநீ வழக்கமான வடிவில் மாற்றினால்தான் பலருக்கு சேரும் என்றான் சரியென பட்டது. அவர்களின் துணையோடு அச்சு செய்து விட்டோம் இப்பொழுது தன்னறத்தின் பதிப்பாக யாத்ரீகனின் -பாதை வெளியிட உள்ளோம். அதற்க்கு முன் உங்களிடம் இரண்டு புத்தகத்தையும் காட்டிவிட வேண்டும் என்று ஆசை.
பல தேசம் அலையும் அருகர்களின் காலடியில் திருமலை சமண பள்ளியில் புத்தகத்தை சமர்பித்தோம்
முன்பு ஒருமுறை திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளியில் ஊசி துளை கேமரா, தீப்பெட்டியில் செய்து சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி கொடுத்து கண்காட்சி வைத்திருந்தோம்.அப்பொழுது உங்களை சந்தித்தேன்.ஹம்பி கோவிலில் இந்த மாதிரியான தலைகீழ் பிம்பங்கள் உள்ளே விழும்கோவில்கள் இருக்கிறது. அப்பொழுது இருந்தே எனக்கு ஒரு ஆசை இருந்தது, அந்த கோவில் பார்த்துவிட வேண்டுமென்று, அந்த கோவிலை பற்றியான தகவலும் இது போல் இருக்கும் கோவில் மேலும் அறிமுகம் செய்தால் சென்று பார்க்கவும் ஆவணம் செய்யவும் எனக்கு பெரும் உதவியாக இருக்கும்.
பல நேரங்களில் வாழ்க்கையின் மீதான கேள்விகளுக்கு உங்களது உரையாடலே பதிலாக இருக்கிறது. இந்த புத்தகம் பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.
என்றும்
வினோத் பாலுச்சாமி
அன்புள்ள வினோத்
உங்கள் நூல் கைக்குக் கிடைத்து ஒருமாதமாகப் போகிறது. ஒவ்வொருமுறையும் அதைத் தொடப்போவேன், தயங்குவேன். இப்போது வீடடங்கு நிலை. இந்தச் சிறுவட்டத்திற்குள் ஓர் உலகை அமைக்க முயன்றுகொண்டிருக்கிறேன். இப்போது இந்தப்பயணநூலை வாசிக்கவேண்டுமா என்ற தயக்கம். என் மனைவி வாசித்தாள். ‘ஒரு குட்டி கிளாஸிக்’ என்று சொன்னாள்
ஆனால் வாசிக்காமலும் இருக்கமுடியவில்லை. ஆகவே நேற்று எடுத்து வாசித்தேன். குக்கூவின் நூல்கள்தான் இன்று தமிழிலேயே மிகச்சிறந்த வடிவமைப்பு கொண்டவை. மிக அழகான தயாரிப்பு. கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள்தான் புகைப்படக்கலையின் அழகை முழுமையாகக் காட்டுபவை என்ற எண்ணம் வந்தது. ‘புகை’ப்படம் என்ற சொல்லுக்கே அதுதானே பொருள்.
இரண்டு உலகங்களாலானது இந்நூல். ஒன்று இயற்கையை நோக்கி திரும்பிய காமிராவின் கண். இன்னொன்று மனிதர்களைநோக்கி திரும்பிய காமிராவின் கண். காமிராக்கண்ணுக்குப் பின்னாலிருந்து மிகமெல்ல முணுமுணுக்கிறது உங்கள் மொழி. எந்த அலட்டலுமில்லாமல் ஆத்மாவிலிருந்து வரும் சொற்கள். ஆமைகளும் கடலும் நிறைந்த ஓர் உலகிலிருந்து வெள்ளைச்சிரிப்புகளும் நாணும் கண்களும் கொண்ட முகங்களின் இன்னொரு உலகம்.
உங்கள் உலகுக்குள் நுழைந்து மீண்டபோது நான் எண்ணியதுபோல தனிமையும் ஏக்கமும் வரவில்லை. ஒரு சிறு பயணம் முடிந்து மீண்ட நிறைவே எஞ்சியது.
விரைவில் உங்கள் பயணத்துக்கான வாசல்களும் திறக்கட்டும்
ஜெ
விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி